இன்றைக்கு எல்லோரும் உழைப்பது எதற்காக? நம்முடைய அன்றாட தேவையான உணவு உண்பதற்குதான். சாப்பிடக்கூடிய உணவுகள் ஒருவருக்கு சரியான முறையில் செரிமானம் ஆகிவிட்டால் அவர்களது ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். அதுவே செரிமானம் சரியாக செயல்பட வில்லை என்றாலும் ஜீரண சக்தி சிறப்பாக இல்லாவிட்டாலும் உடல் ஆரோக்கிய குறைபாடுகள், பல்வேறு பக்க விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. 30, 40 ஆண்டு களுக்கு முன்பெல்லாம் உணவுகள் இயற்கையான முறையில் இருந்தது. இன்று வரக்கூடிய உணவுகள் ரசாயனம் கலந்ததாக வருவதால் சாப்பிடும்பொழுது ஒவ்வொரு வரும் சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஒருத்தருக்கு ஜீரண சக்தி சிறப்பாக இருந்துவிட்டால் அவர்கள் எதை வேண்டுமென்றாலும் சாப்பிடலாம். அதுவே ஜீரண சக்தி சரியாக இல்லையென்றால் சாப்பாட்டு விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். இந்தக் கட்டுரையில் ஜீரண சக்தி பற்றியும், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் ஏற்படுகிறது என்பதைப் பற்றியும் தெளிவாகப் பார்ப்போம்.
ஜோதிடரீதியாக பார்க்கின்றபொழுது ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் வீடும், காலபுருஷ தத்துவத்தின்படி 5-ஆவது வீடான சிம்ம ராசியும் மேல் வயிறு பாகத்தையும், ஜென்ம லக்னத்திற்கு 6-ஆம் வீடும், காலபுருஷத்துவத்தின்படி 6-ஆவது வீடான கன்னி ராசி கீழ் வயிறு பாகத்தையும், ஜென்ம லக்னத்திற்கு 8-ஆம் வீடும், கால புருஷத்துவத்தின்படி 8-ஆவது ராசியான விருச்சிக ராசி சிறு குடலுக்கும் மற்றும் உடலிலுள்ள நமது கழிவு பொருட்கள் வெளியேறுவதற்கான பாகமாகவும் இருக்கிறது.
நவகிரகங்களில் சூரியன் ஜீரண சக்திக்கு காரகனாவார் அதுபோல குரு பகவான் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு காரகத்துவம் வைக்கக்கூடிய கிரகமாகும். ஒருவர் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால் வயிறு, குடல் பகுதிகள் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும். குரு வக்ரகதியில் இருக்கின்ற ஜாதகருக்கும் குரு, சனி, ராகு, கேது போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றாலும் அதிலும் குறிப்பாக கேது சேர்க்கை பெற்று பலவீனமாக இருந்தாலும் ஒருவருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும்.
ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 5, 6-ஆம் பாவங்களில் பாவ கிரகங்கள் இருந்தாலும், 5, 6-ஆம் அதிபதிகள் பாவ கிரங்களான சனி, ராகு, கேது போன்ற பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், ஜென்ம லக்னத்திற்கு 5, 6, 8 போன்ற ஸ்தானங்களில் அதிலும் குறிப்பாக சிம்மம், கன்னி, விருச்சிகம் போன்ற ஸ்தானங்களில் பாவ கிரகங்கள் அமையப்பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அஜீரணக் கோளாறு, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். அதிலும் குறிப்பாக 5, 6, 8 ஆகிய ஸ்தானங்களில் பாவ கிரகங்களுடன் செவ்வாய் தொடர்போடு இருந்தால் அவர்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
பொதுவாக 5, 6, 8 ஆகிய ஸ்தானாதிபதிகள் பலமாக இருந்து சுபர் பார்வையோடு இருந்தால் ஜீரண சக்தி சிறப்பாக இருக்கும்.
ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் வீட்டில் சூரியன் இருந்தால் சூடான உணவு உண்ணும் பழக்கமும், நல்ல ஜீரண சக்தியும் இருக்கும். 5-ஆம் அதிபதியும் சூரியனும் பாவ கிரகங்களுடன் சம்பந்தப்பட்டால் குடலில் புண் ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் வீட்டில் சந்திரன் அமையப்பெற்றால் குளிர்ச்சியான உணவையும் விதவிதமான உணவுகளை உண்ணக்கூடிய விருப்பம் ஜாதகருக்கு ஏற்படும். சந்திரன் வளர்பிறை சந்திரனாக இருந்து சுபர் பார்வையோடு இருந்தால் நல்ல ஜீரண சக்தி இருக்கும். சந்திரன் தேய்பிறை சந்திரனாக இருந்து பாவ கிரக சேர்க்கை பெற்றால் சாப்பாட்டு விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளாத நிலை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், உடல் உபாதைகள் உண்டாகும். அதிலும் குறிப்பாக சந்திரன், ராகு- கேது தொடர்போடு இருந்தால் குடல் புண், உண்ணும் உணவு விஷமாகும் நிலை ஏற்படும்.
ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் சூடான உணவுகளை உண்ணும் பழக்கம் கொண்டவராக இருப்பார்கள். செவ்வாய் பலமாக இருந்தால் நல்ல ஆரோக்கியம், உடல் பலம் இருக்கும். அதுவே செவ்வாய் நீசம்பெற்றோ வக்ரம்பெற்றோ, பாவ கிரக தொடர்போடு லக்னத்திற்கு 5, 6 ஆகிய ஸ்தானங்களில் இருந்தால் அதன் தசாபுக்தி காலத்தில் குடல் புண், வாயு பிரச்சினை, அல்சர் தொடர்பான பிரச்சினைகள் அதன்காரணமாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 5, 6-ல் புதன் அமைந்திருந்தால் நேரத்துக்கு சாப்பிடும் அமைப்பும், நல்ல பசி எடுக்கக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும்.
ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் வீட்டில் குரு பலமாக இருந்து சுப கிரக பார்வையோடு இருந்தால் நல்ல ஒரு ஆரோக்கியமும், சிறப்பான ஜீரண சக்தியும் இருக்கும். குரு பாவ கிரக சேர்க்கை பெற்றாலும் வக்ரகதியில் இருந்தாலும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அஜீரண கோளாறுகள் ஏற்படும்.
ஒருவர் ஜாதகத்தில் 5-ஆம் வீட்டில் சுக்கிரன் பலமாக அமையப்பெற்று இருந்தால் இனிப்பு வகையான உணவுகளையும், சுவையான உணவுகளையும், உயர்வகை உணவுகளையும் உட்கொள்வதில் அதிக அலாதி கொண்டவராகவும் அதனை அடையக்கூடிய யோகம் கொண்டவராகவும் இருப்பார்கள். சுக்கிரன் பலவீனமாக இருந்து பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தால் சர்க்கரை வியாதி போன்றவை ஏற்பட்டு அதன்மூலம் விரும்பிய உணவுகளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.
ஜென்ம லக்னத்திற்கு 5, 6 ஆகிய ஸ்தானங்களில் சனி அமையப்பெற்றால் நேரத்திற்கு சாப்பிட முடியாத நிலையும், அதன் காரணமாக வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அப்பன்டிஸ் பிரச்சினைகள், அல்சர் போன்றவை உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 5-ல் ராகு அமையப்பெற்றால் மாமிச உணவுகளையும், மசாலா உணவுகளையும் அதிகம் உட்கொள்ளக் கூடிய சுபாவம் கொண்டவராகவும் அதுவே சுபர் பார்வையோடு இருந்தால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். ராகு 5, 6-ல் பலவீனமாக இருந்தால் உடலுக்கு ஒத்துக்கொள்ளதாத உணவுகளை உட்கொண்டு அதன்காரணமாக வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதற்காக சிகிச்சை எடுக்கக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 5-ல் கேது அமையப்பெற்றால் நேரத்திற்கு சாப்பிட முடியாத நிலை, குறைவான அளவுகொண்ட பொருட்களை சாப்பிடும் நிலை, அதன் காரணமாக உடல் உபாதைகள் ஏற்படும்.
ஜென்ம லக்னத்திற்கு 5, 6-ல் பாவிகள் இருந்தாலும் குரு போன்ற சுப கிரக பார்வை இருந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து எளிதில் குணமாகி நல்ல ஆரோக்கியத்தை அடையமுடியும். அதுவே சுபர் பார்வையின்றி இருந்தால் அமையும் கிரகங்களின் தசா புக்தி காலத்தில் உணவு விஷயத்திலும் ஆரோக்கியத்திலும் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.