ன்றையநாளில் முற்பிறவி பாவ- சாபங்களை இறைவழிபாடு, பூஜை, ஹோமம், யாகம், புண்ணிய நதிகளில் நீராடல், தன்னிடமுள்ள பணம், பொருட்களை பிறர்க்கு தான, தர்மம் செய்தல் என இன்னும் பலவழிமுறைகளில் நம்பிக்கை சார்ந்த செயல்களைச் செய்தால் ஊழ்வினை உறுத்தாது, பாவ- சாபம் தீர்ந்துவிடும், வாழ்வில் தடைகள் விலகும் என்று கால, காலமாகக் கூறிக்கொண்டு செயல்பட்டு வருகின்றார்கள். ஆனால் இந்த செயல்களைச் செய்ததால் பாவம் தீர்ந்ததா? நல்ல பலன் கிடைத்ததா? என்பது இதுபோன்ற பரிகாரங்களைச் செய்தவர்களுக்குத்தான் உண்மை தெரியும்.

Advertisment

ஆதிகாலத்தில் நம் தமிழ் மக்களிடையே திதி கொடுக்கும் பழக்கமில்லை. இதனை தாயுமான சுவாமிகள்.

Advertisment

"வடக்கில் இருந்து வல்லான் ஒருவன் வரவும்
திராவிடத்தில் வந்ததாக கூறுவேன்'' 
என்று ஒரு பாடலில் கூறுகின்றார்.

தமிழ் மக்களின் முன்னோர் வழிபாட்டினை தென்புலத்தார் வழிபாடு என்று கூறுவார்கள். இந்த வழிபாட்டு முறையை தமிழ் மக்களுக்கு வகுத்துக் கூறியவர், தமிழ் மொழியை உருவாக்கி, தமிழர்களுக்கு என்று தனித்த நாகரிகம், பண்பாடு, கலாசாரம், வழிபாடு என அனைத்தையும் வகுத்து தந்தவர், தமிழர்களின் ஆசானும் முன்னோடியுமான அகத்தியர் பெருமான்தான்.

Advertisment

இன்றையநாளில் மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக்கொண்ட கோடிக் கணக்கான தெய்வங்கள், அவற்றுக்கு நாள், நட்சத்திரம், திதி, நேரம் என்று குறிப்பிட்டு, எண்ணிலடங்காத பூஜை, யாகம், வழிபாடு, பண்டிகை, உற்சவங்கள், திருவிழாக்கள் என கொண்டாடிவருகின்றோம். ஆனால் ஆதி நாளில் தமிழ்மக்களுக்கு அகத்தியர் கூறிய ஒரே தெய்வம் எது? ஒரே பண்டிகை எது? என்று அறிவோம்.

"ஆடுகின்ற தேவதைகள் அப்பா கேளு
அரிய தந்தை இனம் சேருமென்று கோனார்''

இம்மக்கள் கட்டையிலும், செம்பிலும், மண்ணிலும் கல்லிலும் பலவிதமான உருவங்களை செய்து, அவற்றை தேரில் வைத்து தெய்வம், தேவதை என்று கூறிக்கொண்டு, தோளிலும் தலையிலும் தூக்கிக்கொண்டு ஆடுகின்றார்களே அவைகளா உங்கள் கஷ்டம் தீர்த்து காப்பாற்றும் தெய்வங்கள்? வம்சத்தில் உண்டான முற்பிறவி பாவ- சாபங்களை நீக்கி, உங்கள் வாழ்வை உயர்த்தி வைக்கும் சக்திகள் அவை இல்லை என்கிறார் அகத்தியர்.

மனிதர்களின் முற் பிறவி, கர்மவினை பாவ- சாபங்களை நீக்கி, இப் பிறவி வாழ்வில் உயர்ந்த நிலையை அடையச் செய்யும் தெய்வம் உங்கள் வம்ச முன்னோர்கள்தான். நம்மை உருவாக்கி, இந்த பூமியில் பிறந்து காப்பாற்றி வளர்த்து ஆளாக்கியவர்கள் நம்மைப் பெற்ற தாய், தந்தை, வம்ச முன்னோர்களின் ஆத்மாக்கள் தான். குடும்பத்தையும், வம்சவாரிசுகளை யும், வாழ்வில் உண்டாகும் அனைத்து தடை, கஷ்டங்களையும், தொழில், பணம், பதவி என அனைத்தையும் தந்து, நல்ல வாழ்வை அடைய, நமது முன்னோர்களை தெய்வமாக, வழிபட்டுவாருங்கள் என்கிறார் அகத்தியர்.

ஒரு மனிதனுக்கு பாவமும், சாபமும், புண்ணிய பலனும் அவரவர் குடும்பத்து உறவுகளுக்கு, நாம் செய்யும் நன்மை- தீமை செயல்கள்மூலம்தான் உருவாகின்றதே தவிர, வேறு இடத்தில் இருந்து, வேறு மனிதர்களிடம் இருந்து இல்லை. நமது முற்பிறவிகளில் எந்த, எந்த குடும்ப உறவிற்கு பாவம், தீமைகள் செய்தோமோ; நமது செயல்களால் எந்த உறவு பாதிக்கப்பட்டதோ அந்த குடும்ப உறவினர் மனம் வெறுத்துவிட்ட அந்த ஆத்மாவின் சாபம், நிவர்த்தியாக, அந்த உறவு ஆத்மாவிடம் இப்பிறவியில் சாப நிவர்த்தி வேண்டி பிரார்த்தனை செய்தால்தான், நல்ல பலன் கிடைக்கும், சாப விமோசனம் கிடைக்கும். 

வம்ச முன்னோர்கள் காலத்தில் உருவாகி, அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்ந்துவந்து, பலவிதமாக சூட்சுமமாக செயல்பட்டு துன்பங்களைத் தரும் பாவ- சாப- பாதிப்புகள் விலக, எந்த உறவு, சாபமிட்டதோ, அந்த முன்னோர் ஆத்மாவை, பிரார்த்தனை செய்தால்தான், அது மன்னித்து, மனமிரங்கி, சாப நிவர்த்தியை தரமுடியும். வேறு எந்த சக்தியாலும், எந்த வழிபாடுகளாலும், தான, தர்ம செயல்களாலும் சாப நிவர்த்தியை அடையமுடியாது என்கிறார் அகத்தியர்.

தென்புலத்தார் (முன்னோர்) வழிபாட்டினை எந்த நாளில்? எந்த நேரத்தில்? எப்படி செய்வது?

வருடா, வருடம் தை மாதம் 1-ஆம் தேதி, வரும் தைப்பொங்கல் நாள் அன்று, விடியற்காலை 5.30 மணிக்கு தொடங்கி, காலை 7.00 மணிக்குள் இந்த முன்னோர் வழிபாட்டினை செய்து முடித்துவிட வேண்டும். விடியற்காலை 5.30 மணிக்கு, வீட்டின் முன்வாசலில், வீட்டின் வெளியில் பொங்கல் வைக்கவேண்டும். 

பொங்கல் வைக்க, வீட்டிலுள்ள பழைய பாத்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது. வழிபாட்டிற்கு சர்க்கரை பொங்கல் அல்லது வெண்பொங்கல் என ஏதாவது ஒன்றை அவரவர் விருப்பம்போல் வைத்துக் கொள்ளலாம். பொங்கல் வைத்தபின்பு வீட்டின் வெளியே முன்வாசலில், ஒரு வாழை இலையை எடுத்து, வாழை இலையின் நுனி வடக்கு பக்கம், வடக்கு நோக்கி இருக்குமாறும், இலையின் அறுத்த அடிப்பகுதி, தெற்குபுறம் இருப்பதுபோல், தெற்கு, வடக்காக இலையைப் போட வேண்டும்.

படையலுக்காகப் போடப்பட்ட வாழை இலையின் தெற்கு பக்கம் விளக்கேற்றி வைத்து, பொங்கல் பானையை வைக்கவேண்டும். வாழை இலை படையலில், வேஷ்டி, துண்டு, சேலை, ஜாக்கெட், 2 தேங்காய், 1 சீப்பு வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு, பத்தி, சூடம், சாம்பிராணி, பூ, படையல் இலையில் பொங்கல் சாதம் வைத்தும், இன்னும் குடும்பத்தில் கணவன்- மனைவி இருவரின் வம்சத்தில் இறந்துபோன முன்னோர்கள் படம், போட்டோ இருந்தால் அவற்றை துடைத்து, பொட்டிட்டு, பூ சாற்றி படையலில் தெய்வமாக வைத்துக்கொள்ளவேண்டும். போட்டோ, படம் ஏதுமில்லை என்றால் பரவாயில்லை.

வாழை இலையில் படையல் தயார்செய்து வைத்து முடித்தவுடன், சாம்பிராணி தூப புகை போட்டு, அதில் இரண்டு தேங்காய் களையும் காட்டி, அவற்றை உடைத்து வைத்த பின், குடும்ப உறுப்பினர்கள், படையலுக்கு எதிர்புறம் அதாவது படையலுக்கு வடக்கு பக்கம், தெற்கு நோக்கி நின்று கொண்டு, எந்த கடவுளையும், தெய்வத்தையும், ஏன்? குலதெய்வத்தைக்கூட மனதில் நினைக் காமல், தெய்வங்களை வேண்டிக்கொண்டு, பிரார்த்தனை வழிபாடு செய்யாமல், அவரவர் வம்ச முன்னோர்களையே தெய்வங்களாக நினைத்து பிரார்த்தனை செய்து வழிபட வேண்டும்.

முன்னோர் வழிபாடு செய்தபின்பு வேஷ்டி, துண்டினை கணவனும் சேலை ஜாக்கெட்டை, மனைவியும் உடுத்திக்கொள்ளவேண்டும். வேறு யாருக்கும் தரக்கூடாது. 

கணவன்- மனைவி இருவரும், அவரவர் பிறந்த குடும்பத்தைச் சேர்ந்த, வம்சத்தில் இறந்துபோன தங்கள் முன்னோர்களை, அதாவது கணவன் அவரது வம்ச முன்னோர் களையும், மனைவி அவள் பிறந்த குடும்பத்து முன்னோர்களையும்தான் பிரார்த்தனைசெய்து வழிபடவேண்டும். 

கணவன்- மனைவி இருவரும் குடும்ப உறவுகளை தெய்வமாக வணங்குவதால் வம்சத்தில் உண்டான பாவ- சாப- தோஷங் கள் படியாகக் குறைந்துவரும்.

21 தலைமுறையைச் சேர்ந்த தாய்வழி, தந்தைவழி முன்னோர்களை வம்சத்தில் உண்டான பாவ- சாப நிவர்த்தியாகவும் தன் குடும்பத்திலுள்ள கடன், நோய், எதிரி, பகை, குடும்ப குழப்பம், புத்திரத் தடை, திருமணத்தடை, என அனைத்து சிரமங்களும் நீங்கி நல்ல வாழ்க்கை அமையவேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். 

முற்பிறவியில், முன்னோர்கள் காலத்தில், தொழில், விவசாயத்தில் இணைந்து, உழைத்து நம்மைக் காப்பாற்றிய, பசு, பறவை, மிருகங்களை தெய்வமாக பிரார்த்தனைசெய்து வணங்கவேண்டும். இதனால் பறவை, மிருகங்களை கொன்ற பாவம், அவற்றை அடித்து துன்புறத்தி வதை செய்த பாவங்கள் நிவர்த்தியாகும். மாடு, மனை, பால்பாக்கியம் செல்வம் விருத்தியாகும். பிரம்மஹத்தி தோஷம் விலகும்.

தென்புலத்தார் (முன்னோர்) வழிபாட்டிற்கு, வீட்டிலுள்ள, பயன்படுத்திய பழைய பாத்திரங்களில் பொங்கல் வைக்கக்கூடாது. புதியதாக பொங்கல் பானை, அதை மூடும் தட்டு, கரண்டி இவற்றை புதியதாக வாங்கிதான் பொங்கல் வைக்கவேண்டும். பாத்திரங்கள் எவர்சில்வர், அலுமினியம், செம்பு, பித்தனை என எந்த உலோகத்தில் செய்ததாகவும் இருக்கலாம். மண் பானையில் பொங்கல் வைக்க எண்ணுபவர்கள், வருடா, வருடம் புதிய மண்பானை வாங்கி பொங்கல் வைக்கலாம்.

பொங்கல் வைப்பது, படையல் போட்டு படைப்பது என அனைத்தும் வீட்டின் வெளியே வாசலில்தான் செய்யவேண்டும். படைப்பு முடிந்தவுடன் வீட்டிற்குள் எடுத்துசென்று சாப்பிடலாம். சாப்பிட்டு முடித்தபின்பு, பொங்கல் வைத்த பாத்திரங் களை, நன்கு கழுவி, சுத்தம் செய்து, தனியாக பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். இந்தப் பாத்திரங்களை அடுத்த வருடம் வரும் பொங்கல் அன்று முன்னோர் வழிபாடு பொங்கல் வைக்க பயன்படுத்திக்கொள்ள லாம். இந்தப் பாத்திரங்களை வேறு எந்த பண்டிகை, படைப்பு, விசேஷங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது. பொங்கலுக்கு, பொங்கல் படைக்கும் முன்னோர் வழிபாட் டிற்கு மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என்பதில் கவனமாக இருக்கவேண்டும்.

இந்த முன்னோர் பூஜையை வம்சம் இருக்கும்வரை, தை மாதம் 1-ஆம் தேதி, தைப்பொங்கல் நாள் அன்று வருடா வருடம் தொடர்ந்து செய்து வந்தால், குடும்பத்தில் உண்டான பிரச்சினைகள், தடைகள், குழப்பங்கள் படிப்படியாக குறைந்துவருவதை அனுபவத்தில் உணரலாம். இந்த முன்னோர் வழிபாட்டினை முறையாக செய்துவருபவர் கள், வருட திதி, அமாவாசை திதி இவற்றை கொடுக்கவேண்டியது இல்லை. காசி, இராமேஸ்வரம் சென்று அலையவேண்டியது இல்லை. மும்மூர்த்திகளால் செய்ய முடியாததை, தீர்க்கமுடியாத பிரச்சினை, சிரமங்களை உங்கள் முன்னோர்கள் தீர்த்து வைப்பார்கள். மும்மூர்த்திகள் வழிபாடு, பூஜையைவிட நமது வம்ச முன்னோர்கள் வழிபாடு சக்திமிக்கது என்பதை அனுபவத்தில் உணர்ந்து அறிந்து கொள்ளலாம்.

தமிழ் புத்தாண்டு, தமிழ் வருட பிறப்பு தொடங்குவது தை மாதம் 1-ஆம் தேதி தான் என்பதை சித்தர்களின் பாடல்மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும் சித்தர் பெருமக்கள் கூறிய தமிழ் சோதிட முறையிலும் தை மாதம் 1-ஆம் தேதிதான் தமிழ் வருடப் பிறப்பு என்று கூறப் பட்டுள்ளது. தமிழர்களின் தமிழ் வருட பிறப்பு ஆரம்ப, முதல் நாளில் வீட்டில் பொங்கல் வைத்து முன்னோர்களுக்கு முதல் படையலிட்டு வணங்கி புது வருடத்தை தமிழ் மக்கள் அகத்தியர் கூறிய வழியில் கொண்டாடி செயல்பட்டு வாழ்ந்துள் ளார்கள்.

வீட்டிற்குள் பொங்கல் வைத்து படைப்பது, பழைய பாத்திரங்களில், குக்கரில் பொங்கல் வைத்து, கடவுளை பிரார்த்தனை செய்து வணங்கி படைப்பது, வீட்டிற்குள்ளேயே படைப்பது, பொங்கல் பண்டிகை அல்ல; தமிழர் பண்டிகை அல்ல. 

இதனால் எந்த நன்மைகளையும் அடைய முடியாது. 

இந்த வருடம் வரும் தை மாதம் 1-ஆம் தேதி பொங்கல் நாளன்று அனைவரும் தனது முன்னோர்களை வழிபட்டு, தமிழர்களின் பண்டிகையை கொண்டாடி, முன்னோர்களின் ஆசியையும், அருளையும் பெறுவோமாக, அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்.