மெய்மொழி அரையனார் தன் உயரமான வெண்குதிரையில் ஏறி அமர்ந்தவுடன், காவற்கோட்டத்தை அமைத்து நின்றிருந்த வீரர்கள் அனைவரும் வட்டவடிவ அமைப்பை மாற்றி, அச்சீராள குருவைப் பின்பற்றிச் செல்ல ஆயத்தமாயினர். அவ்வீரர்களைப் பார்த்து "நீங்கள் இருபகுதிகளாகப் பிரிந்து கப்பல் துறைமுகத்தில் இருக்கும் இரண்டு கலங்கரை விளக்கங்களைச் சுற்றிவளையுங்கள். ஒரு பகுதியினர் என்னைப் பின்பற்றி வாருங்கள். நாம் தென் திசை விளக்கத்தை நோக்கிச் செல்வோம். இளந்திரையன் வடதிசை விளக்கத்தை நோக்கிச் செல்லட்டும். மறுபகுதியினர் இளந்திரையனைப் பின்பற்றிச் செல்லுங்கள்' என உரத்த குரலில் மெய்மொழி அரையனார் உத்தரவிட்டார். அதனைக் கேட்ட வீரர்கள் கோட்டத்திலிருந்து ஒருவர்விட்டு ஒருவர் என மாறிமாறி இரு பிரிவினராகினர். "கலங்கரை விளக்கங்களைத் தகர்த்துக்கொண்டிருக்கும் அத்தனை பேரையும் கொன்றுவிடுங்கள். ஒருவர்கூட உயிர்பிழைத்துவிடக் கூடாது' எனக் கட்டளை பிறப்பித்துவிட்டு, தன் குதிரையை ஊனூருக்கு வெளியே தென் திசை கலங்கரை விளக்கத்தை நோக்கி விரைவாகச் செலுத்தலானார்.
இதேவேளையில் மருங்கூர் பட்டினத்திலிருந்து நான்மாடக் கூடல்நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பாண்டியப் பேரரசரின் இறுதிப் பயணம், பழையன் மாறனின் மாளிகைக்குத் தென் திசையில் பெருவழிப்பாதையில் வந்துகொண்டிருந்தது. பேரரசரின் மரணச் செய்தி இப்பெருவழிப் பாதைக்கு அருகே இருந்த அனைத்து ஊர்களுக்கும் இரவோடு இரவாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சங்க காலத்தில் பழையன் மாறனின் அரண்மனை இருந்த நகரம் என்பது தற்போது மதுரைக் குக் கிழக்கே இருக்கும் "திருமோகூர்' ஆகும். அவன் அப்பகுதியை ஆண்ட வேளிர்குலத் தலைவன். அவனது தமக்கையும் பேரரசியாருமான பாண்டியப் பேரரசரின் காதலி பிறந்த அரண்மனையும் அதுவே.
எனவே அவனது நகரிலிருந்த மக்கள் அனை வரும் மன்னரின் இறுதிப் பயணத்தை எதிர் நோக்கி தீவெட்டிகளோடு பெருவழிப் பாதையில் காத்திருந்தனர். அம்மக்களோடு சேர்ந்து பழையன் மாறனின் இல்லத்தரசியும், புதல்வியும், மாங்குடி மருதனாரும், இடைக்குன்றூர் கிழாரும் தாங்கமுடியாத பேரதிர்ச்சியுடன் காத்திருந்தனர்.
ஏனெனில், நாளைக் காலை மருங்கூர் பட்டினத்திற்குப் பயணம் மேற்கொள்ள, புலவர்கள் இருவரும் பழையன் மாறனின் மாளிகைக்கு வந்து தங்கியிருந்தனர். நாளை முந்நீர்ப் பெருவிழாவின் இரண்டாவது நாள் விழாவில் கடலன் வழுதியும் அயல்நாட்டுத் தூதுவர்களும் கலந்துகொள்ள இருந்ததால், தமிழ்ப் புலவர்களும் மந்திரியார்களும் அங்கு செல்ல ஆயத்தமடைந்திருந்தனர். இந்நிலையில், குரு ஆதனாரிடமிருந்து மன்னர் இறந்தது பற்றிய உறுதியான செய்தி நடுநிசி வேளையில் பழையன் மாறனின் மாளிகைக்கு வந்து சேர்ந்தது. மூன்றாம் நாள் பெருவிழாவி னில் சங்கப் புலவர்கள் அனைவரும் மற்றும் மதுரையம்பதியிலிருந்து முக்கிய மந்திரி களும் வந்து விழாவினில் கலந்து சிறப்பிக்க, ஊனூரில் விருந்தினர் மாளிகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இச்சூழ் நிலையில் இந்தச் செய்தி அனைவருக்கும் பேரிடியாக இருந்தது.
பழையன் மாறனின் மனைவியும் மக்களும் கீழ்த்திசையில் தூரத்தில் தீவெட்டி வெளிச்சங்கள் வருவதைக் கண்டு பதைபதைக்கத் தொடங்கினர். சிறிது நேரத்திற்குள் விரைவாகக் குதிரைப்படை வீரர்கள் வந்து, அங்கு கூடியிருந்த மக்களைப் பெருவழிப் பாதையின் இருபுறமும் விலகி நிற்குமாறு செய்துவிட்டு, பழையன் மாறனின் மனைவியையும் அவர்களது உற்றார் உறவினர்களையும், பாண்டியப் பேரரசனுக்கு இறுதிக் கொடையையும் நீர்க் கொடையையும் கொடுப்பதற்கு ஆயத்தமாய் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அங்கே கடம்ப வீரர்களும் யானைகளும் இருமருங்கும் தீவெட்டி வெளிச்சத்தோடு வர, அதன் நடுவே குரு ஏகன் ஆதனாரும் இளவலும் அமர்ந்துவந்த தேரும், அதன்பின்னே பாண்டியப் பேரரசனின் பூத உடல் தாங்கிய மிகப்பெரிய அலங்கரிக்கப்பட்ட தேரும், அதனை அடுத்து அரசியாரும் பழையன் மாறனும் வந்த தேரும், அவற்றைத் தொடர்ந்து நீண்ட தூரத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றிவந்த சாத்து வண்டிகளும் தொடர்ச்சியாக வந்து நின்றன. இவற்றின் பின்னே கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளம் தீவெட்டிகளோடு வந்து சேர்ந்தது.
இவற்றைக் கண்ட மக்கள் அழுது கதறத் தொடங்கினர். இதனைக் கண்ணுற்ற குரு ஆதனார் "இன்று பொழுது புலர்வதற்குள் கூடல் மாநகரை நாம் சென்றடையவேண்டும். ஆதலால் மன்னருக்கான இறுதிக் கொடையையும் நீர்க்கொடையையும் விரைந்து செய்து முடியுங்கள்.'
என பழையன் மாறனின் மனைவி யிடம் கேட்டுக் கொண்டார். அவர் கூறியதைக் கேட்டு வலம்புரிச் சங்கங்களும் பெருவங்கியங்களும் முழங்கத்தொடங்கின. மக்கள் அனைவரும் அமைதியாகினர்.
இங்கு இறுதிக் கொடை அல்லது கடைச்சீர் கொடை என்பது சங்க காலப் பாண்டியர்கள் தொட்டு பிற்காலப் பாண்டியர் காலம்வரை, பாண்டியப் பேரரசர் இறந்தபின் அவருக்குப் பெண் கொடுத்த வீட்டிலிருந்து தம் மருமகனுக்குக் கடைசியாகச் செய்கின்ற சீர்வரிசை ஆகும். இதனை கடைச்சீர் கொடை அல்லது இறுதிக் கொடை எனப் பெயரிட்டு அழைத்தனர்.
இந்தக் கடைச்சீர் என்பது பொன் மரக்கால்களின் நடுவே பாவை விளக்கு வைத்து, அதனைச் சுற்றிலும் நெற்தானியம் நிரப்பி, நுனிப்பகுதிகளில் முத்துகள் தைக்கப்பட்ட பொற்சரிகைப் பட்டாடையின் மீது வட்டம், அனுவட்டம், ஒப்புமுத்து, குறுமுத்து, நிம்போளம், பயிட்டம்,
அம்புமுது, கரடு, இரட்டை, சப்பத்தி, சக்கத்து, குளிர்நீர், சிவந்த நீர் போன்ற பதிமூன்று வகை முத்துகளால் ஆனது.
1. பெரிய பத்து முத்துகளால் ஆன ஆரம். இது பிற்கால பாண்டியர் காலத்தில் அர்த்தமாணவகம் என அழைக்கப்பட்டது. இது போல் -
2. 20 முத்துகளால் ஆன ஆரம் மாணவகம் என்றும்.
3. 24 முத்துகளால் ஆன ஆரம் அர்த்த குச்சம் என்றும்.
4. 27 முத்துகளால் ஆன ஆரம் நட்சத்திர மாலை என்றும்.
5. 32 முத்துகளால் ஆன ஆரம் குச்சம் என்றும்.
6. 54 முத்துகளால் ஆன ஆரம் கதிர்- கலாபம் என்றும்.
7. 64 முத்துக்களால் ஆன ஆரம் அருத்த மாலை என்றும்.
8. 100 முத்துகளால் ஆன ஆரம் தேவச் சந்தம் என்றும்.
9. 500 முத்துகளால் ஆன ஆரம் விசயச் சந்தம் என்றும்.
10. 1000 முத்துகளால் ஆன ஆரம் இந்திரச் சந்தம் என்றும் அழைக்கப்பட்ட பத்து வகை முத்து மாலைகளாக்கி, மொத்தம் 130 ஆரங்களை பழையன் மாறனின் உறவினர்கள் மன்னவனின் காலடியில் வைத்தனர்.
மேற்கண்ட முத்துச்சரங்கள் யாவும் கொற்கைத் துறைமுக நகரில் அன்றாடம் செய்துவரும் தொழிலாக இருந்துள்ளது.
வயோதிகப் பருவமடைந்திருந்த இடைக் குன்றுர் கிழார் மன்னரின் உடலருகில் வந்து மைந்தனே! "இந்நிகழ்வைக் காணவா நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேன்? உன் புகழ்பாடும் என் நாவால் உன் நினைவேந்தல் சுமக்கும் பாலைத்திணை பாடவா நான் இங்கு வந்திருந்தேன்?' எனத் தழுதழுத்த குரலுடன் மன்னரின் தேரருகில் சென்றழுதார். மாங்குடி மருதனாரோ, "என் உயிர் நண்பனே! எத்தனையோ போர் உத்திகளைக்கொண்டு வென்றவன் நீ! மக்களின் நலன் உயரப் பாடுபட்ட உன் இழப்பு, என்னுள் "ஏதும் இவ்வுலகில் நிலைத்ததில்லை' என்ற காஞ்சித் திணைப்பாடும் அவலநிலைக்கு என்னை ஆளாக்கிவிட்டதே!' எனக் கதறினார்.
குரு ஆதனார் இளவலோடு தான் வந்த தேருக்கு வந்தார். இளவல் தேரிலிருந்த பஞ்சணையில் களைப்புற்றுக் கண் அயர்ந்திருந்தான். அவனது முகத்தில் வழிந்திருந்த கண்ணீர்ச் சுவடுகளை ஒரு இளம் கரம் துடைத்துக் கொண்டிருந்ததை ஆதனார் கண்ணுற்றார். மிகுந்த பாசத்துடன் இளவலின் அம்மான் மகள், அதாவது பழையன் மாறனின் மகள் "இளவெழனி' கண்களில் நீர் ததும்ப தனது பிஞ்சு விரல்களால், முகம் கருத்துத் துவண்டிருந்த இளவளின் முகத்தை வருடிக் கொடுத்தாள். தன் சிறுவயதில் பாண்டியர் அரண்மனையில் விளையாடி அன்போடு பழகியவன். நீண்ட இடைவெளிக்குப்பின், இன்று அவனது அழகிய முகம் சோர்வோடு இருப்பதைப் பார்த்து அவளையறியாது கண் கலங்கினாள்.
தனக்குள் ஒரு புதிய பற்றுமிக்க பாசம் மேலெழுவதை முதன்முதலில் உணரலானாள். அப்போது ஆதனார் அவளிடம் "குழந்தாய்! நீ உன் அன்னையோடு இரு. நான் இளவலைப் பார்த்துக்கொள்கிறேன்.' என்றார். அதற்கு அவள் "அய்யனே! நான் இளவலுக்காகப் பழச்சாறு கொண்டுவந்திருக்கிறேன்.
அதனை நான் இளவலுக்குக் கொடுக்க விரும்புகிறேன். உங்கள் பணி முடியும்வரை நான் பார்த்துக்கொள்கிறேன்.' எனக் கூறிக்கொண்டே, இடக்கையில் இருந்த நீர்க்குவளையிலிருந்து சிறிது நீரை தன் சிற்றாடையில் ஊற்றி, அவனது முகத்தை ஒற்றி ஒற்றி எடுத்தாள். பதின்மூன்று அகவையில் தோற்றமளித்த அவளின் நேசிப்பைக்கண்டு ஆதனார் ஆச்சரியமடைந்தார். இளவலின் கண் இமைகள் திறந்தன. அவை மிகக் களைப்புற்றிருந்தன. அவனருகில் இருந்த தீவெட்டி வெளிச்சத்தில் தன் முகத்திற்கு குளிர்ச்சி தந்த கரங்களுக்குரியவள் யாரென விழித்துப் பார்த்தான்.
சோகம் தோய்ந்த குரலில் "நீ இளவெழனிதானே?' எனக் கேட்டான். "ஆம்.. நான் உங்களோடுதான் மதுரைக்கு வரவிருக்கிறேன். நீங்கள் மிகுந்த சோர்வடைந்திருக்கின்றீர்கள். இந்தப் பழச்சாறை அருந்துங்கள்.' எனக் கூறிக்கொண்டே, தன் கைகளால், தன் செவிலித் தாயிடமிருந்த பழச்சாறுக் குவளையை வாங்கி இளவலுக்குக் கொடுத்தாள். அவனருகில் பஞ்சணையில் அமர்ந்துகொண்டு மெல்ல அவனைத் தன் தோள் மீது சாய்த்துக்கொண்டாள். அவள் நெஞ்சகம் விம்மி அழுவதை இளவல் உணர்ந்தான். அவள் தந்த பழச்சாற்றினைப் பாதி அருந்திவிட்டு, "நான் என் அன்னையைப் பார்க்கவேண்டும். நீயும் வா...' எனக் கூறிக்கொண்டே, அவளது வலது கரத்தைப் பிடித்துக்கொண்டு தேரிலிருந்து கீழே குதித்தான். இருவரும் தீவெட்டி வெளிச்சங்களுக்கு ஊடே நடந்துசென்றபோது, அவளுக்குள் ஏதோ ஓர் உணர்வு வளரத்தொடங்கியது. அது பாசத்தோடு சேர்ந்த கனிவா? அல்லது காதலா? என இனம்புரியாத உணர்வால் புல்லரித்தாள்.
அதே நேரத்தில், ஊனூரில் பிடிபட்டவன் தன் பாண்டியப் பேரரசரைத் தாக்கியவன் இவனே என்ற செய்தியைச் சேந்தன் நல்லனிடம் யாழ்ப்பாணன் கூறிவிட்டு, பாண்டிய மாளிகைக்குச் சென்றான். சேந்தன் நல்லன் "வர்மக்கலையால் உயிர்ப்பலி செய்கின்ற இவனது பத்து விரல்களையும் வெட்டி விடுங்கள்.' எனத் தன் சகாக்களுக்குக் கட்டளையிட்டான். சதுர வடிவில் மரச்சட்டங்கள் அமைத்து, அதன் நடுவே பெருக்கல் வடிவத்தில் மரச்சட்டங்கள் பொருத்தப்பட்ட அமைப்பை வீரர்கள் செய்துகொண்டு வந்தார்கள். அச்சட்டத்தில் இவனது கை கால்களை விரித்துக் கட்டி, அவனது தலையை நடுவே கட்டிவிட்டு, பத்து விரல்களையும் குறுவாளால் துண்டித்தனர். அவனது கண்கள் மூடாதிருக்க, கண்களின் மேலிமைகளை இழுத்து அறுத்துவிட்டனர். இச்சட்டத்தை அவன் உடலோடு இறுகப் பிணைத்து, அங்கே உயரமாக நடப்பட்ட இரு மரங்களுக்கு நடுவே குறுக்காகக்கட்டப்பட்டிருந்த இரு மரக்கழிகளில், கிழக்கு திசையைப் பார்த்த வண்ணம் கட்டினார்கள். அவனது உடம்பிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது.
"வீரர்களே! நாம் இவனது சகாக்கள் முகாமிட்டிருக்கும் மரக்கலன்களை விரைந்து சென்றடையவேண்டும். அவர்கள் கொண்டுவந்திருக்கக்கூடிய எரிகலன்கள் அனைத்தையும் அழித்தொழித்தாகவேண்டும். இல்லையெனில், பரதவர் வாழும் முத்தூற்றுக்கூற்றம் அனைத்தையும் எரியச்செய்து அழித்துவிடுவார்கள்.' எனச் சேந்தன் நல்லன் தன் வீரர்களை விரைவுபடுத்தினான். அவர் விரைவாகப் பாண்டியன் மாளிகைக்குள் ஓடி, அங்கிருக்கும் காவலை உறுதிப்படுத்திவிட்டு, தனது கைகளில் ஒரு சீன தேசத்து களிமண் பானையை எடுத்துவந்தார். அவரது முகம், தீவெட்டி வெளிச்சத்தில் ஒருவகையான பதட்டத்துடன் சிவந்து காணப்பட்டது. அக்கலனைத் தன் குதிரையில் இருந்த தோள்பையில் வைத்து, அதனைத் தன் முதுகுப்புறம் வைத்து, தன் உடலோடு கட்டிக்கொண்டான். தன் குதிரையின் மீதேறி, தன் சகாக்களை தீவெட்டிகளுடன் பின்தொடரக் கட்டளையிட்டார். தன் சகாக்கள் பின்தொடர கடலை நோக்கி விரைந்தார். பொழுது புலர்வதற்குள் பகைவர்களது மரக்கலைனை அழித்தாகவேண்டும் என்ற பதட்டத்திற்கேற்ப, அவரது குதிரையின் வேகம் அதிகரித்தது.
வரலாறு தொடரும்..
தொடர்புக்கு: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்