அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
-என்று நாடாளும் தலைவர்களுக்கான பண்பை வரையறுக்கிறார் வள்ளுவர்.
இதன் பொருள், துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் நாடாளுபவர்க்கான தகுதிகள்.
அரசியல் எதிரிகளுக்கு அஞ்சாமலும், தன் அரசுத் திட்டங்களில் இரக்க சிந்தனை வெளிப்படும் வகையிலும், அறிவாற்றல் துலங்கும்படி எதிரிகளுக்கு பதில் சொல்வதிலும், தனது உயர்ந்த குறிக்கோளை எட்டும் வகையில், தமிழ்ச் சமூகத்தின் மாண்பையும் மரியாதையையும் மீட்டெடுப்பதிலும், வள்ளுவன் சொல்லும் தகுதிகளையுடைய முதல்வராக தளபதி ஸ்டாலின் தன்னை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்.
அவரது உயர்ந்த குறிக்கோளை அடையாளப்படுத்தும் செயல்களில் ஒன்றாகத்தான் தற்போது, பழம்பெருமை வாய்ந்த சென்னை விக்டோரியா ஹால் புனரமைக்கப்பட்டிருக்கிறது.
முதல்வர் ஸ்டாலினுக்கும் இங்கிலாந்தின் பேரரசியாகத் திகழ்ந்த விக்டோரியா அம்மையாருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இருப்பினும் வரலாற்றை வணங்கவேண்டும். தொன்மையைப் போற்றவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான், விக்டோரியா ஹாலின் புனரமைப்பு.
ராணி விக்டோரியாவின் பொன் விழாவை நினைவுகூரும் வகையில், ராபர்ட் சிசோல்ம் என்பவரால் 1887-ல் இந்த அரங்கம் உருவாக்கப்பட்டது. இதை உருவாக்க அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் தொடங்கி, நம் புதுக்கோட்டை மன்னர் வரை நிதிகொடுத்திருக்கிறார்கள். மேலும், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் முத்துசாமி, ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, எட்டையபுரம் ஜமீன்தார் உள்ளிட்ட பெருமக்களும் இதை உருவாக்க, தாராளம் காட்டியிருக்கிறார்கள்.
இந்தக் கட்டடம் இந்திய- முகலாயக் கட்டடக் கலைகளை இணைத்த இந்தோ-சரெசெனிக் பாணியில் உருவாக்கப் பட்டதாகும்.
இந்த விக்டோரியா அரங்கில் விவேகானந்தர், மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட பெருமக்கள் கூட்டங்களை நடத்தியிருக்கி றார்கள்.
இப்படி பல்வேறு வரலாற்று நினைவுகளை அடைகாத்துக் கொண்டிருக்கும் விக்டோரியா அரங்கம் சிதிலமாகிவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் இதை அதன் தொன்மை மாறாமல் இப்போதைய அரசு 32.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்திருக்கிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்மையால் சிதிலமடைந்த இந்த ஹால், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32.62 கோடி செலவில் அதன் பழமையான அமைப்பை மாற்றாமல், நவீன வசதிகளுடன் நிலநடுக்கம் தாங்கும் வகையில் சீரமைக்கப்பட்டது. 2025 டிசம்பர் 23-இல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்த இந்த அரங்கம், டிசம்பர் 26 முதல் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
திறப்பு விழாவில் விக்டோரியா பொது அரங்கின் வரலாற்றைச் சொல்லும் ஆவணப் படம், கவிதா ராம் இலியாஸ் ஐ.ஏ.எஸ். அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அனுஷம் குழுவினரின் நாட்டிய நிகழ்வு இரண்டுமே பார்வையாளர்களை வியக்கவைத்தது. நடனக் குழுவினர், பார்வையாளர்கள் கண் முன்னே வரலாற்றை மீள நிகழ்த்திக்காட்டினர். அதேபோல சிதம்பரத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியான வர்ஷா, விக்டோரியா ஹாலின் வரலாற்றைச் சொல்லச் சொல்ல, பின்னணியில் எல்.இ.டி. திரையில் அந்தந்த காலகட்ட நிகழ்வுகளையும் காட்டியது பொருத்தமாக இருந்தது.
டிசம்பர் 20-ஆம் தேதி தூத்துக்குடி சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், நெல்லை ரெட்டியார்பட்டி சாலையிலுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்துவைத்துப் பேசினார்.
அப்போது, "இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ்நிலத்திலிருந்து எழுதப்படவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்திவருகிறேன். இது வெறும் பெருமிதமல்ல, அறிவியல் உண்மை. கீழடி அருங்காட்சியகத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் நாகரிகத்தை ஆவணப்படுத்தும் பெரிய அடிவைப்பு பொருநை அருங்காட்சியகம். சிவகளை அகழாய்வில் கிடைத்த இரும்புப் பொருட்கள் 5,300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்துள்ளது. இதை நாம் சொல்லவில்லை. சர்வதேச ஆய்வுகள் சொல்லியிருக்கின்றன. இதை ஒன்றிய அரசு அங்கீகரிக்க மறுக்கிறது. தமிழர்களின் அறிவியல், விவசாய அறிவு போன்றவை போற்றத்தக்கவை. இதை உலக அரங்குக்கு எடுத்துச் செல்லவேண்டும்'' என்றார்,
2023-ல் தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு ரூ 67 கோடி செலவில் இரண்டு ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்பட்டு எழுந்துநிற்கும் இந்த அருங்காட்சியகம், தமிழர்களின் பெருமையையும் கூடவே முதல்வரின் செயல்வேகத்தையும், அக்கறையையும் பேசி நிற்கிறது.
மோடியின் இரட்டை வேஷம்!
தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து
-இந்தக் குறளுக்கு ஏற்ப செயல்பட்டிருக்கிறாரா பிரதமர்?
மாறாக, குற்றங்களைச் செய்பவர்களைத் தண்டிக்காமல், கண்டுகொள்ளாமல், கிறிஸ்துமஸ் விழாவிலும் கலந்துகொண்டு இரட்டை வேஷம் போட்டிருகிறார்.
கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, இந்தியப் பிரதமர் டெல்லியிலுள்ள கதீட்ரல் சர்ச் ஆப் ரிடெம்ப்ஷன் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்து கொண்டார், அங்கு பிரதமருக்காக கிறித்துவர்கள் ஒரு சிறப்புப் பிரார்த்தனையையும் மேற்கொண்டனர்.
அதேசமயம் நடந்துமுடிந்த கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கிறித்துவர்கள்மீது இந்துத்துவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கிறது. வழக்கமாக, இந்துத் துவர்களின் இலக்காக முஸ்லிம்கள் இருந்தது இந்த கிறிஸ்துமஸ் தினத் தில் மாறியிருக்கிறது.
புல்டோசர் அரசியல் நடக்கும் உத்தரப்பிரதேசத்தில், கிறிஸ்துமஸ் தினத்தை பின்னுக்குத் தள்ள அன்றைய தினத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவாக நல்லாட்சி தினம் என அறிவித்து அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறையை ரத்து செய்திருக்கிறது யோகி அரசு. அன்றைக்கு மாணவர்களும், ஆசிரியர்களும் தவறாமல் ஆஜராகவேண்டுமென கட்டாயப் படுத்தியிருக்கிறது. இது மறைமுகமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடைசெய்யும் திட்டம் என கிறிஸ்துவ அமைப்புகள் விமர்சனம் செய்திருக் கின்றன.
இதே உ.பி.யின் ஜபல்பூரில் பார்வையற்ற கிறித்தவ பெண்ணைக் கூட விடாமல், பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் அஞ்சு பார்கவி தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியதோடு நிறுத்தாமல், பார்வையற்ற இந்த பெண், அடுத்த பிறவியிலும் பார்வையற்றவராகத்தான் பிறப்பாரென்று சாபம் விடுவதுபோல் தரக்குறைவாகப் பேச, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவேண்டிய போலீசார், அஞ்சு பார்கவியை கைதுசெய்வதை விடுத்து அவரை சமாதானப்படுத்தி தடுக்கிறார்கள்.
ராஜஸ்தானிலோ தங்களது வழக்கமான மதமாற்ற முயற்சி எனும் வியூகத்தை இந்துத்வ அமைப்புகள் கையிலெடுத்துள்ளன. ராஜஸ்தானின் துங்கர்பூர் மாவட்டத் திலுள்ள பிச்சிவாரா கிராமத்தில், செயின்ட் ஜோசப் கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் நுழைந்த இந்துத்வ கும்பல், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாகக் கூறி, அங்குள்ள பாதிரியார்கள், கிறிஸ்தவ மக்கள்மீது வெளிப் படையாகத் தாக்குதல் நடத்தியது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரிலுள்ள உத்தரப் பிரதேச சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான ஹோட்டலில் நடக்கவிருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியை, இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாகக் கூறி ரகளை செய்ததில் இந்நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியிலோ, சாண்டா க்ளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பிகளை அணிந்தபடி அரட்டையடித்துக்கொண்டிருந்த கிறித்தவ இளம்பெண்களிடம், மதமாற்றத்தில் ஈடுபடுவதாகக்கூறி பஜ்ரங்தள் கும்பல் வம்புக்கிழுத்ததோடு, அப்பெண்களை அங்கிருந்து விரட்டியடித்தது.
சமீபகாலமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையும், கிறிஸ்தவர்கள் மீதான வழக்குப் பதிவுகளும் அதிகரித்துள்ளன. இதையெதிர்த்து கிறிஸ்தவ அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்த நிலையில், கிறிஸ்தவ அமைப்புகளுக்கு எதிராக இந்துத்வ அமைப்புகளைச் சேர்ந்த சிலர், கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாளில் சத்தீஸ்கர் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்தது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்த ஒடிஷா மாநிலத்தின் பூரி நகரில், சாலையோரத்தில் கிறிஸ்துமஸ் குல்லா, முகமூடிகளை விற்பனை செய்த வியாபாரியை, அச்சாலை யில் பயணித்த இந்துத்வக் கும்பல்,
"இங்கெல்லாம் கிறிஸ்தவ பொருட்களை விற்கக்கூடாது!" என விரட்டியடித்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது..
உத்தரபிரதேசத்தின் காஜியா பாத்தில் கிறிஸ்தவ போதகர் ராஜு சதாசிவத்தையும் அவரது மனைவியையும், சத்யனிஷ்ட் ஆர்யா என்ற இந்துத்வ ரவுடி, கிறிஸ்தவ மதம் குறித்து இழிவாகப் பேசி மிரட்டிய வீடியோ, சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவி பலரால் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுமட்டுமல்ல இன்னும் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், கேரளம் போன்ற மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் கேரள கம்யூனிஸ்ட் கட்சி, சம்பந்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ரவுடிகளை தைரியமாக கைது செய்துள்ளது.
ஆக, நாட்டின் பிரதமர் கிறித்துமஸ் நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவிக்க, மறுபுறம் நாடெங்கும் கிறித்துவ தேவாலயங்கள், கிறித்துவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதும், அதற்கெதிராக பிரதமரோ, ஒன்றிய அரசில் முதன்மையானவர்களோ குரல் கொடுக்காததும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருக் கிறது.
இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வதை விடவும், அதனை இந்துத்துவ நாடு என்னும் முத்திரைக்கு ஏற்றவாறு மாற்றவேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கைக்கு ஏற்றவாறு செயல்படுவதுதான் பா.ஜ.க.வின் முன்னுரிமையாய் இருக்கிறதோ என்ற எண்ணம் எழுகிறது.
ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி போன்ற நாட்களை மட்டுமே தங்களின் இந்துத்வ சில்மிஷங்களுக்கு இலக்காய் வைத்திருந்த இந்துத்துவர்கள், இப்போது கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பிற மத பண்டிகை நாட்களுக் கும் தங்கள் சில்மிஷங்களை நீட்டிப்பு செய்துள்ளனர் என்றே எண்ணத் தோன்றுகிறது.
இதை முளையிலேயே களைந்தெடுக்காவிட்டால், ஆபத்தான மதக்கலவர வைரஸை வளர்த்தெடுத்த பிரதமர் என்றே மோடியை வரலாறு பதிவுசெய்யும்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/07/editorial-2026-01-07-17-00-11.jpg)