மிதுன லக்னம்
மிதுன லக்ன 3-ஆம் அதிபதி சூரியன் ஆவார். அவர் உங்கள் லக்னத்தின் 11-ஆமிடத்தில் உச்சம் அடைவார். பெரும்பாலும் உங்களுக்கு அரசியல் தொடர்பு இருக்கும். அல்லது அரசாங்க ஒப்பந்தங்கள் பெற்று, செழிப்பாக இருப்பீர்கள். இந்த அமைப்பு, மிதுனத்தாருக்கு இருந்தால், தைரியமாக அரசியலில் ஈடுபடலாம். அரசியல் தொடர்பாளராக இருக்கலாம்.
அரசியல் கட்சி நடத்தும் அமைப்பாளராக பணியாற்றலாம். அரசுவகையில் செய்தி தொடர்பு அதிகாரியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
மிதுன லக்னம் 3-ஆம் அதிபதி சூரியன், லக்னாதிபதி புதனுடன் சேர்ந்தால் நீங்கள் கல்வித்துறையில் பெரிய அரசு அதிகாரியாக இருப்பீர்கள். கல்வித்துறைக்கு, அரசு சார்பில் புத்தகம், கையேடு கள், காலண்டர், ரசீதுகள் என இவைபோன்று அச்சடித்து கொடுக்கும் ஒப்பந்தம் பெறு இயலும். அரசு ஏற்கெனவே கட்டிய பழைய வீடுகளை இடிக்கும். அதிகாரியாக இருப்பீர்கள். அல்லது அது சார்ந்த அரசு ஒப்பந்தம் பெறுவீர்கள் அரசு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் அதிகாரியாக இருக்கக்கூடும். அரசு அமைத்த குளம், ஏரியை தூர் வாரும் பணி அல்லது குப்பை போட்டு மூடும் பணியில் இருக்கலாம்.
மிதுனம் 3-ஆம் அதிபதி
சூரியன் + சந்திரன்
இந்த சேர்க்கை, அரசு வங்கிகளில், பணம் கொண்டு சேர்க்கும் பணி அல்லது அந்த பணத்தை கொண்டு செல்லும் வாகனத்தை ஓட்டும் பணி, தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் வேலை, தபால் நிலையத்தில் பணம் சம்பந்த பணி, விமானத்தில் அறிவிப்பாளர் வேலை, அரசு ஆணைப்படி வரி வசூலிக்கும்பணி, அரசு உண்டாக்கும் செய்திகள், கட்டளைகள், உத்தரவுகள் இவற்றை மக்களிடம் கொண்டுசேர்க்கும் அலுவலர், அரசு நூலகத்தில் காசு மற்றும் புத்தக சேகரிப்பு வேலை, அரசு சார்ந்த தொலைபேசி அலுவலகத்தில் வேலை செய்பவர் என இவை சார்ந்த வேலைகளை முழு அல்லது உபரி நேர பணியாக செய்வார்கள்.
மிதுனம் 3-ஆம் அதிபதி சூரியன்+செவ்வாய்
அரசு வேலை வாய்ப்பு அலுவலக பணி, அரசியல்வாதிகளின் செய்தி தொடர்பாளர் மற்றும் பாதுகாப்பு அலுவலர், அரசு மருத்துவமனையில் பணி, அரசு சிறைச்சாலையில் வேலை, காவல் துறையில் வேலை, அரசு சார்ந்த உணவகங்களில் சமையல் பணியாளர், அரசு சார்ந்த கடன் கொடுக்கும் பிரிவில் வேலை, அரசு கொடுக்கும் மருத்துவ உதவி விஷயங்களில் அலுவலராக இருத்தல், அரசு கடன் வசூலிக் கும் ஒப்பந்தம், அரசு உதவி தரும் மருத்துவ குத்தகை, அரசு வீடுகளில் வாடகை வசூலிக்கும் அதிகாரி, அரசியல்வாதிகளின் எதிரிகளின் நடவடிக்கைகளை துப்பறிந்து கூறும் பணி, அந்த எதிரிகளை பற்றி, காறி துப்பும் அளவிற்கு கடும், கொடும் செய்திகளை கைபேசியில் பரப்பும் பணி என இவ்விதமாக, கோள் மூட்டி, சண்டை இழுத்துவிடும் வேலை, அதன் ஒப்பந்தம் பெறுவீர்கள்.மிதுனம் 3-ஆம் அதிபதி, சூரியன்+சுக்கிரனுடன்இந்த இணைவு, முக்கியமாக கலை உலகம் சார்ந்து முழுநேர, உபரி வருமானம் தரும். நடிகர்- நடிகைகளுக்கு, அலைந்து திரிந்து நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுப்பது, கலைஞர்களுக்கு வாகன ஓட்டியாக இருப்பது, கலைஞர்கள் வெளியூர், வெளிநாடு சென்றால், அவர்கள் கூடவே உதவியாளராக இருப்பது, அரசின் செயல்பாடுகளை விளம்பர படமாக, எடுத்து எங்கும் பரப்புவது, கல்வி சார்ந்து வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு, பாஸ்போர்ட், விசா என தேவையானதை எடுத்து உதவும் ஏஜென்சி வைத்திருப்பது. கலைஞர்களின் மேனேஜர் பணி, வெளிநாட்டு வாகன டீசர், மிகப்பெரிய பங்களாக்களை வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் பணி இவைமூலம் உபரி வருமானம் பெறுவீர்கள்.
மிதுன 3-ஆம் அதிபதி சூரியன்+ குருவுடன்
இவ்வமைப்பு திருமணம் சார்ந்த மேரேஜ் மேட்ரி மோனியல்ஸ் என்ற அமைப்பை உண்டாக்கி தரும். திருமண மண்டபம், திருமணத்தை நடத்தி வைக்கும் ஐயர் அரசு தரும் திருமண உதவியை பெற்று தரும் அலுவலர், வியாபார பங்குதாரரை தேடித் தரும் புரோக்கர், தொழில் செய்யும் இடத்தை மாற்றி தரும் குத்தகைதாரர். பஞ்சாயத்து, கார்ப்பரேஷன் இவை சார்ந்து வீட்டு வரி, தொழில்வரி போன்று லொட்டு லொசுக்கு வரிகளை வசூலிக்கும், வரி வசூலிப்பாளர், அரசு ஆன்மிக வாரியத் தலைவர், கோவில் கடைகளை ஒப்பந்தம் எடுப்பவர், அமைதியான முறையில் கட்டப் பஞ்சாயத்து செய்பவர், திருமணம் மற்றும் வணிகம் சார்ந்த நீதிமன்றத்தில் பணி புரிபவர் என இவ்வகையான பணிகள்மூலம் நேரிடை மற்றும் உபரி வருமானம் பெறுவர்.
மிதுனத்தின் 3-ஆம் அதிபதி
சூரியன் + சனி
இவர்களின் வேலையில் கொஞ்சம் கெட்ட நாற்றம் கலந்திருக்கும். எனவே இவர்களின் மேற்கல்வி, கெமிஸ்ட்ரி போன்ற இனங்கள் சார்ந்து அமையும். அல்லது மயக்க மருத்துவவியல் கல்வி அல்லது வேலை அமையும். சிலர் மலையில் இருந்து விழுந்தவர்களை, அரசு ஆணைப்படி மீட்டுக்கொண்டு வருவர். காணாமல் போனவர்களை தேடும் வேலையில் அரசு பதவியில் இருப்பர். அரசு சார்ந்த இன்சூரன்ஸ் பணி செய்வர். சிலர், சில வயதானவர்களின், கடைசி உயில்களை எழுத உதவுவர். வேறு சிலர், கடைசி வாக்குமூலம் வாங்கும் அதிகாரியாக இருப்பர். திருட்டு, கொள்ளை நடந்த இடங்களில், கைரேகை எடுக்கும் மிக முக்கியமான பணியில் இருப்பர். ஏற்றுமதி- இறக்குமதி சார்ந்த தொழிலில் இடைத்தரகராக பணியாற்றுவர். கோவில்களிலுள்ள பணத்தை வைப்புநிதியாக மாற்ற உதவி பெறும் வேலை செய்வர்.
மிதுன 3-ஆம் அதிபதி சூரியன் + ராகு
இது சுபத்தன்மையுடன் இருப்பின், சிறைத்துறை அதிகாரியாக இருப்பார். அரசு சார்ந்த புகைப்படம் எடுப்பவராக பணிபுரிவார். பிறமொழிகளை கற்று, அதன் ஆசிரியராக பணிபுரிவார். இவர்கள் இங்கு மட்டுமல்ல, வெளிநாட்டிலும் சொத்து வாங்கி விற்கும் கமிஷன் வேலை செய்வர். வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு தாய் நாட்டில் சொத்து, வாங்க விற்க உதவிசெய்து உபரி வருமானம் பெறுவர். அரசுவகையில் லஞ்சம் வாங்க, கொடுக்க, ஒரு சாமர்த்தியமான இடைத்தரகராக செயல்படுவர். மேலும் இவர்கள், அரசு சார்ந்து, அரசின் கொள்கை, சாதனை விஷயங்களை மிகைப்படுத்தி பரப்பும் ஐ.டி. விங்க் சார்பாக வேலை செய்வர். அதுபோல் எதிர்கட்சிகளை மட்டம் தட்டி, அவர்களுக்கு எதிரான செய்திகளை எங்கும் பரப்புவர். ஆகக்கூடி உண்மைக்கு புறம்பான செய்திகளை அரசுக்கு ஆதரவாக மாற்றி வெளியிடுவதில் நிபுணராக இருப்பர். பணம் வசூலிப்பதிலும் கெட்டியான ஆளாக நிகழ்வர்.
மிதுன லக்னம் 3-ஆம் அதிபதி சூரியனும்+கேதுவும்
இவ்விணைவு சுபத்தன்மையுடன் இருப்பின் அரசு சார்பில் யோகா, தியானம் கற்றுத் தர முன்னெடுப்பு வேலைகளை செய்வர். ஓட்டமாக ஓடினால் உடம்புக்கு நல்லது என அரசு அதிகாரிகள், அரசாங்க மந்திரி என்று முதல் ஆளாக நின்று ஓடி காண்பிப்பர். உடல் ஊனமுற்றவர்களுக்கு, அரசு உதவி வாங்கி கொடுக்கும் சமூக செயற்பாட்டாளர்களாக சிறப்பு செய்வர். போலி பொருட்களை, போலி மருந்துகளை கண்டுபிடித்து அதனை அரசுக்கு சமர்பித்து, தண்டனை வாங்கி கொடுப்பதில் சமர்த்தராக இருப்பர். ஆக அரசு சார்ந்த அவலங்களை வெளிகொணர்ந்து புகழ் மற்றும் உபரி வருமானம் பெறுவர். மிதுன லக்ன 3-ஆம் அதிபதி சூரியன், உச்சம் பெற்றால், நிஜமாக இவர்கள் அரசியலில் குதித்து, முதன்மை பதவியை பெற்றுவிடுவர் என்பதில் சந்தேக மில்லை.
Follow Us