உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாஹ்கஞ்ச் என்ற ஊரிலிருந்து ஐந்து மைல் தூரத்திலிருந்த ஒரு கிராமத்தில் ஒரு காலத்தில் வாழ்ந்தேன். எனக்கு பயணம் செய்வதற்கு ஒரு சைக்கிள் இருந்தது. இன்னும் கூறுவதாக இருந்தால், ஏதாவதொரு கருணை மனம் படைத்த விவசாயிக்குச் சொந்தமான மாட்டு வண்டியில் என்னால் பயணம் செய்து ஷாஹ்கஞ்சை அடைந்துவிட முடியும். ஆனால், சாலைகள் மிகவும் மோசமாக இருந்தாலும், தாறுமாறாக சைக்கிள் ஓட்டக்கூடியவனாக நான் இருந்தாலும், வேகமாக பயணம் செய்வதற்கு சைக்கிள்தான் சரியாக இருக்கும் என்று நான் உணர்ந்தேன்.
ஒவ்வொரு நாளும் நான் ஷாஹ்கஞ்ச் நகருக்குள் சென்று, என் கடிதங்களை வாங்குவேன். ஒரு நாளிதழை வாங்குவேன். பல குவளை தேநீரை அருந்துவேன்.
வியாபாரிகளிடம் பேசிக் கொண்டிருப்பேன்.
சாயங்காலம் ஆறு மணி வாக்கில் ஒரு அமைதியான, அதிகம் பயணித்திராத காட்டுப் பாதையின் வழியாக கிராமத்திற்கு சைக்கிளில் திரும்பிவருவேன்.குளிர்கால மாதங்களில் ஆறு மணிக்கு இருட்டாக இருக்கும்.
சைக்கிளில் நான் ஒரு விளக்கை இணைத்து விடுவேன்.
ஒரு மாலை வேளையில், கிராமத்திற்கு வரும் தூரத்தில் பாதியைக் கடந்திருக்கும் நிலையில், பாதையின் மத்தியில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்த்து நான் நின்றுவிட்டேன். அந்த பொருத்தமற்ற நேரத்தில் ஒரு சிறுவனுக்கு காட்டுப் பகுதியில் வேலையே இல்லை. அந்த பகுதியில் ஓநாய்களும் கழுதைப் புலிகளும் சர்வசாதாரணமாக காணப்படும். என் சைக்கிளைவிட்டு இறங்கிய நான், பையனுக்கு அருகில் சென்றேன். ஆனால், என்னை அவன் குறிப்பிட்டு கவனித்ததாகவே தெரியவில்லை.
"நீ மட்டும் தனியாக இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?''
"நான் காத்திருக்கிறேன்''- என்னைப் பார்க்காமலே. அவன் கூறினான்...
"யாருக்காக காத்திருக்கே? உன் பெற்றோருக் காக..?''
"இல்லை... என் சகோதரிக்காக காத்திருக்கிறேன்.''
"நல்லது... பாதையில் நான் அவளைக் கடந்து வரவில்லை.'' - நான் கூறினேன்:
"ஒருவேளை அவள் முன்னால் சென்றிருக்கலாம். என்னுடன் சேர்ந்து வருவது நல்லது. நாம் அவளைச் சீக்கிரம் கண்டுபிடித்துவிடலாம்.''
சிறுவன் தலையை ஆட்டினான். எனக்கு முன்னால் குறுக்காக இருந்த இணைப்பில் அமைதியாக ஏறினான்.
அவனுடைய தோற்றத்தைச் சரியாக என்னால் பார்க்க முடியவில்லை.
ஏற்கெனவே இருள் மூடியிருந்தது. அது ஒருபுறமிருக்க, அவன் தன் முகத்தை என்னிடமிருந்து வேறு பக்கம் திருப்பி வைத்திருந்தான்.
எங்களுக்கு எதிராக காற்று வீசிக்கொண்டிருந்தது. சைக்கிளை ஓட்டும்போது, நான் குளிரில் நடுங்கி னேன். ஆனால், சிறுவன் அதை உணர்ந்ததாகவே தெரியவில்லை.
அதிக தூரம் நாங்கள் சென்றிருக்க மாட்டோம். அதற்குள் சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த இன்னொரு குழந்தையின்மீது என் விளக்கிலிருந்து வெளிச்சம் பட்டது. இந்த முறை... அது ஒரு பெண் குழந்தை. அவள் அந்தச் சிறுவனைவிட சற்று மூத்தவளாக இருந்தாள்.
அவளுடைய தலைமுடி நீளமாக இருந்தது. காற்றில் அலைபாய்ந்து கொண்டு, அவளுடைய முகத்தின் பெரும் பகுதியை மறைத்துக் கொண்டி ருந்தது.
"இதோ... உன் சகோதரி!''- நான் கூறினேன்: "நாம் அவளை நம்முடன் அழைத்துச் செல்வோம்''. என் புன்னகைக்கு அவள் எதிர்வினை ஆற்றவில்லை.
சிறுவனைப் பார்த்து வேகமாக தலையை ஆட்டியதைத் தவிர, அவள் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை.
ஆனால், அவள் பின்னாலிருந்த என் கேரியரில் ஏறி அமர்ந்து, என்னை மீண்டும் பெடல்களை அழுத்த அனுமதித்தாள்.
என்னுடைய நட்புரீதியான கேள்விகளுக்கு அவர்களின் பதில்கள் ஒரே மாதிரி இருந்தன.
வேற்று மனிதர்களைப் பார்த்து அவர்கள் அஞ்சுகிறார்கள் என்பதாக எனக்குத் தோன்றியது. சரி...
நான் கிராமத்தை அடைந்த பிறகு, ஊரின் தலைவரிடம் அவர்களை ஒப்படைத்து விடுவது என்று தீர்மானித்தேன்.
அவர்களின் பெற்றோரை அவர் தேடிக் கண்டுபிடிக்கட்டும்.
சாலை சமநிலையிலேயே இருந்தது. ஆனால், நான் ஏதோ மலையின் மீது சைக்கிளை ஓட்டிச்செல்வதைப்போல உணர்ந்தேன்.
பையனின் தலை என் முகத்திற்கு மிகவும் அருகில் இருப்பதை நான் கவனித்தேன்.
சிறுமியின் மூச்சுச்சத்தம் சத்தமானதாகவும் கனமானதாகவும் இருந்தது. அவள்தான் சைக்கிளை ஓட்டிக்கொண்டிருப்பதைப்போல பார்ப்பதற்குத் தோன்றியது.
குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தாலும், எனக்கு வெப்பமாக இருப்பதைப் போலவும், மூச்சு அடைப்பதைப் போலவும் இருந்தது.
"நாம் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.''- நான் கூறினேன்.
"வேண்டாம்....''- சிறுவனும் சிறுமியும் ஒரே நேரத்தில் சத்தமாக கூறினார்கள்:
"ஓய்வு தேவையில்லை.''
எந்த விவாதமும் செய்யாமல் நான் ஓட்டுவதைப் பார்த்து எனக்கே மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
அவர்களின் வேண்டுகோளை ஒதுக்கி வைத்தால் என்ன என்பதைப் பற்றி சிந்தித்த நான் நிறுத்தினேன்.
ஹேண்ட்பாரில் இருந்த சிறுவனின் கைகள் நீளமாக வளர்ந்திருப்பதையும் கருப்பாக இருப்பதையும் முடிகள் வளர்ந்திருப் பதையும் நான் பார்த்தேன்.
என் கைகள் நடுங்கின. சைக்கிள் தள்ளாடியவாறு சாலையில் சென்றது.
"மிகவும் கவனம்!''- பிள்ளைகள் ஒரே நேரத்தில் கத்தினார்கள்:
"பாருங்க... நீங்க எங்கு போறீங்கன்னு.....!''
இப்போது அவர்களின் குரல் அச்சுறுத்தும் வகையிலும் குழந்தைகளின் குரல்களிலிருந்து மிகவும் விலகியதாகவும் இருந்தது. என் தோள் பகுதியை உடனடியாக பார்த்தேன். என் ஆழமான பயம் சரிதான் என்பதாக உணர்ந்தேன்.
சிறுமியின் முகம் பெரியதாகவும் வீங்கியும் இருந்தது. அவளின் கால்கள் கருப்பாகவும் முடி களுடனும் இருந்தன.அவை தரையில் தடவிக் கொண்டே வந்தன.
"நிறுத்துங்க!''- அந்த பயங்கரமான குழந்தைகள் கட்டளையிட்டனர்:
"வாய்க்காலுக்கு அருகில் நிறுத்துங்க!''
ஆனால், நான் எதையும் செய்வதற்கு முன்பே, என் முன்பக்க சக்கரம் ஒரு கல்லில் மோதி, சைக்கிள் சாய்ந்து விழுந்தது. தூசியில் விழுந்து கிடந்தபோது, கடினமான... குளம்பைப் போல ஏதோவொன்று என் தலையின் பின்னால் உதைப்பதைப் போல எனக்குத் தோன்றியது.
தொடர்ந்து முழுமையான இருள் அங்கு நிலவியது.
நான் சுய உணர்விற்கு வந்தபோது, நிலவு மேலே எழுந்து, வாய்க்கால் நீரில் பிரகாசித்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
பிள்ளைகள் அங்கு எங்குமே தென்படவில்லை.
நான் தரையிலிருந்து எழுந்து, என் ஆடைகளில் ஒட்டியிருந்த தூசியைத் தட்டிவிட ஆரம்பித் தேன். நீரில் உண்டான சலசலப்பு ஓசையையும், கலகலவென ஒலித்த நீரோட்டத்தின் ஓசையையும் கேட்டவாறு நான் மீண்டும் மேலே பார்த்தேன்.
இரண்டு சிறிய கருத்த எருமைகள் சேறு நிறைந்த, நிலவு வெளிச்சத்தில் ஒளிர்ந்த நீரிலிருந்தவாறு என்னையே பார்த்துக்கொண்டிருந்தன.
________________
வணக்கம்.
இந்த மாத 'இனிய உதய'த்திற்காக 4 சிறந்த சிறுகதைகளை நான் மொழி பெயர்த்து உங்களுக்கு வழங்குகிறேன்.
"காட்டுக்கிளிகள்' என்ற கதையை எழுதியவர்... கேரள சாகித்ய அகாடெமி விருது பெற்ற, நட்சத்திர மலையாள எழுத்தாளரான உண்ணிகிருஷ்ணன் புதூர்.
கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மனிதரை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.மரணத்தின் விளிம்பில் படுத்திருக்கும் அவருக்கும், அவரின் மனைவிக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் உயிர்ப்பானவை.
கதையின் இறுதிப் பகுதி, கல் மனதையும் உருக வைக்கும்.
"ஆவிகள் ஏறிய சைக்கிள்' என்ற கதையை எழுதியவர்... உலக புகழ்பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளரான ரஸ்கின் பாண்ட்.சைக்கிளில் பயணிக்கும் ஒரு மனிதனையும், அவனின் சைக்கிளில் ஏறும் ஒரு சிறுவனையும் ஒரு சிறுமியையும் மையக் கதாபாத்திரங்களாக வைத்து எழுதப்பட்ட கதை.
கதையின் இறுதிப் பகுதி... நாம் சிறிதும் எதிர்பாராதது.
ஒரு மாறுபட்ட கதைக் கருவை வைத்து பாராட்டத் தக்க ஒரு திகில் கதையை எழுதிய ரஸ்கின் பாண்ட், தன் ஆழமான எழுத்தாற்றலை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பதித்திருக்கிறார் என்பதே உண்மை.
"ஒரு வினோதமான கதை' என்ற கதையை எழுதியவர்.... உலக இலக்கியவாதிகளில் துருவ நட்சத்திரமான ஓ.ஹென்றி.
அருமையான 300 சிறுகதைகளை எழுதி சாதனை படைத்தவர் இவர்.
ஒரு சிறிய கதையில் ஒரு முழுக்குடும்பத்தையும், அதிலிருக்கும் உறுப்பினர்களையும் நமக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்திவிட முடியுமா?
"முடியும்' என்பதைச் செயல் வடிவில் காட்டுகிறார் ஹென்றி.
ஹென்றியின் கதை என்றாலே, அதன் முடிவில் ஒரு வியக்கத்தக்க திருப்பம் இருக்கும். அந்த திருப்பம் இந்த கதையிலும் இருக்கிறது.
"பாலத்திற்கு வந்த முதியவர்' என்ற கதையை எழுதியவர்... 1954-ஆம் வருடத்தில் இலக்கியத்திற்கான நோபல் விருதைப்பெற்ற... மகத்தான எழுத்தாளரான எர்னெஸ்ட் ஹெமிங்வே.போர்ச் சூழலில் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற் காக 12 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடந்து, ஒரு பாலத்திற்கு வந்து சேர்ந்த நல்ல மனம் படைத்த ஒரு வயதான மனிதரை மையமாக வைத்து எழுதப் பட்ட கதை.
முதியவரின் இப்போதைய அவல நிலை நம் கண்களில் நீரை அரும்பச் செய்யும்.
நான் மொழிபெயர்த்த இந்த 4 சிறுகதைகளும் உங்களை வெவ்வேறு உலகங்களுக்கு அழைத்துச் செல்லும் என்பது உறுதி.
"இனிய உதயம்' மூலம் என் மொழிபெயர்ப்பு படைப்புகளை வாசிக்கும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதய நன்றி.