துவரை சுருக்கமாக மனம் எனும் மகாசக்தி.

மனிதனைப் படைக்கும்பொழுதே மனம் எனும் மகா சக்தியையும் இறைவன் படைத்துவிட்டார்.

Advertisment

இறைசக்தி என்னும் பேரின்பத்தில் ஐக்கியம் ஆகவேண்டும் என்றால் இறைவன் வடிவமைத்து நமக்கு அருளிய மனம் எனும் மகாசக்தியே வாகனம்.

Advertisment

இந்த கணத்தில் மனம் ஆனந்தமாக இருக்கிறது என்றால் அது இறைவன் கொடுத்த வரம். 

மனம் துன்பத்தில் உழல்கிறது என்றால் நமது எண்ணங்களில் தவறு இருக்கிறது என்று இறைவன் நமக்கு நினைவு படுத்துக்கொண்டிருக்கிறார் என்று பொருள்.

Advertisment

பயமும், வஞ்சக எண்ணங்களும் இறைவனின் அருளான மனம் என்னும் மகா சக்தியை செயல் இழக்க முயற்சி செய்யும் அசுர சக்திகள்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு, நன்றி உணர்வு, மன்னிக்கும் குணம் இவை மூன்றுமே அசுர சக்திகளை அழித்தொழிக்கும் பிரம்மாஸ்திரங்கள்.

நம் மனம் இரண்டு வகையான தீவிர நம்பிக்கைகளை கொண்டுள்ளது.

ஒரு கல்லை செதுக்கி அழகான சிற்பத்தை உருவாக்குவது என்பது அழகான சிற்பத்தை மறைத்திருக்கும் தடைக் கற்களை வெளியேற்றும் செயலாகும். 

அதுபோலவே இறைசக்தி வியாபித்திருக்கும் ஆழ்மனதை அடைய மனதை சுற்றியுள்ள அசுர சக்தியால் உருவாக்கப்பட்ட தடைகளை வெளியேற்ற வேண்டும்.

1. அழகான சிற்பத்தை போன்றது இறைசக்தியோடு ஐக்கியப்பட்ட தீவிர நம்பிக்கைகள்.

2. தடைக்கற்கள் என்பவை அசுர சக்தியால் சூழப்பட்ட தீவிர நம்பிக்கைகள். இவை இரண்டையும் இறைவன் அருளிய சிந்தனை சக்தி துணைகொண்டு தனித்தனியாக பிரிக்கமுடியும். அசுர சக்திகளை வெளியேற்றமுடியும்.

மனதின் "உள் கடந்து' இறைசக்தியை உணர மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து மனதில் பதியவைத்துள்ள பல்வேறு பதிவுகளை (தீவிர நம்பிக்கைகளை) ஆராய்ந்து புரிந்துகொண்டால் எவையெல்லாம் இறைசக்தியோடு தொடர்புகொண்டுள்ள தீவிர நம்பிக்கைகள், எவையெல்லாம் அசுர சக்தியோடு தொடர்பு கொண்டுள்ள தீவிர நம்பிக்கைகள் என்று தனித்தனியாக பிரித்து புரிந்துகொள்ளமுடியும்

தீவிர நம்பிக்கை என்றால் என்ன என்பதை புரிந்துகொள்வதற்கு மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி மற்றும் சிந்தனை சக்தியின் வளர்ச்சி பற்றிய புரிதல்வேண்டும்.

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி 

மற்றும் சிந்தனைத் திறன் வளர்ச்சி

மனித இனம் தோன்றி 8 முதல் 10 மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. அதாவது 80 லட்சம் முதல் ஒரு கோடி ஆண்டுகள் வரை ஆகின்றன.

கற்களை பயன்படுத்த தொடங்கிய காலத்தை மூன்று வகையாக வகைப்படுத்தி உள்ளனர்.  

பழைய கற்காலம்: Paleolithic Period (old stone age) 2.5 to 3.5 million years ago and continued until about 10,000 B.C

இடைக் கற்காலம்: esolithic Period (middle stone age) 10,000 to 20,000 years.

புதிய கற்காலம்: Neolithic Period (New stone age)

கற்களை பயன்படுத்தும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய காலம் 25 லட்சம் முதல் 35 லட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கும். (கி.மு 25 மில்லியன்முதல் 35 மில்லியன் ஆண்டுகள்வரை.)

கி.மு 8,000 வரை கற்களை பயன்படுத்தும் அளவுக்கு மட்டும்தான் மனிதனின் சிந்தனை திறன் வளர்ந்துள்ளது.

கி.மு 5,000-3,500 ஆண்டுகளில்தான் வெண்கலத்தை பயன்படுத்தத் தொடங்கி யுள்ளனர்.

கி.மு 3,000 ஆண்டுகளில்தான் நாகரிக வளர்ச்சி தொடங்கியது.

இரும்பை பயன்படுத்த தொடங்கிய காலம் கி.மு 1,200 முதல் 1,500 வரை.

மேற்கண்ட தகவல்களிலிருந்து ஆறாம் அறிவான சிந்தனை சக்தி எவ்வளவு மெதுவாக வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை கண்டு கொள்ளமுடியும்.

பயம், வஞ்சகம், ஆக்ரோஷம், பாசம் மற்றும் நன்றியுணர்வு ஆகிய அனைத்தும் விலங்குகளின் குணங்கள் ஆகும்.

மனித இனமும் எது சரி? எது தவறு? என்று அணுவளவும் சிந்திக்கத் தெரியாத விலங்குகளைப்போலவே எந்தவித மாற்றமும் இல்லாமல் விலங்கின் அனைத்து குணங்களும் மாறாமல் லட்சக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளது.

ஐந்தாம் அறிவுள்ள விலங்கின் நிலையிலிருந்து வளர்ச்சி அடைந்து இறைவன் அருளிய மனதை பயன்படுத்தும் ஆறாம் அறிவான சிந்திக்கும் திறன் உருவான காலம் கற்காலம்.

கி.மு 3,000 ஆண்டுகளில்தான் நாகரிக வளர்ச்சி தொடங்கியது என்ற தகவல் மனிதனின் ஆறாம் அறிவு மிகமிக மெதுவாக வளர்ச்சியடைய தொடங்கியுள்ளது என்பதை தெரியப்படுத்துகிறது.

மனிதனின் சிந்திக்கும் திறன் வளர வளர தான் கற்றுக்கொண்ட அல்லது உணர்ந்த செய்திகளை நீண்டநாட்கள் மனதில் பதிய வைக்கும் திறன் மேம்பட்டுள்ளது. மேலும் மனதில் பதிய வைத்த செய்திகளை மீண்டும் நினைவுக்கு கொண்டுவரும் திறன் வளர்ந்துள்ளது.

நினைவாற்றல் இதுவே விலங்கிலிருந்து மாறுபட்ட ஆறாம் அறிவின் பரிணாம வளர்ச்சி.

சிந்திக்கும் திறன் விலங்கிலிருந்து மாறுபட்டு சிறிது சிறிதாக வளர்ந்தாலும் அவை முழுமையாக அசுர சக்தியின் ஆக்கிரமிப்பில்தான் கட்டுண்டு வந்துள்ளது.

அதாவது பயமும் வஞ்சக எண்ணங்களும் மேலும் மேலும் வளர்ந்துள்ளது.

விலங்கின் குணமான வஞ்சக குணம் நினைவாற்றலால் சூழ்ச்சியாக வளர்ச்சி பெற்றுள்ளது என்பது ஆழமாக சிந்தித்தால் மட்டுமே புரிய ஆரம்பிக்கும்.

நினைவாற்றலின் துணைகொண்டு எதிரிகளை அழித்தொழிக்கும் குரூர எண்ணங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது.

சிறு சிறு கூட்டங்களாக வாழ்ந்துவந்த மனித இனம் ஆங்காங்கே இருக்கும் பிற மனித கூட்டங்களை அழித்தொழிப்பதும் அவர்களின் உடமைகளை எடுத்துவருவதும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள்.

மனித இனம் வஞ்சகமாக சிந்தித்து பல நாட்கள் திட்டமிட்டு சரியான நேரத்திற்கு காத்திருந்து பிறரைக் கொல்லுதல் என்பது வஞ்சக எண்ணங்கள் சிறிது சிறிதாக சூழ்ச்சியாக மாற்றம் அடைந்ததை தெரிவிக்கின்றன.

பயமும் வஞ்சக குணமும் மேலும் மேலும் அதிகரித்துள்ளது என்பதற்கு மனிதன் சக மனிதனை கொடூரமாக கொல்லும் குணங்களே அத்தாட்சியாக விளங்குகிறது.

சக மனிதர்கள் தங்களை கொன்று விடுவார்கள் என்ற பயத்திலேயே மனிதக் கூட்டங்கள் வாழ்ந்துவந்துள்ளன. அந்த பயத்தின் விளைவாக எதிரிக் கூட்டங்களை போரில் கொன்று குவித்த பின்னர் மீதம் உள்ளவர்களை சிறைபிடித்து வந்து கொடூரமாக கொல்லுதல், கை- கால்களில் விலங்கிட்டு மற்றும் அடிமைகளாக மாற்றி சித்ரவதை செய்வது என்பது எதிரிகளின் மனதில் பயத்தை அதிகரிப்பதற்கு காரணமாகிறது.

மனித இனத்தின் வரலாற்றை சுருக்கமாக தெரிந்து கொள்வதன்மூலம் "சூழ்ச்சி' என்னும் மாபெரும் அசுர சக்தி மனிதனின் புத்திசாலித்தனம் என்ற தீவிர நம்பிக்கையாக மாறி உள்ளது என்ற புரிதலே அசுர சக்தியில் இருந்து விடுபட்டு இறை சக்தியோடு ஐக்கியமாவதற்கு முதல் படியாக மாறும்.

இறை சக்தியையும் அசுர சக்தியையும் தனித்தனியாக தெளிவாக பிரித்து அவற்றை குழந்தைகள் பாடம் கற்றுக்கொண்டு மனதில் பதியவைப்பதுபோல ஆழமாக நம் மனதில் பதிய வைப்போம்.

சூழ்ச்சி பயமும் வஞ்சக குணமும் அசுர சக்தி.

எதிர்பார்ப்பு இல்லாத அன்பு, நன்றி உணர்வு, மன்னித்தல் ஆகியவை இறை சக்திகள்.

இன்றுமுதல் எவையெல்லாம் இறைசக்தி சார்ந்த தீவிர நம்பிக்கைகள், எவையெல்லாம் அசுரசக்தி சார்ந்த தீவிர நம்பிக்கைகள் என்ற அடிப்படை புரிதலோடு நம் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை ஆழ்மனதிலுள்ள இறை சக்தியோடு தொடர்பு படுத்த துவங்குவோம்.

இறைவனை தரிசிக்க கோவிலுக்கு செல்கிறோம். கூட்டமாக இருக்கிறது. வரிசையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருக் கும்போது ஒருசிலர் இடையில் புகுந்து செல்வதையும் பார்க்கிறோம்.

இந்த நிகழ்ச்சி பெரும்பாலும் நம் எல்லாருக்கும் பழக்கமான ஒன்று.

முந்தி செல்பவர்களை பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்த நிகழ்வுகளும் உண்டு. பொறுமை இழந்து கோபப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. அளவுக்கு மீறி கோபம் அடைந்து அவர்களோடு வாக்குவாதம் செய்த நிகழ்வுகளும் உண்டு.

நாமும் பல சந்தர்ப்பங்களில் பிறரை முந்தி சென்ற நிகழ்வுகளும் உண்டு.

நாம் முந்தி செல்லும்பொழுது பிறரிடம் சொல்லமுடியாத ஏதோ ஒரு சரியான காரணம் இருந்திருக்கலாம்.

அதுபோலவே கூட்டத்தில் முந்தி செல்பவர்களுக்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் என்று தீர்மானித்து நமது சிந்தனையை இறை சக்தியை நோக்கி செலுத்துவோம்.

வரிசையில் நிற்கும் அந்த நேரங்களில் நம்முடைய சிந்தனைகளில் அசுரசக்தி உள்ளதா, இறைசக்தி உள்ளதா என்பதை சிந்திக்க இறைவன் கொடுத்த நேரம் என்ற புரிதலுக்கு வருவோம்.

அசுரசக்தி முந்தி செல்லும். பிறரது நடவடிக்கைகளில் இருந்து கோபத்தை தூண்டிவிடும்.

இறைசக்தி பொறுமையையும் மன்னிக் கும் குணத்தையும் வலுப்படுத்தும்.

இறை சக்தியை நோக்கி எண்ணங்களை செலுத்தும்பொழுது முந்தி செல்பவர்கள் பற்றிய எண்ணம் (அசுரசக்தியின் ஆக்கிரமிப்பு) விடுபட்டு மனம் முழுமையாக விழிப்புணர்வுக்கு வந்துவிடும். 

முழுமையான விழிப்புணர்வில் நாம் நின்றுகொண்டிருக்கும் இடத்தில் வியாபித்துள்ள இறை சக்தியை உணர துவங்குவோம்.

இறைசக்தியின் மன்னித்தல் என்ற தீவிர நம்பிக்கையை பயன்படுத்தும்போது எத்தகைய மாற்றம் மனதில் நிகழ்கிறது மனம் எவ்வாறு ஆனந்தமயமாகிறது என்பது புரிய ஆரம்பிக்கும்.

அந்த தட்சணத்தில் மனம் முழுமையான பேரானந்தத்தில் திளைக்கும்.

இதுபோன்ற அன்றாட வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்விலும் நமது எண்ண ஓட்டங்களை இனிமேல் ஆராய துவங்கு வோம்.

குழந்தைகள் எழுத்தை கற்றுக்கொள்வது போல வீட்டில் இறைவனை நினைக்கும் போதும், கோவிலுக்கு செல்லும்போதும் வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் இறைசக்தியை நோக்கி நமது எண்ணங்களை செலுத்தும் பழக்கத்தை அதிகப்படுத்த அதிகப்படுத்த நமது புற சூழ்நிலைகள் அனைத் திலும் இறைசக்தியை உணரத் துவங்குவோம்.

சிறிது சிறிதாக கோவிலில் மட்டும்தான் இறைவன் இருக்கின்றார் என்ற அறியாமையிலிருந்து விடுபட்டு தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார். இறை சக்தி பிரபஞ்சம் முழுமையும் வியாபித்துள்ளது என்ற முதல் நிலை தத்துவம் நமது தீவிர நம்பிக்கையாக மாறும்.

இத்தகைய எண்ண ஓட்டங்களின் விளைவாக நம் மனம் எல்லா சூழ்நிலை களிலும் பேரானந்தத்தை உணர ஆரம்பிப்ப தைக் காணமுடியும்.

சூழ்ச்சி என்பது நமது புத்திசாலித்தனம் என்ற தீவிர நம்பிக்கையிலிருந்து விடுபட்டு அது அசுர சக்தியின் வெளிப்பாடு என்ற தீவிர நம்பிக்கையாக மனதில் பதிய வைப்போம்.

அத்தகைய தீவிர நம்பிக்கையுடன் நமது எண்ணங்களை ஆழ்ந்து கவனிக்கும் பொழுது எப்படியெல்லாம் ஒவ்வொரு விஷயத்திலும் நாம் வஞ்சகமாக சிந்திக்கி றோம் என்பது புரிய ஆரம்பிக்கும்.

உடனடியாக, "மன்னித்தல்' அல்லது "நன்றி உணர்வு' அல்லது "எதிர்பார்ப்பில்லாத அன்பு' இவற்றில் ஏதேனும் ஒன்றையோ அல்லது எல்லாவற்றையுமோ பயன்படுத்தி அந்த எண்ணங்களை வெளியேற்றலாம்.

குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு நிகழ்வையாவது அலசி ஆராய்ந்து இறைசக்தியின் எண்ணங்களை விழிப்புணர்வுக்கு கொண்டுவரலாம். அத்தகைய எண்ணங் களால் மாற்றம் அடைந்த உங்களது அனுபவத்தை தெரியப்படுத்தினால் வாசகர்கள் அனைவரும் கடினமான இந்தக் கருத்துகளை சுலபமாக புரிந்துகொள்வதற்கு இயல்பான உதாரணங்களாக மாறும்.

சூழ்ச்சி என்னும் அசுர சக்தியின் தீவிர நம்பிக்கையை சிந்தனை சக்தி வாயிலாக கண்டுகொள்ள தொடங்குவோம்.

பொய் சொல்வது என்பதே சூழ்ச்சிதான் என்பதை சிந்திக்கத் தொடங்குங்கள்.

-விழிப்புணர்வைத் தொடர்வோம்!