ரு நாடுகளுக் கிடையே போர் மூளும் போதெல்லாம், மூன்றாம் உலகப் போர் குறித்த அக்கறையோ, பயமோ தொனிக்கும் கட்டுரைகள், பதிவுகளை சமூக ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் நாம் காணமுடியும். 

Advertisment

இன்றைய உலகச் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் இஸ்ரேல்- பாலஸ்தீன விவகாரத்தில் ஒரு நெடும் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவுக்கும்- உக்ரைனுக்குமான போர் ஆண்டுக்கணக்கில் நீடிக்கத் தொடங்கிவிட்டது. தைவானை சீனா அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. பஹல்காம் சுற்றுலா தளத்தில் இந்தியப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும்கூட ஒருமுறை மோதி அமைதியாகியிருக்கின்றன. அதுபோக ஒவ்வொரு நாடும் தன் பக்கத்து நாட்டுடன் ஒரு பஞ்சாயத்தை வைத்திருக்கின்றன. பெட்ரோல் பற்றிக்கொள்வதைவிட மிக எளிதானது ஒரு உலகப் போருக்கான வாய்ப்பு!

Advertisment

முதலாம் உலகப் போர் நிகழ்ந்த காலகட்டமான 1900 காலகட்டங்களில் ஐரோப்பாவில் பல்வேறு நாடுகள் வளர்ச்சி கண்டுவந்தன. தொழில் மற்றும் அறிவியல் புரட்சியின் காரணமாக பல நாடுகள் வளமாகத் திகழ்ந்ததுடன் இராணுவ பலத்தையும் அதிகரித்துவந்தன. பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவும் குடியேற்ற நாடுகளைச் சுரண்டி அங்கே தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி செல்வாக்குடன் திகழ்ந்தன. தங்களது இந்த வளத்தையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்த அருகிலுள்ள நாடுகளுடன் கூட்டு சேர்ந்துகொண்டு, கூட்டு நாடுகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் பிற நாடுகள் உதவிக்கு வரவேண்டும் என ஒப்பந்தம் செய்துகொண்டன.

இந்தச் சூழ-ல்தான் ஆஸ்திரியாவின் அரசர் பிரான்ஸ் ஃபெர்டினாண்ட், செர்பிய நாட்டவன் ஒருவனால் கொலைசெய்யப்பட ஆஸ்திரிய- செர்பிய பிரச்சனையில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் அணி சேர்ந்த நாடுகளுக்கு இடையிலான போர் உலகப் போராக உருவெடுத்தது. 

Advertisment

இந்தப் போரில் நேச நாடுகள் எனப்பட்ட பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் ஒரு அணியிலும். மைய நாடுகள் எனப்பட்ட ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா உள்ளிட்ட நாடுகள் ஒரு அணியிலும் இருந்தன.

பிற விவரங்களுக்குள் செல்லாமல், இந்தப் போரில் இறந்தவர்களின் கணக்குக்கு வருவோம். முதல் உலகப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை தோராயமாக 2 கோடியே 20 லட்சம் பேர்.

முதல் உலகப் போர் முடிந்து வெகுகாலமெல்லாம் செல்லவில்லை. 1939-லேயே இரண்டாம் உலகப் போருக்கு உலகம் ஆயத்தமாகிவிட்டது. மோதலில் பலிகொடுக்கப்பட்ட 2 கோடியே 20 லட்சம் பேரின் உயிர்த்தியாகத்துக்கு எந்த அர்த்தமும் இருக்கவில்லை.

முதல் உலகப் போரில் தோல்வியுற்ற ஜெர்மன் மீது வெற்றிபெற்ற நாடுகள் திணித்த வெர்செய்ல்ஸ் ஒப்பந்தமும், ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சியும் இத்தாலியில் முசோலினியின் எழுச்சியும் ஒரு காரணம் என்றால், ஜப்பானின் நாடு பிடிக்கும் பேராசை மற்றொரு காரணம்.

இந்த முறை அச்சு நாடுகள் என்றழைக்கப்பட்ட ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகள் ஒரு அணியிலும் நேச நாடுகள் என்றழைக்கப்பட்ட பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இன்னொரு அணியிலும் இருந்தன. முக்கியமாக இந்தக் காலகட்டத்தில் ஆயுத உருவாக்கத்தில் பல நாடுகள் வெகுவாக வளர்ச்சியடைந்திருந்தன. 

அமெரிக்கா அணுகுண்டையே உருவாக்கியிருந்தது.

இரண்டாம் உலகப் போரில் 8.5 கோடிப் பேர் இறந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ஜப்பானின் நாகசாகி, ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சில் இறந்தவர்கள் மட்டும் 2.25 லட்சம் பேர். அணுக்கதிர்வீச்சு தாக்கத்துக்கு ஆளாகி மெல்ல மெல்ல இறந்தவர்கள் கணக்கு தனிக் கணக்கு.

முதல் உலகப் போர் நிகழ்ந்த காலகட்டத்தில் உலக மக்கள் தொகை 186 கோடி. அதில் இறந்தவர்கள் உலக மக்கள் தொகையில் 1.18 சதவிகிதம். இரண்டாம் உலகப் போர் காலகட்டமான 1945-ல் உலகின் மக்கள் தொகை 230 கோடி. அந்த உலகப் போரில் மட்டும் அன்றைய உலக மக்கள் தொகையில் 3 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கின்றனர்.

இன்றைக்கு உலகின் மக்கள் தொகை 820 கோடி. தவிரவும் இன்றைய உலகில் அணுகுண்டு வைத்துள்ள நாடுகள் மட்டும் 9. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டன், பிரான்ஸ், வடகொரியா, இஸ்ரேல். இதில் இஸ்ரேல் மட்டும் அணுகுண்டு வைத்திருப்பதை ஒப்புக்கொள்ள வில்லை என்றாலும் அதனிடம் அணுகுண்டு இருப்பதாக பல நாடுகளும் நம்புகின்றன.

வல்லரசு நாடுகளின் ஆயுத வியாபாரத்தால், குட்டிக் குட்டியான நாடுகள், வறுமையில் தவிக்கும் நாடுகளைத் தவிர உலகின் அனைத்து நாடுகளும் ஏவுகணைகளையும், போர் விமானங்களையும் பரவலாக வைத்திருக்கின்றன. எனவே உலக நாடுகள் புரிதலின்மை காரணமாகவோ, யார் பெரியவன் என்ற ஆணவத்திலோ, உணர்ச்சிவசப்பட்டோ போரில் இறங்கி, அது உலகப் போராக உருப்பெறுமானால் எந்தப் பக்கம் வெற்றிபெறும் எனச் சொல்வது எளிதல்ல.

அப்படியே ஒரு அணி வெற்றிபெற்றாலும், தோல்வியுற்ற அணியானது வெற்றிபெற்ற அணிக்கு மறக்கமுடியாத பேரழிவுப் பாடங்களைக் கற்பித்திருக் கும். மொத்தத்தில் இரு பக்கத்துக்கும் பெருஞ்சேதம் விளைந்திருக்கும். அப்படி ஒரு போர் நிகழ்ந்தால், இந்த முறை மரணமடைவது 1 சதவிகிதமாகவோ, 3 சதவிகிதமாகவோ இருக்காது. அது 25%, 30% என எகிறினாலோ, அல்லது ஒட்டுமொத்த மனித குலத்தில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களைத் தவிர்த்து ஒட்டுமொத்த உலகமோ அழிந்தாலும் ஆச்சரியமில்லை. இந்தக் காரணத்தால்தான் மூன்றாம் உலகப் போரைக் குறித்த அச்சம் ஒவ்வொருவரிடமும் மறைந்திருக்கிறது.

ஆனால், இன்று உலகப் போரைவிடவும் ஆபத்து நிறைந்த விஷயமொன்று உலக நாடுகளைச் சூழ்ந்திருக்கிறது. அது கண்முன் துலக்கமாகத் தென்பட்டபோதும் அதைக் கண்டுகொள்ளாமல், நாடுகள் தங்களது வழக்கமான பொருளாதாரப் பேராசையில் இறுக கண்களை மூடிக்கொண்டுள்ளன.

2023 கணக்குப் படி இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 கோடி. இதுவும் துல்லியமான கணக்கல்ல. இன்னும் பலர் தங்களுக்கு வந்துள்ள சர்க்கரை நோயைக் குறித்த தெளிவின்றியே அதனுடனே வாழ்ந்துவருகின்றனர். 

ஏதாவது அதீத உடல் மெலிவு, அல்லது இதர உடல்நலக் குறைவுக்காக மருத்துவரிடம் செல்கையில் அவர் கண்டுபிடித்துச் சொல்லும்போதே தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதை அவர்கள் அறியவருகின்றனர்.

இந்தியாவின் கணக்கு இப்படியென்றால் 2023 கணக்குப்படி உலகில் சர்க்கரை நோய் பாதிப்புடையவர்களின் எண்ணிக்கை 53.7 கோடிப் பேர். அதேபோல இதுவும் முழுமையான, துல்லியமான எண்ணிக்கையல்ல வளர்ந்த, வளரும் நாடுகள் தரும் கணக்கு ஓரளவு துல்லியமாக இருக்கலாம். மாறாக, ஏழ்மையிலிருக்கும் நாடுகளில் சர்க்கரையால் பாதிக்கப்பட்டோரின் கணக்கு முழுமையாகவும் இல்லை. அதைக்குறித்து அந்த நாடுகள் பெரிய அக்கறை செலுத்துவதும் இல்லை.

இந்திய மக்கள் தொகையில் 30 சதம் பேர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவே உலகில் 113 கோடி பேர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேற்சொன்னதுபோலவே இதிலும் நாடுகளின் கணக்கீட்டின் துல்லியமின்மையால், தரவுகள் இன்மையால் விடுபட்டவர்கள் இன்னும் சில சதவிகிதம் இருப்பார்கள்.

2022 கணக்கீட்டின்படி இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 14.5 லட்சம் பேர். உலகில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் 2 கோடிப் பேர். உலக மக்கள் தொகையில் 38% பேர் உடற்பருமன் உடையவர்கள். இது 2035-ல் 50 சதவிகிதமாக மாறும் என கணித்துள்ளனர். இந்தியாவில் மக்கள்தொகையில் 20% பேர் உடற்பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒரு தரவு கூறுகிறது.

இந்தியாவில் எந்த ஒரு பெரிய நகரமும், தூய காற்றைக் கொண்டிருக்கவில்லை. அதாவது பாதுகாப்பான அளவு மாசு எனச் சொல்லப்படும் காற்று மாசைக் கொண்டிருக்கவில்லை. அதிலும் தலைநகரான டெல்லியின் மாசு அளவு, கேஸ் சாம்பர் எனச் சொல்லக்கூடிய ஆட்களைக் கொல்லப் பயன்படுத்தக்கூடிய விஷவாயு அறை போலத்தான் இருக்கிறது என எச்சரித்துள்ளார்கள். இந்திய நகரங்கள் மட்டுமில்லை. உலக நகரங்கள் முழுக்கவே இதுதான் கதை. பிற நாட்டு நகரங்கள் இந்தியாவைவிட சற்று மேம்பட்ட நிலையிலிருக்கும் மாசைக் கொண்டிருக்கலாம்.

இவை தவிர இன்னும் ஆயிரம் நோய்கள். மேற்சொன்னதில் ஒருவரே சர்க்கரையையும் ரத்த அழுத்தத்தையும் கொண்டிருக்கலாம். இன்னொருவர் புற்றுநோயுடன் சர்க்கரை நோய்க்கு ஆளாயிருக்கலாம். அதாவது வளர்ச்சியின் பெயரால் நோய்களுக்கு நம் ஆயுளைச் சந்தாவாகக் கட்டியிருக்கிறோம்.

இந்தியாவை எடுத்துக்கொண்டால் 2020-ல் சர்க்கரை நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 91,000 பேர். 2050-ல் உலகிலேயே அதிக சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில்தான் இருப்பர் என மதிப்பிடப்படுகிறது. இப்படியே உயர் ரத்த அழுத்த நோயால் இறந்தவர்கள், புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை என கணக்கிட்டோ மானால், ஒரு உலகப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை, ஒரு பத்தாண்டு கால நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை எளிதில் பின்தங்கச் செய்துவிடும்.

அதாவது, ஒரு துப்பாக்கிக் குண்டு வெடிக்காமல், ஒரு பீரங்கி முழங்காமல், ஒரு போர்விமானம் குண்டு வீசாமல் போரை பின்னுக்குத் தள்ளிவிடக்கூடியவை இன்றைய நவீன நோய்கள்.

ஆகவே, நுகர்வு மற்றும் பேராசையின் யுகத்தில் மனிதன் அஞ்சவேண்டியது மூன்றாம் உலகப் போருக்கு அல்ல. மனிதனின் பேராசையாலும் விழிப்புணர்வின்மையாலும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வின்மையாலும், மக்களை ஆக்கிரமித்திருக்கும் பேரழிவு நோய்களை எண்ணியே பயப்படவேண்டும். அதைக் குறித்த சிந்தனைகளே உலகை ஆள்பவர்களின் சிந்தனையாய் இருக்கவேண்டும்.