ஓஷோ மிகப்பெரிய ஒரு விஷயத்தைக் கூறி, நம்மைச் சிந்திக்க வைக்கிறார்.
உண்மையிலேயே அது ஆழமாக ஆராய்ந்து பார்க்கவேண்டிய ஒரு அரிய விஷயம்தான்.
அவர் கூறும் அந்தச் செய்தி மதங்களுடன் சம்பந்தப்பட்டது.
அவர் கூறுகிறார்...
"மதங்கள் பல வேளைகளில் மனிதர்களின் சிந்தனைகளை முடக்கிப் போட்டுவிடுகின்றன. அவனை முன்னோக்கி நகர்த்தி, வளர்ச்சிப் பாதையில் கைகளைப் பிடித்து அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, ஒரே இடத்தில் குட்டையைப்போல தேங்கி நிற்கக்கூடிய கேடுகெட்ட செயலை மதங்கள் செய்கின்றன.
அப்படிப்பட்ட... மக்களின் முன்னேற்றத்திற்கு எதிரான ஒரு காரியத்தை மதங்கள் செய்யலாமா?''
ஓஷோ கூறிய இந்த வார்த்தைகளை வாசித்த நான், நீண்ட நேரம் ஆழமான சிந்தனையில் மூழ்கிவிட்டேன்.
எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார் என்பதை உணர்ந்து ஓஷோவை நான் மதிப்புடன் மனதில் நினைத்தேன்.
ஓஷோ கூறுகிறார்.... "பலவகைகளிலும் போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு மதங்கள் பொய்யான நம்பிக்கைகளை ஊட்டுகின்றன. பல கடவுள்களின் பெயர்களைக் கூறி, "கவைப்படாதீர்கள். உங்களின் பிரச்சினைகளைக் கடவுள்கள் பார்த்துக்கொள்வார்கள். உங்களின் கவலைகளைக் கடவுள்களின்மீது போட்டுவிட்டு, வெறுமனே இருங்கள். அனைத்தையும் கடவுள்கள் பார்த்துக்கொள்வார்கள். உங்களைப் பிரச்சினையிலிருந்து அவர்கள் விடுபெறச் செய்வார்கள். நீங்கள் கடவுள்களின்மீது முழுமையான நம்பிக்கையை வைத்துக் கொண்டு, எதுவுமே செய்யாமல் சும்மா இருந்தால் போதும். கடவுள்கள் இருக்கும்போது, நீங்கள் ஏன் துயரப்பட வேண்டும்?'' அனைத்து மதங்களுமே இப்படித்தான் கூறுகின்றன. மதத் தலைவர்களும், ஆன்மிகவாதிகளும் இதைத்தான் கூறுகின்றனர். இது சரிதானா என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
அவர்கள் கூறுகிறார்கள்.... மதங்கள் கூறுகின்றன என்பதற்காக, நம் கால்களை ஆட்டிக்கொண்டு, நாம் ஒரே இடத்தில் எதுவுமே செய்யாமல் வெறுமனே அமர்ந்திருக்க முடியுமா?
கண்ணுக்குத் தெரியாத... யாருமே பார்த்திராத... பெரும்பாலும் கற்பனைக் கதைகளில் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு தனிப்பட்ட கடவுளையோ அல்லது பல கடவுள்களையோ கண்களை மூடி நம்பிக்கொண்டு, நம் பிரச்சினைகளை கடவுள் தீர்த்துவிடுவார், தெய்வங்கள் தீர்த்துவிடும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டு எதுவுமே செய்யாமல் வெறுமனே அமர்ந்திருந்தால், நாம் கவலைகளிலிருந்து விடுபட்டு விடுவோமா? நம் பிரச்சினை.
நம் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்பட்டு விடுமா?
நாம் எதுவுமே செயல்படாமல், கடவுளின்மீது பாரத்தைப் போட்டுவிட்டு, வெறுமனே அமர்ந்திருந்தால், எப்படி பிரச்சினைகளே இல்லாதவர்களாக ஆவோம்? இது தீவிரமாக சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம். மதத் தலைவர்களும், ஆன்மிக மனிதர்களும் தங்களின் மதங்களை வளர்ப்பதற்காக மக்களை வெறும் நம்பிக்கைகளின்மீது முழு கவனத்தையும் வைக்குமாறு கூறி, அவர்களைச் செயல்படாமல் தடுத்து நிறுத்தி விட்டார்கள். இதன்மூலம் அவர்கள் எத்தகைய செய்யக்கூடாத செயலைச் செய்திருக்கின்றனர்!
முயற்சி செய்பவர்களை, உழைக்கும் எண்ணத்துடன் இருப்பவர்களை, முன்னோக்கி பயணிப்பவர்களை, சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்களை... வெறும் நம்பிக்கைகளை வலியுறுத்தி முடக்கிவைப்பது என்பது எத்தகைய மூடத்தனமான செயல் என்பதை நினைத்துப் பாருங்கள்.
நீங்கள் செயல் பட்டால் மட்டுமே, உங்களால் இன்னல்களிலிருந்து விடுதலை பெறமுடியும். கடவுளோ, கடவுள்களோ வந்து நம்மை எங்கோ வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, செயல்படாத மனிதர்களாக நீங்கள் இருந்தால், பள்ளத்திலிருந்து நீங்கள் வெளியே வரவே முடியாது.
வெறும் நம்பிக்கைகள் எந்தக் காலத்திலும் பயன் தராது.
அப்பட்டிப்பட்ட நம்பிக்கைகளை மட்டுமே உங்களுக்கு அளித்ததன் மூலம் மத பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் ஞானத்திற்கு எதிராகவும், அறிவிற்கு எதிராகவும், சிந்தனைக்கு எதிராகவும் செயல்பட்டு மனித சமுதாயத்தை முடக்கிப் போடும் செயலைச் செய்திருக்கின்றனர் என்பதே உண்மை.
இந்த உண்மையைப் புரிந்துகொண்டு, அவர்களின் மாயவலையிலிருந்து உடனடியாக அனைவரும் வெளியே வாருங்கள். ஆழமாக சிந்தித்து, உங்களின் கவலைகளிலிருந்து, பிரச்சினையிலிருந்து வெளியே வருவதற்கான வழிகள் என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள்.
"உங்களின் சிந்தனையும் செயலும் மட்டுமே உங்களுக்குக் கை கொடுக்கும். வெறும் நம்பிக்கைகள் அல்ல....''
மக்களின் வளர்ச்சியில், முன்னேற்றத்தில் எந்த அளவிற்கு ஓஷோ ஆர்வத் துடனும், அக்கறையுடனும் இருக்கிறார் என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/30/osho-2026-01-30-15-09-53.jpg)