சனிப்பெயர்ச்சி வந்தவுடன் மக்கள் ரொம்ப அதிரி புதிரியாகி விடுகிறார்கள். அது வாக்கியமா, திருக்கணிதமா என்பது ஒரு புறம் அமர்க்களம் ஆனாலும், அவரின் பார்வை விசேஷம் என்பது திகிலுக்குரிய விஷயம்தான்.
சனியின் பார்வை பொசுக்கிவிடும் என்பது எல்லாரும் அறிந்ததுதான். இதற்கு ஒரு புராணக்கதை உண்டு. ஒருமுறை சனியின் சம்சாரம், அவரை கூப்பிட்டிருக்கிறார். ஆனால் மனைவி கூப்பிட, கூப்பிட, சனி திரும்பி பார்க்காமல், மிக அலட்சியம் செய்துள்ளார். வந்ததே கோபம் அந்தம்மாவிற்கு புடி சாபம் என்று சாபமிட்டாள். சரி, என்ன சாபம். நான் கூப்பிட்டவுடன் என்னை பார்க்கவில்லை. அதனால் இன்றிலிருந்து நீ பார்த்த இடமெல்லாம் பஸ்பமாகட்டும் என சபித்துவிட்டாள்.
இதன்படி, சனியின் விசேஷ பார்வைகளான 3, 7, 10லிஆம் பார்வை மூலம் எந்த இடத்தை பார்க்கி றாரோ அத்தனையும் பொசுங்கி போய்விடும். சனியின் வீட்டம்மா, கூப்பிட்டவுடன் சனீஸ்வரர், திரும்பி பார்த்திருந் தால், என்ன விஷயம், ஏன் கூப்பிட்டே என்று கேட்டிருந்தால் நாம் எல்லாரும் நிம்மதியாக இருந்திருக்கலாம். அப்படி பதில் கூறாமல், அலட்சிய மாக இருந்ததால், அந்தம்மா சாபமிட, நாம் எல்லாரும் சட்னியாகி, மிக கஷ்டப்படுகிறோம்.
சனிபகவான், ஒரு ராசிக்கு 2 1/2 வருடம் வீதம், 12 ராசியையும் 30 வருடங்களில் சுற்றிவருவார்.
அவ்வாறு ஒவ்வொரு ராசியிலும் அமர்ந்து, அந்த வீட்டிலிருந்து, 3, 7, 10-ஆம் வீடுகளைப் பார்த்து பாழாக்குவார்.
ஆக, 12 ராசிகளிலும் அமரும்போது, எந்த வீட்டை பார்த்து, எந்தவித கெடுதலைத் தருவார் என தெளிவு பெற்றுவிட்டால், அதற்கேற்ப நமது செயல்களை நடைமுறைப்படுத்தலாம். இதனால் சனியின் பார்வை தாக்குதலிருந்து ஓரளவு தப்பிக்கலாம்.
இதில் குறிப்பிட்ட ராசியை பற்றிக் கூறாமல், பொதுவாக, ஒவ்வொரு ராசிக்கும், சனியின் பார்வை பலன் கூறப்பட்டுள்ளது.
கடலில் குளிக்கும்போது, ஒரு விஷயத்தில் நுணுக்கமாக இருந்தால், நன்கு சமாளித்துக் குளிக்கலாம். சிறு அலைகள் எனும் பெண் அலைகள் வரும்போது, தாக்குப்பிடித்து நின்று கொள்ளலாம். இதுவே பெரிய அலையாக, ஆண் அலை வரும்போது, நன்கு குனிந்து கொள்ள வேண்டும். எனில், பெரிய அலை, அது பாட்டுக்கு, நம்மை கடந்து போய்விடும். நாங்க ஓடுற பஸ்லேயும், கம்பியை பிடிக்காமல்தான், நிற்போம் என் றால் கவிழ்ந்தடிச்சு விழ வேண்டியதுதான்.
இதுபோல், சனி பார்வை படும் இடங்களின் செயல்களை, சுருக்கி, குறுக்கி, பணிவுடன் தலைகுனிந்து அமைத்துக்கொண்டால், சனி பார்வையின் தாக்கம், அதிகமின்றி சமாளித்துக்கொள்ளலாம். இல்லையேல் சனி பார்வை ரொம்ப டேமேஜ் தந்துவிடும். எனவே, உங்கள் ராசி, எதுவாக இருப்பினும், அவர் பார்வைபடும் இடங்களை அடக்க ஒடுக்கமாக வைத்துக்கொண்டால் அழகாக, அருமையாக சேதாரமின்றி நன்கு சமாளித்து விடலாம்.
1-ஆம் ராசியில் சனி அமர்வு
நீங்கள் எந்த ராசியாக இருப்பினும் சனி உங்கள் ராசியில் அமர்ந்தால், அது ஏழரைச்சனியின், ஜென்மச்சனி காலமென்று அறியலாம்.
இவர் ராசியில் அமர்ந்து, 3, 7, 10-ஆம் இடங்களை முறைத்துப் பார்ப்பார். 3-ஆமிடம் என்பது தைரிய ஸ்தானம். எனவே உங்கள் மன தைரியம் ரொம்ப காய்ந்து சுருங்கிவிடும். எனவே ராசியில் சனி இருக்கும்போது, வீண் சவாடல் எல்லாம் வேண்டாம். இதுபோல் இளைய சகோதரன், அவசரத்திற்கு உதவுவான் என்று தவறான நம்பிக்கை வேண்டாம். மேலும் சனி உங்கள் ஞாபக சக்தியை மறைப்பதால், மறதி மிக ஏற்படும். எனவே, உங்கள் பணவரவுகளை, டைரி அல்லது கைபேசியில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். குத்தகை, ஒப்பந்தம், டீலர்ஷிப் எடுப்பது என இவ்வகைகளை சனி பாதிப்பு கொடுப்பதால், இதன் பொருட்டு மிக அதிக முதலீடு செய்யவேண்டாம். வேலை ஆக, ஆக, கொஞ்சம் கொஞ்மாக பண வரவு- செலவு வைத்துக்கொள்ளுங்கள். இதையெல்லாம் சனி ராசியில் அமர்வதற்குமுன்பே முறைப் படுத்திக் கொள்ளவேண்டும்.
ராசியில் அமர்ந்த சனி, உங்களின் 7-ஆமிடத்தைப் பார்ப்பார். இதனால் உங்கள் தொழில் சார்ந்த சந்திப்புக்கள் குறுகும். கூடியமட்டும் உங்கள் வியாபாரம், தொழில் பற்றி பேச்சுவார்த்தை நடத்த, நீங்கள் முன் நிற்காமல், நம்பகமான ஒருவர்மூலம் வணிக நடவடிக்கையை மேற்கொள்ளவும். மனிதத் தொடர்புடைய தொழில்களான வழக்கறிஞர்கள், ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்கள் போன்றோர் ஒரு மானேஜர்மூலம் முதல்கட்ட பேச்சுவார்த்தையை துவங்க ஆரம்பிக்கவும்; அப்புறம் நீங்கள் தொடரலாம். ராசியில் சனி வருவதற்குமுன், கூடியமட்டும் திருமணத்தை முடித்து விடுங்கள். 7-ஆமிடத்தைப் பார்க்கும் சனி, அதனை தாமதப்படுத்துவார்.
10-ஆமிடத்தை சனி, ராசியில் அமர்ந்து பார்க்க இயலும். 10-ஆமிடம் என்பது தொழில் ஸ்தானம். ஒரு கர்ம காரகனான சனி, ஒரு தொழில் ஸ்தானத்தை பாதிக்கவிட மாட்டார். என்ன ஒன்று தொழில் மந்த நிலையை அடையும். தொழிலில் பரபரப்பு இருக்காது. நீங்கள் ஒரு தொழில் ஆர்டரை எடுத்தால், அதனை குறித்த நேரத்திற்குள் செய்து முடித்துக்கொடுக்க இயலாமல் போகலாம். இதனால், நீங்கள் ஆர்டர்களை முடித்துக்கொடுக்க, முதலிலேயே, அதிக அவகாசம் வாங்கிக்கொள்ள வேண்டும்.
இதனால் கெட்ட பெயரிலிருந்து தப்பிவிடலாம். மேலும் யாருக்கும், இதனை கண்டிப்பாக செய்து கொடுக்கிறேன் என்று வாக்கு கொடுக்காதீர்கள். சனி, இதன்மூலம் கௌரவக் குறைச்சலை தந்துவிடுவார். நீங்கள் வாழ்வின் எந்த தளத்தில் எந்தத் தொழில் செய்தாலும் அதனை படோடோபமாக செய்யாதீர்கள். சற்று அடக்கி வாசிக்கவும். சனிக்கு பெருமை, அலங்காரம், ஆடம்பரம் இவையெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. இதனை நன்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும்.
ஆக, ராசியில் அமர்ந்த சனி, 3, 7, 10-ஆமிடங்களைப் பார்க்கிறார். இது ஏறக்குறைய தொழில் சம்பந்தமான இடங்களாக வருகிறது. தொழில் தேக்கம் பெறும். இதனால்தான், ஜென்மச்சனி எனும்போது, அனைவரும் அலறுகிறார்கள். கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகளையும் அதிகரிப்பார்.
ஜென்மச்சனிக்கு சேந்தமங்கலம் சென்று, சனீஸ்வரரை வழிபடவும். சனி, ராசிக்கு வரும்முன்பே, தொழில் முறைகளை அமைதியான முறைக்கு மாற்றிகொள்வது அவசியம்.
ராசிக்கு 2-ஆம் வீட்டில் அமர்ந்த சனி
உங்கள் ராசி எதுவாக இருப்பினும் சனி 2-ஆமிடத்தில் அமர்ந்தால், அது ஏழரைச்சனியில், பாத சனியாக கருதப்படும். அதாவது உங்கள் ராசிக்கு பின்னே 12-ல் இரண்டரை வருடம். ராசியில் இரண்டரை வருடம் அமர்ந்துவிட்டு, ராசிக்கு 2-ல் வரும்போது, அவர் விலகிப்போகும் காலகட்டம். எனவே பாத சனி ஆவார்.
2-ஆமிடத்தில் அமர்ந்த சனி, ராசியின் 4-ஆமிடம், 8-ஆமிடம், 11-ஆமிடங்களைப் பார்வையிடுவார்.
4-ஆமிடத்தைப் பார்வையிடும் சனிபகவான், உங்கள் தாயாரின் நிலையில் சலனம் ஏற்படுத்துவர். ஒன்று அவருக்கு உடல் நலமில்லாமல் போகும். அல்லது அவருக்கும் உங்களுக்கும் சண்டை வந்துவிடும். அடுத்து மாணவர்களின் படிப்பை மறக்கச் செய்வார். மாணவர்களின் மதிப்பெண், எத்தனை ட்யூசன் வைத்தாலும் குறையும். அதனால் பாத சனியில் ஆட்பட்ட குழந்தைகளை திட்டாதீர்கள். அப்புறம் வீட்டை, மாடர்னாக மாற்றுவது என்ற வேலையே வேண்டாம். அவ்வாறு செய்தால், உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா என்கிற கதையில், ரொம்ப மோசமான இடத்தில் வாழவைத்து விடுவார். அதனால் பாத சனி நடப்பவர்கள் எந்த பழைய வீடானாலும் சகித்துக்கொண்டு இருக்கவும். அதேமாதிரி வாழ்க்கைத் துணையின், தொழிலையும் ரொம்ப மாற்றுகிறேன் பேர்வழி என்று புதிதாக எதையாவது செய்ய ஆரம்பித்துவிடாதீர்கள். பழைய மாடல்படி இருந்தால், அது பாட்டுக்கு ஓடும். வீட்டில் கிணறு இருந்தால், போர் பம்பு போடும் வேலையை ஆரம்பித்துவிடாதீர்கள்.
உங்கள் வயல், பண்ணைகளில் மானாவாரியாக தண்ணீர் பாய்ச்சுவதை விடுத்து, சொட்டுநீர் பாசனம் ஆரம்பித்துவிடுங்கள். சனிக்கு எதையும் குறுக்கி செய்வது பிடிக்கும். பால் மாடு இருந்தால், தொழுவத்தை நன்கு சுத்தமாக வைத்துக்கொள்ளவும். இதன்மூலம் சனியின் 4-ஆமிடத்தைப் பார்க்கும் கடுமையை சற்று குறைத்துக்கொள்ளலாம்.
2-ஆமிடத்தில் அமர்ந்த சனி, தனது ஏழாம் பார்வையால், உங்கள் ராசியின் 8-ஆமிடத்தைப் பார்ப்பார். இது பரவாயில்லை. சனி பார்க்குமிட பலன்களை அழிப்பார். எனவே உங்களின், துன்பம், துயரம், முக்கியமாக அவமானங்கள் அடங்கி மறையும். எனவே யாருக்கெல்லாம், 2-ஆமிடத்தில் சனி அமர்ந்து பலன் கொடுக்கிறாரோ, அவர்கள் தைரியமாக தங்கள்மீது போடப்பட்ட வீண், வேண்டாத வழக்குகளை எதிர்த்து போராடலாம். இதனால் உங்கள் அவமானம் துடைக்கப்படும். வரவே வராது எனும் இன்சூரன்ஸ் விஷயங்களை கையில் எடுக்கலாம். வெளிநாட்டில் மிக துன்பப்பட்டுக் கொண்டிருந்தால், இந்த காலகட்டத்தில் நடவடிக்கை எடுத்தால் மீட்சி கிடைக்கும். அடகு கடைக்காரர் ஏமாற்றிய உங்கள் நகைகளை மீட்க முடியும். எனவே 2-ஆமிடத்தில் அமர்ந்த சனிபகவான், உங்களின் எட்டாமிடத்தைப் பார்த்து, அதன் பலன்களை அழிப்பதால், அவமானங்களை தவிடுபொடி ஆக்கிவிடுவார்.
2-ஆமிட சனி, தனது பத்தாம் பார்வையால் உங்களின் 11-ஆமிடம் எனும் லாபஸ்தானத்தைப் பார்க்கிறார். இது லாப ஸ்தானம் மட்டுமல்ல. உங்கள் ஆசைகள் நிறைவேறும் இடமுமாகும். இதனை பார்க்கும் சனி ஆசைப்படுவதா, லாபமா, லட்சியமா, அப்படின்னா என்ன என்று கேள்வி கேட்பார். அதனால் உங்கள் ராசிக்கு 2-ல் சனி வந்து அமரும்முன்பே, உங்கள் ஆசை, லட்சியத்தை நிறைவேற்றிட வேண்டும்.
அதுபோல், நீங்கள் அரசியல்வாதியாக இருந்தால், சனி 2-ஆமிடத்திற்கு வரும்முன்பே, எளிதான, எளிமையான ஒரு அரசியல் பதவியில் அமர்ந்துவிடுங்கள். சனி 2-ஆமிடத்துக்கு வந்த பிறகு, பெரிய அரசியல் பதவியை பிடுங்கிவிடக்கூடும். எனவே நீங்களே வழங்கப்பட்ட பதவிகளில் இருந்து, சற்று கீழ் இறங்கி விடுங்கள். அல்லது விலகிவிடுங்கள். இதனால் மன சலிப்பு ஏற்படாமல் காப்பாற்றப் படுவீர்கள். சனி 2-ஆமிடத்திற்கு வரும் முன்பே, ஒருவித சன்யாசி வாழ்க்கையை, ஆசை, பற்று இல்லாமல் வாழ பழகுங்கள். சமையல் கலைஞர்கள் தலைமை பதவியில் இருந்து சற்று ஒதுங்கி பழகுங்கள். சனி 2-ஆமிடத்திற்கு வருவதற்கு முன்பே, வீடு, வயல், அரசியல் இவற்றில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வாழ ஆரம்பியுங்கள். சனி 8-ஆமிட பலன்களை அழித்து நன்மை தரும்போது, நீங்களும் வாழ்வில் ஒருபடி இறங்கி வாழ்ந்தால், சனியை சமாளித்துவிடலாம். திருநள்ளாறு சனியை வணங்கவும்.
(தொடர்ச்சி வரும் இதழில்...)