ரு நாட்டிற்கும், நாட்டு விவகாரங்களுக்கும், அரசாளும் நிலை பற்றி எந்த ஒரு ஜோதிட முறையிலும் பலன்கள் கூறப் படவில்லையென்று உனக்குத் தெரியாதா? நாட்டையாளும் யோகமும், பாக்கியமும், ஒரு மனிதனின் விதியைக்கொண்டே அறியமுடியும். அரசர்கள் நாட்டை ஆட்சி செய்த காலத்தில், வம்ச வாரிசுகள் அடுத்தடுத்து அரசர் களானார்கள்.  மன்னனுக்கு வாரிசு இல்லையென்றால், ஒரு யானையிடம் மாலையைக் கொடுத்து, யார் கழுத்தில் யானை மாலையைப் போடுகின்றதோ, அவனையே அந்நாட்டு அரசனாக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.  நாடாளும் யோகம் யாருக்கு உள்ளதோ, அவனைத் தேடிச்சென்று யானை மாலையிடும்.  இப்போது புரிகிறதா, அரச பதவியை அடைய என்ன வேண்டுமென்று... அதுதான் யோகம்.

Advertisment

இன்று நாடாளும் அரச பதவி, யானை போடும் மாலையில் இல்லை. மக்கள்போடும் ஓட்டுகளின்மூலமே தீர்மானிக்கப்படுகிறது. மக்கள்தான் யானை, அவர்கள் போடும் ஓட்டுகள் தான் மாலை.  இதில் நாடாளும் யோகமுள்ளவன் முக்கிய பதவியையும், அவனைச் சேர்ந்தவர்களும் வெற்றிபெற்று பதவியை அடைவார்கள். இவன் யோகம் இவனைச் சார்ந்தவர் களையும் வெற்றியடையச் செய்யும். நிலைமை இப்படி இருக்கும்போது தேர்தலில் நிற்கும் அனைவரையும் ஆய்வுசெய்து, யார் முதல்வர்? எந்த அணி வெற்றிபெறும்? யாருடன் யார் கூட்டணி வைப்பார்கள் என்று அறிந்துசொல்வதுதான் அகத்தியன் வேலையா என்று சினந்துகொண்டார் அகத்தியர்.

Advertisment

ஒரு மாலை நேரத்தில், நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தபோது 2026 தேர்தல் விரைவில் நடக்கப்போகின்றது.  இந்தத் தேர்தலில் எந்தக்கட்சி வெற்றிபெற்று ஆட்சியில் அமரும். மேலும் கூட்டணி அமைவதில் குழப்பம் தெரிகிறது. புதிய கட்சிகள் வேறு உருவாகியிருக்கிறது. அதனால் 2026 தேர்தல் முடிவுகள் எப்படித்தான் இருக்கும் என அகத்தியரிடம் கேளுங்களேன் என பேச்சு அரசியல் பக்கம் திசைமாறிப்போக, நமக்கு எதற்கு அரசியல், இது தேவையில்லாத வேலை என நான் நண்பர்களிடம் கூறினாலும். இல்லை அகத்தியர் ஓலையில் என்ன சொல்கிறார் என கேட்டு சொல்லுங்கள் என்று வற்புறுத்தியதை அடுத்து, நான் அகத்தியரிடம் கேட்ட போதுதான் மேற்கண்ட பதிலைக் கூறினார் அகத்தியர்.


அவரின் பதிலைக் கேட்டநான் அமைதி யானேன். நண்பர்கள் முகம் வாடியது. ஆனாலும் அவர்கள் விடுவதாயில்லை. அனைவரும் அகத்தியரை பிரார்த்தனை செய்வோம், அவர் மனமிறங்குவார் என்று பிரார்த்திக்க ஆரம்பித்தனர்.

Advertisment

அவர்களின் பிரார்த்தனைக்கு மனமிறங்கினார் அகத்தியர். நான் அவரை வணங்கிஓலையைப் பிரித்தேன் 2016-ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவனுக்காக, இதே கேள்வியைக் கேட்டாய் அப்போது தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும் வழிமுறைகளைக் கூறினேன். அதை செயல்படுத்தி வெற்றி பெற்று அந்தக்கட்சி ஆட்சியிலும் அமர்ந்தது அப்போது நான் கூறியதை நினைத்துப் பார். 

இனி இந்த தேசத்தில் நடைபெறும் தேர்தல்களில் வெற்றிபெறும் வழிமுறைகள் இப்படித்தான் இருக்கும் என்றார்.

2016 தேர்தலில் வெற்றிபெற அகத்தியர் அப்போது என்ன சொன்னார் என்பதைக் கூறுங்கள் என்று நண்பர்கள் ஆர்வமானார்கள். நான் ஓலையை மூடி வைத்துவிட்டு அகத்தியர் கூறியதை கூறத் தொடங்கினேன். 

(15-4-2016, 22-4-2016-ஆம் தேதியிட்ட "பாலஜோதிடம்' இதழ்களிலும் அதேபோல் 5-2-2021, 12-2-2021 "பாலஜோதிடம்' இதழ்களிலும் அகத்தியர் கூறியதை மையமாக வைத்து கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.)

2016-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் சமயத்தில் ஒரு கட்சி தலைமைக்கு நெருக்க மான ஒருவர் என்னை வந்து சந்தித்தார்.  இந்த தேர்தலில் தான் சார்ந்துள்ள கட்சி, தோல்வியடையும் என்று உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன எனவும்,  இதனால் தங்கள் கட்சி தலைமை, பலவிதமான பூஜைகள், யாகங்கள், என ஜோதிடர்கள் கூறியதுபோல் செய்துவருகின்றார்கள். 

ஆனாலும் தங்கள் கட்சி வெற்றிபெறாது, எதிர்க் கட்சிக்குத்தான் மக்கள் ஆதரவு உள்ளது, எதிரணிதான் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் கட்சி வெற்றி பெற, மேலும் என்ன செய்யவேண்டும் என அகத்தியர் வழிகாட்டவேண்டும்'' என்றார். 

நான் ஜீவநாடி ஓலையைப் பிரித்து படிக்கத் தொடங்கினேன். ஒரு கூலித் தொழிலாளியாக இருந்து, நான் கூறிய வழிமுறையை சரியாகக் கடைபிடித்து, செயல்பட்டு, இன்று நல்ல நிலையில் உள்ளான். மகிழ்ச்சி. இவன் சார்ந்த கட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசம் காட்டுகின்றான். அதனால் வழிகூறுகின்றேன்.  அதன்படி செயல்படச் சொல் என்றார். 

இந்த நாட்டில் நடக்கும் ஒவ்வொரு தேர்தலும், மக்களுக்கு ஒரு திருவிழாவாக இருக்கும். ஆனால் அரசியல் தலைவர் களுக்கும், ஆட்சி, பதவியை அடைய போட்டியிடுபவர்களுக்கும் இது ஒரு மகாபாரத போர்க்களமாக, கௌரவ, பாண்டவர் யுத்தமாகவே இருக்கும். பாரதப் போரில், பரந்தாமன் செய்ததுபோல், வஞ்சகம், சூழ்ச்சி, சூது, நம்பியவர்களை ஏமாற்றும் செயல்கள், துரோகம் இவையே வெற்றி- தோல்வியை தீர்மானிக்கும்.

கிருஷ்ணன், பாரதப் போரில், பாண்டவர்கள் வெற்றிபெற துரியோதனனுக்கு ஆதரவாக இருந்த, மாவீரர்கள் அனைவரையும், போர் தொடங்குவதற்குமுன்பே, நல்லவன்போல் நடித்து, சூழ்ச்சி செய்து அவர்களின் பலம் குறையச் செய்தான்.

துரியோதனனின் ஆருயிர் நண்பன் கர்ணன் பிறக்கும்போதே எதிரிகளால் வெல்ல முடியாத கவச குண்டலங்களுடன் பிறந்தவன்.  கர்ணன் இருக்கும்வரை கௌரவர்களை போரில் தோற்கடிக்க முடியாது என்று அறிந்த கிருஷ்ணன், இந்திரனை மாறு வேடத்தில் சென்று கர்ணனிடமுள்ள கலச  குண்டலங்களை யாசகமாக பெறச் செய்தான்.

கர்ணனின் தாயான குந்தி தேவியை, கர்ணனிடம் அனுப்பி, நாகாஸ்திரத்தை அர்ச்சுனன்மேல் ஒரு முறைக்குமேல் ஏவக்கூடாது என்று வரம் வாங்கச் செய்தான்.

கர்ணன் பரசுராமரிடம், அரிய போர் கலைகளைக் கற்று தேர்ந்தான். கிருஷ்ணன் வண்டு  ரூபமாக சென்று ஒரு நிகழ்வை நடத்தி கர்ணனுக்கு ஆபத்தான சமயத்தில் அவர் கற்றுக்கொடுத்த வித்தைகள் பலிக்காமல், செயல்படாமல், போக சாப தரவைத்து,  இதன்மூலம் கர்ணனின் பலத்தைக் குறைத்தான். கிருஷ்ணர், கர்ணனால்தான் பாண்டவர்கள் உயிருக்கு ஆபத்து வரும் என்பதை அறிந்து கர்ணன் பலத்தை குறைப்பதையே குறிக் கோளாகக் கொண்டு செயல்பட்டான்.

பிதாமகன் என்று அழைக்கப்படும் பீஷ்மர், இவர் கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் பாட்டனார்.  மகாவீரர் இவரை நேரில் நின்று யாரும் வெல்லமுடியாது ஆனால் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத அலியால்தான் வெல்லமுடியும் என்ற ஒரு சாபம் உண்டு, பாரதப்போரில் பிருகநளை என்ற ஒரு அலியை , பீஷ்மருடன் போர் செய்ய முன்நிறுத்தினான் கிருஷ்ணன்.  ஒரு அலியுடன் போர்புரிய மறுத்து பீஷ்மர் ஆயுதங்களை கீழே போட்டார். அந்த நேரத்தில் பிருகநளை அம்பெய்து பீஷ்மரை சாய்த்துவிட்டான்.

கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் ஆசிரியராக இருந்த துரோணாச்சாரியரை அவர் மகன் அஸ்வத்தாமன் போர்க்களத்தில் அஸ்வத்தாமன் என்ற யானை இறந்தது என்றபோது, யானை என்ற வார்த்தையை கூறும்போது, சங்கை ஊதி, துரோணரின் காதில் அஸ்வத்தாமன் இறந்தான் என்ற வார்த்தை மட்டும் படும்படி செய்து ஆயுதத்தை கீழே போட்ட நிலையில்  துரோணரை அம்பெய்து கொல்லச் சொன்னான் கிருஷ்ணன்.

விதுரர், சக்திவாய்ந்த சிவ  தனுசை தன் ஆயுதமாக வைத்திருந்தார்.  விதுரரை கோபமடையச் செய்து தன் சிவ தனுசை அவரையே உடைக்க செய்தான் கிருஷ்ணன்.

பாரதப் போரில், கௌரவர்களுக்கு பக்கபலமாக , உண்மையாக இருந்து இன்னும் பலரின் சக்தியை போர் ஆரம்பிப்பதற்கு முன்பே பலம் இழக்கச் செய்து, துரியோதனன் ஆதரவு பலத்தை வஞ்சகமாக குறைத்து போரில் பாண்டவர்களுக்கு, வெற்றி கிடைக்கச் செய்தான் கிருஷ்ணன். கிருஷ்ணரின் செயலைப்போன்று, நீதி, நேர்மை, நியாயம் பாராமல் எதிரணியில் உள்ளவர்கள் பலத்தை இழக்கச் செய்தால்தான் இவன் கட்சி வெற்றியைப் பெறமுடியும்.

"புத்தியுள்ளவன் பல வான்' என்று கூறுகிறார்கள். இந்த தேர்தலில் வெற்றிபெற இவன் கட்சிக்கு எதிரான கட்சி யிலுள்ள கூட்டணி கட்சி வேட்பாளர்களிடம் சென்று, உங்கள் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சி வெற்றிபெற்றால் நீங்கள் வெறும் சட்டமன்ற உறுப்பினர்தான்.  ஆனால், நாங்கள் ஆட்சி அமைக்க உதவி செய்தால், நீங்கள் கேட்பதையெல்லாம் செய்து தருகிறோம் என்று கூறினால்,  உங்கள் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வரும் என்று கூறி,  எதிரிகள் கூடாரத்தை பலவீனப்படுத்துங்கள் என்றார்.

தங்கள் அணி வெற்றிபெற வேண்டும் என்ற வழிகேட்டு நாடி பார்க்கவந்தவர், அகத்தியர் கூறியதை தன் கட்சித் தலைமைக்கு எடுத்து சென்றார்.

அதன்பிறகு நடந்தது...

அடுத்த இதழில்!

செல்: 99441 13267