புத்தகம் வாசிப்பவன், இறப் பதற்கு முன் ஆயிரம் வாழ்க்கையை வாழ்கிறான். ஆனால், வாசிக்காதவன் ஒரேயொரு வாழ்க்கையை மட்டுமே வாழ்கிறான்' என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின்.
'ஒரு நல்ல புத்தகம், ஒரு புதிய உலகத்தை உங்களுக்குக் காட்டுகிறது'
என்கிறார் பிரிட்டிஷ் எழுத்தாளர் ரோல்ட் டால். இந்த உலகமே ஆன்லைன் பயன்பாட்டுக்கு பழக்கப்பட்டுப் போனாலும், புத்தகங்களை வாங்கி, அவற்றை புரட்டிப்பார்த்து வாசிக்கும்போது கிடைக்கும் உணர்வே தனி என்பதைப் புரிந்து கொண்டவர்கள், புத்தக வேட்கை குறையாதிருக்கிறார்கள். அப்படிப்பட்ட புத்தக விரும்பிகளுக்கான திருவிழாவே சென்னை புத்தகத் திருவிழா!
2021-ஆம் ஆண்டில், முதல்வர் மு.க.ஸ்டா-ன் தலைமையிலான ஆட்சி அமைந்தபின்னர்,
தமிழக எழுத்தாளர்களைக் கொண்டாடும்விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, எண்ணற்ற விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பாக, 49-வது சென்னை புத்தகக் கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், 2026, ஜனவரி 8 முதல் ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒருபுறம் காகிதத்தின் விலை, ப்ரிண்டிங் பணிகளுக்கான செலவுகள் அதிகரித்தபடி இருந்தபோதிலும், பதிப்பகங்களின் எண்ணிக்கை குறையாமல், அதிகரித்தபடியே இருப்பது ஆச்சர்யமான உண்மை.
கடந்த சில ஆண்டுகளாக, மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுவதன் விளைவாக, நூல்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கையும், படைப்பாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதால், நிறைய புதிய பதிப்பகங்கள் ஒவ்வொரு ஆண்டும் உருவெடுத்தபடியே இருக்கின்றன. அப்படி வரக்கூடிய பதிப்பகங்களின் கனவு புத்தகத் திருவிழாவாக சென்னை புத்தகக் கண்காட்சி இருக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியானது ஆயிரக்கணக்கான அரங்குகளோடு மிகவும் பிரம்மாண்டமான அளவில் நடைபெறுகிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த புத்தகக் கண்காட்சியில், சிறுவர்களுக்கான நூல்களை விற்பனை செய்வதற்கென்று பிரத்யேகமான அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை புத்தகக் கண்காட்சியில் வழங்கப்படும் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது 2026-க்காக, கவிதை பிரிவில் கவிஞர் சுகுமாரன், சிறுகதைப் பிரிவில் ஆதவன் தீட்சண்யா, நாவல் பிரிவில் இரா.முருகன், உரைநடைப் பிரிவில் பேராசிரியர் பாரதிபுத்திரன் (சா.பாலுசாமி), நாடகப் பிரிவில் கருணா பிரசாத், மொழிபெயர்ப்புப் பிரிவில் வ.கீதா ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவுபெற்றதுமே, ஜனவரி 16, 17, 18, 19 தேதிகளில், பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில், உலக நாடுகள் பலவற்றிலுள்ள மிக முக்கியமான பதிப்பகங்கள் ஆர்வத்தோடு பங்கெடுக்கவுள்ளன. இக்கண்காட்சியில், பன்னாட்டு கலாசாரங்களை, வரலாறுகளை, ரசனைகளைத் தாங்கிய ஆயிரக்கணக்கான நூல்கள் பார்வைக்காக வைக்கப்படும்.
'சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!' என்று மகாகவி பாரதியார் பாடிய பாடலுக்கேற்ப. பல மொழிகளில் எழுதப்பட்ட நூல்களை நம் தமிழ்மொழிக்கு மொழிபெயர்ப்பதற்கான நல்வாய்ப்பாக இக்கண்காட்சி அமைந்துள்ளது. அதேபோல், தமிழ் மொழியில் எழுதப்பட்ட நூல்களை, மற்ற நாடுகளைச் சேர்ந்த பதிப்பகங்கள் விரும்பினால், நம் எழுத்தாளர்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது, தமிழ் மொழியின் இலக்கியச்செழுமையை, உலகெங்கும் கொண்டுசெல்வதற்கும், மற்ற நாடுகளைச் சேர்ந்த இலக்கியங்களை தமிழுக்கு கொண்டுவருவதற்கான திறப்பாகவும் அமைந்துள்ளது. இந்த பன்னாட்டு புத்தகக் கண்காட்சியின் மூலமாக, கடந்த ஆண்டுகளில் எண்ணற்ற எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் பலனடைந்துள்ளனர்.
49-வது சென்னை புத்தகக் கண்காட்சியில், நக்கீரன் பதிப்பகம், பாரதி புத்தகாலயம், சாகித்ய அகாதெமி, தமிழ் இந்து, காலச்சுவடு, பெரியார் சுயமரியாதை புத்தக நிறுவனம், உயிர்மை பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ், வேரல் பதிப்பகம் உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்கள் பங்கேற்கவுள்ளன. நமது நக்கீரன் பதிப்பகத்தின் சார்பாக, தோழர் நல்லகண்ணுவின் போராட்ட வாழ்க்கை வரலாற்றை, பல்வேறு தரவுகளுடனும், அவரோடு பயணித்தவர்களின் அனுபவப் பகிர்வுகளோடும் நக்கீரனில் தோழர் சி.மகேந்திரன் தொடராக எழுதி, வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற 'கைதி எண் 9658', நூல் வடிவில் புத்தகக் கண்காட்சியில் நக்கீரன் அரங்கில் விற்பனைக்கு வருகிறது. பத்திரிகைப் போராளி நக்கீரன் ஆசிரியரின் துணிச்சலான பத்திரிகை பயணம் தொடர்பான 'போர்க்களம்' தொடரின் 8 பாகங்கள் அடங்கிய முழுத்தொகுப்பு நக்கீரன் அரங்கில் இடம்பெறும்.
தமிழ்நாட்டின், தமிழர்களின் வீரம்தோய்ந்த கலாச்சாரங்களில் ஒன்றான சல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி, சல்லிக்கட்டு மாடுகளின் வளர்ப்பு, குணாதிசயம், சல்லிக்கட்டு விளையாட்டின் வரலாறு என அனைத்தையும் உள்ளடக்கி, நக்கீரனில் இயக்குநர் ல.ராஜ்குமாரால் 'திமில்' என்ற பெயரில் எழுதப்பட்ட தொடர், நூல் வடிவில் வெளியாகிறது. மேலும், முன்னாள் முதல்வர் கலைஞரின் வரலாற்றை பேசக்கூடிய நெஞ்சுக்கு நீதி நூலின் 6 பாகங்கள், கலைஞரின் குறளோவியம், ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம், அறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி, ஆரிய மாயை, நீதிதேவன் மயக்கம், ரோம் எரிகிறது, ரோமாபுரி ராணிகள் ஆகிய 5 நூல்களையும் புதிய வடிவில் ஒரே புத்தகமாகத் தொகுத்து நக்கீரன் வெளியிட்டுள்ளது. மேலும் நக்கீரனில் வெளியான திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகானின் 'கருப்பு + சிவப்பு = புரட்சி!' நூலும், சித்தர்கள் பற்றிய பரபரப்பான செய்திகள் அடங்கிய தொகுப்புகளும் விற்பனைக்கு வந்துள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 'இயர் புக் 2026' சிறப்பான முறையில் தயாராகியுள்ளது. மேலும், சின்னக் குத்தூசியாரின் படைப்புகள், பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள், பெண்ணியம் போற்றிய பெரியார், தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு, உள்ளிட்ட பல்வேறு நூல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பொன்னியின் செல்வன் நாவல், கி.வா.ஜகந்நாதன் எழுதிய பாரிவேள், நினைவோ ஒரு பறவை, வீரப்பனின் வாழ்க்கை வரலாறு குறித்த நூல்கள் உள்ளிட்ட பலவும் நக்கீரன் பதிப்பகத்தில் விற்பனைக்கு வருகின்றன.
இயக்குநர் வி.சி.குகநாதன், தனது திரையுலக அனுபவங்களை நக்கீரன் வாசகர்களோடு பகிர்ந்துகொண்ட 'சினிமா கொட்டகை' தொடர், நூல் வடிவம் பெற்றுள்ளது. எழுத்தாளர் ஆதனூர் சோழனின் படைப்புகளான, நெருப்பாற்றில் நீந்திய கலைஞர் கடிதங்கள், இந்திய நாத்திகம், மறவன் மடல்கள், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும், பராசக்தி மனோகரா, அம்பேத்கர் வாழ்வும் பணியும் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. நாஞ்சில் கி.வேலப்பன் எழுதியுள்ள பாரியின் வழித்தோன்றல் கலைஞர் என்ற நூலும், நக்கீரனின் முதன்மை துணை ஆசிரியர் சி.என்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள 'சிறை ஊழல்கள்' என்ற நூலும் நக்கீரன் வெளியீடாக வந்துள்ளன.
வார்த்தை சித்தர் வலம்புரிஜானின் படைப்புகளான மீண்டும் மகாத்மா, வருடம் முழுவதும் வசந்தம், அந்தக இரவில் சந்தன மின்னல், அம்மா அழைப்பு, திருக்குறளைத் திறப்போம், வரலாற்றில் கலைஞர், எல்லா ராத்திரிகளும் விடிகின்றன, சொர்க்கத்தில் ஒருநாள், பாரதியார், சவேரியார் ஆகிய நூல்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
அனைவரின் கைவிரல் நுனிகளும் செல்பேசியை வருடிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்திலும், புத்தகங்களின் பக்கங்களை புரட்டுவதற்கும் விரல்கள் ஆர்வத்தோடு இருப்பது பெருமைப்படவைக்கிறது!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/07/bookfair26-2026-01-07-15-42-31.jpg)