பெரும்பான்மையான ஜாதகப் பலன்களை நிர்ணயம் செய்வதில் கிரகச் சேர்க்கையே அதிக பங்குவகிக்கிறது. கல்விக்கு காரக கிரகமான புதன் பகவானுடன் தொடர்பு கொள்ளும் கிரகங்களால் ஒரு ஜாதகருக்கு ஏற்படும் நன்மை- தீமைகளை பார்க்கலாம்.
புதன் + சூரியன்
ஒரு ஜாதகத்தில் புதனும் சூரியனும் சேர்ந்திருந்தால் அதை புதன் ஆதித்ய யோகம் என்று கூறுகிறார்கள்.
சூரியன் என்றால் ஆன்மா, புதன் என்றால் புத்தி. ஆன்மாவும் புத்தியும் இணையும்போது மட்டுமே மனிதர் களுக்கு ஆன்ம பலம் பெருகும். ஆத்ம பலம், ஞானத்தை தரும் சூரியனுடன் புத்திகாரகன், வித்யா காரகன் புதன் சேரும்போது மனிதனுக்கு அளவில்லாத ஞானம் ஏற்படுகிறது. ஆன்ம பலத்தால் அடையமுடியாத வெற்றியே கிடையாது. மனித வாழ்வில் அறிவுக் கண்ணை திறப்பதில் முதலிடத்தில் இருப்பதும் கல்விதான். அந்த கல்வியில் தனித்துவத்துடன் விளங்க புத ஆதித்ய யோகம் அவசியம். அதேபோல் பலர் புதன் ஆதித்ய யோகம் கல்விக்கு மட்டுமே பலன் தரும் என்று நினைக்கிறார்கள். மனிதர்கள் வாழ்வில் அனைத்துவிதமான வெற்றியை வழங்கக்கூடிய யோகமாகும். சூரியனுடன் புதன் இணையும்போது அவர் நன்மை தரும் சுபராக செயல்படுவாரா அல்லது தீமை தரும் பாபராக இருப்பாரா என்று கணிப்பதில் சிக்கல் ஏற்படும். அனுபவமுள்ளவர்களையும் தடுமாற வைக்கும். சூரியன்- புதன் இவர்களை பார்க்கும் கிரகங்களின் நிலை, ஆதிபத்தியம் ஆகியவற்றைக்கொண்டு பலனைச் சீர்தூக்கி பார்க்கவேண்டும். பல நிலைகளில் பலருக்கு இந்த கிரகச் சேர்க்கை பலன் தருவதில்லை. புதன் நீசம்பெற்று கல்வியில் முன்னேற்றம் பெற்றவர்களையும் பார்த்திருக்கி றேன். உச்சம்பெற்ற புதனால் அடிப்படைக் கல்வியை தாண்டாதவர்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு விஷயத்தை உறுதியாக கூறலாம். புத ஆதித்திய யோகத்தால் கல்வி ஞானம் இல்லாதவர்களுக்கு வாழ்வியல் ஞானம் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை.
புதன் + சந்திரன்
புத்தி கிரகமான புதன் மனதிற்கு காரக கிரகமான சந்திரனுடன் சேர்க்கை பெறுவது சுபத்துவமான அமைப்பு அல்ல. கல்விக்கு காரக கிரகமான புதன் சந்தேகம், ஞாபக மறதி ஆகியவற்றிற்கு காரக கிரகமான சந்திரனுடன் சேரும்போது மன சஞ்சலம், மன அழுத்தம் அதிகமாகும். சந்திரன் நிலையற்ற தன்மையுள்ள கிரகம் என்பதால் அவர்களுக்கு அடிக்கடி எண்ண ஓட்டம் மாறிக்கொண்டே இருக்கும். படித்ததை நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. சிலர் மன நோயாளிகளாக இருப்பார்கள். அவர்களுடைய உணர்வுகளை எளிதில் யாராலும் புரிந்துகொள்ள முடியாது. கனவு உலகில் வாழ்வார்கள். படிப்பில் நாட்டம் இருப்பது இல்லை. ஞாபக சக்தி குறைவு உண்டு. அடிக்கடி பள்ளி மாற்றம் செய்வார்கள். ஆரோக்கிய குறைபாடு, சரும நோய் பாதிப்பு இருக்கும். இவர்களுக்கு தாயின் அன்பு முழுமையாக கிடைக்காததே கல்வியில் நாட்டம் குறைவதற்கு முக்கிய காரணமாகும். தனது எதிர்கால வாழ்க்கை குறித்து திட்டமிட தெரியாது.
புதன் + செவ்வாய்
அறிவிற்கு காரக கிரகமான புதன் கோபத்திற்கும் தைரியத்திற்கும் காரக கிரகமான செவ்வாயுடன் சேருவதால் வேகம் இருக்கும் அளவிற்கு விவேகம் இருக்காது.ஒருவரின் சுய ஜாதகத்தில் புதனுக்கு செவ்வாய் சம்பந்தம் இருந்தால் எதை யும் ஒரு அசட்டு தைரியத்துடன் அணுகுவார்கள். நாளைக்கு பரீட்சை என்றால் இன்றுகூட கவலைப்பட மாட்டார்கள். எது வந்தாலும் பாத்துக்கலாம் என்ற மனோபாவத்துடன் வாழ்வார்கள். ஆனால் படிக்காமலே மார்க் வந்துவிடவேண்டும் என்று விரும்புவார்கள்.பெற்றோர்கள் ஏன் மதிப்பெண் குறைகிறது என்று கேட்டால் நான் நன்றாக படித்தேன், நன்றாக எழுதினேன். ஆனால் மார்க் மட்டும் ஆசிரியர் குறைவாக போட்டுவிட்டார் என்று சொல்வார்கள். எப்பொழுதும் படிப்பதுபோல் பாவனை செய்வார்கள். படிப்பு என்றாலே மிகுந்த கடினமான விஷயமாக நினைப்பார்கள். ஆனால் எல்லாம் தெரிந்ததுபோல் நடந்துகொள்வார்கள். சிலர் அடிக்கடி பள்ளி மாற்றம் செய்வார்கள். சிலர் படிப்பை தவிர்த்து விளையாட்டு மற்றும் பாடத்திட்டம் சாராத செயல்களில் தனித்துவத்துடன் விளங்குவார்கள்.மிகச் சுருக்கமாக அவர்களை படிக்கச் சொல்லக்கூடாது. படிக்கச் சொல்பவர்களை அவர்களுக்கு பிடிக்காது. ஆனால் எப்படியாவது படித்து ஒரு பட்டம் பெற்று விடுவார்கள். படித்த படிப்பு அவர்களுக்கு உதவி செய்யும்.
புதன் + ராகு
புதன் பகுத்தறிவு திறன், பேச்சாற்றல் மற்றும் புத்திசாலித்தனத்திற்கு காரக கிரகமாகும். ராகு பிரம்மாண்டத்திற்கு காரகமான கிரகம். படிப்பாளிகள், அறிவாளிகள். எப்பொழுதும் எதையாவது படித்துக் கொண்டே இருப்பார்கள். உலகியல் விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகம். தான் கற்கும் கல்விக்கு தொடர்பான விஷயங்களை சேகரித்து வைப்பதில் இவர்களுக்கு இணையாக வேறு யாரும் வரமுடியாது. இவர்களிடம் கற்ற கல்விக்கு தகுந்தமான ஆளுமை தன்மை வெளிப்படும்.புத்திசாலித்தனத்திற்கு உதாரணமாக இவர்களை மட்டுமே முன்வைக்க முடியும். எல்லாத் துறையிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருந்தா லும் கணித பாடத்தில் பல மாணவர்கள் இந்த கிரகச் சேர்க்கை இருந்தால் பின்தங்கியே இருக்கிறார்கள். பல மாணவர்கள் கணித பாடத்திற்கு பயந்து பள்ளிக்குச் செல்வதையே விரும்புவதில்லை அல்லது கல்வியை கைவிடுகிறார்கள். புதன் ராகு இருவரும் பலம் பெற்றால் தங்களின் தனித்திறமையான சமுதாயத்தில் நல்ல அங்கீகாரத்தை பெறுகிறார்கள். வேற்று மொழி கற்பதில் ஆர்வம் அதிகமாக உண்டு. அல்லது வேற்று மொழி பேசும் நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள்.இதில் புதன் வலிமை குறைந்தால் இந்த கிரகச் சேர்க்கை இருக்கும் மாணவர்களின் நடவடிக்கைகள் வினோதமாக இருக்கும். இந்த கிரகச் சேர்க்கையுள்ள பிள்ளைகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியைப் பற்றி கவலைப்படாத நாளே இருக்காது. குறிப்பாக எல்லா பாடத்திலும் அதிக மதிப்பெண் பெற்றாலும் கணிதப் பாடத்தில் பின்தங்கி இருப்பார்கள். சில குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். ஆனால் பரிட்சையில் அவர்களால் அதை ஞாபகத்துடன் எழுதமுடியாது.பொது அறிவு அதிகமாக இருக்கும். இவர்கள் பெயரில் மாற்றம் செய்வார்கள். எழுதும்போது எழுத்துப்பிழை அதிகமாக இருக்கும். சிலருக்கு பள்ளி, கல்லூரி சான்றிதழில் குளறுபடி வரும். காதல் பாடத்தில் மிகுந்த அனுபவசாலியாக இருப்பார்கள். சரும நோய் பாதிப்பு உண்டு.
புதன் + குரு
அறிவுக்கு காரக கிரமான புதனும் ஆன்ம பலத்திற்கு காரக கிரமான குருவும் இணைவது கல்வியில் தனித்திறமையை கொடுக்கும். மிகுந்த புத்திசாலியாக இருப்பார்கள்.தங்களது கல்வித்திறமையினால் பேச்சினால் சமூகத்தில் செல்வாக்கை அடைவார்கள். வலிமை மிக்கவர்களாக எல்லாத் துறைகளிலும் வெற்றியை வாய்ப்பைப் பெறுவார்கள். ஒரு பிறவியில் கற்ற கல்வி ஏழு பிறப்பிற்கும் பலன் தரும் வகையில் கற்பார்கள்.சரஸ்வதி கடாட்சம் நிரம்பியவர்கள். கல்வி, செல்வம், வீரம் இவை மூன்றும் ஒருங்கே பெற்றவர்களாக இருப்பார்கள்.கல்வியின்மூலம் சமுதாயத்தில் மதிப்பு, மரியாதைக்கு உரியவர்களின் நட்பு கிடைக்கும். பள்ளி கல்லூரியில் முதன்மை மாணவர்களாக இருப்பார்கள். சிலர் மாணவர் தலைவராக இருப்பார்கள். அரசியல் ஆர்வம் உண்டு. ஜோதிடம் பேங்கிங், ஆடிட்டிங், டீச்சிங், ஐ.டி, நிதித்துறை, நீதித்துறை, வருமானவரித்துறை போன்றவற்றில் தனித்தன்மையுடன் இருப்பார்கள். குறைந்தபட்சம் இரண்டு டிகிரி படிப்பார்கள். அதிகபட்சமாக டாக்டரேட் பட்டம் பெறுவார்கள். சிலர் திருமணத்திற்கு பிறகும் படிப்பார்கள். கல்விமேல் தீராத ஆவலால் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டே இருப்பார்கள்.
புதன் + சனி
புத்திக்கு காரக கிரகமான புதன் மந்த கிரகமான சனியுடன் சேரும்போது கல்வியில் மந்தத்தன்மையை ஏற்படுத்தும். புத்தகத்தை கையில் எடுத்தவுடன் தூக்கம் வரும். கல்வியில் அதிக தடை இருக்கும் அல்லது அரியர்ஸ் பாடம் அதிகமாக இருக்கும். சிறுவயதிலேயே பரம்பரை நோய் தாக்கம் இருக்கும். எதிலும் ஏமாற்றத்தை அதிகம் சந்திக்கக்கூடிய அமைப்பாகும். ஞாபக சக்திக் குறைவு, எதிர்மறை எண்ணங்கள் அதிகம் இருக்கும். மேலோட்டமாக படித்து பரிட்சை எழுதுவார்கள்.உள்ளாழ்ந்து படிக்கும் தன்மை இருக்காது. ஆனால் தனக்கு எல்லாம் தெரிந்துபோல் வெளிக்காட்டிக் கொள்வார்கள். புதன் வலிமை பெற்றால் ஏதாவது ஒரு கல்வி நிச்சயம் உண்டு. புதன் வலிமை குறைந்தால் பள்ளிப்படிப்பைக்கூட தாண்ட முடியாது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல்தான் படிக்காதவர் களை நினைத்து மனம் வருந்துவார்கள். கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் எந்த விதத்திலும் பயனில்லை. சிறுவயதிலேயே எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்பு இருக்கும். இதுபோன்ற அமைப்பு இருப்பவர்களை அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்க வைக்கும் போது பாதிப்பு குறையும்.
புதன் + கேது
கல்விக்காரகன் புதன். கேது ஞானகாரகன். கேதுதான் எந்த பாவகத்தில் நிற்கிறாரே எந்த கிரகத்துடன் எந்த கிரகத்துடன் இணைகி றாரோ அந்த கிரக காரகத்துவத்தை வலிமை இழக்கச் செய்வார். இது கல்வியில் தோல்வியை தரக்கூடிய கிரக சேர்க்கை. கடுமையான ஞாபக மறதி இருக்கும். படிப்பையும் படிக்கச் சொல்பவர்களையும் எதிரியாக நினைப்பார்கள். கல்வியில் ஆர்வம் இருக்காது. கல்வியைத்தவிர புற விஷயங்களில் ஆர்வம் அதிகமாக இருக்கும். கல்வியின் அவசியம் புரியாது. படிக்கும்போது காதல் வலையில் சிக்குவார்கள். திருமணத்திற்கு பிறகு படிக்க விரும்புவார்கள். அல்லது திருமணத்திற்குபிறகு படித்து முன்னேறுவார்கள். சிலர் நான்கு ஐந்து பள்ளி மாறிவிடுவார்கள். பள்ளிப்படிப்பு முடியும்வரை சுக்கிர தசை ராகு தசை வராமல் இருந்தால் படிப்பில் பாதிப்பு இருக்காது. கேதுவின் காரகம் தொடர்பான பாடங்களை தேர்வு செய்து படித்தால் தடையை தகர்க்க முடியும். குறிப்பாக சட்டம், சாஸ்திரம், ஜோதிடம், மாந்திரீகம் இதுபோன்ற படிப்புகள் ஓரளவு கல்வித்தடையில்லாமல் மேன்மைபெற உதவும்.
புதன் + சுக்கிரன்
புதன் சுக்கிரன் சேர்க்கை மதனகோபால யோகம். வாழ்ந்து காட்டவேண்டும் என்ற தன்னம்பிக்கை இருக்கும். எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிபெற வேண்டும் என்ற ஆற்றல் உள்ளவர்கள். அழகு ஆடம்பரம் நிறைந்த கல்வி நிறுவனத்தில் படிப்பார்கள். அலங்காரம் இல்லாமல் இவர்களால் பள்ளிக்குச் செல்லமுடியாது. அழகும் இளமை பொது பொலிவும் நிறைந்த ஆசிரியர்களை விரும்புவார்கள். நண்பர்களும் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.இந்த கிரக சம்பந்தம் இருப்பவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்துவிடும். சிலர் ஒரு டிகிரிவரை படிப்பார்கள். வருமானம் தரக்கூடிய கல்வியை விரும்புவார்கள். இவர்கள் அதிகப்படியாக தொழில்கல்வி படிக்க விரும்புவார்கள். தையல் கலை, ஃபேஷன் டெக்னாலஜி, பியூட்டிஷியன் கோர்ஸ் போன்றவற்றில் தனித்தன்மை பெறுவார்கள். சிறுவயதிலேயே சம்பாதிக்க துவங்குவார்கள். செய்யும் செயல்களில் நேர்த்தி உண்டு. இவர்களின் வருமானம் குடும்பத்திற்கு மிகுந்த உதவியாக இருக்கும்.ஒரு காலத்தில் கல்வியின் அவசியம் மக்களுக்கு புரியாமல் இருந்தது. அதனால் பலர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.தற்போது கல்விதான் பிரதானமானது என்பதை உணர துவங்கி உள்ளார்கள். அதனால் எத்தனை தடைகள் வந்தாலும் ஒரு டிகிரியாவது படித்து முடித்து விடுகிறார்கள். கல்வியில் தடை அதிகமாக இருப்பவர்கள் புதன்கிழமை பிரம்மாவை வழிபட கல்வியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அகலும்.
செல்: 98652 20406
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/04/education-2025-12-04-18-19-46.jpg)