குட்டப்பப் பணிக்கர் குஞ்ஞித்தேயி அம்மாவைத்திருமணம் செய்து கொண்டான். குட்டப்பப் பணிக்கருக்கு சந்தோஷம் உண்டானது. குஞ்ஞித்தேயி அம்மாவிற்கும் சந்தோஷம் உண்டானது. அனைவரையும் விட, அதிகமான சந்தோஷம் உண்டானதுகுஞ்ஞித்தேயி அம்மாவின் மாமாவான ஈச்சரன் நாயருக்குத்தான். குடும்பத்தைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டிருக்கும் அந்த பெரியவர் தன் குடும்பத்தின் ஒரே வாரிசான அந்த மருமகளின் திருமணத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். குஞ்ஞித்தேயி அம்மாவிற்கு ஒரு குழந்தை பிறந்துதான் அந்த குடும்பத்தின் பரம்பரை நிலைநிற்க வேண்டிய நிலை... ஒரு பூவைக்கூட சுமக்க வைக்காத வகையில் ஈச்சரன் நாயர் அவளை வளர்த்திருந்தார். தாயும் தந்தையும் இல்லாத அந்தச் சிறுமி மாமாவின் நிழலில் வளர்ந்தாள். பதினெட்டு முடிந்து வனப்புடன் நின்று கொண்டிருக்கிறாள். எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்?
பிள்ளைகளைப் பற்றி ஈச்சரன் நாயர் எந்தச் சமயத்திலும் கவலைப்பட்டதே இல்லை. ' அவர்கள் நன்றாக இருந்தால், அவர்களின் குடும்பத்திற்கு நல்லது' என்பதுதான் அவரின் நம்பிக்கையாக இருந்தது. "குஞ்ஞித்தேயி பிரசவமாகி குழந்தைகள் பிறந்து குடும்பம் தளராமல் இருக்க வேண்டுமே!''
என்பதைத்தான் ஈச்சரன் நாயர் தினமும் குடும்ப தெய்வத்திடம் வேண்டிக் கொண்டிருந்தார்.வர இருக்கும் அந்தத் தலைமுறைக்காக எப்போதும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். காலையில் எழுந்ததும் கஞ்சியைக் குடித்து விட்டு மண்வெட்டியை எடுத்து தோளில் வைத்துக் கொண்டு நிலத்தில் இறங்கினால், திரும்பி வருவது சூரியனின் தலை மறைந்த பிறகுதான். குளியலும் உணவும் முடிந்து வாசல் படியில் சிறிது நேரம் ஓய்வெடுப்பார். அப்போது மருமகளைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பார். மருமகளின் சிறப்புகளைப் பற்றியும் ஜாதக குணங்களைப் பற்றியும் பெருமையாக நினைத்தாலும், அவள் அந்த அளவிற்கு அழகான தோற்றத்தைக் கொண்டவள் அல்ல என்ற எண்ணம் ஈச்சரன் நாயரின் மனதின் அடித்தளத்தில் இருந்தது. அதனால், பார்த்து விருப்பம் உண்டாகி, ஒரு மணமகன் வந்து சேர்வது என்பது எளிதான விஷயமல்ல. தேடி அலைய வேண்டும். அதே நேரத்தில் இதை வெளிப்படையாக யாரிடமாவது கூறமுடியுமா? மருமகளுக்குக் கணவனைத் தேடி ஈச்சரன் நாயர் நடந்து திரிகிறார் என்று ஊரில் இருப்பவர்கள் பேசுவார்கள். அந்த பரம்பரை பெருமை கொண்ட குடும்பத்தால் அதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.
குஞ்ஞித்தேயியோ? தனக்கு எந்தவொரு குறைவும்இருப்பதாக அந்த இளம்பெண் நினைக்கவில்லை. இளமைக்கு வேண்டிய அளவிற்கு அந்த மேனியில் கலை வேலைப்பாடுகள் நடந்திருக்கின்றன. எப்படிப்பட்ட காட்டு புதரையும் புன்னகைக்க வைக்கக்கூடிய அளவிற்கு வசந்த காலம் அவளை இறுக தழுவி நின்று கொண்டிருக்கிறது. சுருண்டு இருண்ட தலைமுடி, எண்ணெய் புரண்ட சரீரத்தின் நிறம், தூண்டில் வளையத்தைப் போன்ற பார்வை, அழுத்தி நடக்கும் நடை, "எனக்கென்ன?' என்ற நினைப்பு - அவளைப் பொறுத்தவரையில் அனைத்தும் மிகவும் சரியாகவே இருந்தன.
எனினும், மதிய வேளையில் அமர்ந்து, புதிய ஆடையில் கோழிக் கண்ணைப் பின்னும்போதும், மாலை வேளையில் விளக்கு ஏற்ற பயன்படும் திரியை உருவாக்கும்போதும் தன்னுடைய இதயத்தில் அலைமோதிக் கொண்டிருக்கும் சில உணர்ச்சிகளை வெளிப்படுத்த அவள் முயற்சிப்பதுண்டு. அப்போது ஒரு இனம் புரியாத தனிமைச் சூழலை அவள் உணர்வாள்.
அன்று குஞ்ஞித்தேயி கிணற்றின் கரையில் அமர்ந்து வெங்கல பாத்திரங்களைத் தேய்த்து மினுக்கிக் கொண்டிருந்தாள். தலையை உயர்த்தி பார்த்தபோது, நிலத்தின் எல்லையிலிருக்கும் சர்வே கல்லின் மீது ஒரு தலைக்கட்டு கட்டிய மனிதன்! இன்னொரு முறை கூர்ந்து பார்த்தாள். குட்டப்பப் பணிக்கர்! அங்கு இருக்கக்கூடிய நிலத்தின் உரிமையாளன். அங்கு நடக்கும் நிலத்தைக் கிளறும் வேலையை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவ்வப்போது ஒவ்வொரு கட்டளையையும் பிறப்பித்துக் கொண்டிருக்கிறான். "சாத்தப்பா.... வெயில் போகுறதுக்குள் அந்தப் பகுதியை முழுமையா கிளறி முடிக்கணும். தெரியுதா?'' மிகவும் கம்பீரமாக இருந்த அந்த குரல் இனிமையான ஒன்றாக குஞ்ஞித்தேயிக்குத் தோன்றியது. இன்னுமொரு முறை கூர்ந்து பார்த்தாள். ரோமங்கள் அடர்த்தியாக இருக்கக்கூடிய விரிந்த மார்பு, கடைந்தெடுத்ததைப் போன்ற நீண்ட கைகள், உயரமான சரீரம்.... குட்டப்பப் பணிக்கர் ஒரு ஆணேதான். அவன் எழுந்து சென்ற பிறகு, கதிர்கள் அறுக்கப்பட்ட நெல் செடியைப் போல அந்த சர்வே கல் உயிரற்றதாக குஞ்ஞித்தேயிக்குத் தோன்றியது.
அதற்குப் பிறகு அடிக்கடி அந்த கல்லின் மீது கண்களைச் செலுத்தாமல் இருக்க முடியவில்லை. "இது முன்பே இங்கு இருந்ததுதானே?'' என்று ஆச்சரியப்படவும் செய்தாள்.
மறுநாள் கதவைத் திறந்தபோது, பாதி கிளறப்பட்ட அந்த நிலத்தை நோக்கி குஞ்ஞித்தேயியின் கண்கள் பாய்ந்து சென்றன. அந்த நிலமும் அவளுடைய இதயத்தைப் போலவே இருந்தது.
அந்த சர்வே கல் வெறுமனே நின்று கொண்டிருந்தது. எங்கிருந்தோ பறந்து வந்த ஆடிக் கொண்டிருக்கும் வாலைக் கொண்ட ஒரு கிளி, அந்தக் கல்லின் மீது அமர்ந்து இரண்டு மூன்று தடவைகள் அசைந்தது. வேறொரு இடத்திற்குப் பறந்து சென்றது.
குஞ்ஞித்தேயியின் கறுத்த கன்னங்களில் மேலும் கொஞ்சம் எண்ணெய் படலம் வந்து சேர்ந்தது. கண்களில் புலர்காலைப் பொழுதின் பிரகாசம் எட்டிப் பார்த்தது. எனினும், ஒரு சோர்வு உண்டானது. காலையில் எழுந்தவுடன் மிகுந்த ஒழுங்குடன் காரியங்களைச் செய்யக்கூடிய அந்த இளம்பெண்ணுக்கு ஒரு கொட்டாவி விட வேண்டும் போல இருந்தது. தொடர்ந்து ஒரு இடத்தில் சாய்ந்து படுத்தவாறு ஒவ்வொன்றையும் அசை போட வேண்டும் என்ற நினைப்பு... ஆனால், வேறு வழியில்லை. அனைத்து இடங்களிலும் அவளின் கண்கள் பாய்ந்து கொண்டிருந்தன. கால்நடைகளைப் பார்த்துக் கொள்ளக்கூடிய பையனை அழைத்தாள்... சமையல்காரியைத் திட்டினாள்...
அடுப்பிலிருந்த சாம்பலை வாரினாள்... நெருப்பைப் பற்ற வைத்தாள்... குளித்து முடித்து குல தெய்வத்திடம் வேண்டினாள்:
"எனக்கு உதவு....''
தோளில் மண்வெட்டியை வைத்தவாறு ஈச்சரன் நாயர் மேலே இருக்கும் வாய்க்காலை நோக்கிச் சென்றார். குஞ்ஞித்தேயி மீண்டும் கிளறப்பட்ட நிலத்தைப் பார்த்தாள்.
பணியாட்கள் வரிசையாக வந்து சேர்ந்திருந்தார்கள். கிளறிக் கொண்டும், புரட்டி போட்டுக் கொண்டும்... ஆழமாக பணியில் ஈடுபட்டிருந்தனர். புதுமண்ணின் அருமையான வாசனை... ஒரு தாயாக ஆவதற்கு தன்னைத் தயார் பண்ணிக் கொண்டிருக்கிறது.
அவளுடைய கண்கள் அந்த சர்வே கல்லை நோக்கி தாவிச் சென்றன. அந்த சர்வே கல்லின் மீது ஒரு காலை எடுத்து வைத்தவாறு குடையை ஊன்றிய கோலத்தில் நின்று கொண்டிருந்தான் குட்டப்பப் பணிக்கர். மரணத்திற்குப் பிடி கொடுக்காமல் ஓடிய மார்க்கண்டேயன் சென்று கட்டிப் பிடித்த சிவலிங்கத்திற்குப் பின்னால் தெரிந்த பரமேஸ்வரனின் உருவம் குஞ்ஞித்தேயிக்கு ஞாபகத்தில் வந்தது. மொத்தத்தில் ஒரு நிம்மதி உண்டானது.
பத்து மணி தாண்டியது. பதினொன்று ஆனது.
பன்னிரண்டும் கடந்தது. அந்தக் கடுமையான வெயிலிலும் சர்வே கல்லை மிதித்தவாறு குட்டப்பப் பணிக்கர் நின்று கொண்டிருந்தான். கிணற்றின் கரைக்குச் சென்றபோது, குஞ்ஞித்தேயி அம்மாவிற்கு ஒரு சிந்தனை.... பணிக்கர் பரம்பரை பெருமையைக் கொண்ட ஒரு இல்லத்தைச் சேர்ந்தவன் அல்லவா? தங்களுடைய எல்லையில் வந்து இவ்வளவு நேரமாக நின்று கொண்டிருந்த பிறகும், ஒரு மரியாதையைக் காட்டாமல் இருக்கலாமா? பாதி தூரத்திற்கு கிணற்றிற்குள் விட்ட வாலியையும் கயிறையும் பிடித்து இழுத்து கீழே போட்டு விட்டு, இரு சிந்தனைகளுடன் அருகில் சென்று கேட்டாள் : " தாகம் எடுக்கிறதா? "
குட்டப்பப் பணிக்கர் குடையை உயர்த்தி தலையைத் திருப்பிக் கொண்டு குஞ்ஞித்தேயியை முழுமையாக பார்த்தான். பிறகு கூறினான் :
"கொஞ்சம்...''
"காப்பியா? மோரா? என்ன வேணும்?''
"மோராக இருந்தால், ரொம்பவும் நல்லது. குளிர்ந்த நீராக இருந்தாலும், பிரச்சினையில்லை.''
அதற்கு குஞ்ஞித்தேயி பதில் கூறவில்லை. அவள் அழுத்தி மிதித்து ஒரு வேக நடையை நடந்தாள். ஐந்து நிமிடங்களில் ஒரு சொம்பு மோருடன் திரும்பி வந்தாள். குட்டப்பப் பணிக்கர் ஓசை எழும் வண்ணம் வாய்க்குள் ஒரு நீரோட்டத்தை உண்டாக்கிக் கொண்டு அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த வேளையில், குஞ்ஞித்தேயியின் கண்கள் அவனுடைய தொண்டையில் மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் பாய்ந்து விளையாடும் பந்தையே சுற்றிச் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தன. சொம்பைத் திரும்ப தந்தபோது, அவள் கேட்டாள்:
"போதுமா?''
"இப்போ போதும்...''- குட்டப்பப் பணிக்கர் கூறினான்.
தொடர்ந்து தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து நான்காக மடித்து சர்வே கல்லின் மேலே வைத்து, அதன் மீது அமர்ந்தான். அப்போது நான்கு ஏப்பங்களையும் விட்டான்.
மண்ணைக் கிளறும் பணி அதற்குப் பிறகும் மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. மூன்று நாட்களும் குட்டப்பப் பணிக்கருக்குத் தாகம் உண்டானது. குஞ்ஞித்தேயி மோரைக் கொண்டு போய் கொடுக்கவும் செய்தாள். மூன்றாவது நாளன்று அவள் கேட்டாள்:
"எதற்கு இந்த சர்வே கல்லின் மீது உட்கார்ந்து இருக்கீங்க? இந்த திண்ணையில அமர்ந்திருந்தாலும், கிளறும் வேலையைப் பார்க்க முடியுமே?''
"ஆனால், இந்த சர்வே கல்லின் மீது அமர்ந் திருந்தால், அதிக சுகம் கிடைக்கும். இது என் நிலத்தின் எல்லை அல்லவா? எல்லையை விட்டு நீங்காமலிருப்பது எப்போதும் நல்லதுதானே?''
"அது சரிதான்.''- குஞ்ஞித்தேயி அதைக் கூறி விட்டு, சமையலறைக்குள் நுழைந்தாள். அன்றுடன் நிலத்தைக் கிளறும் வேலை முடிந்தது. மறுநாள் புதிய மண் புரண்டு காணப்பட்ட அந்த நிலம் தனியாக சூடான பெருமூச்சுகளை விட்டுக் கொண்டிருந்தது.
நான்கு நாட்கள் இவ்வாறு கடந்தன. ஐந்தாவது நாளன்று குட்டப்பப் பணிக்கரின் மூத்த மைத்துனன் வந்தான்.குசலம் விசாரித்து விட்டு, ஈச்சரன் நாயரிடம் கூறினான்:
"நம்முடைய குட்டப்பாவிற்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணும்.''
"அப்படியா? அதற்கான வயது வந்திருச்சே? "- என்றவொரு அருமையான வார்த்தையை ஈச்சரன் நாயர் தட்டி விட்டார்.
வந்திருந்த மனிதன் குரலை இறக்கி வைத்துக் கொண்டு தொடர்ந்தான்:
"இங்கிருக்கும் பொண்ணோடு இணைந்தால் பரவாயில்லன்னு....''
ஈச்சரன் நாயரின் இதயத்திலிருந்து சந்தோஷத்தின் ஜுவாலை மேல்நோக்கி வேகமாக எழுந்தது.இந்த அளவிற்கு சாதாரணமாக ஒரு ஆலோசனை வந்து சேரும் என்று அவர் நினைக்கவே இல்லை." எனக்கும் இதைவிட பெரிய சந்தோஷம் இருக்கிறதா? "- என்று கூறி வேகமாக எழுந்த ஈச்சரன் நாயர், பிறகு சரியாக அமர்ந்தது குஞ்ஞித்தேயியின் திருமணம் முடிந்த பிறகுதான். இப்படித்தான் அந்தத் திருமணம் நடந்தது.
குஞ்ஞித்தேயியின், குட்டப்பப் பணிக்கரின் குடும்ப வாழ்க்கை பிரகாசமாக இருந்தது. காலையில் எழுந்து பல் தேய்ப்பதற்காக கிணற்றிற்கு அருகில் இருக்கும்போது, குஞ்ஞித்தேயி கேட்பாள்:'' அந்த சர்வே கல்லைப் பார்த்தீங்களா?''
"ம்...''- குட்டப்பப் பணிக்கர் சற்று நீட்டி முனகுவான். அந்த சர்வே கல்லின் மீது கொத்தப்பட்டிருந்த அம்பு அடையாளம் அர்த்தம் நிறைந்ததாக அப்போது அவளுக்குத் தோன்றியது. ஒரு சிவலிங்கத்தைப் போல புனிதத் தன்மை கொண்டதாக அந்த கல்லை குஞ்ஞித்தேயி நினைத்தாள்.
பல் தேய்ப்பதை முடித்து விட்டு, மேற்துண்டை எடுத்து தோளில் போட்டவாறு குட்டப்பப் பணிக்கர் தன் வீட்டை நோக்கி நடந்து சென்றான்.
இரண்டாவது வருடத்தின் மத்தியில் குஞ்ஞித்தேயி பிரசவமானாள். குழந்தையின் அழுகையைக் கேட்டதும் வாசலில் ஒதுங்கி நின்றிருந்த ஈச்சரன் நாயர் உள்ளே தலையை நீட்டியவாறு கேட்டார்: "என்ன குழந்தை?''
"ஆண்...''
ஆண் குழந்தை பிறந்தால், வாசலுக்கு வெளியே உரத்த குரலில் கூற வேண்டும். ஈச்சரன் நாயர் அரைமணி நேரம் சத்தம் போட்டு கூறினார்.
அனைவரிடமும் நடந்து சென்று கூறவும் செய்தார்:
"பாருங்க. நமக்கு ஒரு மருமகன் பிறந்திருக்கிறான். என் குடும்பத்திற்கு வாரிசு வந்திருச்சு....''
அதற்குப் பிறகு அந்த மனிதர் மிகவும் அதிகமாக உழைக்க ஆரம்பித்தார். வளர்ந்து வரும் மருமகனுக்காக நான்கு காசுகளைச் சம்பாதித்து வைக்க வேண்டும். குட்டப்பப் பணிக்கருக்கும் பெரிய சந்தோஷம். ஒரு தந்தைக்கு அந்த அளவிற்கு சந்தோஷம் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது ஈச்சரன் நாயரின் கருத்து:
"இந்த குழந்தை அவனோட குடும்பத்திற்கானது இல்லையே!''
குழந்தையின் பெயர் வைக்கும் செயலும்,
தொட்டிலில்போடும் காரியமும் விமரிசையாக நடந்தன. பொதுவாகவே கஞ்சனான ஈச்சரன் நாயர் மடியின் கயிறை நன்றாகவே அவிழ்த்தார்.
சோறு ஊட்டும் செயலை இதைவிட சிறப்பாக நடத்த வேண்டும் என்பதுதான் அந்த மாமாவின் எண்ணமாக இருந்தது. ஆனால், விடாமல் பெய்த மழை எதற்கும் ஒத்து வரவில்லை. சோறு ஊட்டும் காரியம் நடந்து முடிந்த பிறகும், மழை நிற்கவில்லை. அது மட்டுமல்ல... மழையைத் தொடர்ந்து ஒரு வெள்ளப்பெருக்கும் உண்டானது. வெறி பிடித்த காளையைப் போல நீர் பாதைகளின் வழியாக வேகமாக பாய்ந்து ஓடியது.ஊரே நீரில் மூழ்கிக் கிடந்தது. ஈச்சரன் நாயர் நெஞ்சில் கையை வைத்தார் :
"ஓ! என் வயல்!''
குட்டப்பப் பணிக்கரும் நீண்ட பெருமூச்சை விட்டான்:'' ஓ.... என் விதைக்கப்பட்ட கீரை...!''
குஞ்ஞித்தேயி அம்மா இவ்வாறு கூறினாள்: "இந்த குளிர்ந்த காற்று என் மகனுக்கு ஜலதோஷத்தை உண்டாக்கிடும்.''
மூன்று நாட்கள் கடந்த பிறகுதான் நீர் வருவது நின்றது. எதிர்பார்த்தவை அனைத்தும் நடந்திருக்கின்றன. பச்சை பிடித்து நின்ற நிலம் முழுவதும் வெளிறிப் போய் கிடந்தது. வயலில் சேறு தேங்கிக் கிடந்தது. கீரை இருந்த நிலத்திற்குள் மணல் வந்து கிடந்தது. குஞ்ஞித்தேயி அம்மாவின் மகனுக்கு ஜலதோஷம் பிடித்தது. ஈச்சன் நாயர் நிலம் முழுவதையும் நடந்து பார்த்தார். கிணற்றின் அருகிலிருந்த சர்வே கல் அடியோடு பெயர்ந்து நீங்கி விட்டிருந்தது. அதைப் பார்த்ததும் குஞ்ஞித்தேயி அம்மாவிற்குப் பெரிய அளவில் கவலை உண்டானது.
அன்றே கணவனுக்குத் தகவலை அறிவிக்கவும் செய்தாள். மறுநாள் காலையில் குட்டப்பப் பணிக்கரின் வேலையாட்கள் வந்து சர்வே கல்லை குழி தோண்டி நிமிர்ந்து நிற்க வைத்தார்கள். ஆனால், முன்பு இருந்த இடத்திலிருந்து ஒரு அடி தள்ளி குழி தோண்டி நிற்க வைத்திருந்தனர். மதிய வேளை தாண்டிய பிறகு, ஈச்சரன் நாயர் அதைப் பார்த்தார். அவருக்குக் கோபம் வந்தது: "என்ன வேலை செஞ்சிருக்கீங்க? சர்வே கல்லை என் நிலத்துப் பகுதியில் தள்ளி பதிச்சிருக்கீங்க. கேட்பதற்கு இங்கு ஆணும் தூணும் இல்லாமல் இல்லை.''
உடனடியாக பணியாட்களை வரவழைத்து முன்பு இருந்த இடத்திலிருந்து ஒரு அடி அந்தப் பக்கம் தள்ளி இருக்குமாறு குழி தோண்டி புதைத்து நிற்கும்படி செய்தார். மறுநாள் பல் தேய்க்கும்போதுதான் குட்டப்பப் பணிக்கர் அதைப் பார்த்தான். எதுவும் பேசவில்லை. மதியம் பணியாட்கள் வந்து சர்வே கல்லைப் பெயர்த்தெடுத்து, ஈச்சரன் நாயரின் நிலத்திற்கு மூன்று அடிகள் தள்ளி குழி தோண்டி, நிற்க வைத்தார்கள். ஈச்சரன் நாயர் அடங்கி இருப்பாரா?
அந்த வகையில் நின்று கொண்டிருந்த சர்வே கல் நடக்க ஆரம்பித்தது.
குஞ்ஞித்தேயி அம்மாவிற்குக் கவலை உண்டானது.
மாமாவிற்கும் கணவனுக்கும் இடையே ஒரு கயிறு இழுக்கும் போட்டி நடப்பதைப் பார்க்க அவள் விரும்பவில்லை.
"மாமாக்கிட்ட எதற்கு சண்டைக்குப் போனீங்க?''- குஞ்ஞித்தேயி தன் கணவனிடம் கேட்டாள்.
"மாமா எதற்கு என்கூட சண்டை போடுறதுக்கு வருகிறார்?''- குட்டப்பப் பணிக்கர் தொடர்ந்தான்:'' என் நிலத்தை ஒரு அங்குலம் கூட நான் விட மாட்டேன். "
அவள் தோற்று விட்டாள். மாமாவை அணுகினாள்.
ஒரு அங்குல நிலத்தைக்கூட விடமுடியாது என்று அவரும் கூறினார்: "பிறகு...? என் மருமகன் பெரியவனாக ஆகுறப்போ, நிலம் வேறொருவரின் கையில் இருக்கக் கூடாது.''
"இன்னொருவரின் கையிலா? அவனுடைய தந்தையின் கையில்தானே இருக்கும்?''- குஞ்ஞித்தேயி மெதுவான குரலில் வாதம் செய்து பார்த்தாள்.
"என்ன?''- ஈச்சரன் நாயருக்குக் கோபம் வந்தது:
"குட்டப்பாவின் கையில் இருந்தால், அவனோட குடும்பத்துக்குப் போயிடும். புரியுதா?''
மீண்டும் சர்வே கல்லுக்கு நிம்மதி இல்லாத நிலை உண்டானது. அசைப்பதும், பிடுங்குவதும், புதைப்பதும், எடுத்து புதைப்பதும்... அந்தச் சண்டை அதிகமானது. சர்வே கல்லுக்கும் பணியாட்களுக்கும் இடையே இருந்த பிரச்சினை நின்றது. மாமனுக்கும் மருமகனுக்கும் இடையே போர்... குட்டப்பப் பணிக்கரின் மகனுக்குச் சொத்து உண்டாக்குவதற்காக, குட்டப்பப் பணிக்கருக்கு எதிராக ஈச்சரன் நாயர் கடுமையாக வாதாடினார். தன் மகனுக்கு நிலத்தைத் தராமல் இருப்பதற்காக குட்டப்பப் பணிக்கரும் தீவிரமாக போராடினான். குஞ்ஞித்தேயி அம்மா பார்த்தவாறு நின்று கொண்டு கண்ணீர் விட்டாள். அவளுடைய இடுப்பிலிருந்த குழந்தையோ அனைத்தையும் அறிந்தவனைப் போல, குலுங்கிக் குலுங்கி சிரித்தான்.
பிடிவாதம் அதிகமாகி, வழக்காக ஆனது. முதல் நீதிமன்றம் முடிந்து இரண்டாவது நீதிமன்றத்திற்கு வந்தபோது, மலைப்பகுதியிலிருந்த மரங்கள் அனைத்தையும் அறுத்து விற்று வழக்கை நடத்துவதற்கான வழியைப் பார்த்தார் ஈச்சரன் நாயர். ஒரு துண்டு நிலத்தை விற்க வேண்டிய நிலை குட்டப்பப் பணிக்கருக்கு ஏற்பட்டது. அதற்குப் பிறகும் அந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மனிதர்களும் விடுவதாக இல்லை.
இரண்டு பேரும் பார்க்க நேர்ந்தால், பேச மாட்டார்கள். தலையைத் திருப்பிக் கொண்டு ஓடி விடுவார்கள். சில நாட்கள் கடந்த பிறகு, குட்டப்பப் பணிக்கர் இல்வாழ்க்கை நடத்துவதற்காக வருவதை நிறுத்திக் கொண்டான். குஞ்ஞித்தேயி அம்மாவிற்குக் கவலை உண்டாகும் அல்லவா? பணிக்கர் எதற்கு திருமண உறவிலிருந்து விலகி இருக்கிறான் என்பதை ஈச்சரன் நாயரால் புரிந்து கொள்ள முடியவில்லை. மருமகளைப் பற்றி குறை கூறும் அளவிற்கு ஒரு விஷயமும் இல்லையே!
மூன்று நாட்கள் குஞ்ஞித்தேயி அம்மா காத்திருந்தாள்.
வரவில்லை. நான்காவது நாளன்று அவள் சர்வே கல்லுக்கு அருகில் சென்று சற்று ஆட்டிப் பார்த்தாள். அசைந்தது. சில நாட்களாகவே அந்தக்கல்லுக்கு ஒரே இடத்தில் இருப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை.
அவள் பணியாளை அழைத்து அதை ஆட்டிப் பிடுங்க வைத்தாள். இரண்டு பேரும் சேர்ந்து தாங்கிப் பிடித்து கிணற்றில் கொண்டு போய் போட்டார்கள். மருமகனுக்காக ஈச்சரன் நாயர் அந்தக் கிணற்றில் வளர்த்த ப்ரம்மி நாற்றுகள் (ஒரு வகையான செடி.சரீரத்தைச் சுத்தம் செய்வதற்காகவும், நினைவாற்றலை உண்டாக்கவும் குழந்தைகளுக்கு இதன் நீரைத் தருவார்கள். பொதுவாக கிணற்றில் வளர்ப்பார்கள்) அலைகளில் கிடந்து ஊசலாடின. குஞ்ஞித்தேயி அம்மா தலையை உயர்த்திப் பார்த்தாள். சர்வே கல் இல்லாத அந்த நிலம் அவளுடைய இதயத்தைப் போலவே விரிந்து கிடந்தது. தொடர்ந்து பெருமூச்சு விட்டவாறு அந்த பெண் கூறினாள்:
"இது இத்துடன் முடியட்டும்!''
அன்று சாயங்காலம் ஈச்சரன் நாயர் சர்வே கல்லைப் பார்த்தார். காணவில்லை. பதைபதைத்து விட்டார். மருமகளை அழைத்து கேட்டார்: "சர்வே கல் எங்கே... குஞ்ஞித்தேயி?"
"என் நெஞ்சில்....!''- சற்று கோபத்துடன் குஞ்ஞித்தேயி கூறினாள் : " மாமா, நீங்க என் குழந்தைக்கு சர்வே கல் உண்டாக்கித் தருவதற்காக, தந்தையைத் தூக்கி எறிஞ்சிட்டீங்க!"
"தந்தை இல்லாமலும் வாழலாம். நிலம் இல்லாவிட்டால், வாழ முடியாது.''- பெரியவர் நினைவுபடுத்தினார்.
"நிலம் முழுவதையும் கொடுத்தாலும், ஒரு தந்தை கிடைக்க மாட்டான்.''- குஞ்ஞித்தேயி தொடர்ந்து கூறினாள்: "சிவனே! என் நெஞ்சிலிருந்து இந்த சர்வே கல்லைச் சற்று எடுத்து நீக்கினால் போதும்.'' குஞ்ஞித்தேயியின் அந்த வார்த்தைகள் வெட்டவெளியில் சென்று மோதி எதிரொலித்தது. பூமியும் அதை ஏற்றுக் கொண்டு எதிரொலிப்பதாக அவள் உணர்ந்தாள்.
"எனக்கு அதைத் தவிர, வேறுவழியில்லை.''- பெரியவர் கூறினார்: "என் குடும்பத்தை நான் நாசமாக்க மாட்டேன்.''
"அப்படின்னா.... நான் என் உயிரைப் போக்கிக் கொள்வேன்.''- குஞ்ஞித்தேயி சத்தியம் செய்தாள். ஈச்சரன் நாயர் அதிர்ச்சியடைந்து விட்டார்.
அன்று வரை அந்த குடும்பத்தில் ஒரு பெண்ணின் குரல் இவ்வாறு எழுந்ததில்லை. தன் மருமகளா இப்படிப் பேசுகிறாள்? அவர் ஆகாயத்தையும் பூமியையும் சற்று பார்த்தார். சுற்றிலும் கண்களை ஓட்டினார். வாசலுக்குச் சென்று சிந்தனை செய்தவாறு நடந்தார். பூமியின் ஆணிக்கற்கள் நகர்கின்றனவோ? பூமியே கையை விட்டுப் போகிறதோ? காலுக்குக் கீழே வெறுமையோ? அத்துடன் சேர்ந்து தன் குடும்பத்தின் மூல கற்களும் அசைந்து நீங்கி போகின்றனவோ? ஈச்சரன் நாயருக்கு அழுகை வந்தது. சாயங்காலம் முடியும் வரை அவர் நடந்து கொண்டிருந்தார். இறுதியில் மருமகளை அழைத்தார் :
"குஞ்ஞித்தேயி...''
"என்ன மாமா?''
"பாரு... நீ தூக்கில் தொங்கி சாக வேண்டாம். நான் வழக்கைத் திரும்ப பெறுகிறேன். உனக்கு விருப்பமில்லாத ஒன்றை மாமாவான நான் செய்தால், இந்த குடும்பத்தில் எந்த சர்வே கல்லையும் உறுதியாக நிறுத்தி வைக்க முடியாது. இப்போதே நான் குட்டப்பனைப் பார்க்குறேன். கவலைப்பட வேண்டாம். புரியுதா?''
___________________________
மொழி பெயர்ப்பாளரின் உரை
வணக்கம்.
அனைத்து இலக்கிய உள்ளங் களுக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இந்த மாத 'இனிய உதய'த்திற்காக 3 சிறுகதைகளை நான் மொழி பெயர்த்து வழங்குகிறேன்.
"சர்வே கல்' என்ற கதையை எழுதியவர் மலையாள இலக்கியத்தின் நட்சத்திர எழுத்தாளர்களில் ஒருவரான உறூப்.
இவரின் உண்மைப் பெயர் பி.சி.குட்டிக் கிருஷ்ணன்.
தேசிய சாகித்ய அகாடெமி விருது பெற்றவர் இவர்.
இந்த கதை எழுதப்பட்ட வருடம் 1954.
ஈச்சரன் நாயர், அவரின் மருமகளான குஞ்ஞித்தேயி அம்மா, அவளின் கணவனான குட்டப்பப் பணிக்கர் என்ற மூன்று கதாபாத்திரங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.
1950 களின் மலையாள மக்களின் வாழ்க்கையைக் கண்ணாடி என இந்த கதை பிரதிபலிக்கிறது.
"மருமக்கத்தாயம்' என்ற வழக்கு கேரள மக்களின் வாழ்க்கையில் எத்தகைய பங்கு வகித்திருக்கிறது என்பதை இந்த கதையின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
"காளியமர்த்தனம்' என்ற கதையை எழுதியவர் தேசிய சாகித்ய அகாடெமி விருது பெற்றவரும்,மூத்த மலையாள எழுத்தாளருமான மலயாற்றூர் ராமகிருஷ்ணன்.
இவர் ஒரு ஐ. ஏ. எஸ். அதிகாரி.
கலெக்டராக பணி புரிந்தவர்.
கேரள அரசின் பிரதான செக்ரட்டரி யாக இருந்தவர்.
ஓய்வு பெற்ற ஒரு காவல் துறை அதிகாரி, அவரின் மனைவி, பாஷிணி என்ற பணிப்பெண் ஆகியோரை கதா பாத்திரங்களாக வைத்து எழுதப்பட்ட கதை.
மாறுபட்ட கதைக்கருவைக் கொண்ட இந்த கதையில் வரும் மஞ்சுபாஷிணி என்ற பாஷிணி அருமையான, வித்தியாசமான கதாபாத்திரம்.
கதையை வாசித்து முடித்த பிறகும், பாஷிணி நம் மனங்களில் குடி கொண்டிருப்பாள்.
"ஒரு புதிய நுண்ணுயிர்' என்ற கதையை எழுதியவர் உலக புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளரான ஓ. ஹென்றி.
அறிவியலில் அளவற்ற ஆர்வத்தை வைத்திருக்கும்... நுண்கிருமிகளைப் பற்றிய ஆராய்ச்சியைச் செய்யும் ஒரு மனிதரின் கதை.
ஓ. ஹென்றியின் கதை என்றாலே, இறுதியில் ஒரு "ட்விஸ்ட்' இருக்கும். இதிலும் அந்த 'திருப்பம்' இருக்கிறது.
அதுதான் "ஓ. ஹென்றி டச்'.
இந்த கதைகள் ஓவ்வொன்றும் உங்களுக்கு வெவ்வேறு அனுபவங் களைத் தரும் என்பது நிச்சயம்.
"இனிய உதயம்' மூலம் நான் மொழி பெயர்க்கும் சிறந்த இலக்கிய ஆக்கங்களை ஆர்வத்துடன் வாசிக்கும் அனைத்து உயர்ந்த உள்ளங்களுக்கும் என் இதய நன்றி.
அன்புடன்,
சுரா
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/07/ss2-2026-01-07-15-15-34.jpg)