ஒரு ஜாதகத்தில் முன்ஜென்ம கர்மாவை பிரதிபலிப்பவர்கள் ராகு- கேது ஆகும். "ராகுவைப்போல கொடுப்பவரும் இல்லை. கேதுவைப்போல் கெடுப்பவரும் இல்லை' என்பது பழமொழி. ஒரு ஜாதகத்தில் ராகு என்பவர் சென்ற ஜென்மத்தில் நிறைவேறாத ஆசைகளாகும். இந்த ஜென்மத்தில் ராகு நின்ற பாவகத்தின் மூலமாகவே ஒருவரின் ஆசையும் நிராசையும் வெளிப்படும்.
எவ்வளவு சுப பலன்கள் வழங்கினாலும் ராகு பகவான் நின்ற பாவகம் மூலமாக ஜாதகருக்கு நிச்சயமாக மன உளைச்சல் இருந்தே தீரும். சிலரை கண நேரத்தில் வாழ்க்கையில் எதிர்பாராத உயரத்திற்கு உயர்த்தும் ராகு பகவானை வளப்படுத்த வெற்றி நிச்சயம் உண்டு.ராகுவை வளப்படுத்த உதவும் சில எளிய பரிகாரங்களை பார்க்கலாம்.
ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் ராகு இருப்பவர்களுக்கு தலைமை பதவி, புகழ் அந்தஸ்து பற்றிய ஏக்கம் மிகுதியாக இருக்கும்.ராகுவிற்கு வீடு கொடுத்த லக்னாதிபதி பலம் குறைந்தவர்கள் லட்சியத்தையும் கனவுகளையும் நிறைவேற்ற மிகப் போராட வேண்டிய சூழ்நிலையில் இருப்பார்கள். ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய நல்ல பெயர் பிறரை சென்று அடையும்.
இதுபோன்ற குறைபாடு உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் கால பைரவரை தீபம் ஏற்றி வழிபட முன்னேற்றம் கூடும்.
ஒரு ஜாதகத்தில் 2-ஆமிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் ராகு நின்றால் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு மிகுதியாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இருக்காது. சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட முடியாது.
குடும்பத்தில் மதிப்பு, மரியாதை குறையும்.
அல்லது குடும்பத்தை பிரிந்து வாழ்வார்கள். குடும்ப தேவையை நிறைவு செய்யமுடியாத சூழ்நிலையில் இருப்பார்கள்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் கோவில் குளத்திலுள்ள மீன்களுக்கு பொரியிட மேன்மையான பலன்கள் உண்டாகும்.
மூன்றாமிடமான உபஜெய ஸ்தானத்தில் ராகு நின்றால் அண்டை, அயலாருடன் சண்டை, சச்சரவுகள் எல்லை தகராறு இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் பாகப் பிரிவினை சார்ந்த கருத்து வேறுபாடு உண்டாகும். அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரிடும். சில முயற்சிகள் தடை, தாமதத்திற்குபிறகு வெற்றிகளைத் தரும். விரும்பிய உதவிகள் தேவையான நேரத்தில் கிடைக்காது. ஜாமீன், அடமானம், டாக்குமென்ட் சார்ந்த பிரச்சினைகள் இருக்கும். புதன்கிழமை ராகு காலத்தில் கருடர் வழிபாடு செய்வது நல்லது.
4-ஆமிடமான சுகஸ்தானத்தில் ராகு நிற்பவர்களுக்கு தாயார் சொத்துகளால், ஆரோக்கியத்தால், கற்ற கல்வியால் சுப பலன்கள் தடைபடலாம். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை யம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட நல்ல பலன்கள் தேடிவரும்.
ஐந்தாமிடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ராகு சஞ்சரித்தால் பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு முன்னுக்குபின் முரணான பலன்கள் நடக்கும்.
இவர்கள் சனிக்கிழமை ராகு காலத்தில் அவரவரின் ஊரின் அருகிலுள்ள எல்லை காவல் தெய்வங்களை வழிபடவேண்டும்.
ஆறாம் இடத்தில் ராகு உள்ளவர்களுக்கு எதிரியை வெல்லக்கூடிய வலிமை இருந்தாலும் கடன்நோய் வளர்ந்துகொண்டே இருக்கும். உத்தியோகத்தில் ஸ்திர தன்மை இருக்காது. இவர்கள் திங்கட்கிழமை ராகு காலத்தில் சிவ வழிபாடு செய்துவர உத்தியோக மேன்மை உண்டாகும். கடனால் ஏற்படக்கூடிய தொல்லைகள் நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.
ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தில் நிற்கக்கூடிய ராகு நண்பர்கள் தொழில் கூட்டாளிகள். வாடிக்கையாளர்கள், வாழ்க்கைத் துணை போன்ற விஷயங்களில் ஜாதகரை நிலை தடுமாற வைக்கும். சிலருக்கு காதல் கலப்பு திருமணத்தை நடத்தி வைக்கும்.
சிலருக்கு திருமணத் தடையை தரலாம். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் நடக்கும். சமுதாய அங்கீகாரம் குறைவு படலாம்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ் வரரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
எட்டாமிடமான ஆயுள், ஆரோக்கிய, வம்பு, வழக்கு ஸ்தானத்தில் ராகு நின்றால் கல்லடைப்பு, பைல்ஸ், யூரினரி இன்ஃபெக்ஷன் கழிவு உறுப்புகள் சார்ந்த பிரச்சினை பெண்களுக்கு கர்ப்பப்பை தொந்தரவு வரலாம். அடிக்கடி விபத்து, கண்டம் போன்ற அசம்பாவிதங்கள் நேரலாம்.
சனிக்கிழமை ராகு காலத்தில் ஆஞ்சனேயரை வழிபட ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகள் சீராகும்.
ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் ராகு நின்றால் தந்தை, தந்தைவழி உறவுகளால் மன வருத்தம் இருக்கும். பாக்கிய பலன்கள் தடைப்படும். ஆன்மிக நாட்டம் குறையும். தான, தர்மம் செய்வதில் ஆர்வம் இருக்காது. அறநெறி தவறுவார்கள். வியாழக்கிழமை ராகு காலத்தில் சித்தர்களை ஜீவசமாதியில் வழிபட சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் ராகு நிற்பது நல்லது. பத்தில் ஒரு பாவியாக இருக்கவேண்டும் என்பது பழமொழி. கலைத்துறை, அரசியல் சார்ந்த விஷயங்களில் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதிப்பார்கள்.
குறுக்கு வழியில் சம்பாதிக்க ஆசைப் படுவார்கள். நீதி, நேர்மையுடன் சம்பாதிக்க முடியாது. ஜீவன ஸ்தான பாதிப்புகள் இருக்கும்.
முழங்கால் மூட்டு வலி சார்ந்த பாதிப்புகள் இருக்கும். மாமியாரால் அசவுகரியங்கள் உண்டாகும்.
சனிக்கிழமை ராகு காலத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபட நல்ல மாற்றம் தெரியும்.
பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்தில் நிற்கும் எந்த கிரகமும் பாதிப்பை தராது. பதினொன்றில் ராகு நின்றால் அந்த ஜாதகர் நல்ல உடல்வாகுடன் கம்பீரமான தோற்றம் உடையவராக இருப்பார்கள். எந்த சூழ்நிலையும் சமாளிக்கக்கூடிய அஞ்சாத நபராக நல்ல தோற்றப்பொழிவு உடையவராக இருப்பார்கள். பிறருக்கு அடிபணிந்து இருக்க விரும்ப மாட்டார்கள். தனக்கு அடிபணிந்து எல்லோரும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். சனிக்கிழமை ராகு காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட இன்பங்கள் கூடும்.
பன்னிரண்டாம் இடமான அயன சயன விரய ஸ்தானத்தில் ராகு நிற்பதால் வெளிநாட்டு பயணம் நிம்மதியான தூக்கம் சுப விரயங்கள் இருக்கும். சிலருக்கு நோய் தாக்கம் இருக்கும். நோய்க்கு அடிக்கடி வைத்தியம் செய்வார்கள். தீய சகவாசங்களால் பல துன்பங்களை சந்திக்க நேரும். பொருளாதாரரீதியான பிரச்சினைகள் அதிகரிக்கும்.
ராகுவினால் சுப பலன்கள் அதிகரிக்க உரிய பரிகாரங்களை பயன்படுத்தி வெற்றிபெற நல்வாழ்த்துகள்.
செல்: 98652 20406
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/02/raghu-2026-01-02-17-08-34.jpg)