வாழ்க்கையின் "எண்ட் கார்டு' போடும் கடைசி நிமிடத்தை குறிகாட்டுமிடம் ஆயுள் பாவம் எனும் 8-ஆமிடமாகும். எனவே, இந்த இடம் மிகவும் அசுப இடமாகப் பலராலும் கருதப்படுகிறது. உண்மையில், அது இருப்பைக் காட்டுமிடம் மட்டுமன்றி, இறப்பின்மூலம் நமக்குக் கிடைக்கும் ஆதாயங்களையும் குறிகாட்டுமிடமும் ஆகும். உத்தர காலாமிர்தம், பாகம் 7-ல், 8-ஆமிடத்தின் காரகத்தில், "மிரித்த தானம்' என்ற பகுதியில், பிறரின் இறப்புக்குப்பிறகு, அவரின் சொத்துகள், ஜாதகருக்கு கிடைக்கும் விவரங்கள், காரகங்கள் விளக்கப்பட்டுள்ளன. இனி, முதலில் எட்டாமிடத்தின் பொதுவான காரகங்கள் பற்றியும், பின்னர், நிறைந்த தனத்திற்கான, உதாரண ஜாதகத்துடன், விளக்கங்களையும் காணலாம்.
எட்டாம் பாவ காரகங்கள்
ஆயுள், ஆராய்ச்சி, ஆன்மிக விஞ்ஞானத்தில் ஆர்வம், மந்திர சக்தி, உள் மற்றும் வெளி மாற்றங்கள், கடந்தகால மற்றும் எதிர்கால நிகழ்வுகள், இறப்பு, உயில், ஆயுள் காப்பீடு, சுலபமான லாபங்கள், மணவாழ்வின் பந்தம், மரபு உரிமை, காயம் ஏற்படக்கூடிய நிலை, பயம், விபத்து. தடைகள், வழக்குகள், திருட்டு, நஷ்டங்கள், துரதிர்ஷ்டம், அவமானம், திவாலாகும் நிலை, ஏமாற்றங்கள் ஆகியவையும் வாள், துப்பாக்கி முதலியவற்றால் ஏற்படும் காயம், போர், சண்டை, மலை, பலமாடி கட்டடம் போன்ற உயரமான இடங்களிலிருந்து விழுந்து அல்லது குதித்து உயிர் துறத்தல், தீராத வியாதிகள், வருத்தம், நீங்காத பலவகைக் கஷ்டங்கள், துன்பங்கள், மானபங்கம், ஆயுள் அளவு, நீங்காத அல்லது தீராத பகை, வீணான தேவையற்ற அலைச்சல், பாவம், அஞ்ஞானம், திடீர் சாவு, தோல்வி, சிறைப்படல், தற்கொலை, தூக்கு, கொலை, கொள்ளை, கைமை நிலை, மன உளைச்சல், மரியாதைக் குறைவு ஆகியவையும். 7-ஆமிடத்துக்கு 2-ஆமிடமாதலால் வரதட்சணை மற்றும் மனைவியின்மூலம் வரும் வருமானம், எதிரியின் வலிமை, நண்பர்கள், வெற்றி, கூட்டாளியின் சொத்து, போனஸ், கிராஜூ விட்டி, சாவின் வகை, கசாப்புக் கடைக்காரன், சர்ஜன், மருத்துவ அதிகாரி, லஞ்சம், நதியைக் கடந்து போதல், பயணத்தில் ஏற்படும் கஷ்டங்கள் ஆகியவற்றையும் குறிக்கும்.
ஆறாம் வீட்டுக்கு 3-ஆம் வீடு ஆவதால் சகோதரரின் வேலைக்காரர்களும், 5-ஆம் வீட்டுக்கு 4-ஆம் வீடாவதால் குழந்தைகளின் தாயைப் பற்றியும், 3-ஆம் வீட்டுக்கு 6-ஆம் வீடாவதால் சகோதர- சகோதரிகளின் ஆரோக்கியக் குறைவையும், 10-ஆமிடத்திற்கு 11-ஆமிடம் ஆவதால் நண்பர்கள் கௌரவம் மற்றும் மரியாதையைப் பற்றியும், மேலும், 8-ஆம் வீடு அங்கஹீனம் தண்டனை பெறுதல் ஆகியவற்றையும் குறிக்கும்.
8-ஆம் வீட்டுடன் யுரேனஸின் தொடர்பு வித்தியாசமான மற்றும் திடீர் இறப்பையும், வெடிவிபத்து, கொள்ளை நோய்கள், என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாமல் தவறான மருத்துவ முறையில் ஜாதகர் இறக்க நேரிடலாம். இடி, மின்னல் தாக்கி அல்லது மின்சாரம் தாக்கி இறக்கலாம், நெப்டியூன் தொடர்பு, கோமா மற்றும் மயக்க நிலைக்கு கொண்டு செல்லலாம் அல்லது அலர்ஜி, மருந்து ஓவர்டோஸ் ஆகலாம். கேஸ், நீரில் மூழ்குதல், விஷம் ஆகியவற்றால் மரணம் நிகழலாம், 8-ஆம் பாவ உடற்பாகங்கள்- குதம், இனவிருத்திக்கான உறுப்புகள், அசுத்தங்களை வெளியேற்ற கூடிய பாகங்கள், இடுப்பு எலும்பு ஆகியவையாகும்.
8-ஆம் வீடு அதன் அதிபதி ஆகியவை பாதிப்படைந்தால் விரை வீக்கம், வெடிப்பு, வீக்கம், ஆண்மையின்மை, மூலம், சிறுநீரக நோய், கட்டிகள், தீராத வியாதிகள் ஆகியவை ஏற்படுகின்றன. பலம் வாய்ந்த ஆயுள்காரகன் சனி இவற்றிலிருந்து நம்மைக் காக்க உதவுகிறான்.
ஜாதக விளக்கம்
கீழ்காணும் ஜாதகம், ஆயுள்பாவம் தரும் பிறர் இறப்புக்குப்பின் கிடைக்கும் லாபத்துக்கு, ஆதாயத்துக்கு சிறந்த உதாரணமாகும்.
இந்த ஜாதகரின் தந்தை ஓர் அரசு அதிகாரி. இவர் 1996-ஆம் ஆண்டு, ஒரு வாகன விபத்தில் கொல்லப்பட்டார். பணியின்போது இறந்ததால், வாரிசு அடிப்படையில், அவரின் பணி ஜாதகருக்கு வழங்கப்பட்டது.
இந்த ஜாதகருக்கு சுக்கிர தசை சுக்கிர புக்தி நடப்பில் இருந்த போது, தசாநாதன், சுக்கிரன், தந்தை ஸ்தானம் 9-ஆமிடத்துக்கு, 7-ஆமிடத்திலும், தந்தை காரகனான, சூரியனுக்கு, 2-ஆமிடத்தில் உள்ளார். சுக்கிரன், தந்தையைக் குறிகாட்டும் காரகங்களுக்கு, இரு மாரக வீடுகளான 2, 7-ஐ குறிகாட்டுவதால், தந்தைக்கு மாரகம் ஏற்பட்டது. சந்திரனில் இருந்து, 8-ஆம் வீட்டில் சுக்கிரன் உள்ளார். 8-ஆமிடம், 9-க்கு 12-ஆமிடமும் ஆகிறது. மேலும் ஆயுள் காரகன் சனி, 6-ஆம் வீட்டி-ருந்து சுக்கிரன் பார்வை செய்கிறார். சந்திரனிலிருந்து, வாகனத்துக்குரிய 4-ஆம் வீடு சுக்கிரன் வீடு மற்றும் வாகனத்துக்கான காரக கிரகமும் அவர் ஆகிறார். எனவே, 8 மற்றும் 4-ஆம் வீட்டுத் தொடர்பு ஜாதகரின் தந்தைக்கு, வாகனத்தின்மூலம் மாரகத்துக்கு காரணமாயிற்று. சந்திரனுக்கு, தந்தை ஸ்தானம், 9-ல் செவ்வாய் இருக்க, விபத்தைக் குறிக்கிறதல்லவா? எனவே, தந்தை வாகன விபத்தின்மூலம் மரணம் எய்தினார்.
இந்த ஜாதகத்தில் சந்திரனுக்கு 8-ல் அமர்ந்துள்ள சுக்கிரன், செல்வம், சொத்துகளை அள்ளி வழங்கும் சந்திர அதியோகம் எனும் ராஜயோகத்தை அளிக்கும். மேலே, குறிப்பிட்டதுபோல், இரு மாரக வீடுகளைத் தொடர்புகொண்ட சுக்கிரன், தந்தையின் மரணத்திற்கு வழி அமைத்தாலும், அந்த மரணத்தின் வாயிலாக, 8-ஆமிட சுக்கிரன், சந்திர அதியோகம் அமைத்துக்கொடுத்து, ஜாதகருக்கு தந்தையின் அரசுப்பணியை, கிடைக்கச்செய்து, அதன்மூலம், பொருளா தார லாபங்களை அனுபவிக்கவும் வழிவகை செய்துகொடுத்தது.
இந்த ஜாதக அமைப்பின்மூலம், 8-ஆமிடம், தீமை செய்தாலும், ஒருவகையில் நன்மையும் செய்யும் என்பதை அறிந்தோமல்லவா? அடிப்படையில், ஆயுள் ஸ்தானம் மற்றும் பிறர்மூலம் வருமானத்தையும் குறிப்பிடுவதால் ஒன்றின்மூலம் கவலையைத் தந்தாலும், மற்றொன்றின்மூலம் மகிழ்ச்சியைத் தரும் என்பதையும் இந்த ஜாதக ஆய்வின்மூலம் தெரிந்துகொள்கிறோம்.
அடுத்து, 8-ஆமிடம் பொருளாதார நன்மை செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, ஸ்ரீ பரத்வாஜ சுவாமிகளின் ஜாதகத்தைப் பார்ப்போம். அவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு 8-ஆமிடத்தில் புதன், சந்திரன் இணைவு, லக்னாதிபதி செவ்வாய் 8-ஆமிடத்தைப் பார்க்கிறார். சந்திரனுக்கு 8-ஆம் அதிபதி புதன், 9-ஆம் அதிபதி சந்திரன். கல்விகாரகன், வேதகாரகன், சொற்பொழிவு காரகன் புதன், 9-ஆமிடம் தந்தை, ஆன்மிகம், ஆசிரமம், தர்ம ஸ்தாபனம் ஆகியவற்றைக் குறிக்கும். 8-ஆமிடம் ஆராய்ச்சி ஆன்மிக விஞ்ஞானத்தில் ஆர்வம் மந்திர சக்தி உள் மற்றும் வெளிமாற்றங்கள், கடந்த கால மற்றும் எதிர்கால நிகழ்வுகள் ஆகியவற்றைக் குறிக்கும். எனவே, சுவாமிகளுக்கு, மேற்சொன்ன அனைத்தும் மற்றும் சொத்துகளும் தந்தையின்மூலம் கிடைக்க 8-ஆமிடம் வழிவகை செய்தது.
அஷ்டமத்தில் சந்திரன்- புத்திசாலித்தனம் அதிகமுள்ளவர். தெளிவாக போதிப்பவர். தர்மப்பிரபு. மேதை பண்டிதர். மனோகரமான குணமுடையவர். சாத்திரங்களிலும், மத விஷயங்களில் ஆர்வமுடையவர். ஆன்மிக அறிவு, ஆர்வமுடையவர். ஞானியாக இருப்பார். கற்பனை வளம்மிக்கவர். வியாபார லாபம் உண்டு. முன்னோர்மூலமாகவோ, திருமணத்தின்மூலமாகவோ சொத்து லாபம் அடைவார்.
வேதங்கள் அறிந்தவர். வழிபாடு செய்தல், ஆராதனை, பூஜித்தல் ஆகியவற்றில் வல்லவர்.
ஆயுள் பாவத்தில் புதன்- சுயமரியாதை உடையவர். திறமைக்கு பெயர் போனவர்.
மனிதாபிமானம் மற்றும் அங்கீகாரம் உடையவர். மரியாதைக்குரியவர். உண்மையானவர். ஆன்மிக அறிவுமிக்கவர். பக்தி மார்க்கத்தில், சாஸ்திரங்களில், ஞாபக சக்திமிக்கவர். குடும்பத்தை வழிநடத்தும் அருமையான மனிதர். ராஜாக்களாலும் விரும்பப்படுவர். அவர்கள்மூலமாக சொத்துகள், முன்னேற்றம் ஆகியவற்றை அடைவார்கள். தேசிய அளவிலும், உலக அளவிலும் புகழ் பெறக்கூடியவர். அசையாச் சொத்துகள் அதிகம் சேரும். பிறர் துன்பங்களை அகற்றக்கூடிய சக்திமிக்கவர். பூர்ண ஆயுள் உடையவர். நூற்றாண்டு வாழ்வார்.
எனவே, அன்பர்களே! 8-ஆமிடம், துர்ஸ்தானம், மறைவு ஸ்தானம், மாரக ஸ்தானம் என்றில்லாமல், பல நன்மைகளைத் தரும் ஸ்தானமாக சில ஜாதகங்களில் அமைந்துவிடுகிறது என்பது நிரூபணமாகிறது.
செல்: 97891 01742