உயிர் உடலில் எங்கு உள்ளது? அது எவ்வாறு உடலினால் ஆரோக்கியமாக நிலைநிறுத்தப்படுகிறது? என்று உலகிற்கு முழுமையாகவும் தெளிவாகவும் வரையறுத்துக் கூறியவர்களே சித்தர்கள். இதனை திருமூலரின் திருமந்திரப் பாடலினால் அறியலாம். உயிர் ஆரோக்கியமாகத் தங்கி இயங்கவேண்டுமானால், அதற்கு வலிமையான உடல் முக்கியமானது என்பது சித்தர்களின் தீர்க்கமான கருத்து.
"உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே'
-என்பதன் மூலம், உயிர் இயங்க உடல் முக்கியம் என்கிறார் திருமூலர்.
பிறந்த அனைத்து மனிதர்களும் இந்த உடல் நலிவுறுவதால் ஏற்படும் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்கிற விதியினை மாற்றி, மதி கொண்டு பல அரிய பெரும் மருத்துவக் கலைகளை நமக்குக் கொடுத்துச் சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
அப்படி அவர்கள் கொடுத்த மருத்துவ முறைகளில் சித்த மருத்துவம், வர்ம மருத்துவம் போன்றவை முக்கியமானவை.
இன்றைய ஆடம்பர மோகத்தால் ஆரோக்கியமற்றதை எல்லாம் நாம் ஆர்வமாக நாடி வருகிறோம். குறிப்பாக உணவு உண்பதில் நாம் ஆரோக்கியத்தைவிட ஆடம்பரத்திற்கு முக்கியத் துவம் அதிகம் தருகிறோம்.
எனவேதான் தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்பொழுது சித்தமருத்துவர் கு. சிவராமன் எதிர்கால தலைமுறைக் குழந்தைகள், நம் கண் முன்னே இறப்பதை காணுகின்ற தலைமுறைகளாக, நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று அழுத்தமாக துயரமான உண்மையை நமக்கு உணர்த்துகிறார்.
இந்தக் கொடுமையில் இருந்து நாமும் நம் தலைமுறையும் விடுபட பலவேறு வாய்ப்புகளையும் நம் முன்னோர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.
அப்படி அவர்கள் கொடுத்த, நோயைத் தடுத்து உயிரினை வளர்க்கும் யோகா, தியானம் உள்ளிட்ட உன்னதக் கலைகள், இன்று உலகம் முழுவதும் பரவி, நம் முன்னோர்களின் மருத்துவ அறிவிற்கு சான்றாக இருப்பது உள்ளபடியே பெரும் மகிழ்வினைக் கொடுக்கிறது.
நோய் வராமல் இருக்க, செய்யக்கூடிய யோகக் கலைக்கு ஈடாக. ஏன் ஒரு படி மேலாக சொல்லவேண்டுமென்றால், அத்தகைய பெருமை நம் பழந்தமிழ் வர்ம மருத்துவத்திற்கு உண்டு. வர்ம மருத்துவம் செய்யும் மருத்துவர்களையும், இதனால் பயனடைந்த நோயாளிகளையும் கேட்டால், இதன் உண்மை நிலவரம் அனைவருக்கும் நிச்சயம் புரியும்.
எலும்பு மற்றும் நரம்பு பாதிக்கும் நோய்களி னால், இனி வாழ்க்கையே அவ்வளவுதான். இனி, கடைசிவரை வரை சரியாக நடமாட முடியாமல், மருந்து மாத்திரைகளுடன்தான் வாழப்போகிறோம் என்கிற கவலையால் பெரும் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கும் பலருக்கும், இந்த வர்ம மகத்துவம் பற்றி எடுத்துரைக்கவே இந்தக் கட்டுரை. நம்மை நோய் அணுக விடாமல் இருப்பது மட்டுமின்றி, வந்த நோயினையும் வர்மக்கலைத் தத்துவத்தின் மூலம், துரத்தியடிக்க முடியும்.
அது என்ன வர்மக் கலை மருத்துவம்?
வர்மக்கலை என்றால் தொலைக்காட்சிகளிலும் சினிமாக்களிலும் ஒருவரைத் தாக்குவதற்கும் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கும் சண்டை காட்சிகளில் போர் உத்தியாகக் காட்டுகிறார்களே, அந்த போர் உத்தியை மருத்துவமாக பயன்படுத்திக் கொள்கிற முறைதான் வர்மம். நம் முன்னோர்களின் சூட்சுமமும் இதில்தான் ஒளிந்திருக்கிறது.
சித்தர்களின் தத்துவப்படி, உயிர் ஓட்டமானது உடலில் ஒவ்வொரு நிலைகளிலும் ஒவ்வொரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்தில், நிலைகொண்டு, அது வலம் வருகிறது. அப்படி உயிர் உயிர்ப்பாக இருக்கும் இடங்களையே வர்மப் புள்ளிகள் அல்லது வர்ம அடங்கல் நிலை என்று குறிப்பிடுகிறோம். அப்படிப்பட்ட வர்மப் புள்ளிகளில் எந்த வர்ம புள்ளி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாடி மூலம் கண்டறிந்து, அதில் ஏற்பட்டுள்ள நோய்க் குறி குணங்களை ஆராய்ந்து, அதனைச் சரி செய்து, நோயின் துன்பத்தை விலக்கி, உயிரைக் காப்பாற்றுவதே வர்மக்கலை மருத்துவ முறையாகும்.
வயிற்றில் கரு உருவாகும்போது, வாசி என்று ஆற்றல் பெற்றோர்களிடம் இருந்தும், பிறந்த பிறகு சரம் என்று ஆற்றல் நம் சுவாசித்தலின் மூலமாகவும், பிராணன் என்ற ஆற்றல் இந்த பிரபஞ்சத்தில் இருந்தும், அனுதினமும் நமக்கு கிடைத்தால் மட்டுமே இந்த உயிர் உடலில் வாசம் கொள்ளும், இவை மூன்றும் உடலை விட்டுப் பிரியும்போது, உயிரும் உடலை விட்டுப் பிரிந்துவிடும். பிராணன் என்பது வெறும் ஆக்சிஜனை மட்டும் குறிப்பதன்று. அது எவ்வாறு எனில், உயிர் பிரிந்த பிறகு எவ்வளவு ஆக்சிஜன் உடலுக்கு செலுத்தினா லும் உயிர் மீண்டும் வருவதில்லை. இந்த மூன்று ஆற்றல்களும் தத்தம் நிலையில் இருந்தால்தான் உடல் உயிருடன் ஜீவித்திருக்கும். இதுதான் அறிவியலுக்கும் புலப்படாத வாழ்வின் சூட்சுமம் ஆகும்.
வர்மப் புள்ளிகளின் தன்மையை ஒரு பழமொழி கொண்டு புரிந்து கொள்ளலாம்.
“பனைமரம் ஏறி விழுந்து பிழைத்தவனும் உண்டு வாய்க்கால் வரப்பு வழுக்கி இறந்தவனும் உண்டு”
வர்மப் புள்ளிகளில் குறிப்பிட்ட புள்ளிகளைக் காலம் என்று குறிப்பிடுவார்கள். அதையும் திலர்த்த காலம், நட்சத்திர காலம், அடப்ப காலம், அத்திச்சுருக்கி காலம் என்று 4 வகையாகப் பிரிப்பார்கள்.
குறிப்பிட்ட வர்ம காலத்தில் ஒருவருக்கு அடிபடுமேயானால், இதற்கு குறிப்பிட்ட நேரத்தில் அங்கே சிகிச்சை அளித்திருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தீர்க்கமுடியாத நோய்களாகவோ அல்லது உயிர் இழப் பாகவோ அது மாறுவதைப் பார்க்க முடியும்.
திலர்த்த காலத்தில் அடிபட்டால் மூன்றே முக்கால் நாழிகை (1ணீ மணி), நட்சத்திர காலத்தில் அடிபட்டால் 27 நாழிகை (10ணீ மணி) அடப்ப காலத்தில் அடிப்பட்டால்18 நாழிகை (7 மணி), அத்திச்சுருக்கி காலத்தில் அடிபட்டால் 40 நாழிகைக் குள் (16 மணி) சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் பேரிழப்பு ஏற்படும் என்றெல்லாம் நம் முன்னோர்கள் கணித்திருக்கிறார்கள். இதைத்தான் கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா காப்பாத்தி இருக்கலாமே என்கிற ஆதங்கக் குரலாக மருத்துவமனைகளில் நம்மால் கேட்க நேர்கிறது.
விளையாட்டுப் போட்டிகளிலும் பயிற்சிகளிலும் ஈடுபடும்போது நம் வர்மப்புள்ளிகளில் தவறுதலாக அடிபட்டால், பெரும் அவதியை அடைகிறோம். குறிப்பாக கபடிப் போட்டி, மல்யுத்த போட்டிகளில் குறிப்பிட்ட வர்மப் புள்ளிகளில் தவறுதலாக தாக்குதல் நடத்தப்பட்டால், குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சை அளித்தாக வேண்டும். இல்லையெனில் அந்த நபர் நிலைகுலைந்து போய்விடுவார். இதை நாம் பல இடங்களிலும் பார்த்திருப்போம்.
அதேபோல் ஒவ்வொரு நோய் நிலைகளிலும் ஏதாவது ஒரு வர்ம புள்ளிகளின் வாசி ஆற்றல் சுழற்சியானது தடைபட்டுக் கொண்டிருக்கும். அதனை அறிந்து தம் விரல்களினால் வர்மப் புள்ளிகளை இயக்கி, நோயினை நீக்குபவரையே வர்ம ஆசான் அல்லது வர்ம மருத்துவர் என்று அழைக்கி றோம்.
நாம் தினமும் காலையில் எழுந்து கைகளைத் தேய்த்து முகத்தில் புத்துணர்ச்சிக்காக ஒத்திக்கொள்கிறோம். அதுவும் வர்ம உத்திதான். அதன் மூலமும் வர்ம பலன் நம்மையறியாமலே நமக்குக் கிட்டுகிறது. நாம் பொட்டு வைப்பது, காதணி அணிவது, காலுக்குக் கொலுசு அணிவது, கால் விரல்களுக்கு மெட்டி அணிவது முதற்கொண்டு நம் உடலில் உள்ள வர்மப் புள்ளிகளை, எதாவது ஒருமுறையில் இயக்கி, நம் உடலுக்கு நோய் வராமல் பாதுகாத்துக் கொள்கிறோம். இதன் மூலம் நோயின் தீவிரத்தைக் குறைத்துக் கொண்டுதான் இருக்கிறோம், வர்மம் இன்று நேற்று தோன்றியதல்ல. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் வர்மக் கலையை அறிந்துவைத்துக் கொண்டு அதன் மூலம் உடலை உற்சாகமாக வைத்துக்கொண்டார்கள். உடலில் அணிமணி அணிவதன் மூலம் கூட, வர்மப் புள்ளிகளில் தூண்டலை ஏற்படுத்தும் டெக்னிக்கை நம் முன்னோர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
வர்மக்கலையின் தோற்றம்:
வர்மக்கலை பற்றி முழுமையான குறிப்புகள் அகத்தியர். போகர். ராமதேவர் ஆகிய சித்தர்களின் குறிப்புகளில் அதிகம் கிடைக்கப் பெறுகின்றன.
அவற்றில் வர்மப் புள்ளிகளை எவ்வாறு கண்டறிவது?
அவற்றின் பாதிப்புகளை எப்படிக் கண்டறிவது? அவற்றின் குற்றங்களை எப்படி சரிசெய்வது? பாதிக்கப்பட்ட வர்மப் புள்ளிகளை எப்படி சரிவர இயக்குவது? நமது உடலின் நாடி நரம்புகளையும், நாளங்களின் இயக்கத்தையும் எவ்வாறு கட்டுக்குள் வைப்பது என்பது பற்றி எல்லாம், நிறைய எழுதப்பட்டுள்ளன.
’கை மாத்திரைத் திறவுகோல்’ என்ற நூலின் 41-ஆவது பாடல் வர்ம முனிவர்கள் பற்றி எடுத்துரைக்கிறது.
“பண்பான அகத்தியனார் ராமதேவர்
பணிவாக போக முனிவர் தானும்
பருவமாய் மனிதர்கள் பிழைக்க வென்று
பாங்காகச் சொன்னதொரு நூல்கள் கண்டு
பார்த்திடவே சுருக்கமாய் பிரித்துச் சொன்னேன்”
இந்த அரிய பெரும் கலையினை, நம் சித்தர்களுக்கு வாழ்க்கை உணர்த்தியிருக்கிறது.
அவர்கள் இவற்றையெல்லாம் நமக்குக் கொடையாகக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
“தேறவே சிவன் உமைக்குச் சொன்ன போதும்
ஆறாமல் நான் அறிந்து என்னுள் சொன்னேன்”
-ஒடிவு முறிவு சரசுத்திரம் -1500 பாடல் எண் 833
இது போன்ற சூத்திரங்களில் பல ரகசியங்கள் மறைவாகச் சொல்லப்பட்டிருக்கிறது கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமார கோயில் பகுதியில் இருக்கும் வேலிமலையில் உள்ள ஒரு குகையில் இருந்து கொண்டு, அங்கு வந்த அகத்தியருக்கு வர்மக்கலை, பஞ்சபட்சி சாத்திரம், சிலம்பக்கலை, கால் பலம், புய பலம், நரம்புக் குற்றம் ஆகிய தந்திரங்களை பயிற்றுவித்து, பொதிகை மலையில் அகத்தியர் குருவாக இருந்தார் என்று “தட்சிணாமூர்த்தி காவியம்-1000 என்ற நூல் குறிப்பிடுகிறது. இந்த வர்மக் கலையானது தொன்று தொட்டு, குரு சீடன் முறையிலேயே பயிற்றுவிக்கப்பட்டு வந்துள்ளது.
இருப்பினும் வர்மத் தொகுப்பு என்ற நூல் இம்மகத்துவம் பொருந்திய வர்மக்கலை, வேட்டையாடி வாழ்ந்த மனிதன், தன்னைவிட வலிமை பொருந்திய விலங்குகளை வேட்டையாடும் போது, அவ்விலங்குகளை குறிப்பிட்ட இடத்தில் தாக்கும்போது, எளிதில் உணர்வினை இழப்பதை அறிந்து, அவற்றை எளிதில் தாக்குவதற்கு இந்த வர்மப் புள்ளிகளை பயன்படுத்தியுள்ளான். மேலும், போர்க்களத்தில் சண்டை செய்வதற்கும், தற்காப்பு கலையாகவும் மனித வாழ்வியலில் தற்காப்புக் கலையாகவும் வர்மக் கலை கையாளப்பட்டு வந்திருக்கிறது.
வர்மப் புள்ளிகளில் குறிப்பிட்ட விசையில் குறிப்பிட்ட அழுத்தம் கொடுத்து, இயக்குவதினால் நோய்களை நீக்க முடியும் என்கிற தத்துவத்தைக் கொண்டிருக்கிறது இந்த வர்மக் கலை.
முற்காலங்களில் வர்மக்கலை தெரிந்த போர்வீரர்களைக் கொண்ட மன்னர்களின் படைகள் அதிக வெற்றியினைப் பெற்று, வாகை சூடி உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக காந்தளூர் சாலை போர் குறிப்பிடத்தக்கது. சிறந்த வர்மக்கலை வீரர்களைக் கொண்டு, அருள்மொழி வர்மனுக்கும், பாஸ்கர் ரவிவர்மனுக்கும் கடுமையான போர், வர்மக்கலையை முன்னிலைப்படுத்தி நடந்தது என தமிழ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வர்மத்தினை நன்கு கற்றுத் தெரிந்த மன்னர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் வர்மன் என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டு இருந்தனர் என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. ஏனெனில் தமிழகத்தை ஆண்ட சேரர் சோழர் பாண்டியர் பல்லவர்கள் ஆகிய மன்னர்களில் ஒருசில குறிப்பிட்ட மன்னர்களின் பெயருக்கு பின்னால் மட்டுமே வர்மன் என்ற அடைமொழி உள்ளது. எடுத்துக்காட்டாக அருள்மொழி வர்மன், பாஸ்கர ரவி வர்மன், மாறவர்மன் சுந்தரபாண்டியன், மகேந்திர வர்மன் ஆகியவற்றை நாம் ஆய்ந்துணரலாம்.
தற்போது சித்த மருத்துவத்தில் வர்ம மருத்துவம் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இம்மருத்துவ முறையால் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரா மேலும் இலங்கை, மலேசியா ஆகிய இடங்களில் வர்ம சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை உரியவர்கள் பயன்படுத்திக்கொண்டு நலம் பெறலாம்.