விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ‘ககன்யான்’ லட்சியத் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 4 வீரர்களில் ஒருவர் லக்னோவை சேர்ந்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா. இவர் அனுபவ பயிற்சி நோக்கங்களுக்காக அமெரிக்காவின் ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல கடந்த ஆண்டு தேர்வானார். இஸ்ரோ, நாசா ஆதரவிலான இத்திட்டத்தில், சுக்லாவுடன் ஆக்ஸியம்-4 திட்ட கமாண்டரும் நாசா முன்னாள் பெண் விஞ்ஞானியுமான பெக்கி விட்சன், போலந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு ஆகியோரும் இணைந்தனர்.

மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு, ராக்கெட் ஏவுதலில் சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளால் இவர்களின் விண்வெளிப் பயணம் ஆறு முறை ஒத்திவைக்கப்பட்டது. பல்வேறு தடைகளுக்குப் பிறகு, அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நாசா விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ‘டிராகன் கேஸ்’ விண்கலத்தில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி புறப்பட்ட இவர்கள், 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு மறுநாள் சர்வதேச விண்வெளி நிலையத்தை பாதுகாப்பாக அடைந்தனர்.

வெற்றி பயணம் : கடந்த 1984-இல் ரஷ்ய விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்ற இந்திய வீரர் ராகேஷ் சர்மாவுக்கு பிறகு 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்குப் பயணித்த 2-வது இந்திய வீரர்; சர்வதேச விண்வெளி நிலையத்தில் தடம் பதித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமைகளை சுக்லா பெற்றுள்ளார்.

Advertisment

18 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுக்லா உள்ளிட்ட நால்வரும் உயிரி மருத்துவஅறிவியல், நரம்பணுவியல், வேளாண்மை, விண்வெளித் தொழில்நுட்பம் என பல்வேறு பரிமாணங்களில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.

திட்டப் பயணம் முடிந்து, ஜூலை 14-ஆம் தேதி டிராகன் கிரேஸ் விண்கலத்தில் மீண்டும் பூமிக்கு புறப்பட்டனர்.

முதலில், சர்வதேச விண்வெளிநிலையத்தை விட்டு டிராகன் விண்கலம் வெளியேறியது. தரையிறங்கவேண்டிய இடத்தை நோக்கி நகர்ந்தது. 12 நிமிடங்கள், எரிபொருளை செலவிட்டு சுற்றுவட்டப்பாதையில் இருந்து பூமியை நோக்கி திரும்பியது. இந்த விண்கலம், ஜூலை 15 பிற்பகலில் சாண்டியாகோ கடற்பரப்பில் பாராசூட்டுகள் உதவியுடன் விண்கலம் பாதுகாப்பாக இறங்கியது. பின்னர், படகுகள் மூலம் மீட்பு கப்பலுக்கு விண்கலம் எடுத்து வரப்பட்டது.

Advertisment

suba1

விண்கலத்தில் இருந்து பணியாளர்கள் உதவியோடு வெளியே வந்த சுக்லா உள்பட நான்கு பேரும் 20 நாள்களுக்குப் பின் பூமிக் காற்றை சுவாசித்தனர்; கேமராவை பார்த்து புன்னகையுடன் கையசைத்தனர். பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியதன் மூலம் ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் நால்வரின் விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

7 நாள்கள் பிரத்யேக சிகிச்சை : புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் கிட்டதட்ட மூன்று வாரங்களைக் கழித்து விட்டு, மீண்டும் பூமிக்கு திரும்பியிருப்பதால், விண்கலத்தில் இருந்து வெளியே வந்து, அவர்கள் அடியெடுத்து நடக்க பிற பணியாளர்கள் உதவினர். நால்வருக்கும் உடனடியாக மருத்துவ பரிசோதனைகள்மேற்கொள்ளப்பட்டன. பின்னர், ஹெலிகாப்டர் மூலம் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவுவதற்காக, 7 நாள்கள் பிரத்யேக சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

20 நாள்; 60 ஆய்வு 1.3 கோடி கி.மீ., தூர பயணம் : பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்தில் மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் சுற்றி வருகிறது. ஆக்ஸியம்-4 திட்ட வீரர்கள், விண்வெளியில் மொத்தம் 1.3 கோடி கி.மீ. பயணித்துள்ளனர். 310-க்கும் மேற்பட்ட முறை பூமியை வலம் வந்துள்ளனர்.

2025 ஜூன் 25 மதியம் 12:01 மணி :

ஆக்சியம் மிஷன் 4' திட்டத்தின் கீழ் இந்தியாவின் சுபான்ஷு உட்பட நான்கு வீரர்கள் 'க்ரூவ் டிராகன்' விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணம் 

ஜூன் 26 மாலை 4:00 மணி : சர்வதேச விண்வெளி மையத்துக்குள் நுழைவு 

ஜூலை 14 மாலை 4:30 மணி : விண்வெளி மையத்தில் இருந்து ‘டிராகன் கிரேஸ்’ விண்கலம் பூமிக்கு புறப்பட்டது 

ஜூலை 15 மதியம் 3:01 மணி : பசிபிக் பெருங்கடலில் விண்கலம் தரையிறக்கப்பட்டது 18 நாளில் 4 பேரும் 60 ஆய்வுகளை செய்தனர். 

இஸ்ரோவின் 7 ஆய்வுகள் : திசு மறுஉருவாக்கம், விதை முளைப்பு, நீலப்பசும்பாசி வளர்ப்பு, கதிரியக்க விளைவுகள், மனித உடலியக்கம், மிதக்கும் நீர்க்குமிழி உள்பட இஸ்ரோவால் அளிக்கப்பட்ட நுண் ஈர்ப்பு விசை சார்ந்த ஏழு முக்கிய ஆய்வுகளையும் சுக்லா வெற்றிகரமாக மேற்கொண்டார். விண்வெளியில் முளைவிட்ட பச்சைப் பயறு, வெந்தய விதைகளை தன்னுடன் எடுத்து வந்துள்ளார். இந்த விதைகள் அடுத்தகட்டமாக பல்வேறு ஆய்வுகளுக்கு உள்படுத்தப்பட உள்ளன.

சுபான்ஷு சுக்லா: சுபான்ஷு சுக்லா இந்திய விமானப் படையின் விமானி என்பது பலருக்கும் தெரியும், ஆனால்இவர் ஒரு ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றிருக்கிறார். சுபான்ஷு சுக்லா, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் (ஒஒநஸ்ரீ) ஆய்வுக் கட்டுரைகளின் இணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பீம் (இஐஊஊங) எனப் பெயரிடப்பட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, அதில், வேற்றுக்கிரகங்களில் மாதிரி வாழ்விடத்தை வடிவமைப்பது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆய்வுக் குழுவில் சுபான்ஷு சுக்லாவும் இடம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.