ரு  பக்தி ஞானயோகி என்பவர் என்னவெல்லாம் சித்திகளையும் அதன் சக்தி களையும் பெறமுடியும்..? சாதாரண மனிதனுக்கு இந்த ஒரு பூமி கிரகம் மட்டுமே சொந்தமாகும்.

Advertisment

ஆனால் ஒரு ஆன்மிக யோகி மிக உயர்ந்த கிரகமான பிரம்ம லோகத்திற்கு செல்வது அல்லது வைஹாயஸர்கள் என்பவர்களுடன் விண்வெளியில் பிரயாணம் செய்வது போன்ற அஷ்ட சித்திகளை அடைவது. அல்லது லட்சக் கணக்கிலுள்ள கிரகங்களில் ஏதேனும் ஒன்றில் ஒருவித சூழ்நிலையை விரும்புவது போன்ற முன்னேற்றமான ஜட இன்பங்களுக்குரிய ஆசையை யோகி வைத்திருப்பாராயின் பௌதிகமான மனதையும் புலன்களையும் அவர் தன்னுடன் கொண்டுசென்று அனுபவம் செய்வார்.

Advertisment

அதாவது பூமியைவிட சில மிகஉயர்ந்த கிரக அமைப்புகள் உள்ளன. அவை. சுவர்க்க லோகம், துருவலோகம் (துருவநட்சத்திரம்) பிரம்ம லோகம் போன்றவைகள். மஹர் லோகத்திற்கும் அப்பால் உள்ளன.

அக்கிரகங்களில் வசிப்பவர்களுக்கு அஷ்ட சித்திகளும், அற்புத சக்திகளும் அளிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

அவைகள்: 

1. அணிமா- சித்தி ஓர் அணுவைப்போல் சிறியதாக மாறக்கூடிய சக்தி.

2. லகிமா- சித்தி மென்மையான ஓர் இறகைவிட இலேசாக மாறுதல்.

3. பிராப்தி - சித்தி எது எங்கிருந்தாலும் அதைப் பெறும் சக்தி. 

4. மஹிமா - சித்தி மிகக் கனமானதை விட கனமாக மாறுவது. 

5. ஈசித்வ - சித்தி அற்புதமான ஒன்றை தடையின்றி படைப்பது அல்லது விருப்பம் போல் எதைவேண்டுமானாலும் அழிக்கும் சக்தி

6. வசித்வ - சித்தி எல்லா ஜட வஸ்துக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி. 

7. ப்ரகாம்ய- சித்தி எந்த ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள கூடிய சக்தியைப் பெற்றிருத்தல்.

8. காமாவஸாயிதா- சித்தி மனம் போனவாறு ஆசைப்பட்ட வடிவத்தையோ அல்லது உருவத்தையோ மேற்கொள்ளக் கூடிய சக்தி.

மேற்குறிப்பிட்ட அஷ்ட சித்திகளை அடைய அற்புதமான யோக பூரணத்துவ முறைகளை அவர்கள் கற்கவோ- பயிலவோ தேவையில்லை அந்த உயர் கிரகங்களில் வசிப்பவர்களுக்கு இத்தகுதிகள் அனைத் தும் இயற்கையின் வெகுமதிகளைப்போல் சர்வ சாதாரணமானவை ஆகும்.

விண்வெளியில் பிரயாணம் செய்வதற்கு எவ்விதமான இயந்திர உதவியும் அவர்களுக்கு தேவையில்லை நொடிப்பொழுதில் ஒரு கிரகத்திலிருந்து வேறெந்த கிரகத்துக்கு வேண்டுமானாலும் விரும்பியவாறு பிரயாணம் செய்ய அவர்களால் முடியும்.

மண்ணுலக சாதாரண மனிதர்களால் ஆகாய விமானங்களின் உதவி இல்லாமல் மிக அருகாமையிலுள்ள ஒரு கிரகத்துக்கு கூட பிரயாணம் செய்ய முடியாது. ஆனால் பெரும் சாமார்த்தியம் உடையவர்களாக உயர்கிரக தேவர்களால் அனைத்தையும் மிகச் சுலபமாக செய்து விடமுடியும்.

மண்ணுலகில் சில வைராக்கியம் மிக்க மனிதர்கள் தாங்கள் தவத்தின்மூலமாக அந்த தேவர்களிடமிருந்து இந்த சித்திகளையும் அதன் சக்திகளையும் பெற்று அத்தகைய உயர் கிரக அமைப்புகளில் உண்மையில் என்ன இருக்கிறது என்பதை அனுபவித்தறிய பௌதிக எண்ணங்களுடன் விரும்புவதால் அனைத்தையும் நேரடியாக காண அந்த யோகியால் விரும்பமுடியும்.

உலக அனுபவத்தைப் பெறும் ஆவலுள்ளவர்கள் உலகம் முழுவதிலும் பிரயாணம் செய்வதைப்போலவே ஆன்மிக யோகியும் பௌதிக புத்தியில் அக்கிரகங்களைப் பற்றிய பல அற்புத தகவல்களை கேள்விப்பட்டு 
அவற்றை குறித்து சிறிது அனுபவங்களைப் பெற ஆசைப்படுகிறார் தற்போதுள்ள பௌதிகமான மனதுடனும். புலன்களுடனும் அங்கு சென்று தனது ஆசையை சுலபமாக நிறைவேற்றிக்கொள்ள ஒரு யோகியால் முடியும்.
நசிகேதன் கேட்கிறார்.

தர்மம், அதர்மம், காரியம், காரணம், இறந்தகாலம், எதிர்காலம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டதாக நீ எதைக் காண்கிறாயோ, அதை எனக்கு சொல்வாய்....?

யமதர்மன் கூறுவது.

இதற்கு முகாந்திரமாக யமதர்மன் முதலில் ஓங்காரம் தியானத்தைப் பற்றி சொல்கிறார்.

அத்யாத்ம யோகத்தின் அதாவது- அகத்தில் செய்யும் யாகத்தின் சாதனையாக ஓங்காரம் அல்லது பிரணவ மந்திரத்தை தியானிக்குமாறு உபநிஷதம் சொல்கிறது. 

இந்த பிரணவ மந்திரத்திற்கு சப்த பிரம்மம், நாதப்பிரம்மம் என்றெல்லாம் பெயருண்டு மஹத்- தத்வத்தில் உலகம் படைக்கப்பட்டபொழுது முதலில் எழுந்த ஓசை "ஓம்' என்கிற ஓசைதான்இப்பொழுதும் இது யோகிகளால் மட்டும் கேட்க முடிந்த சப்தப் பிரம்மமாக இருக்கிறது. 

இது யாராலும் எழுப்பப்படாத ஓசை..! அதனால் இது அனாஹத் த்வனி எனப் படுகிறது.

பிரம்மம் என்ற அறுதி நிலையிலிருந்து எழுந்த முதல்நாதம்.

இதுவே இறைவனை அடைய இந்த நாதமே ஒரு உயரிய வழி. அதாவது- அருவ பிரம்மத்தை நாடும் ஒரு யோகி. இந்த ஓம் எனும் அனாஹத த்வனியை பின்பற்றிப் சென்றால்... பிரம்மத்திடம் போய்ச் சேரலாம். அதுவே அவருக்கு பரமபதம். 

எந்த லட்சியத்தை எல்லா வேதங்களும் சொல்கின்றனவோ, எதற்காக தவம் செய்யப் படுகிறதோ, எதை விரும்பி பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கப்படுகின்றதோ, அந்த லட்சியத்தை அடைவதற்கான ஒரே சுருக்கமாக வழி மாண்டூக்ய உபநிஷத்தில் கூறப்பட்டது போன்ற "ஓம்' என்றப் பிரணவ மந்திரமே.!

இதைத்தான் நான் உனக்கு சொல்ல விரும்புகிறேன். 

"ஓம்' என்ற இந்த மந்திரமே இறைவன். இந்த மந்திரமே மேலானது.

இந்த மந்திரத்தை அறிந்து யார் எதை விரும்புகிறாரோ, அது அவனுக்கு கிடைக்கின்றது. 

இந்தப் பாதை சிறந்தது. இந்தப் பாதை மேலானது. இதனை அறிந்து செல்கின்றான்.

பிரம்ம லோகத்தை அடைகின்றான்,

அதாவது- ஓம் காரம் அல்லது பிரணவம்தான் தெய்வீக தன்னுணர்வின் வித்தாகும். அது. அ - உ - ம் என்ற மூன்று தெய்வீக அட்சரங்களால் ஆனதாகும். 

ஒரு யோகி இல்லத்திலிருந்து வெளியேறி புலனடக்கத்தைப் பயிலவேண்டும்.

அவன் புனித தீர்த்தத்தில் தினமும் நீராடி சரிவர தூய்மைப்படுத்தப்பட்ட தனிமையான ஓரிடத்தில் அமரவேண்டும் அமர்ந்தபின் மூன்று பிரம்ம அட்சரங் களை (அ-உ-ம்) மனதில் நிலைக்கச் செய்ய வேண்டும். அதன்பின் சுவாசத்தை ஒழுங்கு படுத்துவதன்மூலமாக பிரணவத்தை மறந்துவிடாது இருக்கும் வகையில் மனதை கட்டுப் படுத்தவேண்டும்.

பிரணவ மந்திரத்தை மனதால் ஜெபிப்பது என்பது பௌதீகத்தில் ஆழ்ந்துள்ள மனதை சமாதி நிலைக்கு கொண்டு வருவதாகும். இதுவே மனப்பழக்கத்தை மாற்றுவதற்குரிய முறையாகும்.

மனதை கொன்றுவிடக்கூடாது. மனத்தை அல்லது அதனை ஆளும் எண்ணங்களின் ஆசையை நிறுத்தவும் முடியாது. 

ஆனால் ஆன்மிகத்தன்னுணர்வை இலக்காகக் கொண்ட ஓர் ஆசையை விருத்தி செய்துகொள்வதற்காக மன ஈடுபாட்டின் தரத்தை மாற்றிக் கொள்ளவேண்டும். சுறுசுறுப்பான புலன்களுக்கு மனமே ஆதாரமாக இருக்கிறது. 

இதனால் எண்ணம், உணர்ச்சி மற்றும் இச்சை ஆகியவற்றின் தரத்தை மாற்றினால் புலன்களால் இயற்றப்படும் செயல்களின் தரமும் தானாகவே மாறிவிடும். 

ஓம் காரம் எல்லா தெய்வீக ஒலிகளுக்கும் வித்தாகவும் விரும்பிய மன மற்றும் புலன்களின் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளது. 

இந்த தெய்வீகமான ஒலி சிகிச்சையால் பித்துப்பிடித்த மனிதனையும் குணப்படுத்தி விடமுடியும்.

இத்தகைய தெய்வீகமான "ஓம்' காரம் எனும் தன்னுணர்வை புலன் இயக்கங்களுக்கு மையமாகமுள்ள மனதின்மூலமாக செயற் படுத்தவேண்டியது அவசியமாகும். 

ஓங்கார மந்திரத்தை இயந்திரம்போல் ஜெபிப்பதாலும் சுவாசத்தை ஒழுங்குபடுத்து வதாலும் மனதை தெய்வீகமான மாறச் செய்யும் முதல்முறைக்கு பிரணாயாமம் அல்லது சுவாசக் காற்றை முழுமையாக அடக்கி ஆளுதல் என்று பெயர். இந்த பிரணாயாம முறையின் முடிவான நிலை சமாதியில் நிலைபெற்று இருப்பதாகும்.

இந்த சமாதி அருவபிரம்மத்தில் நிலைபெற்று இருப்பதாகும். 

சில பக்தயோகிகள் அந்த சமாதி நிலையில் அவர்களுடைய இஷ்டதெய்வமானவர் யாரோ விஷ்ணு, லட்சுமி, சிவன், சக்தி, விநாயகர், முருகன் மற்றும் சூரியன் இவர்களை அந்த சமாதியில் நிலைநிறுத்தி அவர்களின் உலகங்களை அடையப்பெறுவர். 

ஆன்மா- (இதயக்குகை ஜோதி) 

உடம்பு- (ஸ்தூலம்)

உயிர்- (சூட்சுமம்)  

ஆகிய மூன்றின் சேர்க்கையே மனிதன். இதில் நாம் மரணம் என்று குறிப்பிடுவது உடம்பின் மரணத்தை மட்டுமே. பழைய போர்வையை களைந்துவிட்டு புதிய போர்வையை அணிவதுபோல் ஜீவனான உயிர் (சூட்சுமம்) ஒரு உடம்பை களைந்து விட்டுப் புதிய உடம்பை எடுத்துக் கொள்கிறது.

நாம் என்கிற ஆன்மாவிற்கு மரணமில்லை. ஸ்தூல உடம்பின் மரணத்திற்குப் பிறகும் அது வாழ்கிறது. அதனால் "நாம்' என்றும் வாழ்கிறோம். 

-தொடர்ந்து பார்ப்போம்!
செல்: 96599 69723