சனிபகவானின் இரண்டாம் சுற்று 31-60 வயதுவரை
இப்பொழுது சனியின் 2-ஆம் சுற்று பற்றிய சில தகவல்களை பார்க்கலாம். 31-60 வயது வரையுள்ள காலம். முப்பதாவது வயதின் முடிவில் வாழ்வின் இரண்டாம் நிலைக்குள் நுழைகிறோம். 70 சதவிகிதம் திருமணம், குழந்தை என வாழ்வில் செட்டி லாகி இருப்பார்கள். இதுநாள்வரை கற்ற வாழ்க்கைக் கல்வியின் துணையோடு, கடந்த காலத் தவறுகளைத் திருத்திக்கொண்டு, தங்களது பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கான பொருளாதாரத் தேவைகளைதான் மேற்கொள்ளும் பணி அல்லது தொழிலின் வாயிலாகப் பூர்த்தி செய்யவேண்டிய மிக முக்கியமான தருணம் இந்த இரண்டாம் சுற்றாகும். அதாவது பள்ளி, கல்லூரி மற்றும் சமுதாயத்தின் வாயிலாகதான் கற்றவற்றை அரங்கேற்றும் பருவமாகும். அத்துடன் பொருளாதார தேடலுக்கு அப்பாற்பட்டு தானும் இந்த உலகில் வாழ்ந்துவிட்டு சென்றதற்கான அடையாளத்தை தங்கள் சந்ததியினருக்கும், இச்சமுதாயத்திற்கும் விட்டு செல்வதற்கான வாய்ப்பும் ஒரு மனிதனுக்கு இந்நிலையில்தான் கிடைக்கப் பெறுகிறது.
இதில் 30 முதல் 40 வரை ஜனனகால ஜாதகத்தில் சனி பலம் பெற்றால் வாழ்க்கையில் உயர்வதற்கு எல்லா வழிகளும் இந்த காலத்தில் நடக்க சனிபகவான் உதவிசெய்வார்.
ஒருவர் ஜாதகம் என்னதான் யோகம் படைத்த ஜாதகமாக இருந்தாலும் அந்த யோகத்தை முழுவதுமாக- முறையாக அனுபவிக்க கர்மகாரகன் சனிபகவான் தயவு வேண்டும்.
அதாவது சனிபகவான் பாவத் தன்மை அல்லது பலவீனம் அடையாமல் இருக்கவேண்டும். சனிபகவான் சுப கிரக தொடர்பை பெற்ற நிலையில் ஜாதகர் எவ்வித சூழலிலும் நிலை குலையாமல் எதிர்நீச்சல் போட்டு வாழ்வில் வெற்றி காண்பார்.
சாதாரணமாக இருப்பவர்கள்கூட மிகப்பெரிய சாதனை மனிதராக மாறுவது சனிபகவானின் அமைப்பை பொறுத்ததுதான். சனி சுபப் பலம் பெற்றால் ஆன்மப் பலம் பெருகும். பிரபல மனிதர்களுடன், சமூகத் தொடர்புகள், சமுதாய அங்கீகாரம் கிடைக்கும். பதவி, புகழ், அந்தஸ்திற்காக ஏங்குவார்கள். வீடு, வாகனம் என லௌகீக உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கக்கூடிய வகையில் வாழ்வாதாரம் உயிரும். வாழ்க்கையில் செட்டிலானபிறகு சிலருக்கு காலதாமதத் திருமணம் நடந்து குழந்தை பிறக்கும்.
இதில் 40 முதல் 50 வயது வரை சனிபகவான் நல்ல நிலையில் நின்றால் சமூக சேவையில் நாட்டம் ஏற்படும்.
எளிமையாக இருப்பார்கள். இரக்க உணர்வு அதிகமாகும். லௌகீக உலகில் அனுபவிக்கவேண்டிய அனைத்து இன்பங்களையும் அனுபவித்தபிறகு பதவி, அந்தஸ்து, செல்வாக்கு, சொல்வாக்கை நிலை நாட்ட விரும்பும் காலம். இந்நிலையில் சம்பாதித்தது போதும் இருப்பதை வைத்துக்கொண்டு உற்றார்- உறவுகள் பேரன்- பேத்தி, பிள்ளைகள், மருமகள், மருமகன் என வாழ மனம் விரும்பும் பருவம்.இந்த காலகட்டத்தில் நல்ல ஓய்வையும், சொந்த பந்தங்களுடன் கலந்து உறவாடுவது, உலகைச் சுற்றிப் பார்ப்பது என மகிழ்ச்சியை யார் அனுபவித்து வாழ்கிறார்களோ, அவர்கள்தான் லௌகீக உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் நுகர்ந்தவர்கள் . நன்றாக வாழ்கிறார்கள் என அர்த்தம். மாறாக இந்தப் பருவத்திலும் ஒருவர் பொருள் ஈட்டவேண்டிய நிர்பந்தத்தில் இருந்தால், அவர் கடந்த காலங்களைத் தவறவிட்டுவிட்டார் என்றுதான் பொருள்.
சனியின் இரண்டாம் சுற்றின் மூன்றாம் பாகமான 50 முதல் 60 வயது வரையான காலகட்டம். ஜனனகால ஜாதகத்தில் சனி பலம் பெற்றவர்களுக்கு உடல் ஆரோக்கியம், மன அமைதி, ஆன்மிகச் சிந்தனை, தெய்வ பக்தி, நல்ல புத்திரர், நல்ல அறிவு, மந்திர சாஸ்திரம், தெய்வ தரிசனம், தீர்த்த யாத்திரை, ஆன்மிக குருக்களின் நட்பு, சமுதாயத்தில் நல்ல மதிப்பு, பிராமணர் ஆசி, சொல்வாக்கு, பணம் ஆகிய நற்பலன்கள் தானாக வந்துவிடும். அத்துடன் ஆலய தரிசனம் கிடைக்கும். குழந்தைகளின் அன்பு, அரவனைப்பு உண்டாகும். கௌரவம், புகழ் அந்தஸ்து தேடிவரும். பலர் தொழில் உத்தியோகத்திலிருந்து விடுபட்டு ஓய்வெடுக்க விரும்புவார்கள். இந்த காலகட்டங்களில் பிறந்தகால சனியை கோட்சார கேது பகவான் தொடர்புகொண்டாலும் அல்லது பிறந்தகால கேதுவை கோட்சார சனிபகவான் கடந்தாலும் தொழில், உத்தியோகரீதியான இடர்பாடுகளைச் சந்திக்க நேரும். அரசு அலுவலகத்திலுள்ள அரசாங்க அலுவலர்களுக்கு, அரசாங்க ஊழியத்திற்கு இணையான தனியார் துறையில் கௌரவமான உத்தியோகத்தில் இருப்பவர்கள் 58 வயதில் இயல்பாக ரிட்டயர்மென்ட் கிடைத்துவிடும். சுய தொழில் நடத்துபவர்கள் சிலர் அடுத்த அடியெடுத்து வைக்க முடியாமல் தொழிலை இழுத்து மூடிவிடுவார்கள். அல்லது பிள்ளைகளின் பொறுப்பில் தொழிலை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி விடுவார்கள். பலருக்கு கர்மவினை தொடர்பான நோய்கள் அல்லது பரம்பரை நோயின் தாக்கம் இருக்கும்.
சனி வலுவாக இல்லையெனில் இந்தப் பத்து வருடகாலமும் அவதியாகவே இருக்கும். கடனிலும் கவலையிலும் வாழ்வு கழியும். ஜனன ஜாதகத்தில் சனி வலிமை பெற்றவர்கள் சுகமாக- சௌகரியமாக வாழ்க்கையில் செட்டிலாகுவது எப்படி என ஓய்வு காலத்திற்கு பிறகும் சிந்திப்பார்கள். திட்டமிட்டு வயதான காலத்தை சுகமாக கழிப்பார்கள்.
சனியின் 3-ஆம் சுற்று 61 முதல் 90 வயதுஇதில் 60 முதல் 70 வரை சனி எந்த நிலையில் இருந்தாலும் ஏமாற்றங்கள், துரோகங்கள், ரோகங்களால் அவதி ஏற்படும். இதுவரைபாடுப்பட்ட நம்மை மனைவி, மக்கள், உற்றார்- உறவினர் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களோ என நினைப்பார்கள். கை- கால் மூட்டுவலி போன்ற உடல் உபாதைகள் மிகுதியாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பலருக்கு மிகுதியான வைத்தியம் தேவைப்படும். சிலருக்கு கை- கால் மூட்டுக்கு அறுவை சிகிச்சை நடக்கும். சிலருக்கு அதாவது யூரினரி இன்ஃபெக்ஷன், கல்லடைப்பு, பைல்ஸ், கல்லீரல், சார்ந்த பிரச்சினைகளின் பாதிப்பு இருக்கும். பிறரின் உதவியை எதிர்பார்த்து இருக்க வேண்டிய காலம். சிலர் டிவி சீரியல் பார்த்து காலத்தை கடத்துவார்கள். சிலர் டிவி சீரியல் பார்க்க அனுமதியின்றி வருந்துவார்கள். யாராவது நீ நல்லா இருக்கியா? சாப்டியா? உனக்கு என்ன வேணும்? அப்படின்னு கேட்ககூட ஆள் இல்லாமல் மனக் குறையோட வாழ்நாளோட இறுதிநாள் எப்போ வரும்னு எண்ணி வாழ்ந்துகிட்டு இருப்பாங்க.
70 வயது முதல் 80 வயதில் உரிய மதிப்பும் மரியாதையும் இல்லையே எனும் சிந்தனைகள் வலுக்கக்கூடிய காலம். இவர்களுக்கா பாடுபட்டோம் என்று மனவேதனை அதிகமாகும். அத்துடன் பலவிதமான உடல் உபாதைகள், நோய்கள், நட்பு கொள்ள ஆரம்பித்து எவ்வளவு வைத்தியம் செய்தாலும் உடலைவிட்டு வெளியேற மறுக்கும். உதவிக்கு உறவுகள் தேவைப்படும். மனிதன் ஞானம் பெறும் காலம். பழைய நினைவுகளில் காலம் கழிக்கும் நிலையில் வாழ்வார்கள். அதிகமாக பேசாமல் மௌனமாகவே இருப்பார்கள். வாலிப பருவத்தில் உலக இன்பங்களை நுகர தான் செய்த தவறுகளுக்கு வருந்தும் காலம்.
80-க்குப்பிறகு உடல் உறுப்புகள் தளர்ந்து நடை, உடை, பாவனை மாறிவிடும். ஒருவரின் அந்தஸ்திற்கும் கல்வித்தகுதிக்கும் தற்போதைய உருவத்திற்கும் சம்பந்தம் இருக்காது. முக்தியை மனம் விரும்பும் காலம். இனி மனிதப் பிறவியே வேண்டாம் என மனம் வேதனைப்படும் காலம். மனப் போராட்டம் மனம் உளைச்சல் இருக்கும். ஒரு மனிதன் தனது அடுத்த தலைமுறையை உருவாக்க எவ்வளவு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது என்பதை மனிதர்களாய் பிறந்த அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.
குழந்தைகளாய் இருக்கும்போது பெற்றவர்களுக்கு மன உளைச்சலைத் தரும் பிள்ளைகள் தாம் தாய்- தந்தையாராகும் போதுதான் பெற்றோர்களின் மன உணர்வு புரிகிறது. ஒருசிலர் எத்தனை வயதானாலும் பிறரின் உணர்வுகளை புரியமுடியாத மனிதர்களாகவே வாழ்கிறார்கள்.
சுருக்கமாக வாழ்க்கை என்பது ஒரு வட்டம் என்பதை உணர முடியும். ஒரு பெற்றோருக்கு குழந்தையாக பிறந்து படிக்கவேண்டும். படித்து முடித்தபிறகு வாழ்வாதாரத்திற்கு வழிவேண்டும். நல்ல ஒரு தொழில், உத்தியோகத்தை தேர்வு செய்தபிறகு திருமணம் செய்யவேண்டும் அடுத்து குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும். அடுத்து குழந்தையை படிக்க வைக்கவேண்டும். அவர்களுக்கு தொழில், உத்தியோகத்தை ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டும். அவர்களுக்கு திருமணம் செய்து பேரன்- பேத்தியை பார்க்கவேண்டும். இவ்வாறு எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு தலைமுறையை உருவாக்க வாழ்க்கை ஒரு வட்டமாக மனிதன் வாழ வேண்டியது பிரபஞ்ச நியதி.
மனிதன் தனது வாழ்நாளில் குறைந்தது இரண்டுமுறை அதிகபட்சம் மூன்றுமுறை ஏழரைச்சனியை சந்திப்பார்கள். ஏழரைச் சனி என்பது ஒரு மனிதனின் வாழ்நாளில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை நிகழும். இந்நிகழ்வில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று எனப்படும் மங்கு சனி, பொங்கு சனி, மரணச்சனி என மூன்று சுற்றுக்கள் இருக்கும்.
மங்கு சனி 30 வயதுவரை முதல் சுற்றுஇளம் பருவத்தில் எதையும் தாங்கி கொள்ளக்கூடிய சூழ்நிலையில் சனிபகவான் தரும் அடி சற்று மெதுவாகவே விழும். இந்த முதல் சுற்றுக்கு மங்கு சனி என்று பெயர். மிக முக்கியமாக இந்த காலத்தில் ஒரு மனிதர் ஏழரைச்சனியின் கெடுபலன் தாக்கத்தை உணர்வது இல்லை. இன்னும் சொல்லப்போனால் சிலருக்கு அதீதமான பொருள் வரவும் கிடைக்கவே செய்கிறது.
பொங்கு சனி 60 வயதுவரை
இரண்டாவது சுற்று
வாலிபத்தின் நடுவில் வரும் இரண்டாவது சுற்று பொங்கு சனியாகும். ஜாதகரின் மற்ற கிரக அமைப்புகளைப் பொறுத்து இதன் பலன் இருக்கும். ஒருசிலருக்கு பொங்கு சனி விடைபெறும்போது மங்காத செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளி கொடுத்துவிட்டு செல்லும். திருமணம், குழந்தை, தொழில், வீடு வாகன யோகம் அனைத்தும் இந்த காலகட்டத்தில்தான் நடைபெறும்.
ஜனனகால ஜாதகப்படி சாதகமான தசா புக்தி இருந்தால் பல நன்மைகள் பெருகும். சாதமற்ற தசா புக்தி நடந்தால் பரிகாரங்கள் செய்து வினையை குறைக்க முயலவேண்டும்.
மரணச்சனி 90 வயதுவரை மூன்றாவது சுற்றுஇந்த சுற்றில் ஒரு ஜாதகருக்கு நிச்சயம் உடல் நலிவு ஏற்படுத்தும் மற்றும் மரணத்திற்கு இணையான துயரங்களை அனுபவிக்க வேண்டி வரும். தசை மற்றும் புக்தி இவை ஜாதகருக்கு, சாதகமற்று இருக்கும் சூழலில் நிச்சியம் ஆரோக்கியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆயுள் ஹோமம் செய்வது நல்லது.
மேலே கூறிய அனைத்து சாராம்சங்களும் இந்த மூன்று சுற்றில் நிச்சயமாக நடந்தேறும். நாட்டுக்கே ராஜாவாக இருந்தாலும் இந்த மூன்று சுற்றுகளும் விதி பயனை பிரதிபலிக்கும். "அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்'' என்பது பழமொழி. இதன்பொருள். அரசன் உடனடியாக தண்டனை வழங்குபவன், ஆனால் தெய்வம் காலப்போக்கில் தவறு செய்தவர்களைத் தண்டிக்கும் என்பதாகும். இது தவறு செய்தவர்கள் உடனடியாக தண்டிக்கப்படாமல், காலப்போக்கில் சனிபகவானால் தண்டிக்கப்படுவார்கள்.
முற்றும்.
செல்: 98652 20406