இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்-
என்பது வள்ளுவர் வாக்கு.
தவறை எடுத்துச் சொல்லி, திருத்திக் கொள் என அறிவுரை கூறும் மதியூகமிக்க அமைச்சர்கள் இல்லாத மன்னன், அவனது அழிவுக்கு காரணமாகக்கூடிய ஆட்கள் இல்லாதபோதும் வீழ்ச்சிக்கு உள்ளாவான் என்பதே இதன் பொருள்.
தன்னை நம்பி- தனக்காகவே வந்த அப்பாவி மக்கள்-தன்னால் நெரிசலில் சிக்குகிறார்கள் -மூர்ச்சை ஆகிறார்கள்- கூட்டத்தில் சிக்கி மிதிபடுகிறார்கள்- நசுங்குகிறார்கள்- உயிரிழக்கிறார்கள் என்றால்- அந்த நடிகன் பதறித் துடித் திருக்க வேண்டாமா?-அங்கேயே கதறித் துடித்திருக்கவேண்டாமா?
பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ மனைகளுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளில் அவன் உடனடியாக இறங்கவேண்டாமா?-
அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்கிறதா? என்று அருகில் இருந்து அவன் கவனித்திருக்க வேண்டாமா?-அவர்களுக்கு என்ன உதவி தேவைப்படுகிறது என்று அறிந்து-அதைச் செய்வதற்கு அவன் துணிந்திருக்க வேண்டாமா?
யார் எக்கேடு கெட்டால் என்ன?-யாருக்கு என்ன ஆனால் என்ன?- அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுவோம் என்று-அந்த ஸ்பாட்டிலிருந்து- தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவன் ஓடுகி றான் என்றால்-அவனா ஒரு கட்சிக்குத் தலைவன்?
40-க்கும் மேற்பட்ட உயிர்ப்பலிக் குக் காரணமானவன் -கரூரை -ஒருசில நிமிடங்களில் மரண நகரமாக மாற்றியவன் - அதுகுறித்த எந்தவித ஆழ்ந்த கவலையும் இல்லாதவன் -இப்போது தன்னால் ஏற்பட்ட மரணங்களையும் கரன்சி நோட்டுக்களால் மறைக்கப் பார்க்கிறான் என்றால்- அதை எப்படி ஏற்கமுடியும்?-அந்த மரண வியாபாரி தப்பியோடியதை எப்படி சரி என்று சொல்லமுடியும்?
சிறுவர்களைக் கூட மரியாதையோடு அழைக்கவேண்டும் என்று நினைக்கிற நான்-இப்போது இருக்கும் மனநிலையில் அவனை-அவன் என்று அழைக்கிறேன் என்றால்-
அதற்கான வருத்தத்தோடு தான் இந்தத் தலையங்கத்தை எழுதுகிறேன்.
சாலையில் ஒருவன் அடிபட்டால் கூட ஓடிப்போய் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கும் மனிதர்களுக்கு மத்தியில், தன்னை நம்பி வந்தவர்களை, மரணத்திடம் ஒப்படைத்துவிட்டு ஒருவன் ஓடுகிறான் என்றால், அவனை மனிதன் என்று சொல்லக்கூட நாக்கு கூசுகிறது.
இதில் இவன் ஒரு அரசியல் கட்சித் தலைவனாம்-வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த ஓட்டுக்களையும் வாங்கி-ஆட்சியைப் பிடித்துவிடுவானாம்-வெட்கம் கெட்ட வெண்டைக்காய்!
ஒரு சினிமா நடிகன் அரசியலுக்கு வரக்கூடாது என்று நாம் சொல்லவில்லை-வரலாம். ஆனால் அதற்கு அரசியல் தெரிந்தவனாக அந்த நடிகன் இருக்கவேண்டும். சக அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் எப்படி விமர்சிப்பது என்கிற அளவுகோலை அறிந்தவனாக அவன் இருக்கவேண்டும். அதைவிடவும்-பணத்தையும் சினிமா மோகத்தையும் வைத்து மக்களை எப்படி வேண்டுமானாலும் ஆட்டிவைக்கலாம் என்று நினைக்காமல், மக்கள் நலத்தில் உண்மையான அக்கறை கொண்டவனாக அவன் இருக்கவேண்டும்.
இந்த நற்குணங்களில் ஒன்றுகூட இல்லாதவன்-குடும்ப உறவுகளுக்கே உரிய மரியாதையைக் கொடுக்காதவன்-மனைவியைப் பிரிந்து, திரை நட்சத்திரங்களிடம் மயங்கிக் கிடப்பவன் - வருமான வரியை மோசடி செய்வதற்குக்கூட அஞ்சாதவன் - வருமான வரித்துறையிடமிருந்து ‘புலி’ படத்துக்கு தான் வாங்கிய 15 கோடி ரூபாய் சம்பளத்தை மறைத்தவன், அதைக் கண்டுபிடித்த பிறகும்- இது பழைய தவறு. அதனால் அதை மன்னித்துவிடுங்கள் என்று நீதிமன்றத்திடம் நின்றவன் - இப்படி சகல துர்குணங்களையும் கொண்டிருக்கும் அவன்- யாரோ எழுதிக்கொடுக்கிற பேச்சை -மக்கள் முன் ஒப்பிக்கிறேன் பேர்வழி என்று -எகத்தாளமாக அத்தனை அரசியல் தலைவர்களையும் மட்டம் தட்டிப்பேசுகிற அவன் -தன்னை மகாத்மா காந்தியின் பேரன்போல நினைத்துக்கொண்டு -யோக்கிய வேசம் போட்டுக்கொண்டு இருக்கிறான்.
தனக்குக் கூடுகிற வேடிக்கை பார்க்கிற கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறும் என்று நம்பி-இஷ்டத்துக்கும் பேசித் திரிந்துகொண்டு இருக்கிறான் -இவனின் ஒழுக்கத்தையும் யோக்கியதையையும் திரையுலகில்லிதிரைக்குப்பின் உழைக்கிறவர்களிடம் கேட்டால்- குப்பையாய் அள்ளிக்கொட்டுவார்கள்.
* மக்களுக்காக மக்களைத் தேடிச்செல்வதுதான் அரசியல். ஆனால் அப்படி மக்களைத் தேடிச்செல்லும் ஒரு அரசியல் தலைவனுக்கு எதற்கு பவுன்சர்களின் பாதுகாப்பு? மக்கள் மீது அவனுக்கு நம்பிக்கை இல்லையா?
*மதுரை த.வெ.க. மாநாட்டின்போது அவன் நடந்துசென்ற ராம்பில் ஏறி, அவனுக்கு சால்வை அணிவிக்க முயன்ற அவன் ரசிகர்களை, அவன் நியமித்த பவுன்சர்கள் கீழே, தூக்கிவீசினார்களே..
அப்போது கூட அவர்களுக்காகத் துடிக்காத அவன் இதயம், கரூர் நகரில் மிதிபட்டுச் செத்தவர் களுக்காகவா துடிக்கப்போகிறது?
* ஒரு கூட்டத்தை ஒரு இடத்தில் கூட்டும்போது, அங்கே மக்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் கூடிக் கலையமுடியுமா? என்று கணிக்கக்கூடத் தெரியாதவனுக்கு கூட்டத்தைக் கூட்ட என்ன யோக்கியதை இருக்கிறது?
*மதியம் பேச வேண்டிய ஒரு பாயிண்ட்டில், மக்களை வெயிலிலும் தாகத்திலும் இரவுவரை பெண்களும் குழந்தைகளும் வயதானவர்களும் காத்திருந்தால், அதிலேயே அவர்கள் அரை உயிராய் ஆகிவிடுவார்களே என்கிற நினைப்பு கூட அவனுக்கு இல்லை.
-இப்படியெல்லாம் ஆயிரெத்தெட்டு ஓட்டைகளை வைத்துக்கொண்டு, அவன் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வருவதை, இன்னும் கூட சிலர் கண்டிக்க முன்வராதது ஏன்?
காவல்துறை விதித்த நிபந்தனைகளில் கூட்டத்திற்கு குழந்தைகளையும் வயதானவர் களையும் பங்கேற்கச்செய்யக் கூடாது என்கிற நிபந்தனை பிரதானமாக இருந்தது. அப்படி இருந்தும், இது குறித்து அவனும் அவனது ஆலோசகர்களும் கவலைப்படவே இல்லை.
இப்படி ஏகப்பட்ட தவறுகளைச் செய்தவனை விட்டுவிட்டு, இவ்வளவு உயிர்ப்பலிகளுக்கும் தி.மு.க.வும் தி.மு.க. அரசும்தான் காரணம் என்று, தி.மு.க. எதிரிகள் பஜனை பாடி வருகிறார்கள்.
தி.மு.க.வும் தி.மு.க. அரசும்தான், விஜய் கூட்டத்திற்கு குழந்தை களையும் பெண்களையும் வயதானவர்களையும் ஏற்பாடு செய்து அனுப்பிவைத்ததா?
அதுதான் அவனை அந்தக் கூட்டத்திற்குத் தாமதாமாக வரசொன்னதா?
விபத்தும் உயிர்ப்பலியும் நடந்ததும், அங்கிருந்து தப்பியோடியவனை விட்டுவிட்டு, இரவோடு இரவாக அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி, உயிர்ப்பலிகள் அதிகமாகிவிடக் கூடாது என்பதற்காக வாய்ப்புள்ள அமைச்சர்களை அங்கே அனுப்பி, அக்கம்பக்க ஊர்களில் இருந்த மருத்துவர்களை எல்லாம் கரூருக்கு வரவழைத்து, நிவாரண அறிவிப்பைக்கூட அதே வேகத்தில் அறிவித்துவிட்டு, தன் வயதையோ, உடல் அலுப்பையோ பற்றிக்கூடக் கவலைப்படாமல் அந்த இரவிலேயே கரூருக்கு நேரில் சென்று, இயன்றதை எல்லாம் செய்த தமிழக முதல்வரை, கேடுகெட்ட வாய்கள் எல்லாம் வெட்கமில்லாமல் விமர்சிக்கின்றன.
இவ்வளவு அயோக்கியத்தனங்களை அவன் செய்தும், அந்தக் கொந்தளிப்பான நேரத்தில் அவனுக்கு எதிராக தங்கள் தரப்பில் யாரும் வாயைத் திறக்காமல் பார்த்துக்கொண்டதோடு, மக்களின் ஆவேசம் அவன் பக்கம் திரும்பாமல் பார்த்துக்கொண்ட முதல்வரின் பொறுப்புணர்ச் சியை, இந்த மடப் புண்ணாக்குகள் மலினமாக எடைபோடுவதை நம்மால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவன் மக்கள் முன் வருவான்? மக்களைச் சந்திப்பான்?
தீரா வேதனையோடு,
நக்கீரன்கோபால்