ஸ்ரீ தேவ் வ்யாதேஸ்வர் மந்திர்....
இந்த ஆலயம் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது. ரத்னகிரி மாவட்டத்தில்... குகாகர் என்ற நகரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.
இது ஒரு சிவன் ஆலயம்.
கொங்கன் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்த சிவன்தான் குலதெய்வம்.
இந்த ஆலயத்தில் மூன்று நுழை வாயில்கள் இருக்கின்றன.
இந்தக் கோவிலுக்குள் சூரியன், விநாயகர், அம்பிகை, விஷ்ணு, லட்சுமி, அம்பா ஆகிய கடவுள்களின் சிலைகளும் இருக்கின்றன.
பகவான் சிவனின் வாகனமான நந்தியின் சிலையும் இங்கு இருக்கிறது.
இந்த ஆலயத்திற்குப் பின்னால் உள்ள கதை இது....
பரசுராமர் கடலின்மீது அம்பொன்றை எய்தார். அப்போது கடல் தெய்வத்திடம் பரசுராமர் "நான் எந்த பகுதியில் அம்பை எய்தேனோ, அந்த பகுதியில் இருக்கும் நீரை நீ எடுத்துக்கொள்'' என்று கூறினார்.
அதன்காரணமாக அந்த இடத்தில் நீர் இல்லாமற்போனது. அந்த பகுதி நீர் வற்றி, நிலப் பகுதியாக ஆனது. அந்த இடம் ஒரு மூலையில் இருந்தது. அந்த இடம் "கோணா' என்று அழைக்கப் பட்டது.
பரசுராமர் 60 முனிவர் களிடம் அந்த நிலப் பகுதியில் தங்கியிருந்து உலகத்திற்கு நல்ல காரியங்களைச் செய்யும்படி கூறினார். அவர்கள் அனைவரும் சிவனின் பக்தர்கள்.
சிவனின் பக்தரான பரசுராமர் தினமும் அங்கு சிவனுக்கு பூஜை செய்தார்.
அவர் சிவனிடம் "உன் தரிசனம் எனக்கு தினமும் கிடைக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
பரசுராமரால் உண்டான அந்த இடத்தில் வ்யாதி என்ற முனிவர் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினார்.
அந்த சிவலிங்கத்தை அனைவரும் வழிபட்டனர். அந்த லிங்கம் "வ்யாதேஸ்வர்' என்று அழைக்கப்பட்டது.
அந்த இடத்தில்தான் இந்த ஆலயம் இருக்கிறது. பகவான் சிவன் அந்த லிங்கத்தில் குடிகொண்டிருப்பதாக அனைவரும் நம்புகிறார்கள்.
காலப்போக்கில் இந்த ஆலயம் மறைந்துவிட்டது. பல வருடங்களுக்குப் பிறகு, சகுரன் என்ற மன்னரின் காலத்தில் இந்த ஆலயம் கண்டெடுக்கப்பட்டு மீண்டும் புதிப்பிக்கப்பட்டது.
இப்போதிருக்கும் ஆலயம் 2,000 வருட வரலாறு கொண்டது.
சென்னையிலிருந்து இந்த ஆலயம் 1,185 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. சென்னையிலிருந்து புனேக்கு ரயிலில் பயணிக்க வேண்டும். பயண நேரம் 19 மணிகள். தினமும் ரயில் இருக்கிறது. அங்கிருந்து 242 கிலோமீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. கோவாவிலிருந்து 347 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. அருகிலிருக்கும் விமான நிலையம் புனே.