கிரகங்கள் என்றால் யார்? அவர்களுடைய காரகத்துவம் என்பது என்ன? 12 பாவகங்கள் என்பது என்ன? அவற்றின் ஸ்தான பலம் என்ன? இவற்றையெல்லாம் வழங்கியவன் இறைவன்!

Advertisment

பகுத்தறிவு என்ற பெயரில், ஒரே நிமிடத்தில், ஒரே நட்சத்திரத்தில், ஒரே ராசியில், ஒரே லக்னத்தில் பல ஆயிரம் பேர் பிறக்கின்றபோது அவர்களுக்கெல்லாம் ஒரேவித பலன்கள்தானே உண்டாக வேண்டும் என்று கேள்வி கேட்பவர்களுக்கு, நீங்கள் சொல்கின்ற அதே நிமிடம், அதே நேரம், அதே ராசி, அதே லக்னத்தில் பிறந்தவர்கள் அத்தனைபேரும் உங்கள் கூற்றுப்படி ஒரே நேரத்தில்தானே மரணிக்க வேண்டும்? ஆனால்  ஒவ்வொருவருக்கும் இறுதி நாட்கள் வெவ்வேறானதாக இருக்கிறதே ஏன்? 

Advertisment

பூமியில் பிறந்திருக்கின்ற ஒவ்வொருவரும் நான் இங்குதான் பிறக்க வேண்டும்! இவருடைய வயிற்றில்தான் பிறக்க வேண்டும் என்று வரம் வாங்கிக்கொண்டு வந்து பிறக்கவில்லை.

இவர்களுக்கு நீங்கள் வாரிசாக வந்து பிறக்க வேண்டும்! 

உங்களைப் பெற்றெடுத்ததின் வழியாக அவர்கள் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகளை உங்கள் வழியாகவும் ஒரு பகுதியை அவர்கள் அனுபவிக்க வேண்டும். அதேபோல் அவர்களுக்கு பிள்ளையாக பிறந்து அதன் வழியாக உங்களுக்குரிய கர்ம வினையை நீங்கள் அனுபவித்தாக வேண்டும்.

Advertisment

அது, நன்மையாகவும் இருக்கலாம், அவமானமாகவும் இருக்கலாம்,  போராட்டமாகவும் இருக்கலாம், எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

இங்கு எல்லாமே ஒருபக்க நியாயமல்ல, பெற்றெடுத்தவர்களின் கர்ம வினைகளும், அவர்களுக்கு வாரிசாக வந்து பிறந் துள்ள உங்களின் கர்ம வினைகளும்தான்!

உங்களைப் பெற்றெடுத்து உங்களால் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகளை அவர்கள் அனுபவிக்கின்றனர். அவர்களுக்குப் பிள்ளையாகப் பிறந்து அவர்களால் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகளை நீங்கள் அனுபவிக்கிறீர்கள். இதுதான் உண்மை.

நம்முடைய பிறப்பு, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை என்பது நம்முடைய கர்ம வினைகளின் தொடர்ச்சி மட்டும்தான்!

இந்த ரகசியத்தை உணர ஒவ்வொரு வருக்கும் ஒரு நேரம் வரும். 

இங்கே நீங்கள் என்பது நீங்களும் அல்ல, நான் என்பது நானும் அல்ல. நாம் செய்து கொண்டிருக்கும் எதுவும், செய்வது எதுவும் நாம் செய்வதல்ல நம்முடைய கர்ம வினைகளுக்கேற்ப பலன்களை வழங்கிக்கொண்டிருக்கும் கிரகங்கள்தான்.

ஒருவருக்கு எந்த நேரத்தில் எதைக் கொடுக்க வேண்டுமோ அந்த நேரத்தில் அவர்களுக்கு அதை அவர்களுடைய ஜாதகத்தில் அமர்ந்துள்ள கிரகங்களின் வழியாக நம்முடைய கர்ம வினைகள் கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுத்தே தீரும்.

இந்த உண்மையை உணராதவர்கள் வெற்றியாளராக பவனி வரும்போது நான் ஜெயித்துவிட்டேன்! நான் உச்சத்தை எட்டி விட்டேன்! எல்லாவற்றுக்கும் காரணம் நான்... நான்... நான்தான் என்று பேசுவர்! ஆனால் அவர்களுடைய வாழ்க்கையும் ஒரு காலத்திற்குப்பின் படு பாதாளத்திற்கு போய்விடும்!

ஒருசிலரைப் பார்த்தால் தவறு செய்வதற்காகவே பிறப்பெடுத்தவர்கள்போல் இருப்பார்கள். மற்றும் சிலர் ஏதாகிலும் ஒரு தவறு செய்துவிட்டு, நான் தப்பு பண்ணிட்டேன்! தப்பு பண்ணிட்டேன்! என் வாழ்க்கை இப்படி ஆகிப்போச்சு! இப்படி நான் செய்திருக்கக்கூடாது! என்று மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருப்பார்கள்.

நம் வாழ்வில் நடக்கும் எதற்கும் நாம் காரணமல்ல! நாம் ஆட்டி வைக்கப்படும் பொம்மைகள் மட்டும்தான்! நாம் எந்த நேரத்தில் எதை அனுபவிக்க வேண்டும்! எப்படி வாழவேண்டும் என்பது நம் கர்ம வினைகளால், கிரகங்கள் செய்துகொண்டிருக் கும் செயல்கள்தான்.

மண்ணில் பிறந்த ஒவ்வொரும் நல்ல பெயருடன் வாழவேண்டும்! நன்றாக வாழ வேண்டும்! தவறு செய்யாமல் வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்தான்!

ஆனால், நினைத்த வாழ்க்கையை வாழ முடியாமல் நம்முடைய வாழ்க்கை வேறு பாதைக்குள் சென்றுவிடுகிறது!

எல்லாமே சூழ்நிலையின் வழியாக கிரகங்கள் செய்யும் மாயம்தான்!

பிறப்பின் வழியாக செல்வ செல்வாக் கோடு வாழ்ந்துவருபவர்களும் இதற்குத் தப்புவதில்லை.

இங்கேயுள்ள ஒருவருக்கும் நாளை என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாது! இந்த நிமிடத்தின் நிலை என்பது மட்டும்தான் நாம் அறிந்திடக்கூடியது. அடுத்த நிமிடம் எதுவும் நடக்கலாம் என்பதுதான் பிறப்பின் விதி.

இத்தகைய விதி என்பது என்ன? அதை எப்படி அறிவது என்ற கேள்வி எழும்போது தான் ஜோதிட சாஸ்திரம் நமக்கு முன்பாக வந்து நிற்கிறது!

ஒவ்வொருவருடைய பிறப்பும் இறப்பும் தீர்மானிக்கப்பட்ட ஒன்று! இதற்காக இந்தப் பிறப்பு, இதைச் செய்து முடிக்கிற வரையில் தான் இந்த வாழ்க்கை!

நம்முடைய பிறப்பின் தலையெழுத்துதான் நம்முடைய ஜாதகம்! அதில் கிரகங்கள் அமர்ந்தநிலை, அவர்களுடைய சஞ்சார நிலைகளின் படியே நமக்குப் பலன்கள் கிடைத்துக் கொண்டிருக்கும்! அவரவர் கர்ம வினைக்கேற்ப சிலருக்கு யோகம் அதிகமாக இருக்கும்! சிலருக்கு அவயோகம் கூடுதலாக இருக்கும்! ஜாதகத்தில் திசை மாறுகின்றபோது அந்த தசாநாதனின் காரகத்திற்கேற்ற, அவர் வாங்கிவந்த சாரத்தின் அடிப்படையில்  பலன்கள் கிடைக்கும்! அந்த தசா காலத்திலும் புக்தி நாதனின் காரகத்திற்கேற்ப அவர் பெற்றுள்ள சாரத்தின் அடிப்படையில் பலன்கள் கிடைக்கும். அதேபோல் ஒன்பது கிரகங்களும் கோட்சாரரீதியாக அவர்கள் சஞ்சரிக்கும் நிலையினை வைத்து பலன்கள் உண்டாகும்.

இங்கே எந்த மனிதர் வாழ்விலும் நிரந்தரம் என்பது எதுவுமே இல்லை! இன்றிருக்கும் நிலை நாளை மாறும். இன்று நடக்காது என்று நினைத்தது நாளை நடக்கும். இன்று நடக்கும் என்று நினைத்தது நடக்காமலும் போகும். இன்று நமக்குரியதாக இருப்பது நாளை நம்மிடம் இல்லாமலும் போகும்! நாம் எதிர்பார்க்காத ஒன்று நம்மை வந்து சேரும். இதுதான் விதி.

இதற்கும் மேலாக, மிகப்பெரிய யோகம் ஒருவருக்கு இருப்பதாக அவருடைய ஜாதகம் காட்டினாலும் அந்த ஜாதகரின் கர்மவினையே அந்த யோகத்தின் அளவைக் காட்டும்!

ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலையை வைத்தே அவர் யார்? 

அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? 

என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய முடியும்!

மிக பரிசுத்தமாக இங்கே வாழ்ந்து கொண்டிருப்பவரின் வாழ்க்கையும் ஒரு நேரத்தில் தடம்மாறும். மிக மோசமாக வாழ்ந்து கொண்டிருப்பவரின் வாழ்க்கை யும் ஒரு நேரத்தில் சுபிட்சமாகும். இவற்றுக் கெல்லாம் காரணம் நம்முடைய கர்மவினை.

இராமாயணம் என்றால் அதை எழுதிய வால்மீகி பெயர்தான் நமக்குத் தெரியும். இராமாயணம் எழுதுவதற்குமுன் வால்மீகி யின் வாழ்க்கை?

வால்மீகி என்பவன் ஒரு வழிப்பறி கொள்ளையன்! அவனைப் பார்த்தாலே மக்கள் அஞ்சி நடுங்குவர்! ஈவு இரக்கமில் லாமல் கொள்ளையடித்து வாழ்ந்துவந்தவன்! அவன் வாழ்க்கையை ஒரே ஒரு நிமிடம்! ஒரே ஒரு வார்த்தை அப்படியே மாற்றிப் போடுகிறது. 

வழிப்பறி கொள்ளையனாக வாழ்ந்து, கொள்ளையடித்ததை எல்லாம் கொண்டுபோய் உறவுகளுக்கு பங்குபோட்டு கொடுத்தவன் நீ! உன்னிடம் பொருட்களைப் பறி கொடுத்தவர்கள் அழுத கண்ணீர், அவர்கள் உனக்கு கொடுத்த சாபமெல்லாம் உன்மீது பாவ மூட்டையாக இருக்கிறது! அதையும் கொண்டுபோய் அவர்களிடம் கொடுத்து விட்டு வா! என்ற வார்த்தையைக்கேட்டு, அவன் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் பொய்த்துப் போக, கொள்ளையடித்த பொருட்களை ஏற்றுக்கொண்டவர்கள் அதன் வழியே அவன் சுமந்துகொண்டிருக்கும் பாவத்தில் துளியளவும் ஏற்றிட ஒருவருமே தயாராக இல்லை என்பதை உணர்ந்த போதுதான் அவனுக்குள் ஞானம் பிறக்கிறது. இராமாயணத்தை எழுத அவன் பணிக்கப் படுகிறான்.

ஒவ்வொருவருக்கும் ஞானம் உண்டாக ஒரு காலம் வரும்! அந்தக் காலத்தில்... அந்த நேரத்தில் வாழ்க்கையின் அர்த்தம் புரியும்! அந்த அர்த்தத்தை புரிந்துகொள்ளும்போது எதுவுமே நாம் அல்ல என்ற உண்மையை நம்மால் உணரமுடியும்.

நம் பிறப்பு என்பது எத்தகையது என்பதை இதன்மூலம் உங்களால் தெரிந்துகொண்டி ருக்க முடியும்! நம்முடைய பிறப்பின் ரகசியம் தான் நம்முடைய ஜாதகம்! நம்முடைய ஜாதகத்தை நாம் பார்க்கும்போது எந்த நேரத்தில் நமக்கு என்ன நடக்கும்?  நாம் எப்படி மாறுவோம்?  அந்த மாற்றம் எப்படியிருக்கும்? நம் முன்னேற்றத்திற்கு தடைபோட்டுக் கொண்டிருக்கும் கிரகங்கள் யார்? அவர்களுடைய சஞ்சார நிலையால் நமக்கு எந்தவிதமான தோஷங்கள் இருக்கிறது! யோகங்கள் இருக்கிறது என்பதையெல்லாம் நம் ஜாதகத்தின் வழியாகவே நம்மால் தெரிந்துகொள்ளமுடியும்! ஒன்று முதல் பன்னிரண்டு பாவகங்களில் கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலையை வைத்தே அவருடைய வாழ்க்கையின் ரகசியத்தை நம்மால் உணர முடியும்! 

அந்த ஜாதகரின் கர்ம வினைக்கேற்ப அவர் அனுபவிக்கும் பலன்களில் ஏற்றம் இருக்குமே ஒழிய பலன்களில் துளியளவும் மாற்றம் இருக்காது.

எதை நாம் அனுபவிக்க இப்பிறப்பை நாம் எடுத்திருக்கிறோமோ அதை நாம் அனுபவித்தே ஆகவேண்டும்.

செல்: 9444393717