பழம்பெரும் சிவாலயங்களில் ஏழு நந்திகள் இருந்துள்ளது. அவை; இந்திரநந்தி, பிரம்மநந்தி, விஷ்ணுநந்தி, ஆத்மநந்தி, தர்ம நந்தி, அதிகாரநந்தி மற்றும் ரிஷப நந்தி யாகும். பற்பல சிறப்புகளைக் கொண்ட இந்த நந்திமூர்த்தங்கள் ஒவ்வொரு சேட்த்திரத் திலும் ஒவ்வொரு விசேஷத்துடன் திகழ் கின்றன.
அவ்வாறு பட்டீஸ்வரத்தில் பிரம்மன் பூஜித்த திருத்தலத்தில் வேதநந்தியாகத் திகழ்கின்றார் ஸ்ரீ பிரம்மநந்தி. இதை வேதவெள்விடை என்று புராணங்கள் போற்றுகினறன. இந்த நந்தியே தேவப்பசு காமதேனுவின் புதல்வியான விமலி என்னும் தெய்வப் பசுவாகும். இந்த விமலியே சதுர்வேதங்களுக்கும் பிரதிநிதியான பிரம்மாவுக்கு நந்தியாக திகழ்ந்தவள். இந்த நந்திமூலம் ஈசன் பிரம்மாவுக்கு பிரணவப் பொருளை உபதேசித்தருளியுள்ளார். இந்த நந்தி பூஜித்த சிவலிங்கமே பட்டீஸ்வரத்தில் காணப்படுகின்றது. அத்திருத்தலமே ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் ஆலயமாகும்.
இந்த சிவாலயத்தை பிரம்மாவும், சப்த கன்னியர்களுள் ஒருவரான நாக கன்னிகையும் பூஜித்து அருள்பெற்றுள்ளனர்.
ஆதியில் இந்த பெருமான் கயிலாயநாதர் என்றும் கூட போற்றப்பட்டுள்ளார்.
பிற்கால சோழர் வம்சத்தின் தொடக்க மன்னரான விஜயாலய சோழனது மகனான முதலாம் ஆதித்த சோழனால் (கி.பி. 871 - கி.பி. 907 ) இவ்வாலயம் கட்டப்பட்டுள்ளது. சோழர்களின் ஆட்சியின்போது பழையாறை மிகப்பெரிய நகரமாக விளங்கியுள்ளது.
அதோடு, பழையாறை சோழர் தலைநகரமாகவும் இருந்துள்ளது. இதை மெய்ப்பிக்கும்வகையில் விதானத்தின் தூண் ஒன்றில் முதலாம் ஆதித்த சோழனது பட்டத்தரசியான அழிசி காட்டடிகள் இவ்வாலயத்திற்கு தூங்கா விளக்கென்னும் நந்தா விளக்கெரிய 20 கழஞ்சுப்பொன் தந்துள்ள கல்வெட்டு ஒன்று சாட்சியாக பொறிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் இரண்டு திருமேற்றளித் திருத்தலங்கள் உண்டு. ஒன்று ஆறை மேற்றளி. இந்த தலம் சுந்தரரால் வைப்புத்தலமாக பாடப்பட்டது. மற்றொன்று திருமேற்றளிகை என்னும் இக்கோவிலாகும்.
பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்திற்கு மேற்குப்புறமாக திருமலை ஆற்றின் வடக்குகரைமீது அமைந்துள்ளது பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம்.
கிழக்கே திருமுகம்கொண்ட ஆலயத் தோரணவாயிலின் மேல் சுதை வடிவில் சிவன் - பார்வதி வீற்றருள்கின்றனர். இங்குள்ள தூண் ஒன்றில் விஜயாலய சோழனின் மகனான முதலாம் ஆதித்த சோழனது கல்வெட்டு, இவ்வாலயத்தின் அரிய செய்தியினைத் தாங்கி நிற்கிறது.
உள்ளே செல்ல நேராக முக கணபதி. பின்னர் உயரமான மேடை மீது கம்பீரமாக அமர்ந்தபடி அருள்புரிகின்றார் ஸ்ரீ நந்திகேஸ்வரர். ஸ்ரீ பிரம்மநந்தி சிலையானது தஞ்சாவூர் சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நேராக அர்த்தமண்டப வாயிலை அடைந்து, சில படிகள் ஏறி, அர்த்தமண்டபத்துள் நின்றபடி ஐயனை தரிசிக்கின்றோம். வலது - இடது புறங்களில் கணபதி மற்றும் கந்தன் வீற்றுள்ளனர். சிறிய வடிவில் சண்டேஸ்வரரும் இங்குள்ளார்.
கருவறையுள் கிழக்கு நோக்கிய பிரம்மாண்டமான சதுர வடிவ ஆவுடையாருடன் பச்சைக்கல் திருமேனியராய், பருத்த பாணத்துடன், பக்தாபீஷ்ட நாதனாக திருவருள் புரிகின்றார் ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர். ஆதியில் இப்பெருமான் ஸ்ரீ கயிலாயநாதர் என்றும் போற்றப்பட்டுள்ளார். கருவறையின் உட்புறம் குவிந்த கூரைவடிவம் காணப்படுகின்றது.
ஈசன் அழகில் லயித்து, திருவடிகளைப் பணிந்து, வெளியேவர... அம்பிகைக்கு நேராக ஓர் நந்தியும், பலிபீடமும் உள்ளது. சிறிய அர்த்தமண்டபத்துடன் திகழ்கிறது அம்பாள் சன்னதி. மேலிரு கரங்களில் அட்சமாலையும், நீலோற்பலமும் கொண்டு, கீழிரு கரங்களை அபய - வரதம் காட்டி, தாமரைப் பீடத்தின்மீது நின்றவண்ணம் புன்னகை பூத்தருள்கின்றாள் ஸ்ரீ பிரம்மராம்பிகை. அன்னையிடம் மன வேண்டுதல்களை சமர்ப்பித்து, ஆலய வலம் வருகின்றோம்.
தென்பிராகாரத்தில் முதலில் வடதிசை பார்த்தவாறு அமர்ந்த நிலையில் அழுகுற வீற்றிருகின்றார் ஸ்ரீ பிரம்மதேவர். அருகே சப்தமாதர்கள் குடிகொண்டுள்ளனர். தென்மேற்கில் ஸ்ரீ மகா கணபதியும், மேற்கில் வள்ளி - தெய்வானையுடனான ஸ்ரீ சுப்பிர மணியரும், வடமேற்கில் ஸ்ரீ கஜலட்சுமியும் கோவில் கொண்டுள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/30/brama1-2026-01-30-15-26-52.jpg)
வடமேற்குப் பகுதியில் மாமரம் ஒன்றும், அதன் கீழே சிவலிங்கம் ஒன்றும் காணப் படுகின்றன. சிவகோஷ்ட மாடங்களில் முதலில் நர்த்தன கணபதிக்கு பதிலாக ஸ்ரீ நாககன்னிகை வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டபடி, இடது கரத்தை பீடத்தில் ஊன்றியவண்ணம் தலை சாய்த்தவாறு நளினமாக காட்சியிளிக்கின்றாள். ஏனைய கோஷ்ட தெய்வங்கள் முறையே வீற்றிருக்க, சோழர்கால சண்டிகேஸ்வரர் பிரம்மாண்டத் தில் பிரமிக்க வைக்கின்றார்.
ஈசான பாகத்தில் நவகிரகங்களும், பக்கத்தில் ஸ்ரீ பைரவர் மற்றும் சூரிய தேவரும் அருள்பாலிக்கின்றனர். ஆலய தலவிருட்சமாக வில்வம் உள்ளது. பிரதான வாயிலின் தென்புறம் சந்திரதேவர் காட்சி தருகின்றார். பழைய மடப்பள்ளி முற்றிலும் சிதைந்து போக, புதிதாக மடப்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. பழைய கோவில் சிதைவுகள் பல காணப்பட்டதால் திருப்பணிகள் செய்யப்பட்டு, 2025 ஆண்டு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
ஆலயத்திற்கு வெளியே சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சுகிறது. உள்ளே அருளுடன் அமைதியும் தவழ்கிறது. ஒருகால பூஜை நடந்திடும் இவ்வாலயம் பட்டீஸ் வரத்தின் இணை ஆலயமாகத் திகழ்கிறது. இவ்வாலயத்திற்கு அருகே இராஜராஜ சோழனது மனைவியருள் ஒருவரான பஞ்சமாதேவியின் பள்ளிப்படை சிவாலயமும், ஸ்ரீ கோபிநாதப் பெருமாள் ஆலயமும் உள்ளன.
இங்கு விசேடங்களாக... மாத பிரதோஷங் கள், மாதப் பிறப்பு, பௌர்ணமி, அமாவாசை போன்றவை நடக்கின்றது. ஏனைய சிவாலய விசேடங்களும் இங்கு சிறப்புடன் நடத்தப்படுகின்றன. ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் வழி பாட்டுக் குழுவினரால் இவ்வாலய விசேடங்கள் யாவும் சிறப்புற கொண்டாடப்படுகின்றன.
1. நாக தோஷமுள்ளவர்கள் இங்குள்ள நாக கன்னிகை மற்றும் சிவன் - பார்வதிக்கு அபிஷேகம் நடத்தி, நாக கன்னிகைக்கு சிவப்பு நிறஆடை சாற்றி, பன்னீர் புஷ்பங்களால் அர்ச்சனை செய்து, புளியோதரை படைத்து வழிபடுகின்றனர்.
2. குருவுக்கு அதிபதியான பிரம்மாவுக்கு அபிஷேகம் நடத்தி வழிபட, திருமண தோஷம் மற்றும் புத்திர தோஷங்கள் நீங்குகின்றன. அதோடு, வியாபார விருத்தி மற்றும் உயர்பதவி வேண்டுவோரும் இங்கு பிரம்மாவை வழிபடுகின்றனர்.
3. பிறந்ததுமுதல் இன்றுவரை துன்பங்களை மட்டுமே அனுபவித்து வருபவர்கள் பிரம்மாவை வழிபட, உரிய பலன் கிடைத்திடும்.
4. இத்தல சிவன் - அம்பிகை மற்றும் நந்திதேவருக்கு பிரதோஷ காலத்தில் அபிஷேகம் நடத்தி, புது வஸ்திரங்கள் சாற்றி, வில்வ அர்ச்சனை செய்து வழிபட, அறிவு மேம்படும்.
ஆற்றல் பெருகும். எதிலும் வெற்றி உண்டாகும்.
இவ்வாலயம் தினமும் காலை 7.00 மணிமுதல் 11.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரையும் திறந்திருக்கும்.
வழி: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்திற்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீ பிரம்மராம்பிகை உடனுறை ஸ்ரீ பிரம்மநந்தீஸ்ரர் ஆலயம் அமைந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/30/brama-2026-01-30-15-26-41.jpg)