அன்புள்ளம் கொண்ட பக்திமான்களே...!
பக்தி பிரியர்களே...!
இறை அன்பர்களே...!
கோடான கோடி பக்தி அடியார்களே...!
சிவனடியார்களே...!
உங்கள் அனைவருக்கும் எமது பணிவான வணக்கத்தை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் மீண்டும் பக்தி செலுத்துவது எப்படி என்பதை பற்றியே எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இறைவனை காண்பதற்கு எந்த ஒரு தரகரும் தேவையில்லை! இறைவனை காண்பதற்கு உன் உள்ளம் தூய்மையானதாக, மாசற்றதாக இருக்குமானால் நீ இறைவனிடம் அவரைப்பற்றி நினைக்கும்போதே, அவருடைய அருளாசி எப்போதும், உன் அருகிலேயே இருப்பதோடு மட்டு மின்றி உன்னை பின்தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். காரணம் என்னவென்றால்? ஒரு மனிதனுடைய எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கவேண்டும். "நினைப்பு தாண்டா பொழப்பகெடுக்கும்'' என்று கிராமத்துல ஒரு வழக்குச் சொல் உண்டு. அது என்ன நினைப்பு பொழப்ப கெடுக்கும். பொழப்பு என்றால் நாம் செய்யும் தொழில், நம்மைக் காப்பாற்றிக்கொள்ள செய்யும் வேலை, நமது குடும்பத்தைக் காப்பாற்ற நாம் செய்யும் அலுவல் என்று பொருள் கொள்ளலாம்.
அத்தகைய வேலையே கெட்டுவிடும் என்று இந்த பழமொழி நமக்கு உணர்த்துகிறது. பிழைப்பை கெடுக்கும் அளவிற்கு ஒரு மனிதனின் நினைப்பு எவ்வாறு இருந்திருக்கும்? நினைக்கக்கூடிய நினைப்பே எண்ணமாக மாறுகிறது. அந்த எண்ணமே புத்தியில் செயலாற்றலாக பதிவாகிறது. அந்த ஆற்றல் சொல்லாக (வாய் வழியாக) வெளிப்பட்டு, செயல்படும்பொழுது மாறுபாடு இல்லாமல் நாம் செயல்படவேண்டும் நினைக்கிறது ஒன்னு, அது எண்ணமாக மாறும்போது செய்வது வேறொன்றாகவும் புத்தி செயல்பட்டு, அது சொல்லும்போது (வாய் வழியாக) பிறிது ஒன்றாகவும் இருக்கும்பொழுது, அந்த நினைப்புக்கு சொந்தக்காரனின் மனம் கெடுவதோடு, புத்தியும் கெட்டு, இறுதியில் உடலும் கெட்டுவிடும். ஆகவேதான் நமது நினைப்பு சரியானதாக இருக்கவேண்டும். தெளிவானதாக இருக்கவேண்டும். ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். பிறிதொரு உயிருக்கு நன்மை செய்யக்கூடியதாக இருக்கவேண்டும்.
எந்த ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்கக் கூடாது. உண்மையானதாக இருக்கவேண்டும். அப்படியிருப்பவன் செய்யும் பக்தியே மிக உயர்ந்த பலனை கொடுக்கும் அற்புதமான பக்தியாகும்.
இதைத்தான் சிவவாக்கியர் "நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளே இருக்கையிலே'' என்று குறிப்பிடுகின்றார்.
அத்தகைய பக்திக்கு எப்போதும் பிரபஞ்ச பேராற்றல் எனும் சிவப்பரம் பொருள் துணை நிற்கும். பக்தி செய்பவனுக்கு பக்தி செய்பவன் முதலில் அவன் உடலைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். உடல் எனும் பொழுது 15 ஆயிரம் வருடங்களுக்குமுன்பே திருமந்திர சிற்பி திருமூலர் உடலைப்பற்றிய ரகசியத்தை சொல்வதைப் பார்க்கலாம்-
"உடம்பை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பின் உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோவில் கொண்டான் என்று
உடம்பினை யான்இசைந்து ஓம்புகின் றேனே.''
முன்பெல்லாம் நான் இந்த உடம்பைப் பற்றி நினைக்கும்போது, இவ்வுடம்பை ஒரு பாவச்சுமை என்று கருதினேன். உடம்பை மிக மிக இழிவாக பார்த்தேன். அதன் பின்புதான் தெரிந்துகொண்டேன். நமது உடம்பின் உள்ளே சிறந்த செல்வம் (உறு பொருள்) இருப்பதை நான் கண்டுகொண்டேன். அத்தகைய சிறந்த செல்வம் எது என்று நான் ஆராய்ந்து பார்க்கும்பொழுது, அதுவே சிவப்பரம் பொருளாகிய இறைவனே நம் உள்ளத்தில் குடியிருக்கிறான் என்பதை அறிந்து என் மனம் மிகுந்த வேதனையுற்றது. அதன் பிறகுதான் இறைவன் குடியிருக்கும் இந்த உடம்பையா இவ்வளவு கேவலமாக வைத்திருக்கிறோம் என்று என் மனம் துடித்தது. அன்றுமுதல் இறைவன் குடியிருக்கும் இவ்வுடலெனும் வீட்டை, கோவிலை பேணி பாதுகாத்து போற்றி வளர்த்து வரலானேன்.
இறைவன் எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்து இருக்கிறான்.
இதைப் பற்றியும் 15 ஆயிரம் வருடத்திற்கு
முன்பே திருமந்திர விஞ்ஞானி திருமூலர் குறிப்பிட்டதைப் பார்ப்போம்-
"புரையற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரையற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.''
காய்ச்சி ஆறிய பால் தயிராக மாறுவதற் காக அதில் சிறிது மோரை விடுவார்கள். இதற்கு புரை ஊற்றுதல் அல்லது புரை குத்துதல் என்பது பொருள். இப்படி புரையூற்றிய பாலானது தயிராகிவிடும். அவ்வாறு தயிரானபிறகு அதனை கடைந்து வெண்ணெய்யாக எடுத்துவிடுவர். எடுத்த வெண்ணையை காய்ச்சி நெய் ஆக்குவர். இந்த நெய் எங்கிருந்து வந்தது? என்றால், இந்த நெய் பாலில் இருந்து வருவதுதான்! ஆனால் இந்த நெய்யானது புரையூற்றாத பாலில் வெளிப்படையாக தெரிவதில்லை. ஆனால் நெய் அந்தப் பாலில் கலந்துதான் உள்ளது.
பாலில் நெய் இருப்பது, நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. பாலில் நெய் மறைந்திருப்பதுபோலவே இந்த பிரபஞ்சத்திலுள்ள அசையும்- அசையா எனும் அனைத்து பொருள்களிலும் "ஏகன்' எம்பெருமான் சிவப்பரம்பொருள் "அனேகனாக' மறைபொருளாக இருந்து இப்பிரபஞ்சத்தை ஆட்சி செய்கின்றான்.
இந்த நிகழ்வினை சுமார் 15 ஆயிரம் ஆண்களுக்குமுன்பே பிரபஞ்ச மெய்ஞானி, விஞ்ஞானி திருமூலர், இத்தகைய உண்மையை தெளிவுபடுத்துகிறார். இந்த அரும்பெரும் உண்மையை நாத்திகர்கள் தெரிந்துகொள்கிறார்களோ இல்லையோ, ஆத்திகர்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும்.
அப்போதுதான் நாம் இறைவனை எங்கேயும் தேடிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு இறைவன் நமக்கு உள்ளேதான் இருக்கிறான் எனும் உயர்ந்த பண்பை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளமுடியும். அது மட்டுமில்லாமல் அந்த உண்மையை புரிந்துகொண்டு, ஒவ்வொருவரும் பிரபஞ்சத்தில் இயற்கையில் இருக்கும் இறைவன் நம்மை படைத்தது நமக்காக மட்டுமல்ல, நம்மால் ஏதேனும் ஒரு உயிருக்காவது உதவிகரமாக, உபயோகமாக இருக்கவேண்டும் என்பதே மனித படைப்பின் ரகசியமாகும்.
அதன்பிறகு, அதாவது 12-ஆம் நூற்றாண்டுக்குமுன்பு வாழ்ந்ததாகவும், வாழ்ந்தவருமான சங்ககாலப் புலவர்களில் ஒருவராக போற்றப்படுபவருமான முதுபெரும் மூதாட்டி இலக்கியப் புலவர் ஆகச்சிறந்த அதிதீவிர முருக பக்தை அவ்வையார் இயற்றிய அவ்வை குறள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்-
"பாலின் கண் நெய்போல் பரந்தெங்கு நிற்குமே
நூலின்கண் ஈசன் நுழைந்து.''
பால் தயிராகி, தயிரில் வெண்ணை கடைந்து, வெண்ணை உருகித்தான் நெய்யாகிறது. எனவே பாலிலேயே நெய் இருக்கிறது. பாலில் நெய் இருப்பது, கண்ணுக்குத் தெரியாமல் இருப்பது போலவே சுவாச மூச்சின் கண்ணே இறைவன் நீக்கமற நிறைந்து இருக்கின்றான் என்றுரைக்கின்றார்.
இதனை அதன்பிறகு வந்த நால்வரில் ஒருவரான அப்பர் பெருமான், "விறகின் தீயில் நற்பாலில் படு நெய்போல் மறைந்துள்ளான். மாமனிச்சோதியான்'' என்று சிவப்பரம் பொருளை பாடியுள்ளார்.
பொய், களவு, கள், காமம், கொலை ஆகிய ஐந்தும் மிகவும் கொடூரமான கொலை பாதக செயல் என்று குறிப்பிடுகின்றார்.
இப்போது, நாம் மேலே சொன்ன கருத்தை யாரும் பொய் சொல்லி திரித்துக் கூறக்கூடாது. இந்த ஐந்து நிகழ்வுகளில் முதலாவதாக ஒருவன் அதாவது, ஆறறிவு படைத்தவன் பொய் சொல்லக்கூடாது என்று எடுத்துரைக்கின்றார். பொய் சொன்ன வாய்க்கு போஜனம் (உணவு) கிடைக்காது என்பது ஆன்றோர் வாக்கு. எவன் ஒருவன் பொய் சொல்கின்றானோ, அவன்மீதமுள்ள திருடுதல், மது அருந்துதல், பெண்மீது மோகம் கொள்ளுதல், முடிவில் கொலை செய்தல் எனும் அத்தனை மகா பாதகமான இழிவான செயலையும் செய்துவிடுவான் என்பதே பாலில் நெய் இருப்பதுபோல பொய்யில் இந்த நான்கு இழிவான குற்றச் செயல்களும் மறைந்திருக்கிறது என்பதே இதன் உண்மை கருத்தாகும்.
"பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.''
ஒருவன் பிறருக்கு தீங்கானவற்றை முற்பகலில் செய்தால், அதன் விளைவாக அவ்வாறு செய்தவருக்கு அதைவிட கொடுமையான தீமைகள், பிற்பகலில் அவர் செய்யாமல் தாமாகவே வந்துசேரும் நாம் எப்போதும் எதிர்மறையான (சங்ஞ்ஹற்ண்ஸ்ங்) எண்ணங்களை தவிர்த்து விட்டு நேர்மறையான (டர்ள்ண்ற்ண்ஸ்ங்) எண்ணங்களை, சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் அப்போதுதான் உடலும் மனமும் அதன் உள்ளே குடியிருக்கும் உயிரும் எப்போதும் ஆரோக்கியமாக மகிழந்திருக்கும். அதற்கு பின்வரும் திருமந்திரம் நமக்கு ஒரு நல்ல புரிதலையும் தெளிவையும் உண்டாக்கும் என்று நம்புகிறேன்.
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரனாற்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.''
உள்ளமும், மனமும் கருவறை ஆகும். சதையால் ஆக்கிரமிக்கப்பட்ட இவ்வூன் உடம்பானது (சப்த தாதுக்கள்) ஆலயம் ஆகிறது. அகிலத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் கருணையோடு அருளை வாரி வாரி வழங்கும் வள்ளலாக விளங்குகின்ற பரம்பொருளை சென்று வழிபட வெளிவாசல் (வாய்) உள்ளத்திற்கு கோபுர வாசலாக உள்ளது. அறிவு விளக்கமுற்று, அறியாமை எனும் இருளகன்று, தெள்ளத் தெளிவான மனநிலை வாய்க்கப் பெற்ற ஒருவனுக்கு, உயிரே (சீவன்) வழிபட்டு வணங்கத்தக்க சிவலிங்கமாகும். ஞானேந்திரியங்கள் எனப்படும். மெய், வாய், கண், காது, மூக்கு ஆகிய ஐந்து புலன்களும் அவை பொருந்தியுள்ள உடலுக்கு வஞ்சகமாக, அறிவை தன் இச்சைக்கு ஏற்ப செயல்பட செய்வதால் அவை கள்ளப் புலன்கள் எனப்பட்டது. ஆனால் அத்தகைய ஐந்து புலன்களும் கோவிலின் கருவறையில் உள்ள சரவிளக்கு என்று சொல்லப்படும் மிகப்பெரிய ஐந்து அழகிய மணி விளக்குகளையே குறிக்கிறது. அந்த விளக்குகளில் இருந்து வெளிப்படும் "வெளிச்ச பிரகாசம்' நமக்கு.
நம் கண்ணுக்கு கருவறையில் இருக்கும் இறைவனை மகோன்னதமாகக் காட்டுகின்றது. புலன்களின் தூய்மையே ஞான வெளிச்சத்திற்கு வழிகாட்டியாகும். புலன்கள் தூய்மையாக இருக்கும்போது அது கருவறையில் இருக்கும் அழகிய ஐந்து மணி விளக்குகளைப்போல பிரகாசிக்கும்.
இதிலிருந்து நாம் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் ஐம்புலன்களை ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ளாமல், நாம் செய்யும் பிரார்த்தனைகள் அத்தனையும் வீணானது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு 500 வருடங்களுக்கு குறையாமல் உள்ள பழமையான கோவில்களுக்கு சென்று இறை தரிசனம் செய்து, வெளிப் பிராகாரம், உட்பிராகாரம் சுற்றிவந்து ஏதேனும் ஒரு இடத்தில் கண்களை மூடி குறைந்தது, பத்து நிமிடங்கள் நமது சுவாசத்தை கவனித்துக் கொண்டிருக்கவேண்டும். இல்லையெனில் நமது மனதில் உள் முகமாக ஏதேனும் ஒரு சுலோகத்தை அல்லது பக்தி பாடலை சொல்லிக்கொண்டு இருக்கலாம். அவ்வாறு இருக்கும்பொழுது நமது ஐம்புலன்கள் அமைதி அடையும். அதனால் மனமானது அப்பழுக்கற்று இருக்கும் உடல், மனதிலுள்ள கழிவுகள் முற்றிலுமாக வெளியேறிவிடும். இப்போது நமது புத்தியானது ஒரு சரியான பாதையில் தெளிவாக செயல்படும். சங்ககாலப் புலவர் ஔவையார் இயற்றிய அவ்வை குறள் கூறுவதைப் பார்க்கலாம்-
"மாசற்ற கொள்கை மனத்தில் அடைந்தக்கால்
ஈசனைக் காட்டும் உடம்பு.''
ஒருவன் தன் ஐம்புலன்களின் வழியாக வரும் தீமையானவற்றை நீக்கிவிட்டு குற்றமில்லாத நல்லவழியில் மனதை செலுத்துகின்ற உள்ள உறுதி கிடைக்கப் பெற்றுவிட்டால் அவன் தன் கண் எதிரி லேயே கடவுளைக் காணமுடியும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/03/arul-2025-12-03-16-29-48.jpg)