முக்கடலும், முத்தமிழும், முக்கனியும், முத்தமிடும், குமரி மாவட்டத்தில், அன்றைய திருவிதாங்கூர் தேசத்தின் தலைநகராக விளங்கிய பத்மனாபபுரத்தைச் சுற்றி 50 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள பாடல் பெறாத பன்னிரு சைவத் திருத்தலங்களான, திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு மற்றும் திருநட்டாலம் ஆகியவை.
சைவத்தின் மாண்பை உணர்த்தி நிற்கும் தென்னகத்தின் பஞ்சபூதத் தலங்களாக, அமைந்து அருள்பாலிக்கும் சங்கரன் கோவில் (மண்) கிரிவலம் வந்தால்லூர், (தீ) தென்மலை (காற்று), தேவதானம் (ஆகாயம்), தாருகாவனம் (நீர்) ஆகியவை இதே நிலையில் வைத்து, எண்ணப்படும். இதேபோன்று வைணவத்தின் பெருமையைப் பறைசாற்றி நிற்கும் திரு வைகுண்டம், நத்தம் (வரகுணமங்கை) திருப்புளியங்குடி, திருக்கோளூர், பெருங்குளம், இரட்டைத் திருப்பதி, தென் திருப்பேரை, ஆழ்வார் திருநகரி ஆகியவை வைணவத்தின் பெருமையைப் பறைசாற்றி நிற்கும்.
இறைவனைப் பல்வேறு அடியார்கள், பல்வேறு நிலைகளில், வணங்கியதை ஆன்மிக வரலாற்றின் அரிய பக்கங்கள், நமக்கு விரிவாக எடுத்துக்காட்டி உள்ளன. சிவாலய ஓட்டத்தைப் பொறுத்தவரை சிவராத்திரியின் முதல்நாள் இரவு பன்னிரு சைவத் திருத்தலங்களுக்கு ஓடிச்சென்று, இறையை வணங்கி வழிபடுவது, தொன்று தொட்டு வழங்கிவரும் மரபு.
சிவராத்திரி ஆன்மிக வரலாற்று வடிவில் தேவிக்கு உகந்ததோ ஒன்பது ராத்திரிகள் அவை நவராத்திரி. சிவனுக்கு உகந்ததோ, ஒரே ராத்திரி... அதுவே சிவராத்திரி. சிவராத்திரி குறித்த மூன்று ஆன்மிக நிகழ்வுகளைச் சற்று ஆழமாகச் சிந்திப்போம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/30/siva1-2026-01-30-16-22-21.jpg)
பாற்கடல் கடைந்த படலம்
அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக பனிப்போர் நடந்துவந்தது. அதை முடிவுக்குக் கொண்டு வர தேவர்கள், மகாவிஷ்ணுவை நாடினர். கபட நாடக சூத்திரதாரியான கண்ணன் ஒரு வியூகம் அமைக்கிறார். மந்தார மலையை மத்தாகவும், அட்ட நாகங்களில் ஒன்றான வாசுகி என்னும் கொடிய பாம்பைத் தாம்பாகவும், (கயிறு) கொண்டு பாற்கடல் கடையப் படவேண்டும். ஒரு புறம் தேவர்கள், மறுபுறம் அசுரர்கள் நின்று, பாற்கடலைக் கடைய ஏற்பாடாயிற்று. காமதேனு, கற்பக விருட்சகம், மகாலட்சுமி என ஒவ்வொன்றாக.
கடைந்துகொண்டே வரும்போது, வாசுகி வலி பொறுக்க முடியாமல், ஆலகால விடத்தை வாந்தி எடுக்க, அதைத் தேவர்கள், ஒரு மண் கலயத்தில் நிரப்பி வைக்கின்றனர்.
விடத்தின் கடுமையான குணத்தைக் கடுதி, எல்லாம்வல்ல முக்கண் முதல்வனாகிய சிவபெருமான் விடத்தை அருந்திவிடுகிறார். கீழே உமிழ்ந்துவிட்டால், தீப்பிடித்துவிடும் என்று பயந்து தேவர்கள், வாயைப் பொத்துகின்றனர். உள்ளே விழுங்கி விட்டால், உயிருக்கு ஆபத்து எனக்கருதி, உமாதேவி வாயை மூடுகிறாள். விடம் கழுத்தில் தங்கியதால், சிவபெருமானின், கழுத்துப் பகுதி கருநீல நிறம் அடைந்து, அவர் திருநீல கண்டர் எனும் திருநாமம் ஏற்கிறார். அவ்வாறு பாற்கடல் கடைந்த அந்த இரவே சிவராத்திரி என இன்றும் கொண்டாடப்படுகிறது.
திருமுடி, திருவடி தேடிய படலம்
காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவுக்கும், படைக்கும் கடவுள் பிரம்மனுக்கும் இடையே, தம்முள் யார் பெரியவர் என்று சண்டை இட்டு, ஆணவம் தலை விரித்தாடியது. இதை ஞானத்தால் உணர்ந்த முக்கண் முதல்வனாகிய சிவபெருமான், இருவரையும் அருகில் அழைத்து, உங்களுக்கு ஒரு போட்டி வைக்கிறேன். ஒருவர் எனது திருமுடியையும், மற்றவர் எனது திருவடியையும், தேடிக் கண்டு வாருங்கள் என்று கட்டளை பிறப்பிக்கின்றார். விஷ்ணு பன்றி உருவெடுத்துத் திருவடியைத்தேட பூமியைத் தோண்டிக் கொண்டே செல்கிறார். பிரம்மன் அன்னப்பறவை வடிவில், ஆகாயத்தில் பறந்து சென்று, திருமுடியைத்தேட முயற்சி செய்கிறார்.
சற்று நேரத்தில் திருமால் தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறார். பிரம்ம தேவனோ வானத்தில் இருந்து பறந்துவந்து கேதகி (தாழம்பூ) மலரைத் துணைக்கு அழைத்துவந்து, தாம் சிவபெருமானின் திருமுடியைப் பார்த்ததாகவும், அதற்கு இந்தத் தாழம்பூவே சாட்சி என்றும் பொய்யாகப் புகழ்கின்றார்.
பொய் சொன்ன பிரம்மனுக்குத் திருக்கோவில்களில், தனிச்சன்னதி இல்லையென்றும், பொய் சொல்ல துணைபோன தாழம்பூ பூஜைக்கு உகந்தது அல்ல, என்றும் சாபம் இடுகின்றார். நான்முகினும், மாலவனும் சிவபெருமானின் திருமுடி மற்றும் திருவடி தேடிய அந்த இரவே சிவராத்திரி என இன்றும் கொண்டாடப் படுகிறது.
தாழம்பூவிற்குத் திருக்கோவில்களில் இடமில்லை என்றாலும், ஆதி சிவன் கோவிலாகக் கருதப்படுகின்ற, இராமநாத புரம் மாவட்டத்திலுள்ள உத்தரகோசமங்கை ஆலயத்தில் மட்டும், தாழம்பூ, பூஜைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
வேடனைக் காத்த படலம்
வேட்டுவர் இனத்தைச் சார்ந்தவர்கள் கன்னி வேட்டைக்குப்போக வேண்டும். வேட்டுவ ஆண் மகன் ஒருவன், நண்பர்களுடன், அடர்ந்த காட்டிற்குக் கன்னி வேட்டைக்குச் சென்றான். நேரம் அந்தி மாலையாகிவிட்டது. நண்பர்கள் எல்லாரிடமும் இருந்து தனிமைப்படுத்தப்பட்டான். ஒரு கல்லில் அமர்ந்திருந்தான். தூரத்தில் ஒரு புலி இரைக்காக ஓடி வருவதைக் கண்டு, தற்காப்புக்காக, அருகிலுள்ள மரத்தின்மீது, ஏறி அமர்ந்துகொண்டான். புலி மரத்தைச் சுற்றிச் சுற்றிவருகிறது. தூக்கத்தைத் தவிர்க்க மரத்தில் உள்ள, இலைகளை ஒவ்வொன்றாகக் கொய்து, கீழே போட்டான். நேரம் விடிந்துவிட்டது. புலியும் ஓடிவிட்டது. இறங்கிக் கீழே வந்து பார்த்தான். தன்னை அறியாமல் கீழே இருந்த சிவலிங்கத்திற்கு வில்வார்ச்சனை செய்து உள்ளான். அரனும், அம்மையும் விடை வாகனத்தில் வந்து, வேடனை ஆட்கொண்டு அருள் செய்தனர். அந்த இரவே சிவராத்திரி எனக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிவாலய ஓட்டம் வரலாறு பகர்வதென்ன?
பஞ்ச பாண்டவர்களுள் மூத்தவரான, தர்ம புத்திரருக்கு "ராஜசூய யாகம்' செய்ய வேண்டும் என்ற பேரவா உள்ளத்தில் உதித்தது.
கபட நாடக சூத்திரதாரியான கண்ணன் ஒரு புது வியூகத்தை அமைக்கிறார். யாகம் முழுமையாக வெற்றிபெற புருடாமிருகம் எனும் முனிவரிடம் இருந்து பால் பெற்று வரவேண்டும். புருடாமிருகம் பாதி மனித உடலையும், மீதி புலியின் உடலையும் கொண்ட ஒரு ஆழ்ந்த சிவபக்தன் என்று கண்ணன் கூறுகிறார். பீமனின் கர்வத்தை அடக்கவும், புருடாமிருகம் ஆழ்ந்த சிவபக்தன் என்பதால், அவருக்கு சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற உண்மையை உணர்த்தவும், கண்ணன் ஒரு திட்டம் தீட்டுகிறார். பீமனை அருகில் அழைத்து, பன்னிரு உருத்திராக்கங்களைக் (ருத்ராட்சம்) கையில் கொடுத்து, நீ புருடா மிருகத்தின் அருகில் சென்று, எனது திருநாமங்களான "கோபாலா, கோவிந்தா' என உரக்க விளிக்க வேண்டும். என் திருநாமங்களைச் செவிகளில் கேட்க இயலாத புருடாமிருகம் உன்னைத் துரத்தும். ஆபத்து அருகில் வரும்போது, ஒரு உருத்திராக்கத்தைக் கீழே போட்டுவிடு. அது சிவலிங்கமாக மாறிவிடும். சிவனைக் கண்டால் புனித நீராடி புண்ணிய பூஜைகள் செய்த பின்னரே புருடாமிருகம் அந்த இடத்தைவிட்டு செல்லும். நீ அதற்குள் சிறிது தூரம் ஓடிக் கடந்துவிடலாம் என்றுசொல்லி அனுப்புகிறார். பீமனும் அவ்வாறே ஓடி, திருமலை முதல் திருப்பன்றிக்கோடு வரை பதினொரு இடங்களையும், கடந்துவிடுகிறார். நிறைவாக திருநட்டாலத்தில் ருத்திராட்சம் முடிந்துவிடவே பீமன், புருடாமிருகத்தின் கோரப்பிடியில் சிக்கிக்கொள்கிறான்.
தேவரும், மூவரும் ரிஷிகள், கின்னரர், கிம்புருடர் ஆகியோருடன் வந்து பீமனை புருடாமிருகத்திடம் இருந்து விடுவித்து, பால் பெற்று பீமன் கையில் கொடுத்து, அதைத் தர்மரிடம் ஒப்படைத்து யாகத்தை நிறைவு செய்ததாக வரலாறு. அன்று பீமன் ஓடியதை நினைவு கூறவே இன்றும் பக்தர்கள் மேற்படி ஓட்டத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாபுரம் எனும் கலைக் கோவிலில், பீமன் ஓடுவதையும், புருடாமிருகம் துரத்துவதையும், கல்லில் அழகிய சிற்பமாகச் செதுக்கி வைத்து உள்ளார்கள். கிருஷ்ணாபுரத்துக்கு அருகிலுள்ள "குளிராட்டி' எனும் மலையில் இருந்து எடுக்கப்பட்ட கல்லினாலான அழகிய சிற்பம் நானூறு ஆண்டுகளாகியும், இன்னும் கலைநயத்துடன் இருப்பது ஆய்வுக்குரியது.
ஓட்டத்தின் முதல் நிலை
ஓட்டத்தின்முதல் நிலை திருநட்டாலத் தில், முடிந்தாலும், ஓட்டத்தை முடிக்க திருவட்டார். அல்லது சுசீந்தரம் செல்வார்கள். சுசீந்தரம் செல்வதுதான் சிறப்பாக அமையும்.
அங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும், தாணுமாலயப் பெருமாள் என்னும் திருநாமத்தில், சுசீந்திரத்தில் அருள்பாலிக்கிறார். கல்குளம், விளவங்கோடு கலந்த பகுதிகளை, "வேணாடு' என்றும், அகஸ்தீஸ்வரம், தோவாளை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பரப்பை, நாஞ்சில் நாடு என்றும் கூறுவர். வேணாட்டில் தொடங்கிய ஓட்டம் நாஞ்சில் நாட்டில் நிறைவு பெறுகிறது.
சிவாலய ஓட்டத்தின் படிப்பினைகள்
ப் சிவனும், விஷ்ணுவும் ஒன்று.
ப் மதப்பற்று வேண்டும், அது ஒருபோதும் மதவெறியாக மாறக்கூடாது.
ப் மத சகிப்புத் தன்மை வேண்டும்.
ப் எம்மதமும் சம்மதம்.
ப் மெய்வருத்திக் கண் துஞ்சாது இறையை வணங்கவேண்டும்.
ப் பிற மதங்களையும், மதிக்கப்பழக வேண்டும்.
ப் பகுத்துண்டு பல உயிர்களையும் காக்க வேண்டும்.
ப் மனம், மொழி மெய்யால் சுத்தமாக இருக்கவேண்டும்.
ப் இறைவனை வணங்க ஆடம்பரங்கள் வேண்டாம்.
ப் அகத்தூய்மை மற்றும் புறத்தூய்மை வேண்டும்.
ப் விரதங்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
ப் இறையை முறையாக வணங்கி வழிபடவேண்டும்.
தமிழகத்தின் பிறபகுதிகளில், நிகழாத ஒரு திருக்கோவில் நிகழ்வு, குமரி மாவட்டத்தில் பாடல் பெறாத பன்னிரு சிவாலயங்களில் மட்டும் நடைபெறுவது ஆராய்ச்சிக்குரியது. இறையை ஓடிச் சென்று வணங்குவதும், மிகச் சிறப்பு. மாசி சிவராத்திரிக்கு முதல்நாள் இந்த சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் கண்டு மகிழலாம்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/30/siva-2026-01-30-16-22-04.jpg)