சுனந்தாவைப் பற்றி பரமேஸ்வரன் பிள்ளை எப்போதும் கூறுவார்:

"இவளுடைய முகம்தான் இவளுக்கு அதிர்ஷ்டம்''.

இறப்பதற்காகக் கிடக்கும்போதும், அவர் இவ்வாறு கூற முயற்சித்திருக்கலாம். ஆனால், வார்த்தைகள் வெளியே வரவில்லை. அவர் சைகை செய்து சுனந்தாவை அருகில் வரவழைத்தார்.

Advertisment

நடுங்கிக் கொண்டிருந்த ஒரு கையை அவளின் தலையில் வைத்தார். பிறகு... சில நிமிடங்களிலேயே கண்களை மூடிவிட்டார்.

பரமேஸ்வரன் பிள்ளையின் இறந்த உடலைச் சுற்றி... அப்போது மனைவி மாதவியும் சுனந்தாவின் தங்கைகள்- ரமாவும் வாசந்தியும்- நின்று கொண்டிருந்தார்கள்.

பரமேஸ்வரன் பிள்ளை கண்களை மூடியபோது, மாதவி அழுதாள்- ஒரு கடமையை நிறைவேற்றுவதைப்போல. சுனந்தா குமுறி அழுதாள். இனி எந்தக் காலத்திலும் தந்தை கண்களை திறக்கப்போவதில்லை என்ற விஷயம் அந்த பதினைந்து வயதுக்காரிக்கு புரிந்திருக் கிறது என்பது மட்டுமல்ல... இந்த மரணம் தன் எதிர்காலத்தை மொத்தத்தில் பாதிக்கும் என்றும் அவள் நினைத்திருக்கலாம். ரமாவும் வாசந்தியும் அழவில்லை.

Advertisment

பன்னிரண்டு வயதிலும் ஒன்பது வயதிலும் ஒரு மரணத்தால் பாதிப்பு உண்டாக்க முடியும் என்று கூறுவதற்கில்லை.

சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்த குடும்பம் அது. பரமேஸ்வரன் பிள்ளை லாரி ஓட்டுநராக இருந்தார். 

ஆரானின் லாரியில் சம்பளம் வாங்கக்கூடிய மனிதராக இருப்பதன் மூலம் என்ன கிடைத்துவிடப் போகிறது? இடையே சிறிய அளவில் திருட்டுத்தனம் பண்ணினால்கூட... எனினும், அவருக்கு ஆசைகள் இருந்தன. குறிப்பாக- சுனந்தாவைப் பற்றி. மாதவி யிடம் அவர் கூறுவார்: 

"அடியே.... இவள் ஏதாவதொன்றாக ஆவாள். இவளுடைய முகம்தான் இவளுக்கு அதிர்ஷ்டம்''.

சுனந்தாவின் அழகின் சிறிய அளவுகூட ரமாவிடமும் வாசந்தியிடமும் இல்லை. ஒரே தந்தைக்கும் தாய்க்கும் பிறந்த மூன்று பெண் குழந்தைகளில் இரண்டு பேருக்கு ஏன் அழகு இல்லாமல்போனது? பணி முடிந்து சிறிய அளவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும்போது, பல இரவு வேளைகளில் மாதவியிடம் பரமேஸ்வரன் பிள்ளை இந்த கேள்வியைக் கேட்டிருக்கிறார்.

பதிலையும் அவரே கூறுவார்: "முதல் குழந்தையின் அழகு பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு இருக்காது. அதுதான் விஷயம்! சுனுவின் முகம்தான் அவளின் அதிர்ஷ்டம்...

பார்த்துக்கோ.... அவள் இன்னும் கொஞ்சம் வளரட்டும்.'' சில நேரங்களில் மாதவி பெருமையாகக் கூறுவாள்:

"சுனு என்னைப் போல...என்னுடைய சாயலில்... ரமாவிற்கும் வாசந்திக்கும் உங்களுடைய ஜாடை....''

பரமேஸ்வரன் பிள்ளை எதிர்த்துக் கூறமாட்டார்.

உண்மையான விஷயம். மாதவி அழகு படைத்தவள்.

பரமேஸ்வரன் பிள்ளை நல்ல உடல்நலத்துடன் இருந்தார்.

பொதுவாகவே இன்னும் பல வருடங்கள் உயிருடன் இருக்கவேண்டியவர்.

ஆனால், வாழ்க்கைப் பாதையில் வெண்ணிற கோடைக் கார்மேகத்தின் அங்கியை அணிந்து கொண்டு மரணம் பதுங்கியிருந்தது.

அடிமாலியிலிருந்து மூணாறுக்குச் செல்லும் போது, லாரி ஒரு பள்ளத்தாக்கில் விழுந்தது. உடனே இறக்கவில்லை.

வீட்டை அடைவதற்கும் சுனந்தாவின் தலையைத் தொடுவதற்கும் அவருக்குக் கொடுப்பினை இருந்தது- 

விபத்து நடைபெற்ற இடத்தில் வந்து கூடிய நல்லவர்களான ஊர்க்காரர்களில் ஒருவருக்கு அவரை அடையாளம் தெரிந்ததால்....

துக்கம் என்பது நீண்ட காலத்திற்கு சுமந்து கொண்டு திரிவதற்கான உணர்ச்சி அல்ல. மரணத்திற்குப் பிறகு நடத்தப்பட வேண்டிய இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்தவுடன், மாதவியின் வீடு கிட்டத்தட்ட பழைய நிலைக்கு வந்துவிட்டது.

பரமேஸ்வரன் பிள்ளை வரமாட்டார் என்பதும், செலவிற்கு காசு கொண்டு வந்து தரமாட்டார் என்பதும் மிகப் பெரிய ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கவேண்டும் அல்லவா? அப்படியெதுவும் உண்டாகவில்லை.

உயிருடன் இருந்தபோதும், தினமும் வீட்டிற்கு வருவது என்பது அவரால் இயலாத ஒரு விஷயம்தானே? லாரியின் ஓட்டம் சில நேரங்களில் இடுக்கியில் இருக்கும். சில நேரங்களில் வயநாட்டில். பிறகு.... 

செலவிற்கான பணம்...

தற்போதைக்கு அது பிரச்சினையே இல்லை. லாரியின் உரிமையாளர் மாதவியிடம் ஏழாயிரம் ரூபாய்களைக் கொடுத்தார்.

இனிமேலும் அவர் ஏதாவது கொடுக்கலாம்.

ட்ரைப்யூனலிலும் நீதிமன்றத்திலும் ஏறி இறங்கினால், கனமான "காம்பன்சேஷன்' கிடைக்கும் என்று ஆட்கள் கூறுகிறார்கள். நடந்ததைக் கூறிக் கொண்டு தினமும் துக்கத்தில் இருப்பதற்கு முப்பத்தேழு வயதையும் பரவாயில்லாத அழகையும் கொண்ட மாதவி தயாராக இல்லை. பாதிப்பிற்கு ஆளானவள் சுனந்தா மட்டுமே. அவள் ப்ரீ- டிகிரியில் சேர்வதற்கு தயார்நிலையில் இருந்தாள். இனி படிப்பு எதுவும் தேவையில்லை என்று மாதவி கூறிவிட்டாள்.

சுனந்தா முகத்தைக் கவலையுடன் வைத்துக்கொண்டு நடந்தாள். அதிர்ஷ்டம் குடிகொண்டிருக்கும் முகம்.... அவளுடன் சேர்ந்து படித்த சூஸியும் ஸ்ரீதேவியும் சுபைதாவும் கல்லூரிக்குச் செல்லும்போது, அவள் மட்டும்....

"அவங்க எல்லாரும் பெரிய இடத்துப் பிள்ளைங்கடீ....! நீ அவங்களைப் போல நினைச்சு நடக்கவேண்டாம். அவங்களைப்போல ஆகணும்னு ஆசைப்பட வேண்டாம். நாம... நம்ம நிலையில நிற்கணும்.''- மாதவி இந்த மாதிரி பல முறைகள் கூறி விட்டாள்.

சுனந்தாவிற்கு அப்படி அமைதியாக இருக்க முடியவில்லை.

சூஸியை விட...

 ஸ்ரீதேவியை விட... சுபைதாவைவிட.. 

அழகானவள் அவள். அவர்களை விட அறிவிலும் உயர்ந்தவள்.

அவளுடைய ஆங்கில உச்சரிப்பைப் பற்றி வகுப்பு ஆசிரியைகள் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். பள்ளியின் இளம் தலைமுறை திருவிழாவில் நிறைய பரிசுகளை வென்றெடுத்தது அவள்தானே? தங்கைகளான ரமாவையும் வாசந்தியையும் போல, அடங்கியிருக்கக் கூடிய குணத்தைக் கொண்டவள் அல்ல அவள். "நம்முடைய நிலையில் நிற்கவேண்டும்'' என்றால், என்ன அர்த்தம்? தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அர்த்தமா? விதிக்கப்பட்டதைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்றும், ஆசைப்படுவதற்கான துணிச்சலே இருக்கக் கூடாது என்றும் அவளின் தாய் கூறுகிறாளா?

"அதற்கு நான் தயாராக இல்லை..... தயாராகவே இல்லை....''- சுனந்தா தனக்குத்தானே கூறிக்கொண்டாள். தந்தை இருந்திருந்தால், அவள் கல்லூரிக்குச் சென்றிருப்பாள் என்பது உண்மை. தந்தைக்கு அவளின் அறிவுக்கூர்மையின் மீது மதிப்பு இருந்திருக்குமா? தெரியவில்லை.

அவளுடைய அழகைப் பற்றி உயர்ந்த எண்ணம் இருந்தது.

இல்லாவிட்டால்.... திரும்பத் திரும்ப கூறியிருப்பாரா, அவளுடைய முகம்தான் அவளுடைய அதிர்ஷ்டம் என்று?

ஒரு பெண் பிள்ளையின் முகம் அவளுடைய அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதற்கான அர்த்தம் என்ன? இந்த கேள்வியை மனதில் திரும்பத் திரும்ப வலம் வரச்செய்தவாறு பல நேரங்களில் சுனந்தா கையிலிருந்த சிறிய கண்ணாடியையே பார்த்துக்கொண்டிருப்பாள்.

அவளுக்கு அழகான புருவங்கள்..‌. சற்று அடர்த்தி அதிகமாக இருக்கிறதோ? எனினும், வில்லைப்போல அழகாக வளைந்து இருக்கின்றன.

பிரகாசமான அருமையான கண்கள்.... இமைகள் மிகவும் நீளமாக இருந்தன. முகம் பார்க்கும் கண்ணாடியில் சுனந்தா கண்களைச் சற்று சாய்த்து வைத்துக் கொண்டும்... மிகவும் அதிகமாக சாய்த்து வைத்துக்கொண்டும்  பார்ப்பாள். கண்களை பாதி மூடிய நிலையில் வைத்துக்கொண்டு பார்ப்பாள்.

கண்களைச் சுருக்கிக்கொண்டு பார்ப்பாள். அப்போது தன்னைத்தானே அழகுணர்வுடன் பார்ப்பதைப்போல அவளுக்குத் தோன்றும்.

திரைப்படங்களில் கதாநாயகிகள் இப்படி பார்க்கும்போதுதான் காதலர்கள் அடிபணிவார்கள்.

கண்ணாடியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அவள் நினைப்பாள்: "ஒரு திரைப்பட நடிகையாக ஆவதற்கான அழகு எனக்கு இருக்கிறது. அழகான நாசி.... மலர்ந்திருக்கும் சிவப்பு நிற மொட்டுபோல இருக்கும் உதடுகள்...'' ஒருமுறை அவளுக்குத் தோன்றியது: 

"என்னுடைய அதிர்ஷ்டம் என் முகமா... என் உடலா? உடலைப் பற்றி எனக்கு தெரியவில்லை. இந்த வீட்டில்  சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் பெரிய கண்ணாடி இல்லை. அதனால், என் உடலை நான் பார்த்ததில்லை என்று கூறுவது அந்த அளவிற்குச் சரிதானா? முகத்தைப் பார்த்து ரசிப்பதற்கு  சிறிய கண்ணாடி இருப்பதைப் போல, உடலைப் பார்த்து ரசிப்பதற்கு பெரிய கண்ணாடி இல்லையே என்ற கவலைதான் எனக்கு என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். "ஸ்ரீதேவியுடன் சேர்ந்து துணிக்கடைக்கு மூன்று.... நான்கு முறைகள் போயிருக்கிறாள்.

அப்போது துணிக்கடையிலுள்ள பெரிய சுவர்க்கண்ணாடிகளில் தன்னுடைய உடலைப் பார்த்தவாறு நின்றிருக்கிறாள்.

துணிக்கடையில் சுவர்க்கண்ணாடிகளை ஒரு குறிப்பிடத்தக்க பாணியில் வைத்திருக்கிறார்கள் ஒன்று இன்னொன்றில் பிரதிபலிக்கும்.

அப்போது கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பல சுவர்க் கண்ணாடிகளிலும் தன் உருவம் தெரிவதை அவள் பார்த்திருக்கிறாள்.

சிறிதும் மோசம் என்று கூற முடியாத அளவிற்கு இருக்கக்கூடிய தோற்றம்....

ஒவ்வொன்றையும் இவ்வாறு சிந்தித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் வேளையில், ஆசைகளுக்கு வார்த்தைகளைக்கொண்டு கூற முடியாத அளவிற்கு சிறகுகள் முளைக்கும். முன்பு படித்த "சின்ட்ரல்லா' கதை ஞாபகத்தில் வரும். எங்கோ அவளை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பான் ராஜகுமாரன்.

ஒருநாள் தங்க ரதத்தில் அவன் வருவான்.

மாதங்கள் கடந்தோடின.

சூஸியும் ஸ்ரீ தேவியும் சுபைதாவும் இடையே அவ்வப்போது  சுனந்தாவைப் பார்ப்பதற்காக வந்துகொண்டிருப்பார்கள். காலப்போக்கில் அவர்களின் வருகைகள் நின்றுவிட்டன.

சுனந்தாவிற்குக் கவலை உண்டாகாமல் இல்லை.

அறிவாளியாக இருந்ததால், அந்த கவலையைச் சுமந்துகொண்டு நடப்பதற்கு அவள் தயாராக இல்லை என்பதுதான் விஷயம். மனதில் அவர்களுக்கு எதிராக அவள் ஆயுதங்களை அடுக்கி வைத்தாள். "அடியே.... சூஸி.... ஸ்ரீதேவி.... சுபைதா.... என்னுடன் சேர்ந்து படித்த பிற சருகுகளே.... உங்களுக்கு நிகராக நான் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

இல்லையா? முட்டாள்களே.... ஏதோ உயர்ந்த இடங்களுக்கு பறந்து உயர்ந்து கொண்டிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்.

இல்லையா? உங்கள் அனைவரையும் நான் இறுதியில் தோல்வியடையச் செய்வேன். நான் என் மனதில் உங்களுக்கு எதிராக கற்களை எறிகிறேன்.

என்னுடைய தற்காலிகமான முழு ஏமாற்றம் நிறைந்த கத்திகளைக் கொண்டு உங்களை இதோ.... காயப்படுத்துகிறேன்.

"நீ என்ன கனவு கண்டு கொண்டு இருக்கே?'' - மாதவி மகளிடம் கேட்பாள்.

சில நேரங்களில் இவ்வாறு கேட்பாள்: 

"ரமாவுக்கும் வாசந்திக்கும் இல்லாத தைரியம் உனக்கு எங்கிருந்து கிடைச்சதுடீ....?''

சுனந்தா பதிலெதுவும் கூறமாட்டாள்.

 "நான் ரமாவோ வாசந்தியோ அல்ல. அம்மா.... 

நான் உங்களைப் போன்றவளும் அல்ல. நான் வேறுபட்டவள்... காலம் அதை நிரூபிக்கும்" என்றோ வேறு வகையிலோ "டயலாக்' பேசினால், பெரிதாக ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை.

"அம்மா... அம்மாவின் வழியில் செல்லட்டும். நான் என் வழியில் செல்கிறேன். எனக்கு என் வழி இப்போதைக்குத் தெரியாவிட்டாலும்....''

இவ்வாறு சிந்திக்கும் தருணங்களில் சுனந்தா ஆச்சரியப்படவும் செய்வாள். "அம்மா.... அம்மாவின் வழியில் செல்லட்டும்'' என்று தனக்குத் தோன்றுவதற்குக் காரணம் என்ன?

மாதவன் நாயர்தான் காரணமா?

மாதவன் நாயர் இடையே அவ்வப்போது வந்துபோகிறார்.

தந்தையைவிட வயது  குறைந்தவர். தந்தை நாற்பத்தைந்தாவது வயதில் அல்லவா இறந்தார்? மாதவன் நாயருக்கு நாற்பதுக்கும் அதிகமாக வயது இருக்காது. கறுத்த மனிதர்... தடிமனான சரீரம்... சிவந்த கண்கள்... அவர் தந்தைக்கு நன்கு தெரிந்த மனிதராக இருந்தார்.

இப்படித்தான் அவளின் தாய் கூறினாள். தன் தாய்க்கு இப்போதும் இளமை இருக்கிறது என்று சுனந்தாவிற்குத் தெரியும். தன் அன்னையின் வயது முப்பத்தேழு என்று தெரியும் என்ற அர்த்தத்தில் அல்ல. தன் தாயின் நடவடிக்கைகளைப் பார்த்துத் தெரிந்துகொண்டாள்.

மாதவன் நாயர் வரக்கூடிய நாட்களில் அவளுடைய தாய் தன்னை அழகுபடுத்திக் கொண்டு காணப்படுவாள்.

"வருவேன்'' என்று அவர் முன்கூட்டியே கூறிவிடுவாரோ? எது எப்படியோ‌.. அவர் வரும்போது, அவளுடைய அன்னை உடலை நன்கு தேய்த்துவிட்டு, குளித்திருப்பாள்.

சோப்பிற்குப் பதிலாக பயறுப் பொடியை பயன்படுத்துவாள்.

சிறிது சென்ட் தேய்த்திருப்பாள்.

இருப்பதில் நல்லதாக இருக்கக்கூடிய ரவிக்கையையும் புடவையையும் அணிவாள். மாதவன் நாயர் வரும்போதெல்லாம் அவளின் அன்னை விசேஷமாக எதையாவது சமைப்பாள். அவர் ஏன் அவளுடைய தாயிடம் இந்த அளவிற்கு அதிகமாகப் பேசுகிறார்? எதைப் பற்றி? எதற்கு அவர்கள் அறையின் கதவிற்கு தாழ்ப்பாள் போடுகிறார்கள்? மிகவும் சிறியதாக இருக்கக்கூடிய இந்த வீட்டில் நடப்பதில் கவனத்தைச் செலுத்தக்கூடாது என்று உறுதியாகத் தீர்மானித்தாலும், அவளின் தாயின், மாதவன் நாயரின் வெடித்த சிரிப்பு அடிக்கடி கேட்டுக்கொண்டேயிருந்தது.

"இந்த கறுத்த மனிதர் எதற்காக இங்கு அடிக்கடி வருகிறார்? ரமாவிற்கும் வாசந்திக்கும் எதற்கு சாக்கலேட் வாங்கிக்கொடுக்கிறார்? தன்னைப் பார்க்கும்போது மட்டும் அவர் சற்று பதுங்குவதற்குக் காரணம் என்ன?' இப்படிப்பட்ட பல சந்தேகங்கள் உண்டானாலும்,

சுனந்தா தன் தாயிடம் எதுவுமே கேட்கவில்லை. அவர் தன் தந்தைக்கு நன்கு தெரிந்தவர் என்றல்லவா அவளின் அன்னை கூறுகிறாள்! அது முழுமையான ஒரு பதில் என்பதைப் போல...

ஒருநாள் மாதவன் நாயர் வந்தபோது, கையில் சுமையாக ஒரு பெட்டி இருந்தது. அன்று இரவு அந்த ஆள் அங்கேயே தங்கிவிட்டார். முன்பு நடந்திராத ஒரு சம்பவம்... அதைவிட சுனந்தாவை ஆச்சரியப்பட வைத்த சம்பவம், அந்த மனிதர் திரும்பிச் செல்லவில்லை என்பதுதான்.

மாதவன் நாயர் ஏன் திரும்பிச் செல்லவில்லை என்பதை சுனந்தா தன் தாயிடம் கேட்கவில்லை.

அவர்களுக்கிடையே நெருக்கமான உறவு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு வளர்ச்சி தனக்கு இல்லையா? திடீரென தோன்றியது.

அவர்களுடைய பெயர்கள் கூட ஒரே மாதிரி இருந்தன. மாதவன், மாதவி... அவர் நிரந்தரமாக சேர்ந்து வாழ்வதற்காக வந்திருக்கலாம். தாய், அவளின் வழியிலேயே செல்லட்டும்...

மாதவன் நாயர் அங்கு தங்க ஆரம்பித்து, இரண்டு... மூன்று நாட்கள் கடந்த பிறகு, மாதவி சுனந்தாவிடம் கேட்டாள் : "நீ அந்த மனிதரைப் பற்றி என்ன நினைக்கிறே?''

"நான் ஒண்ணுமே நினைக்கல.''

சுனந்தா கூறினாள்.

"உன் அப்பாவின் நண்பர்.''

"அப்படியா?''

"வக்கீலைப் பார்த்ததுகூட அவர்தான். நமக்கு பெரிய ஒரு தொகை நஷ்ட ஈடாகக் கிடைக்கும் என்று கூறுகிறார். இதைப் போன்ற லாரி விபத்துகளுக்கு ஒரு லட்சம்.... ஒன்றரை லட்சம்னு கிடைக்குமாம்.‌‌..''

"நல்ல விஷயம்''.

"நீ என்னடீ ஒரு வார்த்தையிலும் ஒன்றரை வார்த்தையிலும் பேசிக்கிட்டு இருக்கே....!''

 சுனந்தா அமைதியாக இருந்தாள்.

" சுனு... இவர் நல்ல மனிதர். வசதி படைத்தவர்.ரப்பர் வியாபாரம்... ரப்பரை வாங்கி டயர் கம்பெனிக்குக் கொடுக்குறப்போ, நல்ல கமிஷன் கிடைக்கும்.''

"அப்படியா....?

"உனக்கு அவரைப் பிடிக்குதா?''

"எனக்கு எதுக்கு அவரைப் பிடிக்கணும்?"

"பெண்ணே....நீ இந்த மாதிரி எடக்குமடக்கா பேசாதடீ... அவர் இங்கு தங்கி வாழ வந்திருக்கிறார் என்ற விஷயம் உனக்குத் தெரியுமா?''

"தங்கட்டும்.... அம்மா... உங்க விருப்பம்..‌.''

"இனிமேல் அவருக்கு உன் அப்பாவோட இடம்...‌''

சில நிமிடங்களுக்கு சுனந்தாவிற்குக் கோபம் உண்டானது.

"இந்த செங்கண் உள்ள மனிதருக்கு... கறுப்பு நிறம் படைத்த ஆளுக்கு என் அப்பாவின் இடமா?'

"சுனு... நீ அந்த மனிதரை அந்நியராக நினைக்கக்கூடாது. இனிமேல் இந்த முழு குடும்பத்தையும் பார்த்துக் கொள்ளப்போகிறவர் அந்த மனிதர்தான்.''

அந்த காட்சி அத்துடன் முடிந்தது.

மாதவன் நாயர் இல்லத் தலைவரின் இடத்தில் அமர்ந்திருந்தார்.

ரமாவிற்கும் வாசந்திக்கும் அவர் அறிவுரை கூற ஆரம்பித்தார்.

"பள்ளிக்கூடம் விட்ட உடனே, வேகமாக இங்கு வந்துடணும்.வழியில வாயைப் பார்த்துக்கிட்டு நிற்கக் கூடாது. வீட்டுப் பாடங்களைச் செய்துட் டீங்களா, பிள்ளைகளே?''

சுனந்தாவின் நடவடிக்கைகளைத் தான் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அந்தப் பக்கம் நுழைந்து பேசும்போதெல்லாம், அவள் ஒன்றோ இரண்டோ வார்த்தைகளில் பதில் கூறிவிட்டு சென்றுவிடுகிறாள். இந்தப் பக்கம் வந்து பேசுவதற்கு எந்தச் சமயத்திலும் அவள் தயாராக இல்லை. அவளைப் பார்க்கும்போதெல்லாம் மாதவன் நாயரின் மனம் பதறிக் கொண்டிருந்தது.

அழகு ஆட்சி செய்யும் பெண்.... பார்த்துக்கொண்டு நிற்பது என்பது சிரமமானது.

ஒருநாள் சுனந்தா தன் கையிலிருந்த கண்ணாடி யைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, பின்னால் யாரோ வந்து நின்றுகொண்டிருப்பதைப்போல அவளுக்குத் தோன்றியது.

திரும்பிப் பார்த்தபோது, அவள் அதிர்ச்சியடைந்து விட்டாள். வெறித்துப் பார்த்தவாறு மாதவன் நாயர் நின்றுகொண்டிருந்தார். ஒரு வார்த்தைகூட கூறாமல் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதற்கடுத்த நாள் எதிர்பாராத ஒரு சம்பவம் நடைபெற்றது.

மாதவன் நாயர் ஒரு பெரிய கண்ணாடியை வாங்கிக் கொண்டு வந்தார். அவரே அதை சுவரில் இருக்கும்படி செய்தார். பெரிய ஒரு காட்சியைப் பார்க்க வந்திருப்பதைப்போல ரமாவும் வாசந்தியும் மாதவியும் அருகில் நின்றிருந்தார்கள்.

தள்ளி நின்றிருந்த சுனந்தாவும் அதைப் பார்த்தாள்.

அவளுக்கு ஆச்சரியம் உண்டானது. சுவரில் இருக்கக்கூடிய பெரிய கண்ணாடியை வாங்குவதற்கு அந்த மனிதரைத் தூண்டியது எது? சுவரில் இருக்கும் பெரிய கண்ணாடி அவளுக்கு மிகவும் பிடித்த பொருள் என்பதை அவர் எப்படி அறிந்தார்? அவளுடைய தாய் ஏதாவது சூசகமாக கூறியிருப்பாளோ?

சுவரில் பதிக்கப்பட்டிருந்த பெரிய கண்ணாடியை புடவையின் நுனியால் துடைப்பதற்கு மத்தியில், விலகி நின்றிருந்த சுனந்தாவின் காதுகளில் விழும் வண்ணம் மாதவன் நாயர் கூறினார்: 

"நான் இதை சுனந்தாவிற்கென்றே வாங்கினேன்.''

அப்போது சுனந்தா எதுவும் கூறவில்லை.

சிறிது நேரம் கழித்து, வாசலில் வைத்து பார்த்தபோது, மாதவன் நாயர் சுனந்தாவிடம் கேட்டார்: 

"உனக்கு நிலைக் கண்ணாடியைப் பிடித்திருக்கிறதா?''

மரியாதைக்கு பங்கம் உண்டாவதைப்போல நடந்து சுனந்தாவிற்குப் பழக்கமில்லை.

நிலைக்கண்ணாடி விருப்பப்பட்ட பொருள்தான்.

அதனால் அவள் மனதைத்திறந்து கூறினாள்: "மிகவும் பிடிச்சிருக்கு.... நீண்ட நாட்களாகவே நான் ஆசைப்பட்டதுதான்...''

புன்னகைத்துக்கொண்டே அவள் நடந்து நீங்கினாள்.

மாதவன் நாயர் சந்தோஷமடைந்தார்.

தொடர்ந்து வந்த நாட்களில் சுனந்தா ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தாள்.

மாதவன் நாயர் அவளை வெறியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

அவளுக்கு பயமெதுவும் உண்டாகவில்லை.

மனதில் வேடிக்கையான உணர்வுதான் உண்டானது. "அந்த மனிதர் மோசமானவர்.

நிலைக் கண்ணாடியின்மூலம் என்னுடைய இதயத்திற்கு பாலம் அமைத்துவிட்டதாக இந்த சிவந்த கண்களைக்கொண்ட மனிதர் நினைத்துக் கொண்டிருக்கிறார்.'

மாதவன் நாயர் உரிய நேரத்திற்காக காத்திருக்கிறார்.

ரமாவும் வாசந்தியும் பள்ளிக்கூடத்திற்குச் சென்றிருக்கும் நேரம். ஏதோ தேவைக்காக மாதவியும் வெளியே போயிருந்தாள்.

கயிற்றுக்கட்டிலில் பீடியைப் புகைத்தவாறு படுத்திருந்த மாதவன் நாயர் ஒரு முனகல் பாடலைக் கேட்டார்.

சமையலறைக்கு அருகிலிருந்த, ஓலைகளால் வேயப்பட்ட, குளியல் அறையிலிருந்து முனகல் பாட்டு எழுந்து வந்தது.

கட்டிலுக்கு அடியில் இருந்த அரைப் புட்டியை எடுத்து பருகியதும், மாதவன் நாயருக்கு தைரியம் வந்து விட்டது.

ஓலைகளின் மறைவில் இடைவெளிகள் இருந்தன.

அவர் ஒளிந்து பார்த்தார்.

இவளுக்கு பதினைந்து வயதா?

இது நன்கு விளைந்த கனி.

அவர் முன்னோக்கி வந்தார். சோப்பு நுரையுடன் நின்றிருந்த சுனந்தாவை நோக்கி அவருடைய கை நீண்டது.

அவள் அந்த கையைக் கடித்ததும், வேதனையுடன் அவர் பின்வாங்கினார்.

மீண்டும் அவர் முன்னோக்கி வந்தபோது, துணி துவைப்பதற்காக தரையில் இடப்பட்டிருந்த கல் சுனந்தாவின் கண்ணில் பட்டது.அவள் அதை எடுத்து உயர்த்தினாள்.

பெரிய ஒரு கூச்சலுடன் கீழே விழுந்த மாதவன் நாயரின் தலையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

அதற்குப் பிறகு... சுனந்தா வீட்டில் நிற்கவில்லை.

ஓடினாள்.

அந்த ஓட்டம் அவளைக் கொச்சியிலும் பம்பாயிலும் கொண்டு போய் சேர்த்தது.... நிழல் உலகத்திற்குள்...

சமீபத்தில் சுனந்தா மேத்தா என்ற அழகியின் மோசடிக் கதைகளை பத்திரிகைகளில் செய்தியாக வாசித்தபோது, மேலே கூறிய அனைத்து விஷயங் களும் ஞாபகத்தில் வந்தன.