ருவூர் என்று தமிழ் இலக்கியத்திலும் வரலாற்றிலும் குறிப்பிடப்படும் இன்றைய கரூரில் தி.மு.க. என்கிற சமுதாய- அரசியல் இயக்கத்தின் முப்பெரும் விழா செப்டம்பர் 17-ஆம் நாள் நடைபெறுகிறது. கரூர் என்றால் நினைவுக்கு வருபவர் கருவூர்த் தேவர். தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் இராசராசனின் அருள்நெறி வழிகாட்டியாக விளங்கிய கருவூர்த் தேவர் ஒரு சித்தர். தமிழ் மரபில் சித்தர்கள் என்பவர்கள் சனா தனத்தை எதிர்த்து நின்று போராடியவர்கள். 

Advertisment

தமிழ் மெய்யியல், தமிழ்ப் பண்பாடு, தமிழர் வாழ்க்கை முறை இவற்றின் மீது சனாதனம், மனுஸ் மிருதி, சமஸ்கிருதம் என ஆரியப் படையெடுப்புகள் தொடர்ந்து நடைபெற்ற சூழல்களில், சித்தர்கள் ஒரு பண்பாட்டுப் போரினைத் தமிழை ஆயுதமாகக் கொண்டு நடத்தினார்கள். சனாதன-வர்ணாசிரம நெறிப்படி மனிதர்கள் பிறப்பிலேயே நான்கு வர்ணத்தினர்களில் ஒருவராகிவிடுகிறார்கள். இந்த நால்வருணத்திற்குள் வராத பஞ்சமர்களும் உண்டு என்று மனிதகுலத்தைப் பிளவுபடுத்துவதே ஆரியப் பண்பாடு. அதற்குமாறாக, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று மனிதர்கள் அனைவரையும் பிறப்பின் அடிப்படையில் பிரித்துப் பார்க்காமல், சமமாகக் கருதுவதே தமிழ் நெறி. திருவள்ளுவரில் தொடங்கி, சித்தர்கள் வழியே, வள்ளலார் வரை இந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது.  

சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே
-என்று வள்ளலார் தனது திரு வருட்பாவின் ஆறாம் திருமுறையில் பாடுகிறார். 

அவர் குறிப்பிடுகின்ற சாதி, மதம், சாத்திரம், கோத்திரம் உள்ளிட்ட அனைத்தும் தமிழ் மரபன்று. பழந்தமிழர்கள் தாங்கள் வாழும் நிலத்தின் தன்மைக்கேற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நால்வகை நன்னிலங்களையும், திரிந்த நிலத்தைப் பாலை என்றும் வழங்கி, அந்தந்த நிலத்திற்குரிய திணை, பொழுது, தெய்வம், உணவு, தொழில் என வரையறுத்து வாழ்ந்த சிறப் பிற்குரியவர்கள். பிறப்பினால் எவரையும் தமிழர்கள் பிரித்துப் பார்க்கவில்லை. அவரவர் நிலத்திற்கேற்ப செய்யும் தொழில்களால் சிறப்பு பெற்றார்கள். 

Advertisment

இதற்கு மாறாக, சனாதன-வர்ணா சிரம-வேதப் பண்பாடு மனிதர்களை சாதியாகப் பிரித்தது. உயர்ந்தோர், தாழ்ந்தோர், தீண்டப்படாதோர், காணப்படாதோர் என்றெல்லாம் பிறப்பின் அடிப்படையில் சாதியாக்கி பேதம் வளர்த்தது. 

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டிருக்குதோ?

-என்று கேட்கிறார் சிவவாக்கியர் எனும் சித்தர். மக்களைப் பேதப்படுத்தும் சனாதன-வர்ணாசிரமம் நோக்கிய கேள்விதான் இது. இறைச்சி, தோல், எலும்பு கொண்ட எல்லா மனித உயிர்களையும் சமமாக நடத்த வேண்டாமா என்பதுதான் இந்தக் கேள்வியின் உள்ளடக்கம். இந்த கலகக் குரல்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன. எனினும், ‘உனக்கு விதிக்கப்பட்டது இதுதான். இது கடவுள் தீர்ப்பு. அதன்படிதான் நீ வாழ வேண்டும். அது உன் தலையெழுத்து’ என மக்களை பிளவுபடுத்துவதற்கு கடவுளைப் பயன்படுத்தினார்கள் சனாதனிகள். 

Advertisment

அந்த சனாதனிகளின் அதிகாரம் அரசர் களின் தர்பாரையும் ஆட்டிவைத்தது. தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் மங்கல வாழ்த்து பாடலில் கண்ணகி-கோவலன் திருமண நிகழ்வைப் பற்றிக் குறிப்பிடும்போது, 

dravidam1

மாமுது பார்ப்பான் மறைவழிக் காட்டிடத்
தீவலஞ் செய்வது காண்பார்கண் நோன்பென்னை

-என்று குறிப்பிடப்படுவதன் மூலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே சமய வழியிலான வேதங்களை முன்னிறுத்தி புரோகிதம் செய்யும் வழக்கம்,  வசதியுடன் வாழ்ந்தவர்களிடமும் இருந்ததை  அறிய முடிகிறது. சமணத்திற்கும் சைவத்திற்குமான போட்டி, சைவத்திற்கும் வைணவத்திற்குமான போட்டி என தமிழ்ப் பண்பாட்டு திசைவழியே கடந்த காலத்தைப் பார்க்கும்போது பல்லவர்கள் ஆட்சிக்காலம், பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலம், பின்னர் வந்த நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள் ஆகியோரின் ஆட்சிகளில் சனாதன சக்திகள் அரசனின் செங்கோலைவிடவும் அதிகாரம் கொண்டவையாக இருந்துள்ளன. 

ஆட்சியாளர்களின் தலைநகரங்களைவிடவும் சதுர்வேதி மங்கலங்களும் பார்ப்பனச்சேரிகளும் வலிமைபெற்றிருந்தன. அதனால்தான் சித்தர்களும் வள்ளலாரும் எழுப்பிய கலகக் குரல்கள் அதிர்வை ஏற்படுத்தினாலும், உரிய விளைவை உண்டாக்க முடியவில்லை. இந்தியா விடுதலை பெற்று ஜனநாயகக் காற்று வீசத் தொடங்கியபோது, கலகக்குரல் என்பது கழகக் குரலாக மாறியது. 

திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் அதன் தொடர்ச்சியாக பல அரசியல் கழகங்கள் தொடர்ந்தாலும், தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனும் நீதிக்கட்சிதான் பிரிட்டிஷ் இந்தியா ஆட்சியின்போதே சனாதன- வர்ணாசிரமத்திற்கு எதிராக, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கலகக்குரலை உயர்த்திய அரசியல் இயக்கமாக மலர்ந்தது. 1920ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. மிகக் குறைவான அதிகாரம்தான் அந்த அரசுக்கு இருந்தது என்றாலும், நிறைவான பல செயல்களை மேற்கொண்டது. இன்னார்தான் படிக்கவேண்டும். இன்னார் மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்கிற நிலைமையை மாற்றி, எல்லா சமுதாயத்தினருக்குமான கல்வியை உறுதி செய்தது. வேலைவாய்ப்பில் அனைத்து சமூகத்திற்கும் இடஒதுக்கீடு வழங்கும் வகுப்புவாரி உரிமையை நிலைநாட்டியது. 

dravidam2

நான்கு வர்ணத்திற்கு அப்பால், ஒதுக்கப்பட்டிருந்த மனிதர்களை கடவுளின் குழந்தை என்ற அர்த்தத்தில் ‘ஹரிஜன்’ என்ற பெயரை, கருணையின் அடிப்படையில் காந்தியடிகள் சூட்டிய காலத்தில், நீதிக்கட்சி தன் அரசாணையின் மூலமாக, அவர்கள்தான் இந்த மண்ணின் பூர்வகுடிகள் என்ற உரிமையின் அடிப்படையில் அவர்களை ‘ஆதி திராவிடர்கள்’ என்று அழைக்கவேண்டும் என்று ஆணையிட்டு, இழிவான சொற்களில் அழைப்பதற்கு தடை செய்தது. கோயில்களில் வழிபாட்டு உரிமையை உறுதி செய்வதற்கான அடிப்படை செயலாக அதன் சொத்துகளை நிர்வாகிக்கும் இந்து அறநிலையச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பெண் என்பவர் எல்லா காலத்திலும் குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு கட்டுப்பட்டவர் என்று யுகம் யுகமாக திணிக்கப்பட்டிருந்த கருத்துக்கு மாறாக, பெண்களுக்கு வாக்குரிமையும், சட்டமன்றத்தில் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தையும் அளித்தது. 

நீதிக்கட்சி இவற்றை நிறைவேற்றிக் கொண்டிருந்த காலத்தில், காங்கிரசில் இந்தக் கருத்துகளை வலியுறுத்தி வந்த பெரியார் ஈ.வெ.ரா, காங்கிரஸ் சனாதனிகளின் பிற்போக்குத்தனத்தை உணர்ந்து  அங்கிருந்து வெளியேறி, 1925-ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைந்து 1944ஆம் ஆண்டு திராவிடர் கழகம் என மாற்றம்பெற்றது. பெரியாரிடம் பெற்ற பயிற்சியின் மூலம் 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகம் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டது. 

தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டை மீட்டெடுக்கவும் இன-மொழி உரிமைகளை நிலைநாட்டவும் சனாதன-வர்ணாசிரம ஆரியப் பண்பாட்டிற்கு எதிரான திராவிடக் கோட்பாட்டை முன்னிறுத்தி திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக்கழகமும் சமுதாய-அரசியல் தளங்களில் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டன. இரண்டு இயக்கங்களின் சமரசமற்ற களச் செயல்பாடுகளால் அதன் தலைவர்களும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டனர். தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனாலும், கலகக் குரலை கழகங்கள் நிறுத்தவில்லை. 

பெரும்பாலான மக்கள் தங்கள் இடுப்பில் கட்டியிருந்த துண்டு, தோளுக்கு மாறியது. 

அங்கவஸ்திரம் மட்டுமல்ல, கைத்தறித் துண்டும் தோளில் கம்பீரமாக இருக்கும் என்ற மாற்றத்தை கழகங்கள் உருவாக்கின. கக்கத்தில் துண்டை வைத்துக்கொண்டு குனிந்து பேசவேண்டிய நிலைமை மாறி, தோளில் துண்டுடன் நிமிர்ந்து நடந்தனர். 

யுகம் யுகமாக திணிக்கப்பட்ட அடிமைத்தனம் உடைக்கப்பட்டது. ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளை எளிய மக்களும் கேட்கத் தொடங்கினர். 

dravidam3

கம்பராமாயணம், பெரியபுராணம் இவையே தமிழ் இலக்கியங்கள் என்று நினைத்திருந்த புலவர் கூட்டமும் திருக்குறளை-சங்க இலக்கியத்தை- சிலப்பதிகாரத்தை சொற்பொழிவுத் தலைப்பாக்கினர். புலவர் குழந்தை இராவண காவியத்தை இயற்றினார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்ற நாடகத்தை எழுதினார். பேரறிஞர் அண்ணா, ‘நீதிதேவன் மயக்கம்’ எனும் தலைப்பில் இராமாயணக் கதாபாத்திரங்களை நீதிமன்றக் கூண்டில் ஏற்றி விசாரித்தார். பராசக்தி பகுத்தறிவு பேசுவார் என்பதை திரையில் முழங்கிடச் செய்தார் கலைஞர் மு.கருணாநிதி. 

புரோகிதம்-மந்திரம்- சமஸ்கிருத சடங்குகளைத் தவிர்த்து சுயமரியாதை திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. நமஸ்காரம் என்பது தொலைந்து போய், வணக்கம் என்று சொல்வதே வழக்கமானது. விவாக சுபமுகூர்த்தம் என்ற வடமொழிப் புழக்கம் நீக்கப்பட்டு, மணவிழா என இனிய தமிழில் எளியவர்களும் அழைப்பிதழ் அச்சிட்டனர். ஸ்ரீமான், சிரஞ்சீவி என்கிற அடைமொழிகளைத் தவிர்த்து திரு, மாண்புமிகு, திருநிறைச் செல்வி எனத் தமிழ் மாண்பு பெற்றது. தமிழ்ப் பண்பாட்டுத் திருவிழாவாகவும் தமிழரின் திருநாளாகவும் தை முதல் நாளில் பொங்கல் விழா எங்கெங்கும் கொண்டாடப்பட்டது. கவிதைக்ள் குலுங்கும் பொங்கல் வாழ்த்து அட்டைகள் குடிசை வீடுகளையும் அழகாக்கின. 

கவியரங்கம், பட்டிமன்றம், வீர விளையாட்டுகள், பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் என எத்திசையும் புகழ் மணக்கும் தமிழரின் பண்பாடு மீட்டெடுக்கப்பட்டது. ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம்தானே என்ற கேள்வி எழுந்தது. அதன் விளைவாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராக கருவறைக்குள் செல்லும் புரட்சி நிகழ்ந்தது. கடவுளர்கள் இனிய தமிழில் அர்ச்சனைகளைக் கேட்டு காது குளிர்ந்தனர். பெண் ஓதுவார்கள் தேவாரம், திருவாசகத்தை கோயிலில் பாடும் வழக்கம் வந்தது. 

கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என சனாதனம் அடுக்கிவைத்த யுகங்களில் நீடித்த ஆதிக்கமும் அடிமைத்தனமும் ஒரு நூற்றாண்டு கால திராவிட இயக்கத்தால் தகர்க்கப்பட்டு, புதுயுகம் பிறந்தது. தமிழ்ப் பண்பாடு, கலை, மொழி, இன உரிமைகள் பெருமளவில் மீண்டன. இன்னும் பல உரிமைகளுக்கான போராட்டங்கள் தொடர்கின்றன. 

கருவூர்த் தேவர் எனும் கரூரின் சித்தர் உள்ளிட்ட பலரும் முன்னெடுத்த கலகக் குரலை காலத்திற்கேற்றவாறு தொடர்ந்த கழகங்களின் வெற்றிப்பயணத்தின் அடையாளமாக கரூரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும்விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. 2025 என்பது சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு. திராவிடர் கழகத்தின் முத்து விழா நிறைவு. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா நிறைவு. தமிழ்ப் பண்பாட்டை மீட்டெடுத்து நிலைநாட்டும் வகையில் நிறைவான பல பணிகளை நிகழ்த்தியிருக்கிறது திராவிட இயக்கம்.