சென்னையிலுள்ள எனது அலுவலக கட்டடத்தில், இரவு நேரத்தில் சிலர் வந்து உறங்கிவிட்டு விடியலில் எழுந்து சென்று விடுவார்கள். நான் அந்த கட்டட மேனேஜரிடம் இவர்கள் எல்லாம் யார் என்றேன். அவர்கள் வெளியூர்க்காரர்கள். குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு இங்குவந்து தினமும் கிடைக்கும் வேலையைச் செய்து வாழ்பவர்கள், தனியே வீடு எடுத்து தங்க வசதி இல்லாதவர்கள், இரவில் தங்க மட்டும் உதவி செய்யக் கேட்டார்கள். அவர்கள் வறுமை நிலையறிந்து நானும் சரியென்றுக் கூறிவிட்டேன் என்றார்.
ஒருநாள் காலையில் நான் ஓய்வாக அமர்ந்தி ருந்தேன். அந்த நபர்களில் சுமார் 35 வயதுடைய ஒருவர் என்னிடம் வந்தார். ஏன்? இன்று வேலைக்கு செல்ல வில்லையா என்றேன். எங்கும் வேலை கிடைக்கவில்லை என்றார். அவர் தனது சொந்த ஊர், குடும்பம் என தன்னைப் பற்றிக் கூறிவிட்டு உங்களிடம் ஜோதிடம் பார்க்க பலர் வருகின்றார்கள். என் வாழ்க்கை நிலை இப்படியே போய்விடுமா? நானும் பணம் சம்பாதித்து வறுமை நீங்கி வாழ்வில் உயர்வடைய வழி இல்லையா? என் விதிதான் என்ன? எனக்கும் பலன் கூறுங்கள் என்றார்.
அவர் கூறியதைக்கேட்டு, சிறிது நேரம் அமைதியாக இருந்தேன். அகத்தியர் ஜீவநாடிமூலம் யாருக்கு பலன் கூறவேண்டும் என்று அகத்தியர் நினைக்கின்றாரோ, அவர்கள் மட்டுமே நாடியில் பலனறிய வருவார்கள்.
அகத்தியர் பலன்கூற விரும்பவில்லை என்றால் ஏதாவது தடைகளை ஏற்படுத்தி வரவிடாமல் தடுத்துவிடுவார் என்பதை நானும் அனுபவத்தில் அறிந்துள்ளேன். அதனால் இன்று இவருக்கு பலன் கூற அகத்தியர் நினைத்துவிட்டார் என்று நினைத்து அவரை அமரவைத்து ஓலையைப் படிக்கத் தொடங்கினேன்.
அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
இவன் எதிர்காலம் பற்றியும், இப்பிறவி விதி பற்றியும் கேட்கின்றான். இவன் வாழ்க்கை வறுமை நிலைமாறி, உயரும் காலம் தொடங்கிவிட்டது என்பதால் அகத்தியனே, இவனை வரச்செய்தேன். இந்த பிறவியில், இவன் அரசியல்வாதிகளால் உயர்த்தப்படுவான். ஒரு அரசியல்வாதியிடம் சென்று பழக்கம் கொண்டு அவன் கூறுவதைக்கேட்டு வேலை செய்யச்சொல். இவன் அதிர்ஷ்டம் அந்த அரசியல்வாதியையும் உயர்த்தும், இவன் வாழ்வும் உயரும். அரசியல்வாதிகளால் ஆதரிக்கப்படும் விதி அமைப்புள்ளவன். ஆனால் அரசியல் அதிகாரப் பதவிக்கு ஆசைப்படக்கூடாது என்று கூறிவிட்டு மறைந்தார்.
அகத்தியர் ஓலையில் கூறியதைக்கேட்ட எங்கள் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஐயா, இதுவரை அரசியல்வாதிகள், அதிகாரிகள் வீட்டு விசேஷங்களுக்குச் சென்று, வேலைசெய்து கூலி வாங்கியுள்ளேனே தவிர ஒரு அரசியல்வாதியையும் எனக்குத் தெரியாது. மேலும் என்னைப் போன்றவர்களை, அவர்கள் வீட்டின் அருகில்கூட விடாமல் விரட்டுவார்கள். அகத்தியர் குழப்பத்தை உண்டாக்கிவிட்டார் என்றார்.
ஓலையில் அகத்தியர் கூறியதை யோசித்தேன். அரசியல்வாதியிடம் செல் என்றுதான் கூறினாரே தவிர, அவர் யார் என்று யாரையும் அடையாளம் காட்டவில்லை. அதனால் நீ அரசியல் வாதிகள் தங்கியிருக்கும் பழைய எம்.எல்.ஏ.க்கள் ஹாஸ்டலுக்கு சென்று உன் மனதில் தோன்றும், ஒரு இடத்தில் அமர்ந்துகொள். அகத்தியர் ஏதாவது உதவிசெய்து உனக்கு வழி காட்டுவார் என்று கூறி அனுப்பிவைத்தேன்.
ஆறு மாதம் சென்று என்னைக்காண வந்தவர், வணக்கம் செலுத்தினார். எப்படி இருக்கிறீர்கள்? என்றேன். அவர் நடந்ததைக் கூறத் தொடங்கினார்.
ஐயா, நீங்கள் கூறியதுபோன்று, எம்.எல்.ஏ ஹாஸ்டலுக்கு சென்று ஒரு அறையின் முன்னுள்ள திண்ணையில் அமர்ந்துகொண்டேன். இரண்டு நாட்களாக எதுவும் நடக்கவில்லை. மூன்றாவது நாள், அந்த அறையில் தங்கி இருப்பவர், யார் நீ? எதற்காக இங்கேயே உட்கார்ந்து இருக்கின்றாய்? என்று என்னைப் பற்றி விசாரித்தார். என்னைப்பற்றிக் கூறிவிட்டு இங்கு இருப்பவர்கள், ஏதாவது வேலை சொல்வார்கள்.
அதைச் செய்தால் பணம் கொடுப்பார்கள் என்றேன். நான் கூறியதைக் கேட்டுவிட்டு நம் இருவருக்கும் சாப்பாடு வாங்கி வா என்றார். சாப்பாடு வாங்கி வந்து இருவரும் சாப்பிட்டோம். சில நாட்கள் சென்ற பின்புதான் அவர் யார்? என்று தெரிந்தது.
அவர் மாவட்ட அளவில் பொறுப்பில் இருந்தவர். அரசியல் எதிரிகள் அவர்மீது பொய்யான குற்றச் சாட்டுகளைக் கேட்ட கட்சித் தலைமை அவரைப் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டதாகவும், உண்மை நிலையை தலைமைக்குகூற இங்கேயே தங்கி முயற்சி செய்துவருவதாக என்னிடம் யதார்த்தமாக கூறினார். நான் அவரிடம் சென்று சேர்ந்த சில நாட்களிலேயே, இவர் நேர்மையானவர், இவர்மீது எதிரிகள் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவையென்று, அறிந்துகொண்ட கட்சித்தலைமை அவரை நேரில் வரும்படி அழைத்தார்கள்.
கட்சியின் தலைமையைச் சந்திக்க யாரிடமும் கூறாமல் என்னை மட்டும் அழைத்துச்சென்றார்.
கட்சித்தலைமை இவருக்கு மறுபடியும் மாவட்ட பொறுப்பை தந்து கட்சிப் பணியை செய்யச் சொன்னது. அவர் பதவியில்லாமல் இருந்தபோது யாருமில்லை. நான் மட்டும்தான் இருந்தேன். பதவி வந்தவுடன் ஏராளமான கட்சிக்காரர்கள் அவரை சந்திக்க வந்தார்கள். என்னிடம் சொல்லிவிட்டுத்தான் அவரை சந்திப்பார்கள். நான்வந்து அவருடன் சேர்ந்த பின்புதான், என் அதிர்ஷ்டத்தால் அவருக்கு இழந்த பதவியும், மதிப்பும், மரியாதையும் கிடைத்தது என்று எண்ணிய அவர், எங்கு சென்றாலும் என்னையும் அழைத்து செல்கின்றார். நானில்லாமல் எங்கும் செல்வதில்லை.
ஐயா, எனக்கு இப்போது ஒரு பிரச்சினை கட்சி தலைமை, நம்பகமான விசுவாசியான, ஒருவன் எனக்குத்தேவை, உனக்கு தெரிந்த யாராவது இருந்தால் அவனை, அழைத்துவா என்று கூறியுள்ளார்கள்.
அவர், என்னிடம் அங்குசென்று வேலை செய் என்று கூறுகின்றார். நான் கட்சி தலைமையிடம் செல்லலாமா அல்லது இவருடனே இருந்துவிடலாமா என்று அகத்தியரிடம் கேட்டுக் கூறுங்கள்.
ஓலையில் இவன் கட்சித் தலைமையிடம் வேலைக்குச் செல்லச் சொல், ஆனால் அரசியல் சம்பந்தமான வேலை அல்ல, அவர்களின் மறைமுகமான வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்வார்கள். இவனும் கட்சிப் பதவிகளுக்கு ஆசைப் படக்கூடாது. இவன் ஆயுள்வரை அரசியல்வாதிகளுக்கு அடிமையாக இருந்து வேலை செய்வதுதான் இவன் விதி. நம்பியவர்களுக்கு உண்மையாக- விசுவாசமாக நடந்துகொள்ளச் சொல். நிறைய செல்வம் சேரும். சொத்து, நிலம், வீடுகள் என வாழ்வில் உயர்ந்து வாழ்வான் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார். அவரும் அகத்தியரை வணங்கிவிட்டு விடைபெற்றுச் சென்றார்.
பணம் செலவுசெய்து அரசியல் பதவி அடைய முடியாதவர்கள், வறுமையில் வாழ்ந்து உயர்பதவியை அடைந்தவர்கள் என பலரையும் அறிந்துள்ளேன்.
அரசியல் பதவி அடைய ஒரு யோகம் இருக்க வேண்டும் என்பதை நானும் அறிந்துகொண்டேன்.
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/04/agathiyar-2025-12-04-18-25-04.jpg)