னிதர்களை உலகிலுள்ள அனைத்து மதங்களும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்.

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்பதை மதங்கள் மனிதர்களுக்குக் கற்றுத் தந்திருக்க வேண்டும்.

Advertisment

பிரச்சினைகள் இல்லாமலும், கவலைகள் இல்லாமலும், குழப்பங்கள் இல்லாமலும் எப்படி ஆனந்த மன நிலையுடன் மக்கள் வாழ்வது என்பதற்கு மதங்கள் வழி காட்டியிருக்க வேண்டும்.

Advertisment

ஆனால், நாம் காணும் மதங்கள் அந்த உயர்ந்த செயலைச் செய்திருக்கிறதா?

"இல்லை' என்பதே உண்மை.

"மனிதர்கள் வாழ்க்கையை எப்படி கொண்டாட் டத்துடன் வாழ வேண்டும்?' என்பதை மதங்கள் மக்களுக்குக் கூறவேண்டும்.

அப்படி யில்லாமல் "வாழ்க்கை என்பது கொண்டாடக் கூடிய தகுதியைக் கொண்டது அல்ல. அது நிலையற்றது. கவலைகள் நிறைந் தது' என்று கூறுவதுடன் நிற்காமல்,

Advertisment

"இப்படிப்பட்ட வாழ்க்கையைச் சிறிதுகூட ஒட்டாமல் வாழ்வது எப்படி? இந்த உலக வாழ்க்கையிலிருந்து விலகி நிற்பது எப்படி? உலக வாழ்க்கையைத் துறந்து வாழ்வது எப்படி?' என்று மதங்கள், மக்களுக்குப் போதிக்கும் செயலைச் செய்கின்றன.

அது நல்லதா?

மக்களை சந்தோஷமாக வாழச் செய்வதற்குத்தான் மதங்கள் இருக்க வேண்டுமே தவிர, வாழ்க்கையிலிருந்து விலகி ஓடச் செய்வதற்காக அல்ல.

வாழ்க்கையின்மீது மக்களுக்கு வெறுப்பை மதங்கள் உண்டாக்கலாமா?

வாழ்க்கையே துயரங்கள் நிறைந்தது என்ற எண்ணத்தை மதங்கள் மக்களின் மனங்களில் விதைக்கலாமா?

வாழ்க்கையைப் பார்த்து பயந்து நடுங்க வைக்கும் ஒரு கேடு கெட்ட செயலை மதங்கள் செய்யலாமா?

வாழ்க்கையின்மீது யாருக்குமே பிடிப்பு உண்டாகாத ஒரு வெறுக்கத்தக்க செயலை மதங்கள் செய்யலாமா?

"வாழ்க்கை என்பது நிலையற்ற ஒன்று' என்ற விஷ வித்தை மக்களின் உள்ளங்களில் மதங்கள் ஆழமாக ஊன்றலாமா?

இப்படி மதங்களைப் பார்த்து ஆவேசத்துடன் கேள்விகளைக் கேட்கிறார் மாபெரும் அறிவாளியான ஓஷோ.

அவர் மேலும் கூறுகிறார்: "நீங்கள் இந்த உலகத்தில் எப்படி அருமையாக வாழவேண்டும் என்று மதங்கள் கூறவேண்டும். அதற்கு மாறாக, உங்களை வாழ்க்கையிலிருந்து விரட்டுவதிலேயே அவை குறியாக இருக்கின்றன.

"இந்த உலக வாழ்க்கை ஒரு சிறை இந்தச் சிறையிலிருந்து நீங்கள் வெளியேற வேண்டும். அதற்குப் பிறகுதான் உங்களுக்கு சந்தோஷம், ஆனந்தம்... அனைத்துமே..' என்று மதங்கள் பொய்யைக் கூறி, 

உங்களை மகிழ்ச்சியுடன் வாழவிடாமல் ஆக்குகின்றன.

வாழ்க்கை என்பது ஒரு கொடை... ஒரு மிகப் பெரிய வரம்...

நிகரற்ற கொண்டாட்டம்.... மகத்தான கொடுப்பினை.

அதனால்... வாழ்க்கையை முழுமையாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து வாழுங்கள்.

ஒவ்வொரு மணித் துளியையும் தேன் என சுவைத்து வாழுங்கள்.

"எப்படிப்பட்ட உயர்ந்த கொடை நமக்கு கிடைத்திருக்கிறது!' என்பதை நினைத்து வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.

நீங்கள் வாழ்க்கையைக் காதலுடன் நினைத்து மனதிற்குள் புளகாங்கிதம் அடையலாம்...

பாடலாம்.... உற்சாகத்துடன் ஆடலாம்.

வாழ்க்கையை முழுமையான கொண்டாட்டமாக ஆக்கலாம்.

பரவச உணர்வுடன் வாழ்க்கையின் ஒவ்வொரு இனிய துளியையும் சுவைக்கலாம்.... பருகலாம்.

"எப்படிப்பட்ட உன்னதத் தன்மை கொண்ட வாழ்க்கை நமக்குக் கிடைத்திருக்கிறது! இதற்கு நிகர் இவ்வுலகில் வேறேதும் உண்டோ?' என்று நினைத்து,  இந்த வாழ்க்கை கிடைத்ததற்காக நீங்கள் உங்களை உயர்வாகக் கருதி, கர்வப்பட்டுக் கொள்ளலாம்.

இந்த சிந்தனைதான் உங்களின் மனங்களில் எப்போதும் இருக்க வேண்டும்.

மதங்கள் கூறுவதைப்போல, வாழ்க்கையை விட்டு நீங்கள் ஓடக் கூடாது.

அதற்கு மாறாக வாழ்க்கையை நீங்கள் முழுமையாக வாழ வேண்டும் - ரசித்து, சுவைத்து, மதித்து...'

அப்படி வாழும்போதுதான் உங்களுக்கே தெரியும்... இந்த வாழ்க்கை என்பது ஒரு அருள்... ஒரு ஆசிர்வாதம்... ஒரு ஈடற்ற வரம் என்ற உண்மை.''

ஓஷோவின் இந்த உயர்ந்த வார்த்தைகளில் எப்படிப்பட்ட மகத்தான பேருண்மை குடிகொண்டிருக்கிறது என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

உணர்ந்து, வாழ்க்கையை ஒரு கொண்டாட்டத்தின் தளம் என நினைத்து, சந்தோஷமாக வாழுங்கள்.