ரத்னேஸ்வர் மந்திர்...
இந்த ஆலயம் உத்தரப்பிரதேசத்தில் இருக்கிறது.இது ஒரு சிவன் ஆலயம்.
இந்த ஆலயத்திற்கு "தாயின் கடனைத் தீர்க்கும் ஆலயம்' என்றொரு பெயரும் இருக்கிறது.இதை இந்தியில் "மத்ரானா மகாதேவ் மந்திர்' என்று கூறுகிறார்கள்.
இந்த ஆலயம் வாரணாசியில் இருக்கிறது. சாய்ந்த நிலையில் இருக்கக்கூடிய கோவில் இது. கங்கை நதியின் கரையில் இது இருக்கிறது. சுற்றிலும் நீர் சூழ்ந்திருக்கும் இடத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.
வாரணாசியில் உள்ள 'மணிகர்ணிகா காட்' என்று அழைக்கப்படும், எப்போதும் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் இந்த ஆலயம் இருக்கிறது.
இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்பது பரவலான நம்பிக்கை.பல புராணங்களிலும் இந்த ஆலயத்தைப் பற்றி எழுதப் பட்டிருப்பதை நாம் படிக்கலாம்.
இந்த ஆலயத்தைக் கட்டியவர்கள் என்று பலரின் பெயர்களும் கூறப்பட்டு வருகின்றன.
மான்சிங் என்ற மன்னரிடம் பணியாற்றிய ஒரு மனிதர், தன் தாயின் நினைவாக இந்த ஆலயத்தை உருவாக்கியதாக ஒரு வரலாறு இருக்கிறது.
1825- 1835 வருடங்களில் இந்த கோவில் புதுப்பித்து கட்டப்பட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.
இந்த ஆலயம் அமேதியின் அரசரால் கட்டப்பட்டதாக டாக்டர் ரத்னேஸ்வர் வர்மா என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
பைஜா என்ற மகாராணி இதைக் கட்டினார் என்றொரு கதையும் இருக்கிறது.
அகல்யா பாய் என்ற அரசியின் பணிப்பெண் இந்த கோவிலை உருவாக்கினாள் என்றும் பலர் கூறுகிறார்கள்.
அகல்யா பாய் என்ற அந்த அரசியின் சாபம் காரணமாக இந்த ஆலயம் சரிந்ததாக அர்ச்சகரான ஷ்யாம் சங்கர் திவாரி கூறுகிறார்.
"அகல்யா பாய் பல ஆலயங்களைக் கட்டியிருக்கிறாள். அவளின் பணிப்பெண்ணான ஒருத்தி ஒரு ஆலயத்தை உருவாக்க நினைத்தாள். அதற்குத் தேவைப்படும் பணத்தை அவள் கடனாக அரசியிடமிருந்து வாங்கினாள்.
ஆலயத்தைப் பார்த்த அரசி சந்தோஷப்பட்டாள். "இந்த ஆலயத்திற்கு உன் பெயரை வைக்கக் கூடாது.'' என்று அவள் தன் பணிப்பெண்ணிடம் கூறினாள்.அதைப் பொருட்படுத்தாமல்,பணிப்பெண் 'ரத்னா' என்ற தன் பெயரையே ஆலயத்திற்கு வைத்தாள்.அதன் காரணமாகவே இந்த கோவில் 'ரத்னேஸ்வர்' என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. அதைத் தாங்கிக் கொள்ள முடியாத அரசி அகல்யா பாய் கோபத்தில் சாபமிட்டாள்.
"இந்த ஆலயத்திற்கு அதிக எண்ணிக்கையில் ஆட்கள் வரக்கூடாது. பூஜைகள் குறைவாகவே நடக்க வேண்டும்.'' என்பதே அவளின் சாபம். அதைத் தொடர்ந்து,இந்த ஆலயம் சாய்ந்து விட்டதாக வரலாறு கூறுகிறது.
இந்த ஆலயத்தைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந் திருக்கும். அதனால், குறைவாகவே மக்கள் வருவார்கள். கோவிலுக்குள் அதிகமாக பக்தர்கள் செல்ல மாட்டார்கள். சற்று தூரத்தில் நின்று தொழுது விட்டு,சென்று விடுவார்கள்.
இந்த கோவிலைப் பற்றி இன்னொரு கதை... இதை கூறுபவர் இந்த ஊரைச் சேர்ந்த ரமேஷ் சேட் என்பவர்.
"18-ஆவது நூற்றாண்டில் இந்த இடத்திற்கு ஒரு பெரிய துறவி வந்திருக்கிறார்.அவர் இங்கு தவம் செய்திருக்கிறார்.
அரசரிடம் இந்த ஆலயத்தில் பூஜை செய்யும் பொறுப்பை தனக்கு அளிக்கும்படி கேட்டிருக்கிறார்.
அதைத் தருவதற்கு மன்னர் மறுத்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து அந்த முனிவர் சாபமிட, கோவில் சாய்ந்து விட்டது'' என்று அவர் கூறுகிறார்.
இவற்றைத் தாண்டி, இன்னொரு கதையும் இருக்கிறது.
15, 16-ஆம் நூற்றாண்டுகளில் பல மன்னர்கள் இந்த ஊரை ஆட்சி செய்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் மான்சிங். அவர் தன் அன்னை ரத்னாபாயை இங்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்.
தன் தாயை சந்தோஷம் அடையச் செய்வதற்காக அவர் இந்த ஆலயத்தைக் கட்டியிருக்கிறார். ஆனால், இந்த ஆலயத்தைச் சரியாக அவர் கட்டவில்லை என்று அந்தத் தாய் கூறிக்கொண்டிருந்த தருணத்தில், இந்த ஆலயம் சாய்ந்திருக்கிறது.
"கோவிலையே கட்டினாலும்,ஒரு தாய்க்கான கடனை எந்த மகனாலும் தீர்க்க முடியாது" என்று அந்தத் தாய் கூறியிருக்கிறாள்.
இந்த ஆலயத்தைப் பற்றி இப்படிப்பட்ட பல ஆராய்ச்சி கதைகள் இருக்கின்றன.
சென்னையிலிருந்து இந்த ஆலயத்திற்குச் செல்ல விரும்புபவர்கள் ரயில் மூலம் வாரணாசிக்குப் பயணிக்க வேண்டும்.பயண நேரம் 37 மணிகள்.
விமானத்தின் மூலமும் பயணிக்கலாம்.
வாரணாசியில் விமான நிலையம் இருக்கிறது.