மது "ஓம் சரவணபவ' ஆன்மிக இதழில் முருகப்பெருமான் அருள்போற்றும் அருணகிரிநாதர் அருளிய "கந்தர் அலங்காரம்' மற்றும் புத்த மகானின் பெருமை சொல்லும் "புத்த ஞானம்' என்ற இருவேறு அற்புதத் தொடர்கள் மூலம் பக்திச்சுவை அமுதைத் தந்த திரு. இரா. த. சக்திவேல் இன்று நம்மிடையே இல்லை.

Advertisment

எழுத்தில் எந்த வடிவமாக இருந்தாலும் சரி; அதில் தனி முத்திரையைப் பதிப்பவர் திரு. இரா. த. சக்திவேல்.

நக்கீரனில் தலைமைத் துணை ஆசிரியராகப் பணியாற்றி, தனது அபார எழுத்தாற்றல்மூலம் மக்களோடு வாழ்ந்துகொண்டிருந்த அவர், நக்கீரன் குழும இதழாக வெளிவந்த "சினிக்கூத்து' இதழின் ஆசிரியராகவும் இருந்தவர். அந்த இதழின் ஒவ்வொரு பக்கங்களையும் தனது எழுத்துத் திறத்தால் அழ கூட்டியவர். வெறும் சினிமா இதழ் தானே என்ற மேம்போக்கில்லாமல் அதிலும் சிரத்தையோடு ஈடுபாடு காட்டியவர்.

அந்த சிரத்தையோடு கூடிய ஆர்வம்தான் அவரை எழுத்தில் தனிமுத்திரை பதிக்க வைத்தது. வெறும் ஒரு வார்த்தைக்கு மணிக்கணக்கில் அவர் யோசித்ததுண்டு. அந்த யோசனையில் அவரின் பெருவிரல் நகங்கள் பெரும்பாலும் காணாமல் போயிருக்கிறது.

Advertisment

ஆரம்பத்தில் அவர் நக்கீரன் குழுமத்திலிருந்து வெளியாகும் "இனிய உதயம்' இதழிலும் தனிமுத்திரையைப் பதித்ததால் அவரின் பெயரே அலுவலகத்தில் "உதயம்' சக்தியாகவே இருந்தது.

நக்கீரனில் அவர் எழுதும் சினிமாத் துறை சார்ந்த புலனாய்வுக் கட்டுரைகள் 90 காலகட்டங்களில் அதிர்வை ஏற்படுத் தின. ஆர்.டி. எ(க்)ஸ்  என்ற பெயரில் அவர் எழுதிய பல படைப்புகள் வாசகனிடம் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஒரு கட்டத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்ததால் எழுத்தில் இருந்து சற்று ஓய்வில் இருந்து வந்தார். அவரின் அபார எழுத்துத் திறனை அறிந்த நாம் அவரை நமது "ஓம் சரவணபவ' இதழுக்கு கட்டுரை எழுதிக்கொடுங்கள் என்று அன்பாய் நச்சரித்தோம். 

Advertisment

அவரால் எந்த விதமான எழுத்தையும் எழுத முடியும் என்ற நம்பிக்கை நமக்கிருந்தது. 

அந்த வகையில் கதை, கவிதை, கட்டுரைகளில் ஆர்வம் கொண்ட அவர் தரமான பக்தி இலக்கியத்தையும் படைக்கத் தவறவில்லை. அருணகிரிநாதர் அருளிய "கந்தர் அலங்காரம்', "புத்த ஞானம்' என்ற இரண்டு படைப்புகளை "ஓம் சரவணபவ' வாசகர்களுக்குத் தொடர்ந்து தந்து வரவேற்பை பெற்றிருந்தார். அந்தத் தொடரின் வரவேற்புக்கு வந்து குவியும் கடிதங்களே அதற்கு பெரும் சாட்சி.

இத்தனை நேர்த்தியான அந்த எழுத்துக் கலைஞன் கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தனது இறுதி மூச்சுக் காற்றை நிறுத்தினான்.

கடந்த சில காலங்களாகவே உடல்நலம் குன்றியிருந்த அந்த எழுத்துக் கலைஞன் சிகிச்சை பலனின்றி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவரின் உயிரை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என பெருமுயற்சி செய்த நமது ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களின் பல்வேறு முயற்சிகளும் முடியாமல் போயின. 

அழகிய குண்டு, குண்டான எழுத்து, வசீகரமான எழுத்து நடை இப்படி எழுத்தையே சுவாசித்துக் கொண்டிருந்த அந்தக் கலைஞனுக்கு "ஓம் சரவணபவ' இதழ் சார்பில் புஷ்பாஞ்சலி!

R.D. சரவணப்பெருமாள்