ஜோதிட உலகத்தை மிரள வைக்கும் பல்வேறு தோஷங்கள் உள்ளது. அதில் பலர் அறியாத தோஷங்களில் ஒன்று மாந்தி தோஷமாகும். இந்த மாந்தி தோஷம் ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய உயர்வு அல்லது தாழ்வை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஒரு ஜாதகத்தில் மாந்தி எந்த ராசியில் உள்ளதோ அந்த உடல் உறுப்புகளில் ஜாதகருக்கு பாதிப்பு உருவாகிறது. ஜோதிட சாஸ்திரப்படி ஒருவருக்கு வாழ்வியல் மாற்றத்தை தரக்கூடிய தசா புக்தி நடந்தால்கூட அந்த தசாநாதனுக்கு புக்திநாதனுக்கு மாந்தி சம்பந்தப்பட்டால் அந்த தசா புக்தி ஜாதகருக்கு இயல்பான பலனை வெளிப்படுத்தாது. முன்னுக்குப் பின் முரணான பலன்களையே வழங்கும். அதாவது கர்மவினை தாக்கத்தை மிகுதிப்படுத்தும் தோஷங்களில் ஒன்றாக மாந்தி தோஷம் உள்ளது. மாந்தி தொடர்புகொண்டு காரகிரகம் பாவ கிரகம் தனது ஆதிபத்தியரீதியாக ஜாதகருக்கு சில விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேஷம்முதல் மீனம்வரை காலபுருஷ தத்துவத்துப்படி 12 ராசிகளில் மாந்தி நின்றால் ஜாதகருக்கு ஏற்படக்கூடிய பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் என்பது காலபுருஷ முதல் ராசி. ஒருவரின் மேஷத்தில் மாந்தி இருந்தால் பிறவியிலேயே தலையில் பெரிய மச்சம், மரு இருக்கும். அல்லது ஏழு வயதிற்குமேல் தலைவலி, மூளை சார்ந்த பாதிப்புகள் ஏற்பட்டு அது பெரிய வடுவாக மாறிவிடும். அடிக்கடி விபத்து கண்டங்களை சந்திப்பார்கள். தலையில் அடிபடும். இவர்களுக்கு புகழ், அந்தஸ்து, செல்வாக்கு பற்றிய கவலை இருக்கும். தோற்றப்பொலிவு சற்று குறைந்தே காணப்படும். மனதில் இருக்கத்துடன் தைரிய குறைவாக இருப்பார்கள். தனது குலத்தாரிடம் பகை, கருத்து வேறுபாடு ஏற்படும். பொது இடங்களில் மதிப்பு குறைவது, புகழுக்கு பங்கம் போன்ற உணர்வு இருக்கும். இவர்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை பிறருக்கு கிடைக்கும். உஷ்ண நோய் தாக்கம் மிகுதியாக இருக்கும். சித்த பிரம்ம பிடித்தவர்கள்போல அமைதியாக இருப்பார்கள் அல்லது பிறருடன் கோபமாக நடந்து கொள்வார்கள். ஜாதகரின் செயல்பாடுகள் பிறருக்கு நம்பிக்கை தன்மையை குறைக்கும். சோகத்தின் உச்சகட்டத்தில் வாழ்வார்கள்.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமை சிவப்பு நிற பொருட்களை தானம் வழங்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷபம் காலபுருஷ இரண்டாவது ராசி என்பதால் இவர்களுக்கு பெண் சாபத்தின் தாக்கம் இருக்கும். முகத்தில் அதிகச் சுருக்கம், மச்சம், முகப்பொலிவு குறைவாகவே இருக்கும். கண்கள் சார்ந்த தொந்தரவுகள், திக்கு வாயாக இருப்பார்கள். எப்பொழுதும் குடும்பத்தாருடன் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள். இவர்களின் பேச்சுக்கு மதிப்பு இருக்காது அல்லது தனது பேச்சினால் குடும்பத்தவரை பகைத்துக்கொள்வார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது. தனது பேச்சால் பிறருக்கு துன்பம் உண்டாக்குவார்கள். பொருளாதார பற்றாக்குறை இருக்கும். நல்ல குடும்ப வாழ்க்கை அமையாது. பிறரை வசிகரிக்கும் தன்மை இருக்காது. தனது தோற்றம் ஜாதகருக்கே பிடிக்காது. அழகு ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை குறைவுபடும். திருமணம் கால தாமதமாக நடைபெறும். அவச்சொல், சுகமின்மை, நிம்மதி இன்மை போன்ற அசுப பலன்களையும் கண்டத்தைத் தரும்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை கோபூஜை செய்வதால் பொருளாதார குற்றம் அகலும்.
மிதுனம்
காலபுருஷ மூன்றாமிடம். மிதுனத்தில் மாந்தி இருந்தால் ஜாதகருக்கு காது, மூக்கு, தொண்டை, கைகள், நுரையீரல், நரம்பு மண்டலம், சுவாசம், கழுத்து, தோள்பட்டை வலி, கட்டி, வீக்கம், தைராய்டு பாதிப்பு இருக்கும். அடிக்கடி இருமல், விக்கல் வரும்.உடலின் அடிக்கடி விபத்து, கண்டம், தற்கொலை உணர்வு , பண இழப்பு ஏற்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் மாந்தி நின்றால் ஜாதகர் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் தற்கொலைக்கு முயற்சி செய்வார். மாமனாருடன் மிகுதியான கருத்து வேறுபாடு இருக்கும். போதை வஸ்துக்களில் பயன்பாடு மதுப்பழக்கம் உண்டு. அண்டை, அலாருடன் ஒத்துப் போகமாட்டார்கள். எளிதில் மனநிறைவு உண்டாகாது. ரகசியத்தை காப்பாற்றத் தெரியாது. விஷ பயம் இருக்கும். பிரிவினைகள், வழக்குகள், தண்டனைகள் கிடைக்கும். மனம் விட்டு சந்தோஷமாக யாரிடமும் பழக மாட்டார்கள். அடிப்படை கல்வி தடைப்படும். மாரகத்திற்கு ஒப்பான கண்டங்களை அடிக்கடி எதிர்கொள்ள நேரும்.
பரிகாரம்
தனது இளைய சகோதர- சகோதரிகளுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உதவி செய்ய வேண்டும்.
கடகம்
கடகத்தில் மாந்தி இருந்தால் மன அழுத்தம், மார்பு பகுதிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. செரிமானக் கோளாறுகள் இருக்கும். அடிக்கடி சளி, காய்ச்சல் போன்ற உடல்நல பாதிப்பு இருக்கும். பிறரின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். மன அமைதி இருக்காது. உள்ளுணர்வு குறைந்தவர்களாக இருப் பார்கள். ஜாதகர் இந்த பிறவியில் தமக்குத் தெரிந்தே சந்தர்ப்ப சூழ்நிலையால் பல தவறுகளில் ஈடுபடுவார். அதிருப்தி மிகுதியாக இருக்கும். உடலாலும் உள்ளத்தாலும் எந்த செயலிலும் ஈடுபாட்டுடன் இருக்க மாட்டார்கள். மனோ பயம் மிகுதியாக இருக்கும். தாய்க்கும் தோஷமாகும். தாய் மற்றும் தாய்வழி முன்னோர்களிடையே ஏற்பட்ட சாபத்தை உணர்த்தும். தாய்வழி உறவு களிடையே பிரிவினையை ஏற்படுத்தும். குடும்பத்தில் துர்மரணங்கள் நிகழ்வது போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். சொத்துகளால் மன உளைச்சல் இருக்கும்.பூமியில் நீராதாரம் இருக் காது. விவசாய நிலமாக இருந்தால் மகசூள் குறைவாக இருக்கும்.
பரிகாரம்
மனநோயால் பாதித்த வர்களின் வைத்திய செலவிற்கு உதவி செய்ய வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியில் மாந்தி இருந்தால் நெருப்பு, இதயம் சம்பந்தமான பாதிப்புகள் இருக்கும். உணர்ச்சிரீதியாக மன அழுத்தம் ஏற்பட்டு அவர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகள் அல்லது மேல் முதுகுவலி அதிகம் இருக்கும். மற்றவர்களைவிட இதய நோய் இவர்களை மோசமாக பாதிக்கக்கூடும். பரம்பரை வியாதி தாக்கம் இருக்கும். ஒரே இடத்தில் நிலையாக வாழ முடியாது. நாடோடிபோல் வாழ்க்கை அமையும். ஆன்ம பலம் குறையும் சிந்தித்து செயல்பட முடியாது. தந்தை மற்றும் தந்தைவழி முன்னோர்களால் ஏற்பட்ட சாபத்தை உணர்த்தும். பூர்வீக சொத்தை அனுபவிக்க முடியாது. சிந்தித்து செயல்படும் தன்மை இல்லாதவராக இருப்பர். புத்திக் கூர்மை குறைவாக இருக்கும். புத்திர தோஷமுண்டு. சுப காரியங்கள் உரிய வயதில் நடக்காது. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவனைப்போல் வாழ நேரும். பிறரை கவரும் ஒளி குறைவாக இருக்கும்.எப்போதும் வாட்டத்துடன் காணப் படுவர். ஒல்லியான உடல்வாகுடன் இருப்பர். வீர தீர செயல்களில் ஈடுபட முடியாது.
பரிகாரம்
தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. சிவன் கோவிலில் இயன்ற தானதர்மங்கள் செய்யவேண்டும்.
கன்னி
ஒருவரின் ஜாதகத்தில் கன்னி ராசியில் மாந்தி இருந்தால் வயிறு குடல் செரிமானம் சார்ந்த பாதிப்புகள் இருக்கும். பதட்டம், மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது செரிமானம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட லாம். எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். தாய்மாமன் ஆதரவு கிடைக்காது. கன்னிப் பெண் சாபம் இருக்கும். கல்வியில் தடை ஏற்படும். புரிந்து கொள்ளும் தன்மை இருக்காது. நம்பிக்கை மோசடியை சந்திக்க நேரும். சில குடும்பங்களில் வீட்டின் தென்மேற்கு பகுதியில் வாஸ்து பாதிப்பு இருக்கும். அந்நியரை அண்டிப் பிழைப்பவராக இருப்பார். எதிர்பாராத சமாளிக்க முடியாத தன நஷ்டம், செல்வம் , புகழ், பிறரால் கவரப்படும் நிலை ஏற்படும். ஆறாம் இடத்தில் மாந்தி நிற்க எந்த வகையிலாவது கடன் வந்துசேரும். இனம்புரியாத நோய் தாக்கம் இருக்கும். வியாதிக்கான மருந்தை உடல் ஏற்றுக் கொள்ளாது. எதிரிகளால் பெரிய பாதிப்புகள் இல்லாவிட்டாலும் மனஉளைச்சல் இருந்து கொண்டே இருக்கும்.
பரிகாரம்
வீட்டின் தென்மேற்கு பகுதியை சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஆஞ்சனேயர் அல்லது விநாயகர் படத்தை தென்மேற்கு பகுதியில் வைத்து வழிபட நிம்மதி கூடும்.
தொடரும்
செல்: 98652 20406