கவிதை எழுத வேண்டுமென்கிற உணர்வு உங்களுக் குள் எப்போது உண்டானது?
நம் உடலுக்குள் உயிர் இருப்பது மாதிரி, நமக்குள் எந்த கணத்தில்கவிதை வந்தது என்று பிரித்து ஆராய்ச்சி யெல்லாம் செய்யவே முடியாது.
நாள், நட்சத்திரம் குறித்து வைத்துக்கொண்டு இந்த நாளில் கவிஞனானேன் என்று யாராலும் சொல்லமுடியாது.
நாம் பிறந்தது முதலே நம்முடைய பேச்சு, நமது இயல்பு, ரசனை, வாசிப்பு எல்லாமே சேர்ந்துதான் நம்மைக் கவிஞனாக்குகிறது. சிறுவயதில் எங்கள் உறவினர் வீட்டில் தங்கி, நான் படித்துக்கொண்டிருந்த சமயமது. அப்போது நான் எது பேசினாலும் "இவன் என்ன எடக்குமடக்கா பேசுறானே..!' என்று சொல்வார்கள். நான் பேசுவதன் தன்மை புரியாமல் அப்படிச் சொல்வார்கள்.
அப்பவே நாம ஏதோ புதுசா பேசியிருக்கோம்னு தானே அர்த்தம்.
கவிதை உணர்வும் தூண்டுதலும் ஒருவனுக்கு இயல்பாகவே பிறப்பிலிருந்தே இருந்திருக்க வேண்டும். அம்மாவின் கருவிலிருக்கும்போதே கவிதை விதை நமக்குள் ஊன்றப்பட்டு விடுகிறது என்று நான் உணர்கிறேன்.
நான் கவிதை என்று எழுதி, அது ஒரு பத்திரிகையில் பிரசுரமான காலம் என்றால் 1991 என்று சொல்வேன். பிறப்பிலேயே ஒருவன் கவிஞனாக இருந்தால் மட்டுமே ஒரு வரியாவது எழுதமுடியுமென்று நம்புகிறேன்.
உங்களுக்குள் மனதில் ஹைக்கூ இடம்பிடித்தது எவ்விதம்?
நான் எப்போதுமே சிறுசிறு கவிதைகளைத் தான் எழுதுவேன். ஆரம்பத்தில்கூட நீண்ட கவிதை களைக் குறைவாகத் தான் எழுதியிருக்கிறேன். முதன்முதலாக "செருப்பு' எனும் தலைப்பில் நீண்ட கவிதையொன்றினை எழுதினேன். சில பிரசுர மாகாத நீண்ட கவிதைகளும் என்னிடம் இருந்தன. ஆனால் -
‘இஸ்திரி போடும்
தொழிலாளி வயிற்றில்
சுருக்கம்’
- எனும் கவிதையை எழுதிய பிறகு, சுருக்கமான ஹைக்கூ கவிதை வடிவம்
என் மனசுக்கு மிகவும் நெருக்கமானது. கவிக்கோ அப்துல்ரகுமான் அய்யா, அறிவுமதி அண்ணன், எழுத்தாளர் சுஜாதா இவர்களெல்லாம் அதற்கு முக்கியமான காரணமாக இருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
தங்களின் முதல் கவிதை இதழில் பிரசுரமானபோது உங்களின் மனநிலை எப்படி இருந்தது?
இப்போது நினைத்தாலும் என் முதல் கவிதை பிரசுரமான அந்த நாள் பரவசம் இப்போதும் என் நினைவில் இருக்கிறது. எனது முதல் கவிதை வெளியான ‘ஆனந்த விகடன்’ இதழில் இருந்த விளம்பரங்களை எல்லாம்கூட முழுமையாக வாசித்துமுடித்தேன். அந்த இதழை பூஜை அறையில் கொண்டுபோய் வைத்தேன். படிக்கத் தெரியாதவர்களிடம்கூட அந்த இதழைக் காட்டினேன். திரைப்பட பாடலொன்றில் சொல்வது போல் வீட்டிலிருக்கும் ஆடு, மாடு, கோழி எல்லோரிடமும் சொல்லிவிட்டேன்.
அந்தப் பரவசம் சொல்லில் அடங்காதது. "உங்கள் கவிதை பிரசுரமாகியிருக்கிறது' என்று வந்த கடிதமும், கூடவே வந்த 30 ருபாய் மணியார்டரும் என் வாழ்வில் மறக்கவே முடியாதது அந்தப் பகுதியிலிருந்த பல கவிஞர்களும், "கவிதையை நீ லட்டர்ல எழுதி அனுப்பினீயா இல்லை இன்லேண்ட் கவர்ல எழுதி அனுப்புனீயா?'என்று என்னிடம் கேட்டார்கள். நானும் ஒரு பெரிய கவிஞராக என்னை நினைத்துக்கொண்டு, "கவிதையை எதில் அனுப்புறோம் என்பது முக்கியமில்லை; என்ன கவிதை அனுப்புறோம் என்பதுதான் முக்கியம்' என்று சொன்னேன்,
நான் காதலித்த பெண்ணிடம் நேரடியாகக் கொடுக்க தைரியமில்லாமல், அவளோடு உடன்வருகிற தோழியிடம் இதழினைக் கொடுத்தேன். எல்லாமே பரவச நிலைதான். எனது முதல் படம் "ஆனந்தம்' வெளியானபோது என்ன விதமான பரவசத்திலே இருந்தேனோ, அதே நிலைதான் என்னுடைய முதல் கவிதை பிரசுரமான அன்றும் இருந்தது என்பதே உண்மை.
பரபரப்பான திரைப்படப் பணிகளுக்கிடையே ஹைக்கூ எழுதும் அமைதியான மனநிலை எப்படி வாய்க்கிறது?
ஹைக்கூ எழுதும் மனநிலையை நான் என்னுள் தக்கவைத்து இருப்பதினால்தான் என்னால் இவ்வளவு வேலைகளையும் பார்க்கமுடிகிறது. கூடவே ஹைக்கூ கவிதைகளையும் எழுத முடிகிறது என்பேன். எல்லாவற்றிற்கும் எனது மனநிலைதான் ஆதாரமாக இருக்கிறது. அதை ஒருநிலைப்படுத்தும் வகையில் தொடர்ந்து நான் தியானம் செய்தும் வருகின்றேன்.
ஹைக்கூவின் கிளை வடிவங்களாக சென்ரியு, லிமரைக்கூ, லிமரிக்சென்ரியு, ஹைபுன் ஆகியவை இருக் கின்றன. ஆனாலும் நீங்கள் ஹைக்கூ தவிர வேறு எழுது வதில்லையே... ஏன்?
நான் இரண்டு வரிகளில், மூன்று வரிகளில் எழுதிவிட்டால் அது ஹைக்கூ என்று இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறேன். நான் எழுதிய கவிதைகளில் ஹைக்கூவின் பல வடிவ கவிதைகளும் இருக்கக்கூடும். பெயர் தான் மாறுபடுகிறதே யொழிய எல்லாமே கவிதைகள்தான்.
இன்னும் சொல்லப்போனால் ஜப்பானிய ஹைக்கூவின் உண்மையான இலக்கணத்தோடு யாரும் இங்கே ஹைக்கூ எழுதுவதில்லை. நான் எழுதியிருக்கும் இந்த நூறு கவிதைகளில் யாராவது ஹைக்கூ அளவுகோலை வைத்துப்பார்த்தால், இரண்டு, மூன்று ஹைக்கூ மட்டுமேகூட தேறலாம். ஆனால், நமக்கு நாம் எழுதுவது ஹைக்கூதான். அந்த நம்பிக்கையோடுதான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.
தமிழ்ச்சூழலில் இன்றைக்கு எழுதப்படும் ஹைக்கூ கவிதைகளைப் பற்றிய தங்களின் மதிப்பீடு என்ன?
தொடர்ந்து ஹைக்கூ கவிதைகளை வாசித்துக்கொண்டிருப்பவன் நான். தற்போது நடத்திய கவிக்கோ நினைவு ஹைக்கூ போட்டியில் 50 ஹைக்கூ கவிதைகளைத் தேர்வுசெய்ய வாசித்தபோது ஒரு நம்பிக்கை வந்தது. நிறைய கவிஞர்கள் சிறந்த ஹைக்கூ கவிதைகளை எழுதப் போகிறார்கள் என்ற எண்ணமும் உண்டானது. மிக அற்புதமாக சில கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். இன்றைய சூழல் மிகவும் நன்றாகவே இருக்கிறது. அதைஇன்னும் பெரிதாகக் கொண்டு செல்வதற்கான வேலைகளைச் செய்ய வேண்டுமென்கிற ஆசை எனக்குள்ளிருக்கிறது. அதற்கான முயற்சிகளையும் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.
ஹைக்கூவில் வெளிப்படும் காட்சிபூர்வமான அழகியல் பதிவுகள், உங்களின் திரைப்படக் காட்சி அமைப்புகளிலும் வெளிப்படும் கணங்கள் குறித்து சொல்லுங்களேன்...
என் படத்தில் வரும் பாடல்களில் இடம்பெறும் மேண்டேஜ்கள், குட்டிக்குட்டி டயலாக்குகள் எல்லாமே ஹைக்கூவாகத்தான் இருக்கும். என்னுடைய படங்களில் இடம்பெறும் வசனங்கள் எல்லாமே சிறியதாக மனதில் நிற்கும்படி "நறுக்'கென்று ஹைக்கூ வடிவத்தில்தான் இருக்கும். என் பட வசனங்களையும் ஹைக்கூ ஆக்கிரமித்துக் கொள்கிறது.
"ரன்' படத்தில் வரும், "விட்ற மாட்டியே; விட்டா உசிரை விட்டுருவேன்' -என்ற டயலாக் மாதிரி நிறையவே என்னுடைய படங்களில் வரும்.
ஹைக்கூ எழுதுவதினாலேயே எனக்கு அந்த மாதிரியான டயலாக் பேட்டன் தான் வருகிறதென்று நாம் நம்புகிறேன். ஹைக்கூ நமக்குள்ளே இருக்கிறதுனாலே என்னோட டயலாக்லேயும் அதுதான் வெளிப்படுது.
ஒரு ஆக்சன் படத்தைக்கூட ஒரு லவ்வபிலா, எல்லாரும் உட்கார்ந்து பார்க்கிற மாதிரி எடுக்கிறது, ஒரு புக்குக்குள்ளே அரிவாள் வைச்சு எடுக்கிற ஒரு ஷாட் வைக்க ஹைக்கூ எழுதுறவங்களால மட்டும்தான் முடியுமென்று நம்பு கிறேன்.
கவிக்கோ அப்துல் ரகுமானுக்கும் தங்களுக்குமான நட்பு பற்றி..!
நான் ஊரில் இருக்கும்போதே கவிக்கோ எழுதிய ஹைக்கூ பற்றிய கட்டுரைகள் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் சென்னை வந்தபிறகு, என்னோட ஹைக்கூ நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு இரண்டு முறை அழைத்தேன். இரண்டு முறையும் கவிக்கோ வந்து கலந்துகொண்டார். அவர் வந்து என்னோட ஹைக்கூ கவிதைகளை "ரியல் ஹைக்கூ'னு சொன்னது எனக்கு அவ்வளவு பெரிய சந்தோசத்தைக் கொடுத்தது.
கவிக்கோவைப் பெரிய ஜென் தத்துவ மாஸ்டர்னு சொல்லலாம். கவிதைக்காகவே வாழ்ந்த ஓர் அற்புதமான மனிதர். பனையூரில் இருக்கும் அவரது வீட்டிற்கு அண்ணன் அறிவுமதி, பிருந்தாசாரதி கூட பலமுறை போயிருக்கிறேன். அவரோடு பேச ஆரம்பித்தால், திரும்பி வரவே மனமிருக்காது. ஹைக்கூ கவிதைகளைப் பற்றி கவிக்கோ பேச ஆரம்பிச்சார்னா அவ்வளவு அற்புதமா இருக்கும். அவர்கிட்டே எந்த கமர்ஷியல்தனமும் இருக்காது. சி.எம்.மே கூட அவர் பக்கத்திலே இருந்தாலும் அவரைப் பயன்படுத்திக்கணும், அவர் மூலமா ஏதாவது செய்ய ணும்னு நினைக்காத மகத்தான ஆளுமை கவிக்கோ.
கவிக்கோவிடம் உண்மை இருக்கும். யாரைப் பற்றியும் எவ்வித குறையும் சொல்லாதவர். சீடர்களோடு இயேசு நடந்துபோகும்போது, சாக்கடையில் செத்துக்கிடக்கும் நாயின் பற்களின்மீது வெளிச்சம் படும்போது அப்படியே முத்துக்கள் மாதிரி இருந்துச்சுன்னு சொன்னாரு இல்லே, அந்த மாதிரி இந்த உலகத்தை எப்பவுமே நேர்மையாகவும் பாசிட்டிவாகவும் பார்க்கக் கூடியவர் கவிக்கோ. மதத்தையும் எல்லாவற்றையும் தாண்டி நம் இலக்கியத்தை மிகவும் நேசித்தவர். கவிக்கோ நமக்குக் கிடைத்த ஒரு பெரிய குருதான். எனக்கும் அவர் குரு என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்.
முகநூல் குழுக்களில் ஹைக்கூ எனும் பெயரில் எழுதப்படும் கவிதைகளைப் படிக்கும் சூழல் எப்போதாவது அமைந்திருக்கிறதா?
பேஸ்ஃபுக்ல நான் ஆக்டிவா இல்லே. அதனால அவற்றை படிப்பதற்கான சந்தர்ப்பம் எனக்கு அமையவில்லை.
தங்களின் முதல் ஹைக்கூ நூலான "லிங்கூ'வுக்கு கிடைத்த வரவேற்பு எப்படியிருந்தது?
2013-இல் என்னோட முதல் ஹைக்கூ நூலான "லிங்கூ'வை
"ஆனந்த விகடன்'தான் வெளியிட்டது.
அந்த நூல் தற்போது ஆங்கிலம், மலையாளத்தில் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளது, கல்லூரிப் பாடத் திட்டத்திலும் எனது ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ரொம்ப முக்கியமான நண்பர்கள்,
அந்த ஹைக்கூ நூலைப் பயணங்களில் படிச்சிட்டுப் போறதா சொல்வாங்க. ஹைக்கூவில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற கவிஞர் மு.முருகேஷ் தொடங்கி, ஹைக்கூவில் ஈடுபடுகிற முக்கியமான பலர் என்னோட "லிங்கூ' நூல் குறித்துப் பேசியிருக்கிறார்கள். அறிவுமதி அண்ணன், கலாப்ரியா, வைரமுத்து, கே.பாலசந்தர், ஷங்கர் மாதிரியான ரொம்பவே முக்கியமான ஆளுமைகள் அந்த நூலைப் படித்துவிட்டு, பாராட்டிப் பேசியிருக்கிறார்கள். முதல் நூல் "லிங்கு' எனக்கு மறக்க முடியாத நூல்.
"தமிழில் ஹைக்கூ எழுத முடியாது' எனும் கருத்துடைய மூத்த கவிஞரான சிற்பி, தங்களது ஹைக்கூவை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து..!
அதற்கு முதலில் கவிஞர் புவியரசு அய்யாவுக்குத்தான் நான் நன்றி சொல்லியாக வேண்டும். சிற்பி அய்யாகிட்டே புவியரசு அய்யாதான், தம்பி ரொம்ப நல்லா எழுதியிருக் கான்னு சொல்லியிருக்கிறார்.
"மான் அருந்தும் நீரில்
புலியின் பிம்பம்'
-என்கிற இந்தக் கவிதையெல்லாம் சொன்னவுடனே அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நல்லா இருக்கேனு சொன்ன சிற்பி அய்யா, உடனே கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்துவிட்டார். "எனக்கு பர்சனலா ரொம்பப் பிடிச்சிருக்கு. விரும்பித்தான் நான் இதைச் செய்யிறேன்'னு சொல்லி, அதை ஆங்கில மொழியாக்கம் செய்து கொடுத்தார் கவிஞர் சிற்பி. சிறப்பான மொழிபெயர்ப்பு என்று அந்த நூலையும் பலரும் பாராட்டி உள்ளார்கள்.
உங்கள் வாசிப்பில் உங்களை மிகவும் கவர்ந்த ஹைக்கூ எது?
என் வாசிப்பில் பல கவிதைகள் எனக்குப் பிடிக்குமென்றாலும் சில கவிதைகளைச் சொல்லலாம்னு நினைக்கிறேன். நான் அடிக்கடி சொல்கிற கவிதைகள் இவை;
‘பழம் விழுங்கிய பறவை
பறக்கிறது
ஒரு மரத்தைச் சுமந்துகொண்டு.’
கவிஞர் குகை ம.புகழேந்தி எழுதிய இந்தக் கவிதை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதே மாதிரி அறிவுமதி அண்ணன் எழுதிய -
‘உடைந்த வளையல் துண்டு
குளத்தில் எறிந்தேன்
அடடா எத்தனை வளையல்கள்!’
- என்கிற கவிதையும் எனக்குப் பிடிக்கும்.
மு.முருகேஷ் எழுதியதில் -
‘நத்தையின் பாதையிலேயே
நானும் போனேன்
மிக அருகில் வீடு’ - ஹைக்கூவும்,
‘பத்துத் தலைக்கும்
ஒரு தலைக் காதல்
இராவணன்’ - எனும் கபிலன் எழுதிய கவிதையும்,
பிருந்தா சாரதியின் -
‘பலூன் ஊதும் சிறுமியின்
கன்னங்களில்
இரண்டு குட்டிப் பலூன்’ கவிதையும்,
மலேசியாவைச் சேர்ந்த நடா எழுதிய -
‘வாடியது கொக்கு
ஓடியவையெல்லாம்
ஜோடி மீன்கள்’ - கவிதையும் எனக்குப் பிடித்தமான ஹைக்கூ கவிதைகள்.
கவிக்கோ நினைவு ஹைக்கூ கவிதைப்போட்டியை நடத்தும் எண்ணம் எதனால் ஏற்பட்டது?
கவிக்கோ அய்யா இருமுறை எனது ஹைக்கூ நூல்கள் வெளியீட்டிற்கு வந்திருந்தார் என்று சொன்னேன் அல்லவா..! அந்த விழா முடிந்து நாங்கள் சாப்பிடும்போதும், அவரோடு பேசுவதற்காகவே அவரது வீட்டிற்குப் போகும்போதும், அவர் இலக்கியத்திற்காக எவ்வளவு பெரிய வேலைகளைச் செய்துள்ளார் என்பது தெரியவந்தது. அது மட்டுமில்லாம, நம்மை மாதிரி பலரை எழுதவும் தூண்டியிருக்கிறார்.
கவிக்கோ மூலமாக எழுத வந்த நாம், அவரைப்போலவே நிறைய பேரை உருவாக்கணும்; அவர் செஞ்ச வேலையை அவர் பெயரிலேயே தொடரணுங்கிறதுக்காகாத்தான் ஆண்டுதோறும் "கவிக்கோ நினைவு ஹைக்கூ போட்டி'யை நடத்துவது, அதேபோல் கவிக்கோ நினைவு நாளான ஜூன் 2 அன்று பரிசளிப்பு விழாவையும் நடத்தி வருகிறோம்.
கவிக்கோ நினைவு ஹைக்கூ போட்டி நடத்திய அனுபவம் எப்படியிருந்தது?
ஒரு படம் முழுமையா எடுத்து, 1000 கோடி ரூபாய், 500 கோடின்னு எவ்வளவு பெரிய ஹிட்டானாலும் கிடைக்கக்கூடிய சந்தோசத்தைவிட பெரிய சந்தோசம், குடும்பம் குடும்பமாகக் கவிக்கோ நினைவு ஹைக்கூ போட்டியிலே கலந்துகிட்டதைப் பார்க்கும்போது எனக்குக் கிடைச்சது.
வெறும் மூன்றே வரிதான்; ஆனா, அந்த மூன்று வரிகளிலேயும் ஒரு கண்டுபிடிப்பு என்பது சாதாரண விஷயமில்லை. அப்படியானஒரு கவிஞன் உங்கள் வீட்டில் இருக்கிறான்னா, அந்த ஊரில் இருக்கிறான்னா, இந்த உலகத்திலே இருக்கிறான்னு சொன்னால், எந்த மூலையில் இருந்தாலும் அந்தக் குடும்பத்துக்கே ஒரு வெளிச்சம் மாதிரி. அங்கேயொரு தீபத்தை ஏற்றி வைத்த மாதிரி.
அப்படிப்பட்ட 50 கவிஞர்களை ஒரே இடத்தில் ஆண்டுதோறும் பார்த்தபோது, எனக்குள் அப்படியொரு வெளிச்சம் கிடைத்தது.
அந்த விழா மறக்கமுடியாத விழா. வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளைக் கடந்த பிறகும் அந்த விழா மிகவும் சிறப்பாகத் தொடர்வதிருந்தே அந்த விழாவின் வெற்றியை அறியமுடிகிறது.
நீங்கள் எழுதியவற்றுள் உங்களுக்கு மிகவும் பிடித்த ஹைக்கூ எது?
‘செருப்பில் ஏறிப்பார்த்து
காலுக்குப் பொருந்தாமல் இறங்கிச் செல்கிறது
எறும்பு.’
எந்த முயற்சியுமே இல்லாமல் தானாக வந்த கவிதையிது. எனக்கு ரொம்பவே பர்சனலா பிடிச்ச கவிதையுங்கூட. என்னைப் பற்றியு, என்கவிதைகள் பற்றியும் பேசும் பலரும் சொல்லக்கூடிய கவிதையாக இந்தக் கவிதை என்னை அடையாளப்படுத்தியிருக்கிறது.
பிரபல இயக்குநராக இருக்கும் நீங்கள் கவிஞராகவும் இருப்பது பலமா? பலவீனமா?
கவிஞனாக இருப்பதினால் மட்டும்தான் என்னிடம் எல்லாப் பலமும் சேர்வதாக நான் நம்புகிறேன்.
ஹைக்கூவில் கற்றுக்கொண்டது எது? இன்னும் கற்க வேண்டியது எது?
வாழ்க்கை முழுவதுமே ஹைக்கூன்னா என்னவென்று நாம் தேடிக்கொண்டே தான் இருக்கவேண்டும். அது முழுமையடையாதது.
எது மிகச்சரியான ஹைக்கூன்னு இன்னும் தேடிக்கிட்டே தான் இருக்கோம்.
நமக்குள்ளேயும் ஓடிக்கிட்டே தான் இருக்கிறது.
எது சரியான ஹைக்கூன்னா, செடியிலிருக்கும் பூசணிப்பூ பழமாக மாறி, கொடியை விட்டு விலகிய கணம் எதுவென்று தெரியாது. கொடியை விட்டு அதுவே தனியாக விலகி நிற்கும். எப்போது காம்பிலிருந்து பிரிந்தது என்பது தெரியாது. அது தானாக உதிர்ந்துவிடும்.
அந்த மாதிரியான ஒரு கவிதை நமக்குள் உருவாகி, அது உதிர்கிற கணம் அமைய வேண்டும்.
நாம தேடிக்கிட்டே இருந்தா, எப்போதாவது நமக்கும் அந்த மாதிரி ஒரு வாய்ப்பு அமையும்.
அப்படி ஒரு கவிதையாவது எழுதிட முடியும்ங்கிற விருப்பமும் நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.
அந்த மனசோட இருந்தா, நமக்குள் அது வந்திறங் கும். நானும் தேடிக்கிட்டே தான் இருக்கேன்.
எஸ்.ராமகிருஷ்ணன், அறிவுமதி அண்ணன், கவிக்கோ அய்யா பேசும்போதும்,உலகமெல்லாம் இருக்கும் ஹைக்கூ தொகுப்புகளைப் படிக்கும்போதும் இன்னும் நமக்கிட்ட இருந்து சரியான ஹைக்கூ வரலியேன்னு தோணும். அந்த ஜென் மனசோட நாம இருக்கும்போது நிச்சயம் நடக்கும்.
ஹைக்கூ பிறந்த மண்ணான ஜப்பானுக்கு எப்போது செல்வதாகத் திட்டம்?
என்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளை முடித்துவிட்டு, ஜப்பான் சென்றுவர வேண்டுமென்று நானும் நினைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
ஹைக்கூ விளைந்த அந்த நிலத்தையும், உலகிற்கு ஹைக்கூவைத் தந்த பாஷோவின் கால்தடம் பதிந்த அந்த மண்ணையும் பார்க்க வேண்டும். என் எண்ணம் காலத்தே கைகூடுமென நினைக்கிறேன்.
தமிழ் ஹைக்கூவின் வளர்ச்சிக்காக அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
கவிக்கோ அப்துல்ரகுமான் அய்யா பெயரால் இப்போது எடுத்திருக்கும் இந்த "கவிக்கோ நினைவு ஹைக்கூ போட்டி'யைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென்கிற பேராசை இருக்கிறது. கூடவே ஹைக்கூ பற்றிய பயிலரங்குகள், பயிற்சி முகாம்களையும் நடத்திட வேண்டும் என்கிற எண்ணமிருக்கிறது. காலமும் அதற்கான சூழலும் அமையும்போது நிச்சயம் செய்வேன்.
சமீபத்தில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தின் (ஃபெட்னா) அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்று வந்தது குறித்து...
வட அமெரிக்காவிலுள்ள தமிழ் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து ஆண்டுதோறும் நடத்தும் தமிழ் இலக்கிய மாநாட்டிற்கு சென்று வந்த அனுபவம் மிகவும் மனதிற்கு நெருக்கமாக இருந்தது.
இந்த மாநாட்டில் இயக்குநர்கள் மாரி செல்வராஜ், சீனு.ராமசாமி, பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், கவிஞர் சினேகன் ஆகியோரும் வந்திருந்தார்கள். அங்கே எனது ஹைக்கூ கவிதை நூல் வெளியிடப் பட்டது. அங்குள்ள தமிழர்கள் பேரார்வத்தோடு வருகை தந்து, நிகழ்வை மிகவும் ரசித்தார்கள்.
அவர்களோடு எனது ஹைக்கூ அனுபவத்தையும் நான் பகிர்ந்துகொண்டேன். என்னுடைய நூல் ஒன்று ஃபெட்னா மாநாட்டில் வெளியிட்டதில் எனக்கு ரொம்பவும் சந்தோசம். நிறைய நண்பர்கள் அப்போதே எனது ஹைக்கூ நூலுக்கு முன்பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டனர். இலக்கியத்தின் மீதும், தமிழ் மீதுமான அவர்களின் பற்று மிகுந்த மனமகிழ்வைத் தந்தது.
சென்னையில் கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட தங்களது "பெயரிப்படாத ஆறுகள்' ஹைக்கூ நூல் கவிதைகளுக்காகவும் வடிவமைப்பிற்காகவும் பெரிய அளவில் பாராட்டப்படுகிறது. அது பற்றி சொல்லுங்களேன்
"பெயரிப்படாத ஆறுகள்' எனது மூன்றாவது கவிதை நூல். படைப்புப் பதிப்பகம் மூலமாக ஜின்னா அந்த நூலை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நான் "சிக்னேச்சர் ஆன் வாட்டர்'
அப்படீங்கிற நூல் ஒன்றைப் பார்த்தேன். அந்த நூலை எனது நண்பர் ஒருவர் யு.எஸ்.ஸிலுள்ள ஓஷோ ஆசிரமத்திலிருந்து வரவழைத்து எனக்குக் கொடுத்தார்.
அந்த நூல் அச்சிடப்பட்டிருந்த காகிதம் எனக்குப் பிடித்திருந்தது. அதிலுள்ள ஓவியம், அந்த ஓவியம் இருந்த காகிதம் என எல்லாமே ரொம்ப ஸ்பெஷலாக இருந்தது. நான் ஜின்னாவை அழைத்து, "இந்த மாதிரி பேப்பரையெல்லாம் வச்சு புக் தயாரிக்க முடியுமா? இங்கே அது சாத்தியமா?' என்று கேட்டேன்.
“கண்டிப்பாக செய்துவிடலாம்..!” என்று சொல்லிவிட்டு, எனக்கு சர்ப்ரைசா, அந்த பேப்பரை எங்கிருந்தோ தேடி வாங்கிக்கொண்டு வந்தார். ஓவியர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தனோடு ஓவியங்களை வாங்கி, அழகாக நூலில் சேர்த்தார். அந்த நூலோட வடிவமைப்பே ரொம்பவும் அழகாக வந்தது. கவிதைகளும் ரொம்ப அற்புதமா வந்திருக்கு. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அந்த நூலுக்கு அதிகம் செலவானது.
ஆனாலும் அந்த நூல் பலரையும் சென்றடைய வேண்டுமென்கிற நோக்கில் பாதி விலைக்கு கொடுத்து வருகிறோம்.
எனது மூன்றாவது ஹைக்கூ நூலான ‘பெயரிப்படாத ஆறுகள்’, ரொம்பவும் அடர்த்தியான செறிவான ஹைக்கூ கவிதை களாலான நூலாக வந்திருக்கிறது எனப் பலரும் பாராட்டுகின்றனர். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இயக்குநர் ஆர்.பார்த்திபன் என இந்த நூலின் வடிவமைப்பைப் பற்றி பேசாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு கேட்கவே ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.
‘இனிய உதயம்’ இதழ் குறித்து...
‘இனிய உதயம்’ இதழை நான் கல்லூரியில் படிக்கிற காலந்தொட்டே பார்த்தும் படித்தும் வருகிறேன். "நக்கீரன்' என்கிற அரசியல் புலனாய்வுப் பத்திரிகையை நடத்தும் அண்ணன் நக்கீரன் கோபால் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்து, தமிழகம் அறிந்த நல்ல கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் இணை ஆசிரியராகவும் இருந்து வெளிக்கொண்டு வரும் தரமான இலக்கிய இதழ். கவிக்கோ அவர்களின் வாழ்த்துக்களோடு, அவரையும் இணைத்துக்கொண்டு தொடங்கப்பட்ட இதழிது.
தொடர்ந்து கவிக்கோ அப்துல்ரகுமான் போன்று தமிழின் மிக முக்கியமான கவிஞர்களை, கவிதைகளை, இலக்கியத்தை ‘இனிய உதயம்’ இதழ் மூலமாகத் தொடர்ந்து வெளிக்கொண்டு வருவது பாராட்டத்தக்கது. விற்பனை நோக்கத்தோடு கமர்ஷியலாக இல்லாமல், கலைக்காக, இலக்கியத்திற்காக, தமிழுக்காக இப்படியொரு இதழினைக் கொண்டுவருவது நல்ல விஷயம்.
அதற்காகவே எனது ஸ்பெஷலான வாழ்த்துகள்.
"இனிய உதயம்' இதழில் பலமுறை எனது கவிதைகள், கட்டுரைகள் வந்திருக்கிறது. நான் தொடர்ந்து இதழை வாசித்துக்கொண்டுதான் இருக்கின்றேன். தரமான "இனிய உதயம்' இதழ், தொடர்ந்து வர வேண்டுமென்றும் விரும்பு கின்றேன்.
-சந்திப்பு : புதுகை முருகுபாரதி