ஜூலை 28 ஆடி 12
ஆடிப்பூரம் என்றதும், ஆண்டாள் நாச்சியாரும், ஸ்ரீவில்லிபுத்தூரும்தான் நினைவுக்கு வரும்.
ஆடிப்பூரம் என்பது வைஷ்ணவ சம்பிரதாயத்தில், ஆண்டாளின் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. ஆண்டாள் நந்தவனத்தில் இருந்து கண்டெக்கப் பட்டவள். இவளை கோதை என்றும் கூறுவர்.
இவள் குழந்தை பிராயத்திலிருந்தே, விஷ்ணுவை திருமணம் செய்யவேண்டும் எனும் பெருவிருப்பம் கொண்டிருந்தாள். இதற்காக விரதமிருந்து, பெருமாள்மேல் பாசுரங்கள் பாடி, கொண்டாடினாள். இதனால் ஸ்ரீரங்கநாதர் அப்படியே, ஆண்டாளை தன்னுடன் ஐக்கியம் பண்ணிகொண்டுவிட்டார். அப்போது பெரியாழ்வார், எனக்கு வளர்ப்பு பெண்ணாக, உன்னதமானவளை கொடுத்துவிட்டு, நான் கண்ணை மூடும் முன்னாலேயே இப்படி அவளை பறித்துக்கொண்டீரே இது நியாயமா என பெருமாளிடம் அழுதார். உடனே பெருமாள், அழாதேயப்பா. நான் உன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கே வந்து, அவளை முறைப்படி திருமணம் செய்து கொள்கிறேன். அங்கேயே நித்தியவாசம் செய்கிறேன் என வாக்கு கொடுத்தார்.
அப்போது கருடாழ்வார் கண் மூடி கண் திறப்பதற்குள், அவர்களை ஸ்ரீவில்லிபுத் தூருக்கு தூக்கிக்கொண்டு வந்துவிட்டார். அதை மெச்சித்தான் கருடாழ்வாரையும் ஆண்டாளுக்கு சமதையாக, தனது பக்கத்திலேயே வைத்துக்கொண்டார்.
அதனால்தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் கருடனுக்கு விசேஷம் அதிகம் என்று சொல்வதுண்டு. எனவே இங்கே, கருடனுக்கு வேண்டிக்கொண்டு சுகியன் என்ற பட்சணம் படைக்கிறார்கள். அந்த பட்சணத்தில்மேல் சொப்பு கலசம் என்றும், உள்ளே இருப்பது பூர்ணம் என்ற அம்ருதம் என்றும் வைத்துக்கொள்ளவேண்டும்.
இதன்காரணம் என்னவென்றால், கருடபகவான். தன் தாயாரின் விடுதலைக் காக, தன் சிற்றன்னையிடம் வேண்ட, அவள் தேவலோகத்திலிருந்து அம்ருத கலசத்தை கொண்டுவா என கட்டளையிட, கருடரும் தேவேந்திரனிடம் சண்டை போட்டு, அம்ருத கலசத்தை தூக்கிக்கொண்டு ஓடிவந்துவிட்டார். இதன் நினைவாகவே, கருடாழ்வாருக்கு சுகியன் படைக்கப் படுகிறது. இதுவும் அம்ருத கலசம்போல் இருக்கிறது அல்லவா. கருடனை பெரிய திருவடி என்பர்.
ஆடிப்பூரம், ஆடி மாதத்தில் வருகிறது. பூர நட்சத்திரம் இருப்பது சிம்ம ராசியில். சிம்ம சூரியன் கடகத்திலும், கடக சந்திரன் சிம்மத்திலுமாக இருப்பார்கள். கிரக பரிவர்த்தனை. இதில் பூரம் என்பது சுக்கிர சார நட்சத்திரம்.
எனவே, இந்த ஆடிப்பூரத்தில் இளம் பெண்கள் ஆண்டாளை வேண்டிக் கொண்டால், பெற்றோர் ஆசியுடன் நல்ல வரன் அமைந்து, சிறப்பாக திருமணம் நடக்கும். கல்யாணத்துக்கு காத்திருக்கும் பையன்களும், ஆண்டாளை வணங்கலாம்; சிறப்புதான்.
-நந்தினி