னமுருகி வழிபட்டால் பக்தர்கள் சொல்வதை இறைவன் கேட்பார். அதற்கு உதாரணமாக, இந்தப் பெருமாள் அமைந்துள்ளார். அவர் ஒரு குழந்தையைப்போல் பழகும் உள்ளம் கொண்டவர். தனது அடியார்கள் செலுத்தும் பக்தியின் பரவசத்தில் அவர்கள் என்ன கட்டளையிட்டாலும் அதை அப்படியே செய்பவர். எனவேதான் பக்தர்கள் பெருமாளிடம் உரிமையாக எதையும் கேட்கலாம், சண்டை போடலாம், கோபித்துக் கொள்ளலாம். ஆனால் பெருமாள் பக்தர்கள்மீது ஒருபோதும் கோபம் கொள்ளமாட்டார். அவரிடம் நமக்கு வேண்டியவற்றை உரிமையோடு கேட்கலாம். நாம் கஷ்டப்படும்போது மனமுருகி அழைத்தால் ஓடிவந்து கேட்ட வரங்களை அள்ளித்தருவார். அப்படிப்பட்ட ஒரு தலத்தின் பெருமாளைப் பற்றி தற்போது பார்ப்போம்.

Advertisment

ஒருமுறை பிரம்மாவின் மனைவி சரஸ்வதிக்கும், லட்சுமிக்கும் இடையே யார் உயர்ந்தவர் என்ற விவாதம் ஏற்பட்டது. இதற்கு விடைதேடி சரஸ்வதி தேவலோகத் தலைவர் இந்திரனை சென்று சந்தித்தார். எங்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்பதற்கான பதிலை நீங்கள் சொல்லவேண்டும் என்று தேவேந்திரனிடம் சரஸ்வதி கேட்க லட்சுமிதான் உயர்ந்தவர் என்று தேவேந்திரன் கூற கோபத்தோடு, அங்கிருந்து புறப்பட்ட சரஸ்வதி அனைத்து உயிர்களையும் படைக்கும் தனது கணவர் பிரம்மாவிடம் பதில் கேட்டுவந்தார். நீங்கள் சொல்லுங்கள் எங்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்று சரஸ்வதி கேட்க பிரம்மா லட்சுமிதான் உயர்ந்தவர் என்று கூற, இதனால் கணவர்மீது கடும்கோபம் கொண்ட கலைவாணி பிரம்மாவை விட்டுபிரிந்து சென்றார். இந்த நிலையில் மகாவிஷ்ணுவை நோக்கி அஸ்வமேதயாகம் செய்ய தொடங்கினார் பிரம்மா. இதுபோன்று யாகங்கள் நடத்தும்போது சாஸ்திரப்படி கணவன்- மனைவி, இருவரும் சேர்ந்துதான் அதுபோன்ற யாகத்தை நடத்தவேண்டும். ஆனால் சாஸ்திர வேதங்களை வகுத்த பிரம்மாவே மனைவியான தன்னை ஒதுக்கிவிட்டு தனித்து யாகம் நடத்தியதை கண்டு கோபம் அடைந்த சரஸ்வதி பிரம்மா நடத்தும் யாகத்தை தடுப்பதற்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினார்.

Advertisment

உடனே பிரம்மா, மகாவிஷ்ணுவின் உதவியை நாட மகாவிஷ்ணு சரஸ்வதி ஏற்படுத்திய இடையூறுகள் அனைத்தையும் முறியடித்தார். இதனால், மேலும் மேலும் கோபம் அடைந்த சரஸ்வதி- பிரம்மா யாகம் நடத்தும் பகுதியில் வேகமாக ஓடிவரும் ஒரு நதியாக பெருக்கெடுத்து ஓடி யாகத்தை தடுக்க முனைந்தார். இதைக்கண்ட மகாவிஷ்ணு, தனது பஞ்சணையான ஆதிசேஷன்மீது படுத்தநிலையில் ஆற்றின் குறுக்கே வேகமாக வந்த வேகவதி நதியை, ஒரு பெரும் அணையாக குறுக்கே படுத்து தடுத்ததால், இவ்வாலய பெருமாளுக்கு வேக சேது என்ற பெயரும் உண்டு. பெருமாள் வேகவதி நதியின் குறுக்கே சரியானநேரத்தில் படுத்து தடுத்தார். பிறகு தனது தவறை உணர்ந்த சரஸ்வதி தன் செயலுக்காக மனம் வருந்தினார். 

அதனால்தான் இந்த ஆலயத்திற்கு "திருவொக்கா' ஆலயம் என்ற பெயர் வழங்கலாயிற்று. காஞ்சிபுரம் ஒட்டி சின்னக்காஞ்சிபுரம் பகுதியில் இவ்வாலயம் அமைந் துள்ளது. 

Advertisment

காஞ்சிபுரம் பகுதியில் 14 ஆலயங்கள் அறுகருகே ஒன்றுக்கொன்று தொடர்புகளுடன் அமைந்துள்ளன. அதில் பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் திருமழிசையாழ் வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். இவர் மட்டுமல்ல பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் போன்ற ஆழ்வார்களும் இந்த ஆலய பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். அப்படி இருந்தும், இதில் திருமழிசை ஆழ்வார், இவ்வாலயத்திலேயே தங்கி, இறைவனுக்கு தொண்டுசெய்தும் பாசுரங்களை பாடியும் பெருமாளை மகிழ்வித்து வந்துள்ளார். இவருக்கு கணிக்கண் என்ற ஒரு சீடன் இருந்தார். நாள்தோறும் தன் குருவுக்கு அனைத்து பணிவிடைகளையும், செய்து உஞ்ச விரித்தி எடுத்துவந்து அவருக்கு சேவை செய்துவந்தார். இவர்களின் ஆசிரமத்தை நாள்தோறும் தூய்மைப்படுத்தி அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தவர் ஒரு வயதான மூதாட்டி அவரின் சேவையைகண்டு திருமழிசை ஆழ்வார் மனம் உருகினார். ஒருநாள் அந்த மூதாட்டியிடம், தங்களுக்கு நான் "ஏதாவது உதவிசெய்ய நினைக்கிறேன். என்ன வேண்டும் உங்களுக்கு கேளுங்கள்'' என்றார்.

அப்போது, அந்த மூதாட்டி, எனக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது இருந்தும், தங்களுக்கு மேலும் மேலும் தொடர்ந்து சேவை செய்யவேண்டும். அதற்கு எனக்கு நல்ல உடல்பலம் வேண்டும். அதைத் தாருங்கள் என்று கேட்டார் மூதாட்டி. அடுத்த கணமே மூதாட்டியின் முதுமை நீங்கி இளமை திரும்பியது. ஆழ்வாரின் பக்தியினால் பெருமாள் அந்த மூதாட்டிக்கு முதுமையை நீக்கி இளமையை வழங்கினார். இந்த செய்தி நகரமெங்கும் பரவியது. அப்போது ஆட்சி செய்துகொண்டிருந்த பல்லவ மன்னனுக்கும் இந்த தகவல் சென்றது. இது குறித்து மன்னன் தனது அமைச்சர்களுடன்  ஆலோசித்தபோது, அவர்கள் ஆழ்வாரின் நம்பிக்கை யான சீடன் கணிக்கண்ணன், இவர் சொல்வதை அவனது குருவான திருமழிசை ஆழ்வார் தட்டமாட் டார். எனவே கணிக் கண்ணன்மூலம் ஆழ்வாரை இங்கு வரவழைத்து, இறைவனிடம் உங்களைப்பற்றி பாடச் சொன் னால் உங்களுக்கும் முதுமை நீங்கி, இளமை திரும்பும் என்ற ஆலோசனையைக் கூறினர்.

அதன்படி, கணிக்கண்ணனை, அரண் மனைக்கு வரவழைத்தனர். அரண்மனைக்குள் வந்த கணிக்கண்ணனிடம் மன்னர் தனக்கும் இளமை திரும்பவேண்டும். எனவே, உனது குருநாதரிடம் சொல்லி இறைவனிடம் பாடி, எனக்கு இளமை திரும்ப வழி செய்யவேண்டும். அதற்கு உதவவேண்டும் என்று கூறினார். அதற்கு கணிக்கண்ணன் குருவின் கருணையை சேவையின்மூலம் பெறலாமே தவிர கட்டளைமூலம் பெறமுடியாது மன்னா. 

இதற்கு எனது குரு ஒப்புக்கொள்ள மாட்டார் என்று கூறி, மன்னரின் கோரிக்கையை நிராகரித்தார். இதனால் மன்னனுக்கு கோபம் ஏற்பட்டது. உடனே தனது வீரர்களிடம் கூறி கணிக்கண்ணனை நாடு கடத்துமாறு உத்தரவிட்டார். 

அதைகேட்டு மனம் வருந்திய கணிக்கண்ணன் தன் குருநாதரிடம் சென்றார். தங்களுக்கு என்னுடைய சேவை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குருவே என்ற கணிக்கண்ணன் அரண்மனையில் நடந்த சம்பவங்களை கூறி இனி நான் இங்கு இருக்கமுடியாது. மன்னரின் உத்தரவுப்படி நாடு கடத்தப்பட்டுள்ளேன். எனக்கு புறப்படுவதற்கு தாங்கள் உத்தரவு தாருங்கள் என்று ஆழ்வாரிடம் கேட்டார். 

இதைக்கேட்ட திருமழிசை ஆழ்வார். எனது மனமறிந்த சேவை செய்யும் நீயே என்னைவிட்டு போகும்போது, நான் மட்டும் இங்கு எதற்கு இருக்கவேண்டும். வா நாம் இருவரும் சென்று பெருமாளிடம் முறையிடுவோம். பிறகு நானும் உன்னுடன் வருகிறேன் என்று கூறிவிட்டு ஆலயத்திற்கு சென்று பெருமாளைத் தரிசித்தனர். அப்போது ஆழ்வார் இறைவன்முன்பு தன் மனக்குறையை வெளிப்படுத்துமாறு ஒரு பாசுரம் பாடினார்.

"கணிகண்ணன் போக்கொழிந்தான் 
காமரு பூங்கச்சி
மணிவண்ணா!
நீ கிடக்கவேண்டும்.
துணிவுடைய
செந்நாப் புலவனும்
போக்கொழிந்தான்
நீயுமுன்றன்
பைந்நாகப்
பாய்படுத்துக் கொள்''

என்று பெருமாளை பார்த்து பாடினார் திருமழிசை ஆழ்வார்.

பாசுரத்திற்கும் அன்பிற்கும் கட்டுப்பட்ட பெருமாள் அவருடன் புறப்பட்டார். 

கனிக்கண்ணன் போகின்றான் மணி வண்ணா. இங்கு கிடக்கவேண்டாம் துணிவுடைய சென்னாப் புலவனான நானும் போகின்றேன். பக்தர்கள் இல்லாத, இங்கு நீயும் எதற்கு இருக்கின்றாய். எனவே நீயும் உந்தன் நாகப் பாயை (ஆதிசேஷன் படுக்கை) சுருட்டிக்கொண்டு, எங்களோடு வா. என் சீடன் இல்லாத ஊரில் நான் இருக்கமாட்டேன். உன்னை வணங்கும் பக்தர்கள் இல்லாத ஊரில் உனக்கு மட்டும் என்ன வேலை? நீயும் உன் பாம்புப் பாயை சுருட்டிக்கொண்டு என் பின்னாலேயே வா என்று கூறிவிட்டு, சீடன் முன்னே செல்ல ஆழ்வார் பின்னே செல்ல அவர்களைத் தொடர்ந்து, பெருமாளும் தன் பாம்புப் பாயை சுருட்டிக்கொண்டு, அவர்கள் பின்னே நடக்க ஆரம்பித்தார். பெருமாள் வெளியேறியதும், அவரது மார்பிலே வாசம் செய்யும் திருமகளும் ஊரைவிட்டு நீங்கினார். பெருமாளும் திருமகளும் இல்லாத காஞ்சிமாநகரை விட்டு அனைத்து தேவர்களும் நீங்கினர். காஞ்சிபுரம் தன் களையை இழந்தது. அவர்கள் மூவரும் ஊரைக்கடந்து செல்லும்போது இரவு நேரம் நெருங்கியது. மூவரும் ஒரு இடத்தில், இரவு தங்கினார்கள். அந்த இடத்திற்கு தற்போது "ஓர் இருக்கை' என்ற பெயர் உருவாகி தற்போது பேச்சுவழக்கில் மருவி ஓரிக்கை என்று அழைக்கப்படுகிறது. இறைவன் ஒரு இரவு அங்கு தங்கியதால் அந்தப் பெயர் நிலைத்துள்ளது.

மறுநாள் காலை பெருமாளுக்கு பூஜை செய்ய அர்ச்சகர்கள் ஆலயத்தின் கதவை திறந்தனர். கருவறையில் சயன கோலத்தில் எப்போதும் இருக்கும் பெருமாள் அங்கு இல்லாததைக் கண்டு திடுக்கிட்டனர். இந்த தகவலை மன்னனுக்கு தெரிவித்தனர். 

மன்னன் ஓடிவந்து, ஆலயத்தை பார்க்க பெருமாள் இல்லாதது கண்டு மனம் வருந்தினார். ஆழ்வாரின் சீடன் கணிக்கண்ணனை நாடு கடத்த உத்தரவிட்டதும். அவர்களோடு சேர்ந்து பெருமாளும் சென்றுவிட்டதை உணர்ந்த மன்னனின் மனம் கலங்கியது; வருந்தியது. தன் தவறை உணர்ந்த மன்னன் அவர்கள் சென்ற வழியே தேடி சென்றார். ஓரிரவு பகுதியில் அவர்கள் தங்கி இருந்ததை கண்ட மன்னன் தன் தவறை மன்னிக்கும்படி ஆழ்வாரின் காலடியில் விழுந்து பணிந்து வேண்டினான். ஆழ்வாரும் மன்னன் செயலை மன்னித்தவர். 

இறைவனைப் பார்த்து "கணிக்கண்ணன்' போக்கொழிந்தான்!  மணிவண்ணா!

நீ, இங்கு கிடைக்கவேண்டாம் துணிவுடைய சென்னாப் புலவனும் போக்கழிந்தேன்!

நீயும் பை நாகப்பாயை சுருட்டி எடுத்துக்கொள்!

என்று பாடினார். உடனே பெருமாள் மீண்டும் தன் நாகப்பாயை சுருட்டிக்கொண்டு ஆழ்வார் பின்னே திருவொக்காவிற்கு மீண்டும் வந்தவர் சயன கோலம் கொண்டார். 

மற்ற ஆலயங்களில் எல்லாம் பெருமாள் இடமிருந்து வலமாக சயன கோலத்தில் இருப்பார். திருவொக்காவிலோ வலம் இருந்து இடமாக சயன கோலத்தில் அருள்பாலிக்கி றார். ஆழ்வார் சொல் கேட்டு அவருடன் எழுந்து, நடந்துசென்று மீண்டும் வந்ததால் இந்த பெருமாளுக்கு "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்' என்ற பெயர் நிலைத்து நிற்கிறது.

பெருமாளின் 108 திருப்பதிகளில் 51-ஆவது பதியாக, இவ்வாலயம் விளங்கிவருகிறது என்கிறார்கள் அர்ச்சகர்கள். வேகவதி ஆறு வெக்கா என அழைக்கப்படுகிறது. 

இவ்வாலய திருமாலை பிரம்மா சரஸ்வதி ஆகியோர் வந்து தரிசனம் செய்துள்ளனர். அதற்கு சாட்சியாக பெருமாளுக்கு அருகே சரஸ்வதி காட்சி தருகிறார் . காஞ்சிபுரத்தை ஒட்டி அமைந்துள்ளது திருவொக்கா ஆலயம். 

இவ்வாலய இறைவன் பெயர் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் அது மட்டுமல்ல, யதோத்காரி என்ற பெயரும் இவருக்கு உண்டு. 

இவ்வாலயத்தில் வாசம் செய்யும் தாயாரின் பெயர் கோமளவல்லி நாச்சியார் தினசரி காலை, உச்சி, மாலை, அர்த்த ஜாமம் என நான்கு கால பூஜை நடைபெறுகிறது. 

1,200 ஆண்டுகள் பழமையானது பல்லவர்கள் காலத்தில் இவ்வாலயம் உருவானது. 

அதன்பிறகு பாண்டிய, சோழ மன்னர்களும், இங்கு ஆட்சி செய்தபோது ஆலயத்தை புணரவைப்பு செய்துள்ளனர் என்கிறது ஆலய கல்வெட்டு செய்திகள். பெருமாள் ஆலயங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களும் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. 

காஞ்சிபுரம் ரங்கசாமி குளத்திற்கு வடக்கே நாலு ஏக்கர் பரப்பளவில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிராகாரங்களுடன் சயன கோலத்தில் பெருமாள் காட்சிதருகிறார்.

 இவரது பாதத்தின் அருகில் சரஸ்வதி தேவி, தாயார் கோமளவல்லி அமர்ந்துள்ளனர். 

இறைவன் திருமாலுக்கு காஞ்சிபுரம் மிகவும் பிடித்த ஊர் என்று சொன்னால், அது மிகையில்லை. பக்தர்களின் குறைகளை பிரார்த்தனைமூலம் அறிந்து. உடனுக்குடன் உதவும் பரோபகாரியான பெருமாள் சயனகோலத்தில் திருவொக்கா ஆலயத்தில் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வியக்க வைக்கிறார். 

அதற்கு இவ்வாலயத்தில் நடந்த மேற்படி சம்பவங்கள் உதாரணம் என்கிறார்கள் பக்தர்கள். பக்தர்களின்மேல் கருணை கொண்டு குழந்தையாய் அவர்கள் அழைத்த வுடன் பெருமாள் பின்தொடர்ந்து சென்றார் என்பதை நினைக்கும்போது மெய்சிலிர்க் கிறது என்கிறார்கள் பக்தர்கள்.