(கவிஞர் ஜெயதேவன், இனிய உதயம் வாசகர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். தன் தனித்துவக் கவிதைகளை அடிக்கடி உதயத்தில் எழுதி வாசகர் பரப்பைக் கவர்ந்து வந்தவர். கடைசியாக ஏப்ரல் இனிய உதயத்தில் இளையராஜாவின் சிம்பொனி இசை குறித்து எழுதினார்.தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகளுள் ஒருவராகத் திகழ்ந்த அவர், திடீரென கடந்த 11-ஆம் தேதி இரவு காலமாகிவிட்டார். இலக்கிய உலகைக் கலங்கவைத்த கவிஞர் ஜெயதேவன் குறித்த அஞ்சலிப் பதிவு இது.)
அரசியல் களத்திலும், பண்பாட்டுத் தளத்திலும் இயங்கி வந்தவை ஜெயதேவன் கவிதைகள்! ஒரு கவிதை இயக்கம் போலவே இயங்கிவந்த ஜெயதேவன், சில மணி நேரத்திற்கு முன், முகநூலில் எந்த நேரத்தில் பதிவிடவேண்டும் என்கிற கருத்தைப் பதிவிட்டுவிட்டு, திடீரென யாரும் எதிர்பார்க்காதபடி இயற்கையோடு கலந்துவிட்டார்.
ஜெயதேவன் 1996-களில் எனது 'மகாகவி' இதழில் தொடர் ஒன்றை எழுதிவந்தவர். பூம்புனல் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் ஆசிரியர் குழுவில் பங்கேற்றுவந்த ஜெயதேவன் தனியாக "ஓடம்' எனும் இதழொன்றையும் தொடங்கி நடத்தி வந்தார். நான் பொதுச்செயலாளராக இருந்த கோவை தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தில் உறுப்பிதழானது ஓடம். அப்போது அவர் பழனியில் குடியிருந்துவந்தார். தம் மகனுக்காக பழனியில் ஓர் அச்சகம் தொடங்கவேண்டும் என்பது அவரது தணியாத விருப்பமாக இருந்தது. அதன் மூலம் ஒரு பதிப்பகம் தொடங்குவதும் அவரது கனவாக இருந்தது. ஜெயதேவனும் நானும் அச்சு இயந்திரம் வாங்க பல ஊர்களுக்குச் சென்றதும், அச்சு இயந்திரங்கள் பற்றி விசாரித்ததும் இன்னும் நினைவில் இருக்கிறது.
கவிஞர் ஜெயதேவன் வத்தலகுண்டுக்காரர். ஆனால் அவர் கொடைக்கானல் பண்ணைக் காட்டில் பிறந்து பழனியில் வசித்து வந்தவர். பின்னர் பல்வேறு காரணங்களால் பழனியிலிருந்து வேலூர் பின்னர் சென்னை எனக் குடிபெயர்ந்தவர்.
ஒருநாள் எனக்கு அலைபேசினார். "சென்னை எனக்குப் பிடிக்கவில்லை. மேலும் இங்கு அவ்வளவாக நண்பர்கள் யாரும் இல்லை. தாங்கள் நண்பர் மட்டுமல்ல... தங்கள் அருகில் இருக்கவே பிடிக்கிறது. தாங்கள் சொன்னால் உடன் வீட்டைக் காலி செய்துவிட்டு வத்தலகுண்டு வருகிறேன்... என்ன சொல்றீங்க பிரபா..." என்றார். நான் அப்போது வாடகை வீட்டில் குடியிருந்து வந்தேன். எனவே எனக்காகப் பார்த்து பேசி வைத்த ஒரு வீட்டினை ஜெயதேவனுக்கு மாற்றித் தந்துவிட்டு நான் மீண்டும் வீடு பார்க்கும் படலத்தைத் தொடங்கினேன்.
அந்த அளவு எங்கள் நட்பு விரிவானது.
அதன் பின்னர் வத்தலகுண்டுவில் அடிக்கடி நாங்கள் சந்தித்துப் பேசிவருவது வழக்கமானது.
அப்போது அவரிடம் முகநூல் பற்றிச் சொன்னேன். ஆர்வமுடன் கேட்டறிந்தார். உடனடியாக அவரது கைப்பேசியைப் பெற்று அவருக்கு முகநூல் கணக்கொன்றைத் தொடங்கிவைத்தேன். அதன்பின்னர் அவரது உலகம் முகநூலானாது.
எதையும் நுட்பமாக அணுகிவரும் ஜெயதேவன் முகநூலில் தனித்த எழுத்துக்குச் சொந்தக்காரரானார். அவரது பதிவுக்கென்று பின்னூட்டம் இட ஒரு கூட்டம் காத்திருந்ததுண்டு. ஆனாலும், முகநூலில் கணக்குத் தொடங்கிய இந்த 10 ஆண்டுகளில் தொடந்து ஒவ்வொரு ஆண்டும் கணக்குத் தொடங்கிய நாளன்று என்னைப் பற்றி ஒரு பதிவும் செய்து அதில் தமது நன்றியைப் பகிர்ந்தும் வந்தார்.
ஜெயதேவன் கவிதைகள் தனித் தளத்தில் இயங்குபவன. யாரும் தொடமுடியாத உத்தி அது. குறியீடுகளும், படிமமும் துள்ளி விளையாடும் எழுத்தது. வாசிப்பவரை மிரட்டிவிடுகிற எழுத்து நடை. அழகியல் அவரது கவிதைகளுக்கு அணி சேர்த்தது. அரசியல் கவிதையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். எந்தத் தளத்திலும் தன்னை இருத்திக் கொள்ளாத எழுத்துக்காகப் பிரயாசைப்பட்டார். ஆனால், அவரின் நகர்வுகள் அவரை விமர்சனத்துக்கு உள்ளாக்கின. அதுவே அவரது பலமாகவும், வாசிப்பவரின் எண்ணிக்கையை உயர்த்தவும் செய்தன. முகநூலில் ஒரு கவிதைக்கு 1000 முதல் 1500 லைக் வாங்குவது சாத்தியமில்லை. அதை ஜெயதேவன் சாத்தியமாக்கினார். இதை உறுதிப்படுத்தும் விதமாக "முச்சூலம்" கவிதை நூலில் தமது முன்னுரையில், "இது முழுக்க அரசியல் பேசும் கவிதைகளாக அமைந்தது திட்டமிட்டது அல்ல" என்கிறார்.
முகநூலில் எழுதிய கவிதைகளே.. 'முச்சூலம்' நூலாகி இருக்கிறது. என்பதை வாசிப்பவர்கள் உணரமுடியும். சுமார் 10 நூல்களை வெளியிட்ட ஜெயதேவனின் இந்த 'முச்சூலம்' கவிதை நூல் என்னை வெகுவாகக் கவர்ந்த நூலாகவும் இருந்தது. அரசியல் கவிதைகள் அருகி வரும் இன்றைய சூழலில் இந்தக் கவிதைகள் பேசுபொருளானதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
ஜெயதேவனின் எழுத்துகளில் அமைந்த சொற்கட்டுமானங்களை அவ்வளவு எளிதில் யாரும் உடைத்துவிட முடியாது. "செருப்புக்காக கால்கள் தயாரிக்கிறோம்" என்கிற இந்த ஒற்றை வரிக்காக ஒரு நூலே எழுதலாம். இந்திய அரசியல் இப்படித்தான் இருக்கிறது என்கிற முரணைக் கட்டவிழ்க்கிறார். ஜெயதேவனின் அரசியல் கவிதைகள் இப்படிப் பல அடுக்குப் படிமமாக அமைந்து பல்வேறு புரிதல்களில் கட்டமைக்கப்பட்டுள்ளன. தன் அரசியல் மற்றும் கவிதையில் அரசியல் என்கிற மாதிரியான நிலையற்று... அரசிய(லி)ல் கவிதைகள் புனைந்திருக்கிறார். இவை அரசியல் சார்ந்த அல்லது ஓர் அரசியல் சார்புடைய கவிதைகள் அல்ல. ஜெயதேவன் தமது முன்னுரையில் சொன்ன, "இவை அரசியல் பேசும் கவிதைகள்" என்ற கருத்தில் கொஞ்சம் மாறுபடுகிறேன். ஆம், இவை அரசியல் பேசும் கவிதைகள் அல்ல "அரசியல் உணர்த்தும் கவிதைகள்". கவிதையில் நுட்ப அரசியலே கவிதைக்கு நுட்பமாகிறது.
"எப்போதாவது வந்துவிட்டுப் போகிறது
உன் படலையில் பூத்த பூசணிப்பூ மேல்
வந்தமர வண்ணத்துப் பூச்சி.
அது நேற்று என் தோட்டத்தில் சுற்றித் திரிந்தது
என்பதை நம் பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டும்
ஆம் -
வண்ணத்துப் பூச்சிக்கு இல்லை
வர்ணபேதம்."
தெளிந்த நீரோடையென இவரது கவிதைகள் அரசியல் கருத்துகளை தெளிவாக முன்வைக்கின்றன.
"என் கவிதைகளுக்கான சவப்பெட்டிகளை
தயாரிக்கச் சொல்லிவிட்டேன் தச்சனிடம்"
என்ற வரிகள் ஒரு கவிஞனின் பெரும் வலிகளைச் சொல்லிச் செல்கின்றன. கவிதைகளுக்குச் சவப்பெட்டி செய்யச் சொன்ன முதல் கவிஞன் இவராகத்தான் இருப்பார்.
ஜெயதேவனின் உடன்பிறந்த மூத்த சகோதரர் புலவர் பண்ணைக் கோமகன். எங்களின் மூத்த கவிஞர். கவிப்பேரரசு வைரமுத்துவின் அன்பைப் பெற்றவர். என்னை கவிஞரிடம் அறிமுகம் செய்தவரும் புலவர்தான். ஜெயதேவனுக்கும் கவிஞர் அறிமுகமானதும் இப்படித்தான். பின்னாளில் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் ஜெயதேவன் நெருக்கமாக இருந்ததும் உண்டு. அந்த நெருக்கம் கடைசிவரை தொடர்ந்தது. 'ஆனந்த விகடன்' இதழில் இரண்டாண்டுகள் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர் ஜெயதேவன். இதுமட்டுமல்ல, விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என். கல்லூரியில் ஜெயதேவன் இளங்கலை படித்தபோது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர்.
அவருக்கான அரசியல் கவிதைகளுக்கு இந்த அனுபவம் போதும்தான்.
வீட்டில் யாரும் இல்லாதபோது தொலைக் காட்சிப் பெட்டியில் பாடலைச் சத்தமாக வைத்தபடி தானும் கூடவே உரக்கப் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் ஜெயதேவன் என்பதை பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்லக் கேட்டபோது ஆச்சரியப்பட்டதுண்டு. ஜெயதேவன் எழுத்துகளை முகநூலுக்கு முன், முகநூலுக்குப் பின் என்று பிரித்துவிடலாம். முகநூலுக்கு வந்த பின்னர்தான் அவரது எழுத்துகள் பெரும்பாலும் பேசப்பட்டன. அதன் தொடக்கப்புள்ளியாக தெரிந்தோ தெரியாமலோ நான் இருந்திருக்கிறேன் என்பது சற்று ஆறுதலானது.
முகநூலில் காத்திரமாக இயங்கி வருகிறவர்களில் இரண்டு விதம் உண்டு. ஒன்று அரசியல் பதிவுகள் மூலம் தன் இருப்பைப் பதிவு செய்கிறவர்கள். இரண்டாமவர் இலக்கியம் குறித்தான தேடல்களில் திளைத்திருப்பார்கள். இதில் இரண்டுமென ஒருசிலர் இருப்பதுண்டு. இதில் ஜெயதேவன் முக்கியமானவர். முகநூலில் பின்னூட்டங்களை எப்படிக் கையாளவேண்டும் என ஜெயதேவனைப் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அவருக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம் காரணமாக இருந்திருக்கலாம். ஒருமுறை மூத்த எழுத்தாளர் மாலன் பற்றிய வேறொரு நண்பர் எழுதிய அரசியல் பதிவொன்றுக்கான பின்னூட்டம் ஒன்றில் ஆர்வமிகுதியில் நானும் ஜெயதேவனும் விருப்பக் குறியீட்டைப் பதிவு செய்தோம். இது ஒன்றும் தனிப்பட்ட தாக்குதல் இல்லை. அது ஒரு கருத்துப் பதிவுதான். இதைக் கவனித்த மாலன் எங்கள் இருவரையும் ன்ய்ச்ழ்ண்ங்ய்க் செய்தார். அந்த மாலனை ஜெயதேவன் அலைபேசியில் தொடர்புகொண்டு பேசி மீண்டும் முகநூலில் ச்ண்ழ்ங்ய்க் ழ்ங்வ்ன்ங்ள்ற் செய்து நட்பாக்கிக் கொண்டார். இந்த நிகழ்வுக்குப் பின்னர் ஜெயதேவன் பின்னூட்டம் இடுகிறவர்களை மட்டுமல்ல பின்னூட்டங்களையும் மிகக் கவனமாக எதிர்கொண்டார். அவரது நிலைப்பாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தபோதும் இதுகுறித்துக் கவலைப்படாது தம் பயணத்தைத் தொடர்ந்தார். அவரது இருப்பு முகநூல் என்றானது..
காலம் கடந்துகொண்டே இருந்தது. ஜெயதேவனும் எழுதிக்கொண்டே இருந்தார்.
"காலத்தை நாம் கடத்துகிறோம்
காலம் நம்மைக் கடத்துகிறது
இந்த ஓயாத விளையாட்டைத்தான்
வாழ்க்கை என கைப்பிள்ளை பொம்மையாய்
பற்றிக்கொண்டிருக்கிறோம்
பற்று விடச் சொன்ன பட்டினத்தார்
சமாதி அருகே .
ஜெயதேவனின் "ஒரு நாள் என்பது 24 மணி நேரமல்ல" கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற இந்தக் கவிதை இதைத்தான் உணர்த்துகிறது. அதே தொகுப்பில் ஒரு வரி பெரும் அதிர்வெண்களைக் கொண்டதாக இருந்தது.
"மீன்காரியின் கை வளையொலியில்
எனக்குக் கேட்கிறதே கடலின்
ஆதி இசை"
ஜெயதேவன் கவிதைகள் அரசியல் களத்திலும், பண்பாட்டுத் தளத்திலும் ஒரு மாற்றத்தை நிகழ்த்த முயன்றன. சமகால அரசியலை உன்னிப்பாகக் கவனித்து - கடந்து கவிதைகள்வழி ஒரு புரிதலைத் தர முயன்றன. சமகால அரசியல் பேசும் கவிதைகளில் தன்னையே ஒரு கருவியெனக் கொண்டவர் ஜெயதேவன். தன்னையே ஆயுதமெனத் தரித்து எழுதிவந்தவர். கவிதைக்குக் கூர் கவிஞன்தான் என்கிற மனோபாவம் அவருக்கு. தவிர்க்க முடியாத கவிஞராக இருந்த ஜெயதேவன் அனைவரையும் தவிக்கவைத்தது காலத்தின் கோலம்தான்.