தமிழ்மொழியின் வளர்ச்சியில் சங்க காலப் பாடல்கள் தொடங்கி தற்கால இலக்கியங்களான புதுக்கவிதைகள், நவீன கவிதைகள் வரை அனைத்திற்கும் முக்கிய பங்குண்டு. மரபுக்கவிதைகளுக்கு அடுத்ததாக உருவெடுத்த புதுக்கவிதைகள், மரபுக்கவிதைகளைப் போல் இலக்கண வரம்புகளுக்குள் கட்டுப்படாவிட்டாலும், அவற்றிலும் உவமை, உருவகம், படிமம் எனப் பல்வேறு வடிவங்களை நம்மால் கண்டு ரசிக்க முடியும்.
கவித்துவ உலகிலிருந்து திரைப்படப் பாடல்கள் சற்று மாறுபட்டவை. திரைப்பாடல்களையும் கவிஞர்களே எழுதினாலும்கூட, அப்பாடல்களில், இசையமைப்பாளர் உருவாக்கிய சந்த நயத்திற்கேற்ப, திரைக்காட்சிக்கேற்ற வரிகளை மட்டுமே பாடல்களாக எழுத இயலுமே தவிர, கவிஞரின் கவித்துவத்தை முழுமையாகக் கொண்டுவருவது கடினம். இதுபோன்ற சூழலில், சந்த நயங்களுக்கு பொருத்தமாகவும், கவித்துவமாகவும் திரைப்படப் பாடல் களை எழுதுவது, பாடலாசிரியர்களுக்கு சவாலான ஒன்றாகும்.
அப்படியான சவால்களை எதிர்கொண்டு, திரைப்படப் பாடல்களுக்குள்ளும் கவித்துவச் சுவையை புகுத்திய பாடலாசிரியர்களின் ரசனையில் சில துளிகளை இங்கே நாம் காணலாம்.
கவித்துவமான திரைப்பாடல்கள் என்றதுமே அனைவர் மனதிலும் வந்தமர்பவர், கவியரசர் கண்ணதாசன். அவரது பாடல்களில் தத்துவமும், கவித்துவமும் பின்னிப்பிணைந் திருக்கும். "என்ன பார்வை உந்தன் பார்வை' இடை மெலிந்தாள் இந்த பாவை! என்ற வரியில், மெல்லிய இடையோடிருக்கும் பெண் என்றும் அர்த்தம் கொள்ளலாம்... பார்வை என்ற சொல்லின் இடையிலுள்ள "ர்' என்ற எழுத்து இல்லையென்றால் பாவை என்றாகும் எனவும் எடுத்துக்கொள்ளலாம். இதுபோல் எண்ணற்ற பாடல்களில் வார்த்தைகளில் விளையாடியிருப்பார் கண்ணதாசன்!
அதுமட்டுமல்லாது, நம்மால் புரிந்துகொள்வதற்கு கடினமான சங்கப் பாடல்களையும் கூட எளிய திரைப்பாடல்களாக உருவாக்கி, நாம் ரசிக்கத் தந்தவர். தமிழ் இலக்கணத்தில் அந்தாதித் தொடை நயத்துக்கு எடுத்துக்காட்டாக அபிராமி அந்தாதி பாடலை சொல்லிவந்த காலத்தில், "மூன்று முடிச்சு' திரைப்படத்தில் 'வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்! நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்!' என்ற பாடலை அந்தாதித் தொடை நயத்திலேயே எழுதியிருப்பார். இப்பாடலில் ஒவ்வொர
தமிழ்மொழியின் வளர்ச்சியில் சங்க காலப் பாடல்கள் தொடங்கி தற்கால இலக்கியங்களான புதுக்கவிதைகள், நவீன கவிதைகள் வரை அனைத்திற்கும் முக்கிய பங்குண்டு. மரபுக்கவிதைகளுக்கு அடுத்ததாக உருவெடுத்த புதுக்கவிதைகள், மரபுக்கவிதைகளைப் போல் இலக்கண வரம்புகளுக்குள் கட்டுப்படாவிட்டாலும், அவற்றிலும் உவமை, உருவகம், படிமம் எனப் பல்வேறு வடிவங்களை நம்மால் கண்டு ரசிக்க முடியும்.
கவித்துவ உலகிலிருந்து திரைப்படப் பாடல்கள் சற்று மாறுபட்டவை. திரைப்பாடல்களையும் கவிஞர்களே எழுதினாலும்கூட, அப்பாடல்களில், இசையமைப்பாளர் உருவாக்கிய சந்த நயத்திற்கேற்ப, திரைக்காட்சிக்கேற்ற வரிகளை மட்டுமே பாடல்களாக எழுத இயலுமே தவிர, கவிஞரின் கவித்துவத்தை முழுமையாகக் கொண்டுவருவது கடினம். இதுபோன்ற சூழலில், சந்த நயங்களுக்கு பொருத்தமாகவும், கவித்துவமாகவும் திரைப்படப் பாடல் களை எழுதுவது, பாடலாசிரியர்களுக்கு சவாலான ஒன்றாகும்.
அப்படியான சவால்களை எதிர்கொண்டு, திரைப்படப் பாடல்களுக்குள்ளும் கவித்துவச் சுவையை புகுத்திய பாடலாசிரியர்களின் ரசனையில் சில துளிகளை இங்கே நாம் காணலாம்.
கவித்துவமான திரைப்பாடல்கள் என்றதுமே அனைவர் மனதிலும் வந்தமர்பவர், கவியரசர் கண்ணதாசன். அவரது பாடல்களில் தத்துவமும், கவித்துவமும் பின்னிப்பிணைந் திருக்கும். "என்ன பார்வை உந்தன் பார்வை' இடை மெலிந்தாள் இந்த பாவை! என்ற வரியில், மெல்லிய இடையோடிருக்கும் பெண் என்றும் அர்த்தம் கொள்ளலாம்... பார்வை என்ற சொல்லின் இடையிலுள்ள "ர்' என்ற எழுத்து இல்லையென்றால் பாவை என்றாகும் எனவும் எடுத்துக்கொள்ளலாம். இதுபோல் எண்ணற்ற பாடல்களில் வார்த்தைகளில் விளையாடியிருப்பார் கண்ணதாசன்!
அதுமட்டுமல்லாது, நம்மால் புரிந்துகொள்வதற்கு கடினமான சங்கப் பாடல்களையும் கூட எளிய திரைப்பாடல்களாக உருவாக்கி, நாம் ரசிக்கத் தந்தவர். தமிழ் இலக்கணத்தில் அந்தாதித் தொடை நயத்துக்கு எடுத்துக்காட்டாக அபிராமி அந்தாதி பாடலை சொல்லிவந்த காலத்தில், "மூன்று முடிச்சு' திரைப்படத்தில் 'வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்! நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்!' என்ற பாடலை அந்தாதித் தொடை நயத்திலேயே எழுதியிருப்பார். இப்பாடலில் ஒவ்வொரு வரியிலும் இறுதிச்சொல், அடுத்த வரியின் முதல் சொல்லாக வருவது ஆச்சர்யப்படவைக்கும். என்னவொரு மெனக்கெடல்!
அதேபோல், பெண்ணின் அழகை இயற்கை எழிலோடு ஒப்பிட்டு, முள்ளும் மலரும் திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதிய, "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா!' பாடல், இன்றுவரை பலராலும் விரும்பிக் கேட்கப்படும் பாடலாக இருக்கிறது. இப்பாடலில், மலையின்மீது வளைந்துவளைந்து செல்லக்கூடிய மலைப்பாதையை, பெண்ணின் பின்னிய கூந்தலோடு ஒப்பிட்டு, "வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோகக் கூந்தலோ' என எழுதியிருப்பார். உயர்ந்தோங்கிய மலையில் ஆங்காங்கே மினுங்கியபடி வழியக்கூடிய அருவிகளை பெண் அணிந்திருக்கும் ஜரிகை சேலையோடு ஒப்பிட்டு, 'ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்!' என்று எழுதியிருக்கும் கண்ணதாசனின் கவித்துவ கற்பனை வியக்கவைக்கும்!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/06/kavingar1-2026-02-06-17-28-16.jpg)
வாலிபக் கவி வாலி என்றாலே அவரது துள்ளலான "முக்காலா முக்காபலா' பாடல்கள் தான் சட்டென நம் நினைவுக்கு வரும். இதே வாலி, அவரது புதுக்கவிதைகளில் நிறைந்திருக்கும் இலக்கியச்சுவை போலவே கவித்துவமான எண்ணற்ற திரைப்பாடல் களையும் தந்திருக்கிறார். "மறுபடியும்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற "நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்' என்ற பாடலில், தான் விரும்பிய பெண், தன்னை நிராகரித்த வலியை மனதுக்குள் வைத்துக்கொண்டு அப் பெண்ணை வாழ்த்துவது போன்ற பாடல் வரிகளாக,
"இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!
இதிலென்ன பாவம், எதற்கிந்த சோகம் கிளியே!'
என உவமை நயத்தோடு கவிஞர் வாலி எழுதிய வரிகளுக்கு விளக்கமே தேவைப்படாது! "இரு மலர்கள்' என்ற படத்துக்காக வாலி எழுதிய 'மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்!' என்ற பாடல், அவருக்கு மறக்க முடியாத அனுபவத்தை தந்தது. இப்பாடலில்,
"கூனல் பிறை நெற்றியில் குழலாட - கொஞ்சும்
குளிர் முகத்தில் நிலவின் நிழலாட - கலை
மானின் இனம் கொடுத்த விழியாட'
எனப் பெண்ணழகை உவமை நயத்தோடு ரசனையோடு வடித்திருப்பார். தனது காரில் பயணிக்கும்போது இப்பாடலை ரசித்துக்கேட்ட கவியரசர் கண்ணதாசன், பாடலை எழுதியது வாலி எனத் தெரிந்ததும் நேராக வாலியின் வீட்டுக்கே சென்று அவரை பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்! இதில் இன்னொரு வரலாற்றுச் சம்பவமாக, இப்பாடலை வானொலியில் ஒலிபரப்பியபோது, இப்பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசனென்று குறிப்பிட, வானொலி நிலையத்தாரிடம் தொலைபேசியில் தொடர்ச்சியாகத் தொடர்புகொண்டு, கடுமையாக வாதாடி, அப்பாடலை எழுதியவர் வாலிதான் என்று சொல்லும்படி செய்தார் கண்ணதாசன்! என்னவொரு நல்மனது!
கவிஞர் புலமைப்பித்தன், எம்.ஜி.ஆரின் மீதான தீவிரப் பற்றால், அவரது அரசியல் பயணத்துக்கென்றே வீரியமிக்க கொள்கைப் பாடல்களையும், கூடுதல் சுவையோடு காதல் பாடல்களையும் எழுதினார். "நேற்று இன்று நாளை' திரைப்படத்துக்காக, "பாடும் போது நான் தென்றல் காற்று! பருவ மங்கையோ தென்னங்கீற்று!' என்ற பாடலில்.
"மெல்லிய பூங்கொடி வளைத்து' மலர் மேனியை கொஞ்சம் அணைத்து, இதழில் தேனை குடித்து "ஒரு இன்ப நாடகம் நடித்து எங்கும் பாடும் தென்றல் காற்றும், நானும் ஒன்றுதானே! இன்ப நாளும் இன்று தானே!' என்ற வரிகளில், தென்றல் காற்று பூங்கொடியை வளைத்து, மலரில் உரசி தேனைப் பருகுவதோடு, காதலன், காதலியை வளைத்துப் பிடித்து காதலில் திளைப்பதை ஒப்பிட்டுப் பாடியிருப்பதில்தான் என்னவொரு கவிநயம்!
அதேபோல், கவிஞர் புலமைப்பித்தன், "அடிமைப்பெண்' திரைப்படத்துக்காக எழுதிய "ஆயிரம் நிலவே வா' பாடலில், உவமை நயத்தோடு காம ரசமும் பொங்க எழுதியிருப்பார்!
"நள்ளிரவு துணையிருக்க... நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன... நடை தளர்ந்து போனதென்ன..
இல்லை உறக்கம், ஒரே மனம் என் ஆசை பாராயோ!
என் உயிரிலே, உன்னை எழுத உன் மேனி தாராயோ!'
"மன்னவனின் தோளிரண்டை... மங்கை எந்தன் கை தழுவ'
கார் குழலும் பாய் விரிக்கும்... கண் சிவந்து வாய் வெளுக்கும்!
இந்த மயக்கம், எழில் முகம்... முத்தாக வேர்க்காதோ!
அந்த நினைவில் வந்து விழுந்தேன்... கொத்தான பூவாக!'
என்ற காதலும், காமமும் கலந்த பாடலில்தான் எவ்வளவு கவித்துவம்!
தமிழ் இலக்கிய உலகில், பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள், கவிஞர்களாக உருவெடுக்க உத்வேகமளித்த கவிதைகளின் சொந்தக்காரர் கவிப்பேரரசு வைரமுத்து. "இது ஒரு பொன்மாலைப் பொழுது' என திரைப்படப்பாடல் எழுதத் தொடங்கிய கவிஞர் வைரமுத்து, தமிழ்த் திரைப்பாடல்கள் கவித்துவத்தோடு அமைய வேண்டுமென்பதில் கூடுதல் முனைப்பு காட்டுபவர். தனது திரையுலக நுழைவுப் பாடலிலேயே, 'வான மகள் நாணுகிறாள்.. வேறு உடை பூணுகிறாள்' என்று மாலைப்பொழுதில் வானம் தனது நிறத்தை சிவப்பாக மாற்றிக்கொள்வதை நாணத்தோடு ஒப்பிட்டு கவித்துவமாகப் பாடலில் வெளிப்படுத்தி தனது தனித்துவத்தை பதித்தார். அப்பாடலில் தொடர்ச்சியாக, 'வானம் எனக்கொரு போதி மரம்... நாளும் எனக்கது சேதி தரும்' என்ற வரிகளுக்கேற்ப தமிழ்த்திரையுலகில் இது கவிதையா, பாடலா என்ற சந்தேகத்தை எழுப்பும்படியாக எண்ணற்ற கவித்துவமான பாடல்களை எழுதி சாதனை படைத்துள்ளார்.
"புதிய முகம்' என்ற திரைப்படத்தில், காதலில் விழுந்த கதாநாயகி, அந்த காதல் தரும் இதமான உணர்வின் மேன்மையை சிலாகித்துப் பாடக்கூடிய மென்மையான பாடல் "நேற்று இல்லாத மாற்றம் என்னது? காற்று என் காதில் ஏதோ சொன்னது'. இப்பாடலில் கவிப்பேரரசு வைரமுத்து,
"கவிதை வரியின் சுவை' அர்த்தம் புரியும் வரை!
கங்கை நீரின் சுவை' கடலில் சேரும் வரை!
காதல் சுவை ஒன்று தானே' காற்று வீசும் வரை!'
என்ற வரிகளில், கவிதையின் சுவை குறித்தே விவரித்திருப்பது அவ்வளவு அழகு. அர்த்தம் புரியும்வரை தானே கவிதை சுவைக்கும்? கடலில் சேரும் வரை தானே கங்கை நதிக்கு சிறப்பு? ஆனால் காதலின் சுவையென்பது, இவ்வுலகில் காற்று வீசும் காலமெல்லாம் நிலைத்திருக்கும் என்கிறார். அருமை!
அதேபோல், "பூவெல்லாம் உன் வாசம்' என்ற திரைப்படத்தில், வரக்கூடிய காட்சியொன்றில், கதாநாயகிக்கு திருமணம் நிச்சயமாகிறது. தன் வீட்டுக்கு அடுத்த வீடு தான் மாமியார் வீடு. சிறு வயதிலிருந்தே நட்பான குடும்பம். இப்படியான சூழலில் திருமணத்தை எதிர் நோக்கும் கதாநாயகியின் மனதில் என்னென்ன சிந்தனைகள் விரியுமென்பதை "திருமண மலர்கள் தருவாயா?' என்ற பாடலில் கவிஞர் வைரமுத்து, 'போனவுடன் கடிதம் போடு... புதினாவும் கீரையும் சேரு... புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை... ஏனென்றால், சுவர்தான் உண்டு, தூரமில்லை!' எனப் பாடுவதாகக் காட்டுகிறார்! இதில் சுவர் தான் உண்டு, தூரமில்லை என்ற வரியை, இரு வீட்டுக்குமிடையே சுவர் மட்டுமே பிரிவாக இருக்கிறது எனச் சொல்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம்... தூரமில்லை என்பதை, மனதால் தூரமில்லாமல், நெருக்கமானவர்கள் எனச் சொல்வதாக வும் எடுத்துக்கொள்ளலாம்! சிறப்பான பாடலல்லவா!
புதுக்கவிதை இயக்க முன்னோடிகளில் ஒருவரான பாடலாசிரியர் நா.காமராசன், கலைஞரால் அரசியலுக் கும், எம்.ஜி.ஆரால் திரைத்துறைக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்புக்குரியவர்.
1975-ஆம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் திரைப்படமான "பல்லாண்டு வாழ்க' படத்தில் அவர் எழுதிய "போய் வா நதியலையே' இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா' என்ற பாடலில்,
"கனி தூங்கும் தோட்டம் முகம் போட்ட கோலம்!
பனி வாடைக் காலம் உனைக் காண வேண்டும்!
நிலவென்னும் ஓடம் கரை சேரும் நேரம்!
மழைக் கூந்தல் ஓரம் இளைப்பாற வேண்டும்!'
என்ற வரிகளில் சந்த நயத்துக்கேற்ப எளிய சொற்களால், பெண்ணையும் இயற்கையின் எழிலையும் ஒப்புமைப்படுத்தி எழுதியுள்ள இப்பாடல் வரிகளை கவிதையென்றே சொல்லலாம்தானே!
"நல்லவனுக்கு நல்லவன்' என்ற திரைப் படத்தில், பெற்றோரின் அறிவுரையை மீறி தன் காதலனோடு மகள் சென்றபின்னர் அந்த சோகத்தில் தந்தை பாடுவதாக அமைந்த பாடல், "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு சிறகு முளைத்தது'. இப்பாடலில் தந்தையின் பாசத்தையும், பிரிவின் துயரையும் கலந்து எழுதியிருப்பார் கவிஞர் நா.காமராசன்.
"காலங்கள் மாறி வரும் காட்சிகள் இங்கே
நியாயங்கள் ஆறுதலை கூறுவதெங்கே!
மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம்...
சூடும் கன்னிப் பாவை!
பாச தீபம் கையில் ஏந்தி... வாழ வந்த வேளை!
கண்களாட பெண்மை பாட இன்பம் கண்ட மங்கை!
நாம் வாடி நின்றாலும் நலமோடு வாழ்கவே!'
என்ற வரிகளில் பாசமான பெண் மகள் பிரிவால் ஆறுதல்படவும் வழியில்லாமல் தவிக்கும் சூழலை வரிகளாக்கியவர், இறுதி வரியில்,
நாங்கள் வாடி நின்றாலும், நீயாவது நலமோடு வாழ்க!' என வாழ்த்துவதாகக் குறிப்பிட்டிருப்பார். அந்தவகையில், தங்கள் மகள் காதலித்து பிரிந்து சென்றாலும், வன்மத்தை காட்டாமல், மென்மையாக வாழ்த்தும் மனப்பக்குவத்தை தனது பாடல் வரிகளில் வடித்திருப்பது சிறப்பு!
இப்படியான கவித்துவ பாடலாசிரியர்கள் தான், திரையுலகில் தங்களுக்கு கிடைத்த நல்வாய்ப்பை பயன்படுத்தி, தமிழ் மொழியின் செழுமையை வெளிப்படுத்துவதோடு, நல்ல சிந்தனைகளையும் விதைக்கிறார்கள். தொடர்ந்து அடுத்த இதழிலும் கவித்துவ பாடலாசிரியர்களின் பாடல்களை ரசிப்போம்!
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us