ஹோட்டலில்  இரண்டு அமெரிக்கர்கள் மட்டுமே இருந்தார்கள்.

தங்களுடைய அறைக்கு வரும்போதும், அறையிலிருந்து போகும்போதும் படிகளில் அவர்கள் யாரையும் பார்க்கவில்லை.

Advertisment

அவர்களின் அறை கடலைப் பார்த்தவாறு, இரண்டாவது தளத்தில் இருந்தது. அது பொதுத்தோட்டத்தையும் போர் நினைவுச் சின்னத்தையும் கூட பார்த்தவாறு இருந்தது. பொதுத்தோட்டத்தில் பெரிய பனை மரங்களும் பச்சை வர்ண பெஞ்சுகளும் இருந்தன. நல்ல தட்பவெப்பம் இருக்கும்போது, எப்போதும் ஒரு ஓவியர் தன்  படம் வரையும் சட்டகத்துடன்  இருப்பார்.பனை மரங்கள் வளரக்கூடிய விதமும், தோட்டங்களையும் கடலையும் பார்த்துக் கொண்டிருக்கும் பிரகாசமான வர்ணங்களைக் கொண்டிருக்கும் ஹோட்டல்களும் கலைஞர்களுக்குப் பிடிக்கும். போர் நினைவுச் சின்னத்தைப் பார்ப்பதற்காக வெகுதூரத்திலிருந்து இத்தாலியர்கள் வந்திருந்தார்கள்.

Advertisment

வெண்கலத்தாலான அது மழையில் ஒளிர்ந்தது. மழை பெய்து கொண்டிருந்தது.

பனை மரங்களிலிருந்து மழை சொட்டிக் கொண்டிருந்தது.

சரளைக் கற்களாலான பாதைகளில் இருந்த தேக்கத்தில் நீர் நின்றிருந்தது.

மழையில் கடல் நீண்ட தூரம் முன்னோக்கி வந்து, கரையிலிருந்து நழுவி மீண்டும் சென்றது. மழையில் அது மேல் நோக்கி வருவதும் திரும்பச் செல்வதுமாக இருந்தது. போர் நினைவுச் சின்னத்திற்கு அருகிலிருந்த சதுக்கத்திலிருந்து மோட்டார் கார்கள் சென்றுவிட்டிருந்தன.

கஃபேயின் கதவிற்கு அருகிலிருந்த இடத்தில்  ஒரு வெயிட்டர் காலியான சதுக்கத்தைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தார்.

Advertisment

அமெரிக்க மனைவி சாளரத்திற்கு அருகில் நின்றவாறு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவர்களின் சாளரத்திற்குக் கீழே வலது பக்கத்தில் மழை சொட்டிக் கொண்டிருந்த பச்சை வர்ண மேஜைகளில் ஒன்றிற்கு அடியில் ஒரு பூனை பதுங்கியிருந்தது.

மழையில் நனையாமல் இருப்பதற்கான முயற்சியை அது செய்து கொண்டிருந்தது.

"நான் கீழே சென்று, பூனையைப் பிடிக்கிறேன்.''- அமெரிக்க மனைவி கூறினாள்.

 "நான் அதைச் செய்கிறேன்.''- படுக்கையில் இருந்தவாறு அவளின் கணவர் கூறினார்.

 "வேண்டாம். நானே அதைப் பிடிக்கிறேன். ஒரு மேஜைக்கு அடியில் அந்த அப்பிராணி பூனை நனையாமல் இருப்பதற்கு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது.''

கணவர் வாசிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

படுக்கையின் கால் பகுதியில் இரண்டு தலையணைகளை வைத்தவாறு அவர் படுத்திருந்தார்.

"மழையில் நனைஞ்சிடாதே!''- அவர் கூறினார்.

மனைவி கீழே சென்றாள்.

அலுவலகத்தைக் கடந்து அவள் செல்லும்போது, ஹோட்டலின் உரிமையாளர் எழுந்து நின்று அவளுக்கு முன்னால் வளைந்தார்.

அலுவலகத்தின் தூரத்து எல்லையில் அவருடைய மேஜை இருந்தது. ஒரு வயதான மனிதராக இருந்த அவர் மிகவும் உயரமாக இருந்தார்.

"மழை பெய்து கொண்டிருக்கிறது''- மனைவி கூறினாள்.

அவளுக்கு ஹோட்டலின் உரிமையாளரைப் பிடித்திருந்தது.

"ஆமாம்... ஆமாம்... மேடம். காலநிலை மிகவும் மோசமாக இருக்கு.''

அவர் இருண்ட அறையின் தூரத்து மூலையில் தன் மேஜைக்குப் பின்னால் நின்றிருந்தார்.

அவரை மனைவிக்குப் பிடித்திருந்தது.

எப்படிப்பட்ட புகார்களையும் மிகவும் அக்கறையுடன் அவர் கேட்டுக் கொண்ட விதம் அவளுக்குப் பிடித்திருந்தது. அவருடைய கவுரவமான நடத்தை அவளுக்குப் பிடித்திருந்தது.

அவளுக்கு அவர் சேவை செய்ய விரும்பிய விதம் அவளுக்குப் பிடித்திருந்தது.

ஹோட்டலின் உரிமையாளரான அவர் நடந்துகொண்ட முறை அவளுக்குப் பிடித்திருந்தது.

அவருடைய வயதான, கனமான முகமும் பெரிய கைகளும் அவளுக்குப் பிடித்திருந்தன.

அவரை விரும்பியவாறு, அவள் கதவைத் திறந்து வெளியே பார்த்தாள்.

கடுமையாக மழை பெய்துகொண்டிருந்தது.

கஃபேக்குச் செல்லும் காலி சதுக்கத்தை ஒரு ரப்பராலான... கையற்ற மேலாடையை அணிந்திருந்த ஒரு மனிதர் கடந்து சென்று கொண்டிருந்தார்.

வலது பக்கத்தில்தான் பூனை இருக்கவேண்டும்.

குகைகளுக்குக் கீழே அது சென்றிருக்கலாம்.

கதவிற்கு அருகில் அவள் நின்றுகொண்டிருக்க, அவளுக்குப் பின்னால் ஒரு குடை விரிந்தது.

அவர்களின் அறையைப் பார்த்துக் கொண்ட பணிப்பெண் அவள்.

"நீங்கள் நனைந்துவிடக்கூடாது''- அவள் புன்னகைத்துக்கொண்டே இத்தாலிய மொழியில் பேசினாள்.

ஒருவேளை அவளை ஹோட்டலின் உரிமையாளர் அனுப்பியிருக்க வேண்டும்.

அவளுக்கு மேலே பணிப்பெண் குடையைப் பிடித்திருக்க, தங்களின் சாளரத்திற்குக் கீழே வரும்வரை சரளைக்கற்கள் பதிக்கப் பட்டிருந்த பாதையில் அவள் நடந்தாள். அங்கிருந்த மேஜை, மழை யால் பிரகாசமான பச்சை நிறத்திற்கு கழுவப்பட்டிருந்தது. ஆனால், பூனை போய்விட்டது. அவள் உடனடியாக ஏமாற்றமடைந்தாள்.

பணிப்பெண் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அங்கே என்ன பாக்குறீங்க, மேடம்?''

"அங்கு ஒரு பூனை இருந்தது.''

"ஒரு பூனையா?''

"ஆமாம்.... நான் பார்த்தேன்.''

"ஒரு பூனையா?''- பணிப்பெண் சிரித்தாள்: "மழையில் ஒரு பூனையா?''

"ஆமாம்....''- அவள் கூறினாள்:

"மேஜைக்கு அடியில்... ஓ... நான் அதை மிகவும் விரும்பினேன்.... நான் ஒரு பூனையை விரும்பினேன்.''

அவள் ஆங்கிலத்தில் பேச, பணிப்பெண்ணின் முகம் இறுகியது.

"வாங்க, மேடம்....''- அவள் கூறினாள்: "நாம் மீண்டும் உள்ளே போகணும். நீங்கள் நனைஞ்சிடுவீங்க...''

"நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.''-

அமெரிக்க பெண் கூறினாள்.

சரளைக்கற்கள் பதிக்கப்பட்டிருந்த பாதையின் வழியாக நடந்த அவர்கள் கதவிற்குள் நுழைந்தார்கள்.

குடையை மடக்குவதற்காக பணிப்பெண் வெளியிலேயே நின்றுவிட்டாள்.

அலுவலகத்தை அமெரிக்க பெண் கடக்கும்போது, ஹோட்டலின் உரிமையாளர் தன் மேஜைக்கு அருகில் குனிந்தார்.

பெண்ணின் மனதிற்குள் ஏதோ சிறிய கனம் உண்டானது.

ஹோட்டலின் உரிமையாளர் அவளை மிகவும் சிறியவளாக, அதே நேரத்தில் உண்மையிலேயே முக்கியத்துவம் உள்ளவளாக அவள் உணரும்படி செய்தார். மிகவும் முக்கியமானவளாக ஒரு நொடி நேரம் அவள் உணர்ந்தாள். அவள் மேலே படிகளில் ஏறினாள். அறையின் கதவை அவள் திறந்தாள்.

படுக்கையில் படுத்திருந்த ஜார்ஜ் வாசித்துக் கொண்டிருந்தார்.

"உனக்கு பூனை கிடைத்ததா?''- புத்தகத்தைக் கீழே வைத்து விட்டு, அவர் கேட்டார்.

"அது போய்விட்டது.''

"அது எங்கு போயிருக்கும் என்பதே ஆச்சரியமான விஷயம்தான்''- வாசிப்பதிலிருந்து தன் கண்களை விலக்கியவாறு அவர் கூறினார்.

அவள் படுக்கையின் மீது அமர்ந்தாள்.

"நான் அதை மிகவும் விரும்பினேன்.''- அவள் கூறினாள்:

"அதை ஏன் அந்த அளவிற்கு விரும்பினேன் என்று எனக்கே தெரியவில்லை. அந்த அப்பிராணி பூனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

வெளியே பெய்துகொண்டிருந்த மழையில் ஒரு அப்பிராணி பூனை இருப்பது என்பது தமாஷான ஒரு விஷயமல்ல.''

ஜார்ஜ் மீண்டும் வாசிப்பதில் மூழ்கினார்.

ஒப்பனை மேஜையிலிருந்த கண்ணாடிக்கு முன்னால் சென்று அமர்ந்து, அவள் தன் கைக் கண்ணாடியால் தன்னைப் பார்த்தாள். தன் உருவத்தை ஒரு பக்கமாக பார்த்த அவள், பின்னர் இன்னொரு பக்கத்தைப் பார்த்தாள். பின்னர் தன் தலையின் பிற்பகுதியையும் தன் கழுத்தையும் ஆராய்ந்தாள்.

"என் தலைமுடியை மேலும் அதிகமாக நான் வளர்க்கிறேன் என்றால், அது ஒரு நல்ல திட்டம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?''- தன் உருவத்தை மீண்டும் பார்த்துக்கொண்டே அவள் கேட்டாள்.

ஒரு பையனின் தலையைப் போல வாரப்பட்டிருந்த அவளுடைய கழுத்தின் பிற்பகுதியை அவர் தலையை உயர்த்திப் பார்த்தார்.

"அது எப்படி இருக்கிறதோ, அதுதான் எனக்கு பிடித்திருக்கிறது.''

"அதனால் நான் மிகவும் களைத்துப் போய்விட்டேன்.''- அவள் கூறினாள்: "ஒரு பையனைப் போல தோன்றுவதைப் பார்த்து, நானே வெறுத்துட்டேன்.''

படுக்கையில் தன் இடத்தை ஜார்ஜ் மாற்றினார். அவள் பேச ஆரம்பித்ததால், அவர் அவளிடமிருந்து பார்வையை வேறு பக்கம் திருப்பவில்லை.

"நீ மிகவும் அழகாகத் தோன்றுகிறாய்''- அவர் கூறினார்.

மேஜையின் மீது கண்ணாடியை வைத்துவிட்டு, சாளரத்திற்கு அருகில் சென்று, அவள் வெளியே பார்த்தாள். வெளியே இருட்டாக இருந்தது.

"என் தலைமுடியை இறுக்கமாக பின்னால் இழுத்துவிட்டு, மென்மையாக வாரி, பின்னால் ஒரு பெரிய முடிச்சைப் போட்டுவிடவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.''- அவள் கூறினாள்: "என் மடியில் ஒரு பூனைக்குட்டி அமர்ந்து, நான் அதைத் தொடும்போது, அது சத்தம் உண்டாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.''

"அப்படியா?''- படுக்கையில் இருந்தவாறு ஜார்ஜ் கூறினார்.

"என் சொந்த வெள்ளிக் கரண்டியால் ஒரு மேஜையில் அமர்ந்து நான் சாப்பிட விரும்புகிறேன். நான் மெழுகுவர்த்திகளை விரும்புகிறேன். அது வசந்த காலமாக இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு கண்ணாடிக்கு முன்னால் அமர்ந்து, என் தலைமுடியை வார வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு பூனைக்குட்டியை நான் விரும்புகிறேன். சில புதிய ஆடைகளை நான் விரும்புகிறேன்."

"ஓ... வாயை மூடி விட்டு, எதையாவது வாசி''- ஜார்ஜ் கூறினார். அவர் மீண்டும் வாசிப்பதில் மூழ்கினார்.

அவரின் மனைவி சாளரத்திற்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.

இப்போது மிகவும் இருட்டாக இருந்தது. பனை மரங்களில் இப்போதும் மழை பெய்துகொண்டிருந்தது.

"எது எப்படியோ.... எனக்கு ஒரு பூனை வேண்டும்''- அவள் கூறினாள்:  "எனக்கு ஒரு பூனை வேண்டும்... இப்போது எனக்கு ஒரு பூனை வேண்டும்.

எனக்கு நீளமான கூந்தல் இல்லையென்றால்... 

அல்லது... எந்த கேளிக்கையும் இல்லையென்றால்.... நான் ஒரு பூனையை வைத்துக்கொள்கிறேன்.''

ஜார்ஜ் கவனிக்கவே இல்லை. தன் புத்தகத்தை அவர் வாசித்துக் கொண்டிருந்தார்.

அவரின் மனைவி சாளரத்திற்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அங்கே... சதுக்கத்தில் வெளிச்சம் இருந்தது.

யாரோ கதவைத் தட்டினார்கள்.

"அவந்தி....''- ஜார்ஜ் கூறினார். அவர் தன் புத்தகத்திலிருந்து மேலே பார்த்தார்.

கதவிற்கு அருகில் பணிப்பெண் நின்றிருந்தாள். ஒரு பெரிய ஆமை ஓட்டைப் போன்றிருந்த பூனையைத் தன்னுடன் சேர்த்து வைத்தவாறு அவள் இறுகப் பிடித்திருந்தாள். அது அவளின் உடலிலிருந்து கீழ்நோக்கி தொங்கிக் கொண்டிருந்தது.

"என்னை மன்னிக்கணும்....''- அவள் கூறினாள்:

"இதை மேடத்திடம் கொண்டுவந்து கொடுக்குமாறு ஹோட்டலின் உரிமையாளர் என்னைக் கேட்டுக்கொண்டார்.''

*****

மொழி பெயர்ப்பாளரின் உரை

ணக்கம்.

இந்த மாத "இனிய உதய'த்திற்காக 3 சிறந்த சிறுகதைகளை மொழி பெயர்த்து உங்களுக்கு வழங்குகிறேன்.

"பலா அப்பளம்' என்ற கதையை எழுதியவர்... உண்ணி கிருஷ்ணன் புதூர்.

கேரள சாகித்ய அகாடெமி விருது பெற்ற மலையாள நட்சத்திர எழுத்தாளர் இவர்.

பலா அப்பளத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் நோய்வாய்ப்பட்ட ஒரு சிறுவனையும், அவனின் வளர்ப்புத் தந்தையையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.

கதையின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ஒரு உயிரோட்டம் இருப்பதை நம்மால் உணரமுடியும்.

கதைக்கு நடுவில் காகம், குயில் பற்றி கூறியிருப்பது, கதைக்கு பலம் சேர்க்கிறது.

உண்ணிகிருஷ்ணன் புதூரின் தனித்துவ முத்திரை கதை முழுக்க இருக்கிறது.

"பேசாத கிளி' என்ற கதையை எழுதியவர்... ரஸ்கின் பாண்ட்.

உலகப்புகழ்பெற்ற இந்திய ஆங்கில மொழி எழுத்தாளர் இவர்.

1992-ஆம் ஆண்டில் இவர் தேசிய சாகித்ய அகாடெமி விருதைப் பெற்றிருக்கிறார்.

1999-ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம-ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

டில்லி அரசாங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் இவர் பெற்றிருக்கிறார்.

ஒரு சிறுவனையும், ரூபி அத்தை என்ற பெண்ணையும், கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு கிளியையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.

ரஸ்கின் பாண்டின் ஆழமான முத்திரையைக் கதை முழுக்க நாம் உணர்கிறோம்.

பேசாத கிளியைக் கதையின் இறுதியில் ரஸ்கின் பாண்ட் பேச வைக்கிறார்.

அதுதான் இந்த கதையின் புதுமை!

"பூனையும் மழையும்' என்ற கதையை எழுதியவர்... உலகமெங்கும் உள்ள கோடிக்கணக்கான வாசகர்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க எழுத்தாளரான எர்னெஸ்ட் ஹெமிங்வே.

1954-ஆம் வருடம்  இலக்கியத்திற்கான நோபல் விருதைப் பெற்றவர் இவர்.

மழை பெய்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு இடத்தில் பதுங்கியிருக்கும் ஒரு பூனையையும், அதை விரும்பும் ஒரு அமெரிக்க பெண்ணையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.

அந்த பெண்ணின் கணவர், ஹோட்டலின் உரிமையாளர், பணிப்பெண் ஆகியோரும் நம் உள்ளத்தில் இடம் பிடிக்கிறார்கள்.

இதில் வரும் சிறுவன் அற்புதமான படைப்பு! கிளியும்தான்....

கதையின் இறுதி, நம்மை சந்தோஷப்பட வைக்கிறது. இந்த மூன்று கதைகளும் உங்களுக்கு மாறுபட்ட அனுபவங்களை அளிக்கும்.

"இனிய உதயம்' மூலம் என் மொழிபெயர்ப்பு படைப்புகளை வாசிக்கும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்தி-ருந்து நன்றி.