ங்கம் வைத்து தமிழ் வளர்த்த சூழல் மாறி, தற்போது சமூக வலைத்தளங்கள் தமிழ் வளர்க்கும் பணியை சத்தமில்லாமல் செய்துவருகின்றன. ஆம், சமூக வலைத்தளங்கள் நமக்கு அறிமுகமாவதற்கு முன்புவரை, எழுத்தாளர்களை உருவாக்குவதில் பத்திரிகைகளும், தமிழ் மன்றங்களும் பெரும்பங்கு வகித்தன. குறிப்பாக, பத்திரிகைகளில் கவிதை, கட்டுரை, சிறுகதைகள், துணுக்குகள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள், தொடர்ச்சியாக எழுதியனுப்பி, தங்கள் படைப்புகள் பத்திரிகைகளில் வெளியாவதைக் கண்டு உற்சாகமடைந்தனர். தங்கள் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம், அவர்களை மேலும் மேலும் தொடர்ச்சியாக எழுதவைத்தது. அடுத்த கட்டமாக, தங்கள் படைப்புகளை நூல்களாக வெளியிட்டு, அதன்
மூலம் தங்களை எழுத்தாளர்களாக இச்சமூகத்தில் அடையாளப்படுத்தினர்.

Advertisment

பத்திரிகைகளுக்கு எழுதியனுப்புவதில் தங்கள் படைப்புகள் நிராகரிக்கப்படும் சூழலில் தன்னம்பிக்கை இழந்து, எழுத்தார்வத்தை குறைத்துக்கொண்டவர் களும் பலருண்டு. இதில், மனந்தளராமல் வெவ்வேறு பத்திரிகைகளுக்கு எழுதியனுப்பி, தங்கள் படைப்புகளை மென்மேலும் செம்மைப்படுத்தி வெற்றிகண்டவர்கள் சிலரே. இப்படிப்பட்ட சூழலில்தான், எழுத்தார்வமிக்க வர்களை உற்சாகப்படுத்தும் வினையூக்கியாக சமூக வலைத்தளங்கள் நமக்கு அறிமுகமாகியுள்ளன. சமூக வலைத்தளங்களின் தொடக்கத்தில், தனித்தனி வலைப்பூக்களை உருவாக்கி, அதில் தங்கள் படைப்புகளை எழுதிவந்த காலகட்டம் இருந்தது. அதன்பின்னர், ஆர்குட், முகநூல் போன்ற தளங்கள் வந்ததும், 

தொடக்க நிலை எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்தக்கூடிய சூழல் உருவானது. இந்த சமூக வலைத்தளங்களில், உலகம் முழுவதுமுள்ள தமிழ் எழுத்தாளர்களும், வாசகர்களும் குவிந்திருப்பதால், அனைத்து வகையான எழுத்துக்களுக்கும் இங்கே வாசிப்பதற்கும், பாராட்டுவதற்குமான வாய்ப்பு கிடைக்கிறது. இது பலரையும் எழுத்தாளர்களாக உருவாக்குகிறது.

தமிழ் எழுத்துலகைப் பொருத்தவரை, பெண் படைப்பாளிகளின் எண்ணிக்கை சற்று குறைவாகவேதான் இருந்துவந்தது. தினசரி, வார, மாதப் பத்திரிகைகளும், நூல்களும் மட்டுமே வாசிப்புக்கான வாய்ப்புகளாக இருந்த சூழலில், வாசிப்புப் பழக்கத்தின் அவசியம் குறித்த புரிதல் இருந்த குடும்பங்களிலும், படித்த குடும்பங்களிலும் மட்டுமே பத்திரிகைகள் வாங்கும் பழக்கமிருந்தது. அந்த குடும்பங்களிலுள்ள பெண்களுக்கு தான் வாசிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அவர்களில், எழுதும் ஆர்வமுள்ள வெகுசிலர் மட்டுமே தங்கள் குடும்பப் பொறுப்புகளைத்தாண்டி பத்திரிகைகளுக்கு தங்கள் படைப்புகளை எழுதியனுப் பத் தொடங்கினர். அப்படி எழுதியவர்களில் தேர்ந்த எழுத்துக்குரியவர்களை பத்திரிகைகள் அங்கீகரித்தன. அதன்மூலம் சில பெண்கள் எழுத்தாளர்களாக உருவெடுக்க முடிந்தது.

Advertisment

காலப்போக்கில், கணினிகளின் அறிமுகத்துக் குப்பின், இணையதளம் என்ற அடுத்தகட்ட வளர்ச்சி யால் சமூக வலைத்தளங்கள் எழுதுவதற்கான தளமாக அறியப்பட்டன. பலரும் இவற்றினுள்ளே தங்களுக்கான கணக்கைத் தொடங்கி, வாசிப்பு, எழுத்துத்திறமையை காட்டத் தொடங்கினர். இத்தகு சமூக வலைத்தளங்கள், மௌனப்புரட்சி போல எண்ணிலடங்கா பெண் படைப்பாளிகளை உருவாக்கிவருகின்றன. முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்சப், யூட்யூப் போன்றவற்றில் பகிரப்படும் படைப்புகள், உடனுக்குடன் ஆயிரக்கணக்கானவர்களால் வாசிக்கப்படுவதும், பாராட்டப்படுவதும், பகிரப்படுவதும் எழுத வருபவர்களுக்கு கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது. 

நான் எழுதும் கவிதை நன்றாக இருக்குமா? மற்றவர்கள் படித்தால் கவிதையாக ஏற்பார்களா? நான் எழுதியுள்ள சிறுகதை நன்றாக இருக்குமா? என்றெல்லாம் பல்வேறு தயக்கங்களோடு சமூக வலைத்தளங்களில் எழுதத் தொடங்கிய பல பெண்கள், இங்கு கிடைக்கும் அபரிமித ஆதரவால் தன்னம்பிக்கையோடு தொடர்ந்து எழுதி, அனைவரும் வியக்கும் எழுத்தாளர்களாக உருவெடுத்திருப்பதை கடந்த பத்தாண்டுகளில் பார்க்கமுடிகிறது. தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களே தங்கள் எழுத்தை ரசிக்காத சூழலில், இந்த சமூக வலைத்தளம் தங்கள் எழுத்தை கொண்டாடுவதால், வீட்டுப் பணிகளுக்கிடையே, அலுவலகப் பணிகளுக்கிடையே இந்த சமூக வலைத்தளங்களில் தங்கள் எழுத்தார்வத்தை, திறமையை வெளிப்படுத்தி பிரபலமான பெண் படைப்பாளிகள் பலரைக் காணமுடிகிறது. சமூக வலைத்தளங்கள் என்றாலே எதிர்மறையாகப் பார்க்கப்படும் சூழலில், இதுபோல் நேர்மறையான மாறுதல்களை இலக்கியச்சூழலில் உருவாக்கியிருப்பதை சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது. அந்த வகையில் சமூக வலைத்தளங்கள், தமிழ் எழுத்துலகின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. 

சமூக வலைத்தளங்களில், கவிதைகளுக்காகவே, படைப்புகளுக்காகவே பல்வேறு குழுமங்கள் இயங்குகின்றன. அவற்றில் எழுதுவதன் மூலம் தங்களை பட்டைதீட்டிக்கொண்ட பல எழுத்தாளர்களைப் பார்க்கமுடிகிறது. தங்கள் எழுத்துக்களை நூல்களாக வெளியிடுகிறார்கள். விருதுகளையும் பெறுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் எழுதத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே பிரபல எழுத்தாளர்களாக, மேடைப்பேச்சாளர்களாக, நூல் விமர்சகர்களாகப் பல பெண்களும் அங்கீகாரம் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. இதோ, அவர்களில் சில பெண் படைப்பாளிகள் தங்கள் வளர்ச்சியில் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு குறித்த அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார்கள். 

கனகா பாலன்:

Advertisment

எது எது எந்தெந்த நேரத்தில் நமக்காகும் என்பதைக் குறித்த விதி இயற்கையிடம் உண்டென்று நம்புவள் நான். துயரின் எல்லையினினின்று உலகத்தைப் பார்க்கையில் பெரும் சூனியமாகக் காட்சியளித்த காலமது. ஆசையாசையாக கூடுகட்டிக் குஞ்சுகளைப் பத்திரப்படுத்திப் பாதுகாக்கும் தாயின் கண் முன்னே கூடு அவிழ்ந்துவிழ நேர்ந்தால், துயர்ப்படும் அந்தத் தாய்ப்பறவையின் நிலையே எனதென இருக்கையில்தான் முகநூல் எனும் சமூக வலைத்தளம் அறிமுகமானது எனக்கு. முதலில் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டதுபோல் நுட்பங்கள் தெரியாமல் முழித்து, ஒரு கட்டத்தில் இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராதென விலகியிருந்தேன். ஆனாலும் உள்ளுக்குள் எதையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் எப்போதும் உண்டெனக்கு. அந்த உந்துதல் தந்த வேகத்தில் மீண்டும் முகநூல் கணக்கிற்குள் பற்று வைக்கத் தொடங்கினேன்.

பரபரப்பான கால நகர்வோடு ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாத விசயங்கள் வாசிக்கக் கிடைத்தன. அதுவரை அறிந்திடாத புதிய உலகு என் கண் முன்னே விரிந்து நீண்டுகொண்டே போனது.  எப்படி முக நூலைக் கையாளுவதெனக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவரப்பெற்றேன். அந்த சமயத்தில்தான்  முகநூலில் 'வாங்க பேசலாம்' என்ற குழுவில் தலைவர் ரவி தங்கதுரையால் இணைக்கப்பட்டேன். அங்கு தினம் ஒரு தலைப்பு தந்து எழுதச் சொன்னார்கள். அனுபவம் தந்த பாடங்கள் சுயமாக சிந்திக்கத் தூண்டியது. எழுதினேன். இனம்புரியாத ஒரு மகிழ்வு தொற்றிக்கொண்டது. அப்போதைய என் விரக்தி நிலைக்கு நிச்சயம் எனக்கது வேண்டுவதாக இருந்தது.

இலக்கியப் பின்னணி எதுவுமில்லாத குடும்ப வாழ்வு எனது. "இதையிதை வாசி, இப்படியிப்படி எழுது" எனக் கற்றுத்தரவோ வழிகாட்டவோ என் குடும்பத்தில் யாருமில்லை. ஆனால் ஒன்றேயொன்று என் சிறுசிறு வளர்ச்சிகண்டு பெருமைப்பட்டுக்கொண்டனர். எதிர்க்கவில்லை. ஏற்றுக்கொண்டார்கள். நூல்களை வாசிக்கத் தொடங்கினேன். கண்டிப்புகளின்றி எந்நேரத்திலும் என்னால் வாசிக்கமுடிந்தது. அத்தனை பலம் தந்து உறுதுணையாக இருக்கும் குடும்பம் கிடைக்கப்பெற்றது வரம்.

இதுவரையிலான என் எழுத்துப்பயணத்தில், என் கனா யாழ் நீ, அகயாழின் குரல், உன் கிளையில் என் கூடு, கூராப்பு எனும்  நான்கு கவிதை நூல்களையும் 'பாறைக்குளத்து மீன்கள்' என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளேன். தொடர்ந்து அடுத்தடுத்து என் படைப்புகள் நூலாகும் என்ற நம்பிக்கையோடு செயலாற்றிக் கொண்டிருக்கிறேன். மேலும் எனது படைப்புகள், இனிய உதயம், ஆனந்தவிகடன், கணையாழி, குமுதம், வாரமலர், கல்கி, ஆவநாழி, நுட்பம், படைப்பு, கதைசொல்லி, வாசக சாலை மற்றும் சில அச்சு, இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. பொதுவாக, சமூக வலைத்தள மென்றாலே நல்லதல்ல, முக்கியமாகப் பெண்களுக்கு என்று குறிப்பிடுவார்கள். ஆனால் அந்த சமூக வலைத்தளத்தின் வழியே நமக்கான அடையாளத்தை நாம் உருவாக்கிக் கொள்ளவும் முடியும் என்பதே எனது கருத்து!

பூங்கோதை கனகராஜன்:

விவசாயக் குடும்பப் பின்னணியில் பிறந்து வளர்ந்த நான், எனது ஏழாம் வகுப்பிலேயே கவிதை, கதை எழுத ஆரம்பித்தேன். எனது தந்தைக்கு இயற்கையாகவே கவிதை மற்றும் பாடல்கள் எழுதும் ஆர்வமும் திறமையும் இருந்துவந்ததை நான் சிறு வயது முதலே கண்டு வியந்துள்ளேன். தந்தை தந்த விதையென நான் உயிர்த்தெழுந்தேன். நான் கல்லூரியில் சேர்ந்து படித்துவரும்போது, கல்லூரி நிகழ்ச்சிகள் மற்றும் கல்லூரி இதழ் வெளியீடுகளில் எனது படைப்புகளை, கதையாகவும் கவிதையாகவும், கட்டுரையாகவும் எழுத ஆரம்பித்து, ஓர் அங்கீகாரத்தையும், பாராட்டுக்களையும் பெற்றேன்.

பின்னர், திருமணம், குடும்பம் என இடைவெளியின்றி பயணிக்க ஆரம்பித்தபோது, எனது எழுத்தார்வமும் எனக்குள்ளேயே குடியிருந்து வந்தது. ஆனால் நேரமின்மையால் அவை படைப்புகளாக மாறவில்லை. அழகுக்கலை பயிற்சி பெற்று, வீட்டிலேயே பியூட்டி பார்லரை நடத்திவந்தேன். ஜேசீஸ் இயக்கத்தில் மகளிர் பிரிவு தலைவியாக சிறப்பாக செயல்பட்டு சிறந்த தலைவிக்கான விருதை பெற்று, பின்னர்  மண்டல அளவில் தலைவர் பொறுப்பேற்று, மண்டல அளவிலும் விருதுகளைப் பெற்று, பாராட்டுக்களையும் பெற்றேன். தொடர்ந்து, ஃபுட் ரெப்ராலஜியில் பட்டயப் படிப்பையும் முடித்தேன். இவ்வளவுக்கிடையிலும் எனது இலக்கிய தாகத்தால், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ் இலக்கிய பாடத்தில் முதுகலை பட்டத்தையும் பெற்றேன். 

இந்நிலையில், நல்ல சமுதாயத் தொடர்புக்காகவும், எழுத்தார்வத்திற்காகவும் முகநூலில் பயணத்தைத் தொடங்கிய நான், தினமும் ஒரு கவிதை என எழுத ஆரம்பித்தேன். இயற்கை, சமுதாயக் கண்ணோட்டம், மனம் தொட்ட நிகழ்வுகளென என் மனதின் வெளிப்பாடுகளை மெல்லிய கவிதைகளாக, முகநூலில் எழுதத்தொடங்க, வாசிப்பாளர்களின் பாராட்டுகள் எனக்கு உந்துசக்தியாக மாற, முகநூலில் எனது பங்களிப்பு அதிகரித்தது.

அதில் கிடைத்த உற்சாகம் காரணமாக, 2021 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எனது முதல் கவிதைத் தொகுப்பாக முத்துக் குளிக்கும் விண்மீன்கள் வெளியானது. எனது முதல் படைப்பே சௌமா இலக்கிய விருதையும், தஞ்சை பிரகாஷ் இலக்கிய விருதையும் வென்றது தனிச்சிறப்பு. தொடர்ந்து 2022-ல், இரண்டாவது படைப்பாக பூக்காரியின் மந்திரக்கோல் வெளியாகி பாராட்டுகளைப் பெற்றது. 2024-ஆம் ஆண்டில், மழை தீண்டிய கடல், பிரபஞ்ச நிருபம் ஆகிய எனது நூல்கள் ஒருசேர வெளியாகின. 

படைப்புக் குழுமத்தின் 'தகவு' இதழில் எனது படைப்புக்கள் வெளியாயின. சிறந்த மாதாந்திர படைப்பாளி விருதுடன், கவிச்சுடர் விருதையும் பெற்றேன். ஆனந்த விகடன், தினமலர், இனிய உதயம், வாங்க பேசலாம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. முகநூல் என்றாலே செல்லக் கூடாத திசை என்று பலரும் தவறாக புரிந்துவைத்த நிலையில், முகநூலே எனது பத்திரிகை வாயிலைத் திறந்து வைத்த மந்திர சாவியானது.

ஸ்ரீவாரி மஞ்சு:

முகநூலில் பதிவுகள் எழுதுவது, பெரும்பாலும் பொழுதுபோக்குக்காகத் தொடங்கியதாகவே இருக்கும். அப்படித் தொடங்கிய முகநூல் பயணத்தில் சில பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொண்டாலும், அதை பக்குவமாகக் கையாளும்போதும் நம் தனிப்பட்ட எழுத்தாளுமை முன்னேறுவதற்கான வாய்ப்பாக அமைகிறது.

நம் ரசனையான உணர்வுகளை கவிதைகளாக மாற்றி தங்குதடையின்றி வெளிப்படுத்த முகநூல் ஒரு சிறந்த களமாக இருக்கிறது. கவிதை எழுதும் ஆர்வத்தில் முகநூல் பக்கத்தை தொடங்கினேன். முதலில் கவிதைகளுக்கான குழுமங்களில் எழுதத் தொடங்கினேன் மற்றவர்களின் கவிதைகளை  வாசிக்க வாசிக்க எனது எழுத்தார்வம் அதிகமானது. படைப்பு, பட்டாம்பூச்சி போன்ற கவிதைத் களங்களில் நிறைய கவிஞர்களின் படைப்புகளை வாசிக்கவும், உணர்வுகளை தயக்கமின்றி வெளிப்படுத்தவும் வாய்ப்பு கிடைத்ததால் பெண்கள் பலரும் கவிதாயினிகளாக உருவெடுப்பது சாத்தியமானது. ஏதேனும் புகைப்படத்தையோ, ஓவியத்தையோ காணும்போது என்னுள் எழும் கவி ரசனையை அப்படியே கவிதையாக்கி முகநூலில் எழுதுவேன்.

நான் இலக்கணமோ, இலக்கியமோ கற்றுத்தேர்ந்தவள் அல்ல. மொழியறிவை கொஞ்சம் அறிந்தவள், எழுத்தின் மீது தீரா தாகம் கொண்டவள். இந்த முகநூலுக்குள் வந்த கடந்த ஆறு வருடங்களாகதான் எழுத்தின்மேல் ஆசை கொண்டேன்.

கோபமும் கூட கவிதை செய்யும் போல. வெளிக்காட்ட இயலா மனதின் தாக்கத்தை காகிதத்தில் கிறுக்கியெறிந்தது பல திங்கள் கடந்து கையில் அகப்பட்டபோது என் விழிகளுக்கு கவிதையாக மிளிர்ந்தது. அவற்றை அப்படியே முகநூலில் எழுதத் தொடங்கினேன். நான் செய்துவரும் தையல்தொழிலின் இடையே வார்த்தைகளைக் கோர்த்து கவிதை எழுதியதால் பணிச்சுமையை மறந்தேன். எனவே தொடர்ந்து கவிதைகள் எழுதினேன்.

முகநூல் படைப்பு குழுமத்தில், கல்வெட்டு இணைய இதழில் என் கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. கவிச்சுடர் விருதும், மாதாந்திர பரிசும், சிறந்த நூல் அறிமுகப் பரிசும் பெற்றிருக்கிறேன். அனைத்துக்கும் முத்தாய்ப்பாக, கவிக்கோ அப்துல்ரகுமான் கவிதைப் போட்டியில் எனது கவிதை சிறப்பு கவிதையாக கவிஞர் ஈரோடு தமிழன்பனால் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. முகநூல் பட்டாம்பூச்சி குழுமத்திலும் பொறுப்புகளில் செயல்பட்டது எனக்கான தன்னம்பிக்கையையும், கவியார்வத்தையும் வளர்த்தெடுக்க உதவியது.

அர்ஷா:

என் எழுத்துப் பயணத்தின் முதல் அத்தியாயம், பதினோராம் வகுப்பில் நான் தொகுத்த 'அறிவியல் முன்னோடிகள்' என்ற புத்தகத்தில் தொடங்கியது. என் பெயர் முதல்முறையாகப் புத்தகத்தில் இடம்பெற்றபோது ஓர் எழுத்தாளராக என்னை நான் உணர்ந்ததில்லை.

கடந்த ஐந்தாண்டுகளில், கைபேசியும், இணையமும் என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தன. முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் உருவான நட்பு களும், வாசிப்பிற்குப் பின் நடந்த கருத்துப் பரிமாற்றங்களும் என்னுள் கதைகளையும், கவிதைகளையும் விதைத்தன. அதன் தாக்கமாக இன்று நான் தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறேன்.

இதுவரை 200-க்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படித்து, நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களைத் திறனாய்வு செய்துள்ளேன். ஒவ்வொரு புத்தகமும் சமூகத்தில் எதை எழுத வேண்டும், அதன் தேவை என்ன என்பதை எனக்குப் புரியவைத்தது. குறிப்பாக, ராகுல சாங்கிருத்தியாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை', மீராவின் மொழிபெயர்ப்பு நூலான 'மீரா சாது', சி.சு.செல்லப்பாவின் 'வாடிவாசல்', புதுமைப் பித்தன் மற்றும் அழகிரிசாமியின் சிறுகதைத் தொகுப்புகள், புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியங்கள், 1908 திருநெல்வேலி எழுச்சி, ரஷ்ய மொழிபெயர்ப்பு இலக்கியங்கள், தொ.பரமசிவனின் ஆய்வுலகம், காலித் ஹுசைனியின் 'ஆயிரம் சூரிய பேரொளி', தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதைகள், மக்கள் வரலாறு எனப் பல புத்தகங்கள் என்னைச் செதுக்கின. வாசிப்பு எனக்குக் கற்றுத்தந்த பாடங்களும், அனுபவங்களும் அளவிட முடியாதவை.

உலகக் கதைசொல்லி பவா செல்லத்துரையின் உரைகள் அனைத்தையும் நான் தொகுத்து வெளியிட் டது ஒரு மகத்தான அனுபவம். கதைகளுக்குள் மறைந் திருக்கும் ஆழமான கருத்துகளை  வெளிச்சமாகக் காண்பிக்கும் அவரது பேச்சுத்திறன், கதைகள் எப்படி அமையவேண்டும் என்பதை எனக்குச் சொல்லித்தந்தது. மேலும், பல புத்தகங்களை நான் பதிப்பித்திருக் கிறேன். மொழிமீது கூர்ந்த அறிவுடனும், வார்த்தை களைச் செதுக்கி மெருகேற்றும்போதும் கிடைத்த அனுபவம் தனித்துவமானது. குறிப்பாக, புகழ்பெற்ற ரஷ்ய சிறுகதை எழுத்தாளர்களான ஆண்டன் செக்கோவ், லியோ டால்ஸ்டாய், ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி, மற்றும் நிகோலாய் கோகோல் ஆகியோரின் படைப்புகள் ஒரு சிறுகதை எப்படி அமைய வேண்டும் என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்தன.

என் வாசிப்பு அனுபவத்தால் நான் வரைந்த சித்திரமே 'இன்னும் ஆறு நாட்களே' என்ற எனது சிறுகதை. இந்தச் சிறுகதை மஞ்சரி இதழில் வெளிவந்ததோடு மட்டுமல்லாமல், இன்றும் இந்தக் கதை குறித்து பலரும் என்னுடன் உரையாடிக்கொண்டே இருக்கிறார்கள்.

அலைபேசியும் இணையமும் வளர்ச்சிக்குத் தடை என்று பலர் கூறினாலும், நான் அவற்றிலிருந்தே வளர்ந்தவள் என்று பெருமையுடன் சொல்கிறேன். எழுத்தாளர் என்ற இந்த அடையாளத்தை எனக்கு வழங்கியது இணையமும் இதில் நான் சந்தித்த நண்பர்களுமே!