அய்யனார் தமிழக கிராமங்களில், அடர்ந்த காட்டுப் பகுதியில் குதிரையில் ஏறி வாளை உயர்த்தியபடி கம்பீரமாக நிற்கிறார். தீய சக்திகளை விரட்டும் பெரும்பான்மை அய்யனார் தெய்வங்கள், கிராமங்களில் ஆட்சிசெய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட அய்யனாருக்கும், அவரது ஏவல் தெய்வங்களுக்கும் எண்ணற்ற கதைகள் உள்ளன.
மனிதனின் கற்காலம் துவங்குவதற்குமுன்பே தமிழ் மண்ணில் எழுந்தவர் அய்யனார்.
இவர் மக்களின் கனவுகளை வேண்டுதல் களை நிறைவேற்றுகிறார். அவரது புனித கதைகளை சொல்லும்போதும், கேட்கும்போதும், படிக்கும்போதும், மெய்சிலிர்ப்பு ஏற்படும். இதன்மூலம் தமிழர்களின் கலை பண்பாட்டு பக்தி அனுபவங்கள் வெளிப்படுகின்றன. அய்யனார், கோவில்களில் பிரம்மாண்டமான துணை தெய்வங்கள், அவர்களின் வாகனங்களான யானை குதிரைகள் அணிவகுத்து நிற்பதைக் காணமுடிகிறது.
அய்யனாரை இந்திரன், வருணன், வாயு, யமன் போன்றவர்கள்கூட வந்து வழிபட்டுள்ளனர். இப்படிப்பட்ட காட்சிகள் பல ஊர்களில் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன. அய்யனாரின் வரலாறுகள் குமரிக் கண்டத்தை கடல் விழுங்கியபோது அழிந்து விட்டதாகவும், அதன்பிறகு அய்யனார் பற்றிய கதைகள் வாய்மொழி வரலாறாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களிடம் மக்கள் தங்கள் வேண்டுதலை கூறுகிறார்கள். அவர்கள் வேண்டுதல் நிறைவேறியதை அடுத்து அய்யனாருக்கு பொங்கல் வைத்து படைக்கிறார்கள். அய்யனார் சுத்த சைவம். இவரது ஏவல் தெய்வங்களான கருப்புசாமி, முனியப்பர், வீரனார், தெய்வங் களுக்கு ஆட்டுகிடா, சேவல்கோழி போன்றவைகள் பலி கொடுக்கப்படுகின்றன.
அப்போது அய்யனாரின் சிலையை வெள்ளைத்துணியால் மூடிவிட்டு பிறகு பலி கொடுக்கப்படுகிறது. காரணம் உயிர் பலியை அய்யனார் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. ஒவ்வொரு ஊரிலும் கோவில்கொண்டுள்ள அய்யனாருக்கும் அவருடன் இருக்கும், ஏவல் தெய்வங்களுக்கும் பல்வேறு கதைகள் உள்ளன.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது ஆவட்டி கிராமம். இந்த கிராமத்திற்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒரு செல்வந்தர் தனது பெண்ணை சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள, ஒரு கிராமத்தில் திருமணம் செய்துகொடுத்திருந்தார். போக்குவரத்து வசதி இல்லாத காலம் அது. இதனால் பெரும்பாலும் உறவினர் ஊர்களுக்கு செல்வதானால் கால்நடையாக நடந்துதான் பயணிப்பார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/04/ayanar1-2025-11-04-16-53-07.jpg)
புதுமணத் தம்பதிகள் ஒவ்வொரு ஊருக்கும் சென்று உறவினரின் வீடுகளில் விருந்து சாப்பிட அது மாதக்கணக்கில் நீண்டுகொண்டே போனது. ஒரு கட்டத்தில் தங்கள் மகள் திருமணம் செய்துகொடுத்த பிறகு தங்களைப் பார்க்க வரவில்லையே என்று ஏக்கத்தில் இருந்த அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் மகளையும் மருமகனையும் ஊருக்கு வந்து செல்லுமாறு தகவல் அனுப்பினார்கள். அப்போது அந்த மாப்பிள்ளையின் நெருங்கிய உறவினர் தங்கள் வீட்டுக்கு விருந்து சாப்பிட வர வேண்டும் என்று வற்புறுத்த, உறவுகளின் விருந்தோம்பலை முறிக்க முடியாத தம்பதிகள் அந்த உறவினர் வீட்டுக்கு சென்றனர். அங்கே தம்பதிகளுக்கு தடபுடலான விருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு உறவினர்-
குடும்பத்தினர் உற்சாகமாக உணவு வகைகளை பரிமாற தம்பதிகளும் ருசித்து சாப்பிட்டனர். விருந்து வைபவங்கள் முடிந்து சிறிது உரையாடலுக்குபிறகு நாங்கள் ஊருக்கு புறப்படுகிறோம் என்று தம்பதிகள் கூறினார்கள்.
அப்போது விருந்து அளித்த வீட்டில் இருந்த வயதுமூத்த பெரியவர் ஒருவர், இப்போது மதியம் ஆகிவிட்டது, இப்போது நீங்கள் புறப்பட்டால் ஊருக்கு போய் சேர்வதற்குள் இரவு வந்துவிடும். எனவே இன்று இரவு மட்டும், இங்கு தங்கிவிட்டு நாளை காலை புறப்பட்டு செல்லுங்கள் என்று கூறினார். நாங்கள் ஊருக்கு வந்துவிடுவதாக தகவல் கொடுத்துவிட்டோம். அங்கே எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அதனால் எப்படியாவது ஊருக்கு போயே ஆகவேண்டும் என்று பிடிவாதமாக புறப்பட்டனர். அப்போது, அந்த பெரியவர் நீங்கள் காட்டுப்பாதை வழியாக ஊருக்கு செல்லவேண்டும்.
அப்பகுதியில் திருடர்கள் நடமாட்டம் உள்ளது. அவ்வழியாக சென்ற சிலரை மிரட்டி நகை காசு பணத்தை பறித்துள்ளனர்.
நீங்கள் கழுத்தில் நிறைய தங்க நகை அணிந்திருப்பதால் எங்களில் ஒருவரை உங்களுக்கு துணையாக அனுப்புகிறோம் என்று கூறினார்.
ஆனால் புது மாப்பிள்ளை மிடுக்கோடு நான் பெரிய பலசாலி. எந்த திருடன் வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.
எப்படியும் மிக வேகமாக நடந்து பொழுது இருட்டுவதற்குள் ஊருக்கு போய் சேர்ந்துவிடுவோம் என்று கூறினார். மாப்பிள்ளை கூறியதை ஏற்றுக்கொண்ட அந்த உறவினர்கள் தம்பதிகளுக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தனர். தம்பதிகள் இருவரும் பேசிக்கொண்டே ஊரை நோக்கி நடை போட்டனர். மாலை நேரம் நெருங்கிவிட்டது. காட்டுவழியை கடக்க வேண்டும் வேகமாய் நடைபோடுங்கள் என்றார் மணப்பெண். சூரியன் மறைந்து இருள் சூழ ஆரம்பித்துவிட்டது.
காட்டின் மையப்பகுதியில் இவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று மரங்களின் மறைவில் இருந்து ஒரு சலசலப்பு, அதோடு கர்ண கொடூர குரல் டேய் யார் அங்கே? அப்படியே நில்லுங்கள் என்றது. திடுக்கிட்ட தம்பதிகள், குரல் வந்த திசையை திரும்பி பார்க்க, ஒரு வாட்ட சாட்டமான முரட்டு மீசையுடன்கூடிய ஆசாமி கையில் தடி வீச்சரிவாளுடன் தம்பதிகளின் முன்னே வந்து நின்றான். உறவினர்களிடம் வீராப்பாக பேசிவிட்டுவந்த மாப்பிள்ளை நடுநடுங்கிப் போனார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/04/ayanar2-2025-11-04-16-53-17.jpg)
அவருக்கு வியர்த்துக் கொட்டியது. புதுப்பெண்ணின் கழுத்தில் தொங்கிய தங்க நகை ஆபரணங்களைப் பார்த்த திருடனுக்கு பெரிய பொக்கிஷம் கிடைத்த மகிழ்ச்சி தெரிந்தது. அந்த பயத்திலும், நடுக்கத்திலும் மாப்பிள்ளை திருடனிடமிருந்து மனைவியின் மானத்தையும் உடைமைகளையும் காப்பாற்றவேண்டும் என்ன செய்யலாம் என யோசித் துக்கொண்டிருந்த அந்த நேரத்தில், அந்த இடத்தில் திடீரென ஒருவர் தோன்றினார்.
அவர் கண நேரத்தில் தம்பதிகள் கொள்ளையனிடம் சிக்கிக் கொண்டதை உணர்ந்தார். அவரும் வாட்ட சாட்டமான மனிதர். நேரே அந்த முரட்டு கொள்ளையன் எதிரில் போய் நின்றுகொண்டு தன் வலது கையால் வீச்சரிவாளை ஓங்கியபடியே, புதுமண தம்பதியர்களைப் பார்த்து, நீங்கள் இருவரும் தப்பித்து ஓடிவிடுங்கள். நான் இவனைப் பார்த்துக் கொள்கிறேன் என்று கர்ஜித்தார். தம்பதிகள் இருவரும் ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம் எடுத்தனர். காட்டை கடந்து ஓடி அவர்கள் ஊரை அடைந்தனர்.
அதே நேரத்தில் கொள்ளையன், தனது பட்டாக்கத்தியால் வழிப்போக்கரை தாக்க வழிப்போக்கர், தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக தன் கையில் இருந்த வீச்சரிவாளைக் கொண்டு கொள்ளையனை தாக்கினார்.
ஆளில்லாத நடுக்காட்டிற்குள் வழிப்போக்க ரும் கொள்ளையனும் கடுமையாக மோதிக்கொண்டனர். இருவரும் கடுமையாக மோதிக்கொண்டதால், இருவர் உடம்பிலும் ஏகப்பட்ட காயங்கள் இரத்தம் வழிந்து ஓடியது. ஊருக்கு தப்பி சென்ற தம்பதிகள் காட்டில் நடந்த சம்பவத்தை உறவினர்களிடம் கூறினார்கள். அங்கு என்ன நடந்திருந்தாலும், இந்த இரவு நேரத்தில் நாம் காட்டிற்குள் சென்று பார்ப்பது என்பது முடியாத காரியம் எனவே விடியட்டும் என்றனர் ஊர் முக்கியஸ்தர்கள்.
அடுத்தநாள் பொழுது புலர்ந்தது.
தம்பதிகள் ஊர்மக்களை அழைத்துக் கொண்டு அந்த காட்டுப் பகுதிக்குச் சென்றனர். அங்கே கண்ட காட்சி அனைவரையும் திடுக்கிட வைத்தது.
ரத்தம் சிந்திய நிலையில் இருவருமே பிணங்களாக கிடைத்தனர். வழிப்போக்கர் மனிதர் அல்ல தம்பதிகளை காப்பாற்றுவதற்காக மனித உருவில் வந்த அய்யனார் சாமி என்று கூறி வணங்கினார்கள். ஊர்மக்கள்.
அதே இடத்தில் அந்த வீர மனிதரை அடக்கம் செய்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள். உயிரிழந்த அந்த திருடனையும் மனிதாபிமானத்துடன் அப்பகுதியிலேயே அடக்கம் செய்தனர், தம்பதிகளுக்கு ஆபத்து நேரத்தில் உதவிசெய்த அந்த அய்யனாருக்கு கோவில் கட்டி, அவருக்கு ஏவல் தெய்வங்களையும் உருவாக்கினர்.
அய்யனார் ஊரின் எல்லையில் இருந்து தங்களை காத்துவருகிறார் என்பது மக்கüன் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அப்படிப்பட்ட அய்யனார்களில் ஒருவராக ஆவட்டி கிராமத்தில் கோவில் கொண்டுள்ள அய்யனார் விளங்கி வருகிறார். கம்பீரமான அய்யனாருக்கு அருகிலேயே கருப்புசாமி, சின்ன கருப்புசாமி, மாரியம்மன், வரதராஜபெருமாள், துரோபதை அம்மன், விநாயகர் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அம்மனுக்கு தீமிதி, திருவிழா, புரட்டாசி மாதம் பெருமாளுக்கும் பிரம்மாண்டமாக தேர் திருவிழா நடத்துகிறார்கள்.
இந்த ஊர் தெய்வங்கள் குறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், 85 வயது ராசு உடையார் 81 வயது சின்னச்சாமி ஆகியோர் கூறும்போது, இப்பகுதியில் ஒருகாலத்தில் காட்டை திருத்தி புகையிலை தோட்டம் அமைத்து விவசாயம் செய்தனர். காலப்போக்கில் விவசாயம் மாறி தற்போது சோளம், பருத்தி, நெல் போன்றவைகள் பயிரிடப்படுகின்றன. எங்கள் ஊரில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ்கிறோம். இங்கு எந்த பாகுபாடும் இல்லை.
அதே நேரத்தில் திருவிழாவின்போது எங்கள் ஆலயத்திலுள்ள உற்சவ மூர்த்திகள் கோவில்களுக்கு முன்பு உள்ள நான்கு வீதிகளை சுற்றிவீதி உலாவரும் நடைமுறை காலம் காலமாக நடைமுறையிலிருந்து வருகிறது. தற்போது சிறு பிரச்சினையால் திருவிழா நடத்துவது தாமதமாகி வருகிறது. இது கிராமமக்கள் மத்தியில் பெரும் வருத்தத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்கிறார்கள் வளையாபதி நாராயணசாமி அண்ணாதுரை சண்முகம் மாதவன் ஆகியோர்.
இந்த ஊருக்கு ஆவட்டி என்று ஏன் பெயர் வந்தது. என விசாரித்ததில் ஆ என்றால் பசு அப்படி பசுக்கள் நிறைந்த ஊராக ஆவட்டி இருந்துள்ளது. அந்தக் காலத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக யாரோ ஒருவர் பசுவை பலி கொடுக்க முற்பட்டுள்ளார். பசுவின் கழுத்தை வெட்ட முயலும்போது ஆகாயத்திலிருந்து அசரீரியாக ஒரு குரல் ஒலித்துள்ளது. இந்த செயல் ஆகாது தகாது என்றது. அந்த குரலால் பசு பலி கொடுக்க முனைந்தவர் நிறுத்திவிட்டார். பசுவை வெட்ட முயன்ற இடம் இது என்பதால் ஆ வெட்டி என்ற பெயர் காலப்போக்கில் மருவி ஆவட்டி என்று தற்போது விளங்கிவருகிறது என்கிறார்கள்.
மக்களின் வாழ்வோடு ஒன்றி கலந்துவிட்ட அய்யனார் அவரின் பரிவார தெய்வங்களை தரிசிக்க ஆவட்டி கிராம மக்கள் மட்டுமல்ல; சுற்றுவட்டார கிராம மக்களும் ஆவலோடு உள்ளனர்.
கோவில் தொடர்புக்கு செல்: 82203 42339.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/04/ayanar-2025-11-04-16-52-57.jpg)