ரிய மலையில் பனி உருகுவதால் உருவான கொலராடோ ஆறு கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கிறது. அதன் தலைப்பகுதியில் ஆரம்பித்து 1400 மைல்கள் கடந்து கலிஃபோர்னியா வளைகுடா பகுதிக்குச் சென்று பசிபிக் பெருங்கடலில் கலக்கிறது. 

Advertisment

அதன்போக்கில் 20% (277 மைல்கள்- 446கிமீ) கிராண்ட் கேன்யான் வழியாக ஓடுகிறது. இவ்விடத்தில் ஆற்றின் தொடக்கப் பகுதியை லீஸ் பெர்ரி (Leash Berry) என்றும் அதன் முடிவுப் பகுதியை கிராண்ட் வாஷ் கிரிப்ஸ் (Grand Wash Grips)  என்றும் பெயரிட்டு அழைக்கிறார்கள். கொலராடோ ஆற்றினால் ஏற்பட்ட கிராண்ட் கேன்யானின் பள்ளத்தாக்கு தோராயமாக ஒரு மைல் (1.6கிமீ) ஆழத்தையும் சராசரியாக 10 மைல்கள் (16கிமீ) அகலத்தையும் கொண்டிருக்கிறது. இவ்விடத்திலுள்ள பள்ளத்தாக்குப் பகுதிகளின் பாதி அளவு கிராண்ட் கேன்யான் தேசியப் பூங்காவாக பாதுகாக்கப்படுகிறது. பூங்காவில் 1,750 வகையான தாவரங்களும் 90-க்கும் மேற்பட்ட பாலூட்டிகளும் 362-க்கும் மேற்பட்ட பறவையினங்களும் வாழ்கின்றன.

கிராண்ட் கேன்யானின் பரந்த நிலப்பரப்பின் மாறுபட்ட உயரங்களும் அங்கு நிலவும் வெப்பநிலையும் மழைப்பொழிவும் சூரிய ஒளியும் மண்ணின் ஆழமும் அங்கு வளர்கின்ற தாவரங்களின் வகைகளைத் தீர்மானிக்கின்றன. மொஹாவே பாய்ண்டில் (Mohave Point) கடுமையான சூரிய ஒளி வீசி வெப்பநிலையை உச்சத்தில் கொண்டு குறைவான மழைப் பொழிவையும் ஆழமற்ற மண்ணையும் பெற்றிருப்பதால் அங்கு அதற்கேற்ற காடுகள் வளர்க்கின்றன. வறட்சியை எதிர்க்கின்ற பின்யான், பைன் கொட்டைகள், ஜுனிபர் பெர்ரிகள், ஸ்க்ரப் மற்றும் ஸ்டெல்லர்ஸ் ஜெய்கள் ஆகியவை அங்கு வாழும் அணில்கள், எலிகள், பாம்புகள், பல்லிகள், மான்கள் ஆகிய யாவற்றிற்கும் உணவினை வழங்குகின்றன. முட்கள் நிறைந்த கற்றாழையும் இங்கு வளர்கின்றன. கிழக்குக் காடுகள், பிக்னி காடுகள் ஆகியவற்றிலும் அற்புதமான விலங்குகள் வாழ்கின்றன.  

கிராண்ட் கேன்யானில் கொலராடோ ஆறு தொடங்கும் லீஸ் பெர்ரி(கங்ஹள்ட் இங்ழ்ழ்ஹ்) யிலிருந்து அதன் முடிவுப்பகுதியான கிராண்ட் வாஷ் கிரிப்ஸ் (ஏழ்ஹய்க் ரஹள்ட் ஏழ்ண்ல்ள்) வரை படகில் பயணம் செய்கின்ற சாகசத்தையும் இங்குள்ள சுற்றுலாப் பயணிகள் மேற்கொள்கிறார்கள். கொலராடோ ஆற்றின் ஓட்டத்துடனான இவர்களது பயணம் நிறைவடைய ஒரு வார காலம் எடுத்துக்கொள்கிறது. இரவு நேரங்களில் கையேடுகளில் கொடுத்துள்ளபடி ஆபத்தில்லாத பகுதிகளில் ஆங்காங்கே கூடாரமிட்டு தங்கிவிடுகிறார்கள். உணவினை சமைத்து உண்பதும் நட்சத்திரக் கூட்டங்களை ரசிப்பதும் உறங்குவதுமாக இரவு நேரத்தைக் கழிக்கிறார்கள். முற்றிலும் அழகியதொரு இடமாக மாசு மருவில்லாத விரிந்து பரந்த வானில், வைர மணிகளை அள்ளித் தெறித்ததைப்போல அடர்த்தியான விண்மீன் கூட்டங்கள் கண்களைப் பறிக்கும்படியாக காட்சி கொடுக்கின்ற இரவு, அவ்வளவு அற்புதமானதாக இருக்கிறது. 

Advertisment

மில்கி வே கேலக்ஸி  (Milky way galaxy)  எனும் பால்வெளியை கண்களால் கண்டு ரசிக்கலாம். அதிகாலையில் எழும் சூரியனின் கதிர்கள் அவ்விடமெங்கும் பரவுகின்ற ஒளியின் நிறத்தையும் கண்டுகளிக்கலாம். காற்றின் ஓசையைத் தவிர வேறெந்த ஓசைகளையும் கேட்பது அரிது. அருகே செல்லும்பொழுது சலசலக்கும் கொலராடோ ஆற்றின் ஓட்டம் எழுப்பும் ஓசை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவிதமாக அதன் வேகத்திற்கு இணையாக மாறுபடுகிறது. சில இடங்களில் அருவி ஓட்டத்தோடு கூடிய நதியாக வேகமெடுத்தும் பல இடங்களில் அமைதியான ஆழ்நிலை தியானத்தில் இருப்பதைப்போல நகர்ந்து செல்வதுமாகவும் முற்றிலும் வேறானது.

படகுப் பயணம் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஐந்து மைல்கள் தொலைவிலேயே நவாஜோ பாலம் (Navajo Bridge)  தென்படுகிறது. வடக்கு விளிம்பையும் தெற்கு விளிம்பையும் இணைக்கும் பாலமாக இது விளங்குகிறது. கிட்டத்தட்ட 11 மைல்கள் தொலைவு நகர்ந்து வந்தால் அப்பகுதியை சோப் கிரிக் கேம்ப் என்று அழைக்கிறார்கள். அங்கு இரவு நேரம் தங்கிவிட்டு இரண்டாம் நாள் பயணத்தை தொடங்குகிறார்கள். 

அதிகாலை நேரத்தை அங்குள்ள கள்ளிச் செடிகளில் பூக்கின்ற பூக்கள் இன்முகத்துடன் வரவேற்கின்றன. இன்னும் 11 மைல்கள் தொலைவு கடந்து செல்கையில் நீரின் வேகம் அதிகமாக இருக்கிறது. ராஃப்டிங் எனப்படுகின்ற சவாலான படகுப் பயணத்தை அவ்விடத்தில் மேற்கொள்கிறார்கள். சுமார் 30 கிலோமீட்டர் பயணத்திற்குப் பிறகு குறிப்பிட்ட இடத்தில் அந்த நாளின் இரவு தங்குகிறார்கள். இப்படியான அவர்களது தொடர் பயணத்தில் வழியில் அவர்கள் காண்கின்ற காட்சிகளாக நீர்வீழ்ச்சிகளும் அங்குள்ள பறவைகளையும் நீர் அருந்த வரும் நீண்ட கொம்புடைய ஆடுகளையும் பூக்களையும் சோலைகள் போன்ற பசுமையான தாவரங்கள் நிறைந்த சூழலையும் வறண்ட பகுதிகளையும் பாறைகளையும் பாலைவனச் செடிகள் மிகுந்திருக்கும் இடங்களையுமென மாறுபட்ட நிலப்பரப்புகளைக் கொண்ட கிராண்ட் கேன்யானின் பகுதிகளைக் காண்கின்ற அனுபவங்களை பள்ளத்தாக்கில் ஓடுகின்ற கொலராடோ ஆற்றில் மேற்கொள்ளும் படகுப் பயணம் கொடுத்துவிடுகிறது. ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு குறிப்பிட்ட பெயரை சூட்டியிருக்கிறார்கள். சில இடங்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்குடிகள் வரைந்திருந்த வெகு எளிதான ஓவியங்களும் அவர்கள் தங்கியிருந்த குகைகளும் அடையாளங்களாக இன்றும் இருக்கின்றன.

Advertisment

பல மில்லியன் ஆண்டுகளாக ஓடுகின்ற கொலராடோ ஆற்றின் அரிப்பால் அதன் ஆழம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆற்றோடு ஓடுகின்ற கற்களும் பள்ளத்தாக்கின் ஆழத்தை இன்னும் அதிகரிக்கின்றன. 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான அடித்தளத்தில் இருக்கும் பீடபூமி வெளிப்படும்படியும் ஆற்றின் ஆழம் அதிகமாகியிருக்கிறது. இங்குள்ள நிலத்தடியில் பல நீரூற்றுகளும் இருக்கின்றன. இவற்றை நவீன நீர், பழைய நிலத்தடி நீர் என இரண்டாகப் பிரிக்கிறார்கள். ஆறாயிரம் முதல் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நிலத்தடி நீர் தெற்கு விளிம்பில் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கிறார்கள்.

இங்குள்ள நீரையும் நிலவுகின்ற சாதகமான வெப்பநிலையையும் சார்ந்து வாழ்கின்ற உயிரிகளாக, ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட தாவர வகைகள், அதனைச் சார்ந்த மரத் தவளைகள், சிவப்புப் புள்ளிகளைக் கொண்ட தவளைகள், 18 வகையான கொறித்துண்ணிகள், 22 வகையான வவ்வால்கள், 51 வகையான சிலந்திகள், 41 வகையான ஊர்வன இனங்கள், 90 வகையான பாலூட்டிகளென இன்னும் பல வகையான உயிர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டிருக்கி றார்கள். இவற்றில் கருப்பு ஈக்கள், பூச்சிகள், வண்டுகள், பட்டாம்பூச்சிகள், அந்துப் பூச்சிகள், நெருப்பு எறும்புகள், குளவிகள், தேனீக்கள், அணில்கள், கொம்புப் பல்லிகள், பாம்புகள், டிராண்டுலா பருந்துகள், தேள்கள், நில நத்தைகள், சாம்பல் நரிகள், நீர் நாய்கள், கோவேறு மான்களென இன்னும் பல உயிர்கள் வாழ்ந்து, பல்லுயிரிகளை ஓம்புகின்ற தற்சார்பு நிலை இங்கு நிலவுகிறது. இந்த நிலத்திற்கேயுரிய அரிய வகையான தாவரமான ஃபிளவேரியா இங்கு வளர்கிறது. பனிப்பிரதேசமான கனடாவில் வாழ்கின்ற தாவர இனங்களும் பாலைவன நிலமான மெக்சிகோவில் வளர்கின்ற தாவரங் களும் இங்குள்ளன. வட அமெரிக்காவில் நிலவுகின்ற ஏழு வகையான வாழ்க்கை மண்டலங்களை யும் இந்த கிராண்ட் கேன்யானில் வெவ்வேறு உயரங்களில் நிலவுகின்ற மாறுபட்ட வெப்பநிலையிலுள்ள சூழல்களில் இயற்கை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படியான இந்தச் சூழலுக்கு இடையூறாக 1889-ஆம் ஆண்டில் இப்பகுதியில் நிலக்கரி எடுப்பதற்காக ரயில் தடத்தை ஏற்படுத்தியிருக்கி றார்கள். 1963-ஆம் ஆண்டு கிராண்ட் கேன்யான் அணை கட்டப்பட்டபிறகு இங்குள்ள சூழல் மாறி 85,000 கனஅடியாக இருந்த நீர் 8,000 கனஅடியாக குறைந்திருக்கிறது. இங்கு பொழிகின்ற மழையும் பனியும் நீரின் அளவை மீண்டும் அதிகரிக்க உதவினாலும் அதிகப்படியான நீரின் தேக்கம், ஏரிகளின் குறைப்பு, ஆறுகளின் குறைப்பு, நிலச்சரிவு, சீர்குலைந்த கரையோர அமைப்பு, மோசமான நீரின் தரம், காற்றின் மாசு ஆகியவை இப்பகுதியை பாதித்து வருகின்றன. ஆக்கிரமிப்பு செய்கின்ற மனித குலங்கள் இங்கு வாழ்ந்த பூர்வீக இனங்களை இடம்பெயரவும் செய்திருக்கிறார்கள். 2022-ஆம் ஆண்டு கடுமையான வறட்சி நிலவி பவல் ஏரியின் நீர்மட்டம் மிகவும் குறைந்திருக்கி றது. இங்கு ஏற்படுத்தப்பட்ட யுரேனியம் சுரங்கத்திலிருந்து யுரேனியம் கசிந்து நீரில் கலந்து நீர்வாழ் உயிரினங்களைப் பாதித்திருக்கின்றன. நன்னீர்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதற்காக பின்னர் இந்தச் சுரங்கங்களை செயல்படாமல் தடுத்து நிறுத்தி யிருக்கிறார்கள்.

மலையேற்றம், ஹெலிகாப்டர் மூலம் சுற்றுப்பயணம், மராத்தான், ராஃப்டிங், பருவ காலத்தில் அனுமதிக்கின்ற முகாம்களென சுற்றுலாப் பயணிகளும் இவ்விடத்தை அனுபவிக்கிறார்கள். 1869 முதல் 2001 வரையிலான கணக்கெடுப்பின்படி இங்கு பயணம் மேற்கொண்டவர்கள் இங்கு நிலவிய வெப்பம் தாங்காமல் பக்கவாதத்தாலும் நீர்ச்சத்துக் குறைபாடு, இதயச் செயலிழப்பு போன்ற காரணங்களாலும் சுமார் 770 க்கும் மேற்பட்டவர்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். 1956-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸிலிந்து கிளம்பிய இரண்டு விமானங்கள் க்ராண்ட் கேன்யான் பள்ளத்தாக்குப் பகுதியின் மேல் புறத்தில் மோதிக்கொண்டன. இதனால் ஏற்பட்ட பேரழிவில் 128 பயணிகளும் விமானப் பணியாளர்களும் உயிரை இழந்தார்கள்?. இந்த பேரிழப்பிற்குப் பிறகே விமானங்களை ரேடார் மூலம் கண்காணிப்பது நடைமுறைக்கு வந்தது. இப்பகுதியில் 1500 அடி எல்லைக்குள் எந்தவொரு விமானமும் பறப்பதற்கு அனுமதியும் மறுக்கப்பட்டது.

பார்வையாளர்களுக்காக ஏற்படுத்தப்பட்டி ருக்கின்ற இங்குள்ள பாதைகளும் தொடர்ந்து பராமரிக்கப்படுவதில்லை. குளிர்காலத்தில் நிரம்பிய பனிப் பொழிவால் இங்குள்ள செங்குத்தான பாதை ஆபத்தானதாக இருக்க லாம் என்பதற்காக, அச்சமயம் பாதுகாப்பு கருதி பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கோடை காலங்களில் மலையேற்றத்தை மேற்கொள்பவர்கள், ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் பொழுது அவர்களைக் காப்பாற்றுவதற்கு உதவியாக ஹெலிகாப்டர்கள் செயல்படுகின்றன. கிராண்ட் கேன்யானில் மேற்கொள்கின்ற மலையேற்றம் மிகவும் வித்தியாசமானது. தங்களது உடல் பலத்தை அறியாதவர்களாக தொடக்கத்தில் மிகவும் எளிதாக பள்ளத்தாக்கை நோக்கி மேலிருந்து கீழாக இறங்கிவிடுவார்கள். பிறகு மீண்டும் திரும்பும்பொழுது மலை ஏற்றத்தை கடினமானதாக உணர்ந்து உடல் வலுவிழந்து போகின்ற நிலையும் ஏற்பட்டு விடுகிறது. தேவையான குடிநீரையும் உடல் சக்திக்கேற்ற உணவுப் பொருள்களையும் வெயிலையும் குளிரையும் தாங்குவதற்கேற்ற உடைகளையும் தங்களது பாதுகாப்பிற்குத் தேவையான யாவற்றையும் தங்களுடன் சுமந்து செல்லவேண்டும். அவரவரது பலத்தை அவரவர்களே அறிந்து வைத்திருக்க வேண்டும். இதில் தவறு ஏற்பட்டால் உடல்நலம் குன்றுவதோ உயிரை இழப்பதோ நடந்துவிடுகிறது. அதற்கு எவரும் பொறுப்பாகமாட்டார்கள். எல்லாவற்றிற்குமான எச்சரிக்கைகளை அவர்கள் முன்னதாகவே கொடுத்துவிடுகிறார்கள். அதனை சரியாகக் கடைப்பிடிக்கத் தவறினால் நேர்கின்ற துன்பங்களுக்கு அவரவர்களே காரணமாகிறார்கள்.

கொலராடோ நதி பாய்கின்ற போக்கில் வழிநெடுக அமைந்திருக்கின்ற நகரங்களும் பண்ணை களும் இந்நீரை அதிகமாக உட்கொண்டு விடுவதால் கலிஃபோர்னியாவின் வளைகுடாப் பகுதிக்கு வந்தடைந்து கடலில் கலப்பதற்கு முன்பே நதி வற்றிவிடுகிறது என்பது இன்றைய நிலையாக இருக்கிறது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உலகம் உருவானதிலிருந்து உருமாற்றமடைந்து இன்றைய நிலையை இப்பகுதி எட்டியிருந்தாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் குடியேறிய மனிதர்களால் பாதிப்படைவது இதுவே முதல்முறை. இதன் பிறகு இப்பகுதிக்கும் அங்கு வாழும் உயிர்களுக்கும் எவ்விதமான மாற்றங்கள் நடக்கப்போகின்றன என்பதனை இப்பொழுதே கணிக்க இயலாது. ஏனெனில் இன்றளவும் உயிர்ப்போடு இருக்கின்ற எரிமலை ஒன்று இந்நிலத்தின் அடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது. சீற்றம் எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கலாம்.                    

  (இன்னும் வரும்)