மூச்சுப்பட்டு அணையுமோ
விளக்கென்று மூச்சை நிறுத்தினேன்
இப்போது விளக்கில் இருக்கிறேன்’ 

Advertisment

    - என்றெழுதிய நம் காலத்து மகாகவி ஈரோடு தமிழன்பன், கடந்த நவம்பர் 22 அன்று காலை 11 மணிக்குத் தன் மூச்சினை முற்றாக நிறுத்திக்கொண்டு, இம்மண்ணுலக வாழ்விலிருந்து விடைபெற்றாலும் 

Advertisment

தமிழ்க் கவிதையின் விளக்கென நம்முன்னே ஒளிர்ந்துகொண்டிருக்கிறார்.

    பல்லாயிரமாண்டுக்காலத் தொன்மை மிக்க தமிழ்க் கவிதை மரபின் வழிவந்த ஈரோடு தமிழன்பன், மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, கஜல் என பல வடிவங்களிலும் எழுதியதோடு, இளைய தலைமுறை கவிஞர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கிய பேராளுமையாவார்.
    ‘பகுத்தறிவு பகலவன்’ தந்தை பெரியார் பிறந்த 
ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலையில் பிறந்த கவிஞர் எண்ணற்ற நூல்களைப் படைத்து, தமிழன் னைக்கு ஆடையாகச் சூட்டியவர். பாரதியின் கம்பீரம், பாரதிதாசனின் மொழிப் பற்று, பாப்லோ நெருடாவின் விடுதலைத் தாகம்… இம்மூன்றின் வார்ப்பாய் தன் கவிதைகளை வடித்த சிறப்புக்குரியவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

கோவையில் முகிழ்ந்த மானுடம் பாடிய வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவராய் தன்னையும் இணைத்துக்கொண்ட ஈரோடு தமிழன்பன், தன் வாழ்வின் இறுதி கணம் வரை பகுத் தறிவுச் சிந்தனைகளிலிருந்து சிறிதும் விலகாமல் வீறுநடை போட்ட பேறுக் குரியவர்.

Advertisment

எது கவிதை?’ எனும் கேள்வியைக் கவிஞரிடம் கேட்டபோது, “உழைக்கும் மக்களின் வலி மிகுந்த கண்ணீரை, குழந்தைகளின் நலிந்த விசும்பலை, ஒடுக்கப்பட்ட மனிதர்களின் துயரங்களை, சமூக அநீதிக்கெதிரான உரத்த முழக் கத்தை, உலகிலுள்ள மனிதர்களின் விடுதலைக்கான உரிமைக் குரலை எது எழுப்புகிறதோ அதுவே கவிதை” என்றார். இந்த உறுதியும் தெளிவுமே கவிஞரது தனித்துவமாக விளங்கின.

செ.இரா.நடராசன் - வள்ளியம்மாள் தம்பதி யினரின் மகனாக 1933-இல் (செப்டம்பர்-28) பிறந்த செகதீசன், பள்ளி மாணவனாக இருந்த போதே விடிவெள்ளி, மலையமான் ஆகிய புனைபெயர்களில் கவிதைகளை எழுதியதோடு, ‘சுயசிந்தனை’ எனும் கையெழுத்து இதழினையும் வெளியிட்டார். 

   சென்னிமலையில் பள்ளிப்படிப்பை முடித்தவர், கரந்தைத் தமிழ்க் கல்லூரியிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வியைச் செவ்வனே நிறைவுசெய்தார். தமிழ் மீது கொண்ட தீராப் பற்றினால் தமிழன்பன் எனும் பெயரில் கவியரங்குகளில் வலம்வந்தார். முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் கவிதை படித்தபோது, “எங்கள் பகுத்தறிவுப் பேரொளி பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணிலிருந்து பகுத்தறிவுச் சிந்தனையோடு கவிதைப் படிக்க வந்துள்ள எங்கள் ‘ஈரோடு தமிழன்பனே’ வருக…” என்று கலைஞர் பேருவுவகையோடு அழைக்கவே, அன்றிலிருந்தே ஈரோடு தமிழன்பன் எனும் பெயரிலேயே எழுதத் தொடங்கினார்.

   புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய ‘இசை அமுதம் (1942)’, ‘அழகின் சிரிப்பு (1944)’ ஆகிய கவிதை நூல்களை வாசித்த கவிஞருக்குப் புரட்சிக் கவிஞரின் கவிதைகள் மேல் மிகுந்த பற்று உண்டானது. 1954-ஆம் ஆண்டில் தான் படித்த கரந்தைப் புலவர் கல்லூரியின் இளங்கோ மன்ற ஆண்டு விழா விற்கு தலைமையேற்று உரையாற்ற புரட்சிக் கவிஞரை அழைத்துவந்தார் தமிழன்பன். அன்று தொடங்கிய அறிமுகம், பின்னாளில் புரட்சிக் கவிஞரோடு சேர்ந்து பத்தாண்டுகள் பயணிக்கும் பெரும் வாய்ப்பினைக் கவிஞருக்கு வழங்கியது.

    பல்வேறு இதழ்களில் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்த தமிழன்பனுக்கு நாவல் எழுதும் எண்ணம் உருவானது. ‘நெஞ்சின் அலைகள்’ எனும் நாவலை எழுதிமுடித்தார். அந்த நாவலைப் படித்த புரட்சிக்கவிஞர், தமிழன்பனைப் பாராட்டியதோடு நில்லாமல், அந்த நாவல் நூலாக வெளிவருவதற்கான உரிய ஏற்பாடுகளைச் செய்தார். கவிஞராக அறியப் பட்ட தமிழன்பனது முதல் நாவல் 1965-இல் வெளிவந்தது. 

அடுத்ததாக, ‘கொடி காத்த குமரன்’ எனும் வில்லுப் பாட்டு நூல் 1968-ஆம் ஆண்டில் கவிஞரது முதல் கவிதை நூலாக மலர்ந்தது.

தமிழ்க்கவிதை மரபின் செறிவோடும் புதுமை யின் செழுமையோடும் கவிதைகளை எழுதி வந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன், தொடக்கக் காலத் திலேயே பகுத்தறிவு சிந்தனைகளைத் தன் கொள்கையாக வரித்துக்கொண்டார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனோடு சேர்ந்து பயணித்ததன் விளைவாக, மரபுக்கவிதையின் வீச்சையும், தமிழ் மொழியின் வீரியத்தையும் கைவரப் பெற்றார். தனது விரிந்த வாசிப்பினூடாகச் சிலி நாட்டுக்கவிஞரான பாப்லோ நெருடா, ஆங்கில கவிஞரான வால்ட் விட்மன் ஆகியோரின் கவிதைகள் மீதும் மிகுந்த நாட்டம்கொண்டவராக விளங்கினார்.

ஆகாயமும் அழகு
பூமியும் அழகு - ஆம்
என் கையில் ரொட்டித்துண்டு’ 

- என பசித்தவனின் கண்கள் வழியாக இந்தப் பூமியையும் ஆகாயத்தையும் பார்த்தெழுதிய கவிஞர் ஈரோடு தமிழன்பன், தனது நீள்கவிதைகளில் ஆழமிக்க மீள்சிந்தனைகளைக் கேள்விகளாக  எழுப்பினார்.

உனக்கு என்ன அர்த்தம்?’ எனும் கவிதையின் மூலமாக, ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் இந்த மண்ணில் தனக்கான அடையாளத்தைப் பதித்துச்செல்ல வேண்டுமென்கிற வேட்கையை வாசிப்பாளனுக் குள்  தூண்டுகிறார் கவிஞர்.

   ‘உன் பிறப்புச் சான்றிதழ் 
    உன் பெற்றோர் வாங்குவர். 
    உன் இறப்புச் சான்றிதழ் 
    உனக்குப் பின்னால் இருப்பவர் 
    வாங்குவர். 
    நீ என்ன வாங்குவாய்? 

     பகல் 
     வந்து போனதற்கு 
     நட்சத்திரங்கள் அடையாளம். 
     இரவு 
     வந்து போனதற்கு 
     விடியலே அடையாளம். 
     நீ 
     வந்து போனதற்கு 
     என்ன அடையாளம்? 

    அகராதியில் 
    ஒரு புழுக்கூட இடம் பெற்றிருக்கும். 
    அதற்கு அர்த்தமும் இருக்கும். 
    நீ எதில் இடம்பெறுவாய்? 
     உனக்கு என்ன அர்த்தம்? 

    தன்னைக் கடப்பதற்கு 
    எந்த நதி ஓடம் கேட்கும்? 
    என்ன கிடைத்தால்
    நீ உன்னைக் கடப்பாய்? 

    ஓர் எறும்பும் 
    உனக்குத் தெரியும் 
    ஒருமுறைதான் சாகிறது. 
    ஆனால் அதற்குள் வாழ்கிறது.  
    நீ எத்தனை முறை சாகிறாய் 
    ஒருமுறை கூட வாழாமல்?

    தன்னைத் திறப்பதற்கு 
    எரிமலை எவரிடம் சாவி கேட்கும்? 
    உன்னைத் திறப்பதற்கு 
    உன்னிடமா? உலகத்திடமா? 
    எவ்விடம் சாவி? 

    ஒவ்வொரு இதழிலும் 
    ரோஜா இருப்பதால் 
    ஒரு ரோஜாப்பூ உருவாகிறது. 
    ஒவ்வோர் அடியிலும் 
    உயரம் உழைப்பதால்
    இமயம் நிமிர்கிறது 
    நீ 
    ஒவ்வொரு நொடியிலும் 
    எதுவாக இருக்கிறாய்? 
    உன் வாழ்க்கை 
    எதுவாக இருக்கிறது?’

இந்தக் கவிதையில் எழுப்பப்படும் ஒவ்வொரு கேள்வியும் எவ்வளவு அர்த்தம் பொதிந்த கேள்விகளாக உள்ளன. இதுதான் தமிழன்பனது கவிதைகளின் சிறப் புக்கான காரணிகளாகும்.

தமிழ்க்கவிதைப் பரப்பில் சற்றும் சோர்வுறாமல் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து ஆற்றலுடன் எழுதிக்கொண்டிருந்த தமிழன்பன், சிறுகதை, நாவல், நாடகம், சிறுவர் இலக்கியம், வாழ்க்கை வரலாறு, திறனாய்வு, கட்டுரை, ஓவியம், சொற்பொழிவு, மொழிபெயர்ப்பு, திரைப்பட பாடல் என தொடாத இலக்கியத் துறைகளே இல்லை எனுமளவுக்கு ஒரு பன்முகம் கொண்ட படைப்பாளியாகத் திகழ்ந்தார்.

    புதுக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய கவிஞர், டிடி தமிழ்த் தொலைக்காட்சியில் (அப்போது தூர்தர்ஷன்) பகுதி நேர செய்தி வாசிப்பாளராய், அழகுத் தமிழில் செய்திகளை வாசித்து வந்தார். இந்தி, வங்கம், மலையாளம், ஆங்கிலம், உருது உள்ளிட்ட இந்திய - உலக மொழிகள் பலவற்றில் கவிஞரது பல கவிதைகளும், சில கவிதை நூல்களும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. 

தோணி வருகிறது (1973), தீவுகள் கரையேறு கின்றன (1978), காலத்திற்கு ஒருநாள் முந்தி (1982), நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் (1982), ஊமை வெயில் (1984), நிலா வரும் நேரம் (1984), திரும்பி வந்த தேர்வலம் (1985), கருவறையிலிருந்து ஒரு குரல் (1987), பனி பெய்யும் பகல் (1998), திசை கடக்கும் சிறகுகள் (2015) என 65-க்கும் மேற்பட்ட கவிதை நூல்கள், உரைநடை நூல்கள் 25, மொழிபெயர்ப்பு நூல்கள் 2 என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் கவிஞர் ஈரோடு தமிழன்பனது படைப்புகள் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, இதுவரையிலும் அவை 21 நூல்களாக வெளிவந்துள்ளன. 2004-ஆம் ஆண்டில் வெளியான ‘வணக்கம் வள்ளுவ’ எனும் நூலுக்காக ஒன்றிய அரசின் சாகித்திய அகாதெமி விருது, 2018-ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் செம்மொழி விருது’ உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் தனது படைப்புகளுக்காகப் பெற்றுள்ளார். 

1985-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ‘சூரியப் பிறைகள்’ எனும் ஹைக்கூ கவிதை நூலை வெளியிட்டார். 

அந்த நூலில் வாசல் ஓர வாசகம்’ எனும் தலைப்பில் கவிஞர் எழுதியிருக்கும் 14 பக்க அளவிலான முன்னுரை யானது ஹைக்கூ எழுத விரும்புபவர்களுக்கான பால பாடமானது. மேலும், அந்த நூலில் கவிதைகளுக்கான ஓவியங்களையும் கவிஞரே வரைந்திருப்பார்.

    ‘பயம்
    ஊர்ந்து கொண்டேயிருக்கிறது - இது
   பாம்பு போன தடம்’

- என்று காட்சிப் பின்புலத்துடன் கூடிய அழகும் அர்த்தமுமிக்க பல ஹைக்கூ கவிதைகள் அந்த நூலில் இடம் பெற்றன.


ஹைக்கூ எழுதியதோடு, அதன் கிளை வடிவிலான கவிதை நூல்களையும் முதன்முதலாக எழுதியவர் கவிஞர் ஈரோடு தமிழன்பனே. 2001 ஏப்ரலில் ’ஒரு வண்டி சென்ரியு’ எனும் தமிழின் முதல் சென்ரியு நூலை வெளிக்கொண்டு வந்தார். எது ஹைக்கூ, எது சென்ரியூ என்பதற்கான தெளிவான வரையறைகளை 10 பக்க அளவிலான அந்நூலின் முன்னுரையில் விளக்கமாகவும் எழுதி, பலரிடத்தும் தெளிவையும் புரிதலியும் உண்டாக்கினார். அத்தோடு நில்லாமல் சில புதிய வடிவங்களையும் கவிஞரே உருவாக்கி, அறிமுகப்படுத்தினார். அதிலொன்று, -ம்ரிக் எனும் வடிவமாகும்.

    ஆங்கிலக் கவிதை வடிவமான ’லிமரிக்’கையும்,  ஜப்பானியக் கவிதை வடிவமான ‘ஹைக்கூ’வையும் ஒன்றாக இணைத்து, ’லிமரைக்கூ’வை உருவாக்கினார்.  

2002-இல் ‘சென்னிமலை கிளியோப்பாத்ராக்கள்’ எனும் -மரைக்கூ நூலும் வெளியானது. 

   பறவைகளோடு சேர்ந்து பற
   சிறகுகள் தேவை இல்லை; மனிதன்
   என்பதை மட்டும் நீ மற.’     


     அதுபோலவே, தமிழில் பன்னெடுங்காலமாகப் புழக்கத்தில் இருந்துவரும் பழமொழிகளைப் புதுப் பித்து, அதனை 2014-இல் ‘ஒரு கூடை பழமொன்ரியு’ எனும் நூலாக்கினார்.


    ‘நீர்இடித்து நீர்விலகாது
    நீருக்காக இடித்துக் கொண்டால்
    மாநிலங்கள் விலகும்.’    

    பெண் விடுதலைச் சிந்தனைகள், ஒடுக்கப் பட்ட மக்களுக்கான உரிமைகள், இன்றைக்கு சந்தைப் பொருளென விலை பேசப்படும் கல்வி, சமுதாய வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருக்கும் ஊழல், இந்தப் புவியிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டிய சாதி - மத வெறி என சமூகம் சார்ந்த ஆழமான 
அக்கறையை வெளிப்படுத்தும் கவிதைகளை மிகுதியாக எழுதியவர் எனும் பெருமை தமிழன்பனுக்கு உண்டு. இதோ... இரு பதங்கள்;

    ‘கொள்ளி வைக்க ஒரு பிள்ளை
    வேணுமாம் ; ஒரு பெண் வைத்தால்
    எரிய மாட்டாயா நீ?’       
    ‘ஊர் என்றால் சேரியும் இருக்கும்
    சேரி சீறினால், சேரி சீறினால்
    அந்த ஊர் எங்கு இருக்கும்?’


    1998-இல் ‘உன் வீட்டிற்கு வந்திருந்தேன்… வால்ட் விட்மன்!’ எனும் புதுக்கவிதை வடிவிலான முதல் பயண நூலை எழுதினார். வினாக்களே கவிதைகளாலான ‘கனாக்காணும் வினாக்கள்’ எனும் நூலை 2004--லும், தமிழின் முதல் வினா - விடை கவிதை நூலான ‘பூக்களின் விடைகள் புலரி கைகளில்’ எனும் நூலை 2018-லும் வெளியிட்டு, எதிலும் புதுமை தேடும் கவிஞர்களுள் முதன்மையானவராகத் தமிழன்பன் அறியப்பட்டார்.

2016-ஆம் ஆண்டில் ‘புத்தகம் என்பது’ எனும் நூல் வெளிவந்தது. அதில், புத்தகங்களின் சிறப்புகளை 122 கவிதைகளில் எழுதி, அதை ஆங்கில மொழியாக்கத்தோடு வெளியிட்டார். அந்த நூலிலி-ருந்து ஒரு கவிதை;
   ‘பத்துப் பறவைகளோடு 
    பழகி
    ஒரு பறவையாகிவிட முடியாது.

    பத்து நதிகளோடு
    பழகி
    ஒரு நதியாகிவிட முடியாது.

    பத்துப் புத்தகங்களோடு
    பழகிப் பாருங்கள்.
    பதினோறாவது புத்தகமாகப்
    படிக்கப்படுவீர்கள்.’

    2025 செப்டம்பர் 28 அன்று கவிஞர் ஈரோடு தமிழன்பன், தனது 92-ஆவது அகவையில் அடியெடுத்து வைத்த போது, பலரும் மகிழ்ந்து அவரைப் பாராட்டினர். 

ஆனாலும் காலத்திற்கு என்ன அவசரமோ..? கவிஞரை நம்மிடமிருந்து வேகமாகப் பறித்துச் சென்றுவிட்டது.

    ‘கவிதை என் மூன்றாவது கண். 
    இந்தக் கண்ணுக்கு விழிப்பு, 
உறக்கம் என்கிற இமைகள் இல்லை’ - என்று எழுதியதோடு நில்லாமல், மூன்றாம் கண்ணின் விழிப்போடு ‘இனிய உதயம்’ இதழிலும், தனது முகநூல் பக்கத்திலும் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருந்தார்.   

    ‘உலராது பெருகும்
    உலகின் விழிநீர்த் துடைக்க
    ஒரு விரல் தேவை’ 

    - என்றெழுதிய கவிஞரது மறைவுச் செய்தி கேட்டதிலிருந்து பலரின் விழிகள் பெருகும் நீரைத் துடைக்க கவிஞரது விரல்களே கைக்குட்டைகளாக நீளட்டும். தமிழ்க் கவிதைகளின் இருபத்தியோராம் நூற்றாண்டின் மகாகவியாக என்றும் அவரது அழியா புகழ் நிலைத்திருக்கும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி!

மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரண்டிலும் சிறந்து, தமிழுக்கு வளம் சேர்த்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்கிற ந.செகதீசன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.


பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடன் பத்தாண்டுகள் நெருங்கிப் பழகிய சிறப்புக்குரியவர் ஈரோடு தமிழன்பன். சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர். பேராசிரியர். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர், அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர், ‘அரிமா நோக்கு’ இதழின் ஆசிரியர் எனப் பல்வேறு பொறுப்புகளில் அவர் ஆற்றிய பணிகளும் எழுதிய நூல்களும் ஏராளம்.


தமது இடையறாத தமிழ்ப் பணிகளுக்கு அங்கீகாரமாகக் கலைமாமணி, சாகித்ய அகாதெமி, பாரதிதாசன் விருது, 


சிறந்த நூலுக்கான தமிழ்நாடு அரசின் விருது, குறள்பீட விருது, முரசொலி அறக்கட்டளையின் கலைஞர் விருது, கவிக்கோ விருது என எண்ணற்ற விருதுகளைப் பெற்று, அவற்றுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.


நமது திராவிட மாடல் ஆட்சிக்கு வந்ததும், 2022-ஆம் ஆண்டு முத்தமிழறிஞரின் பிறந்த நாளில் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், அவருக்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வழங்கியிருந்தோம். மேலும், அவர் இயற்றிய 'கீழடியில் கேட்ட தாலாட்டுகள்', 'நெருக்கடி நேரத்தில் கலைஞரோடு (கவிதைகளும் கட்டுரைகளும்)’ ஆகிய நூல்களையும். வட அமெரிக்க ஈரோடு தமிழன்பன் வாசகர் பேரவை தயாரித்துள்ள ஈரோடு தமிழன்பன் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த ‘மகாகவி’ என்ற ஆவணப் படத்தையும் முதலமைச்சராக வெளியிடும் பேற்றினைப் பெற்றிருந்ததை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.


இறுதிக்காலம் வரையிலும் பல வகைமைகளிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய, நீண்ட நெடிய பெருவாழ்வுக்குச் சொந்தக்காரரான கவிஞர் ஈரோடு தமிழன்பனை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தமிழன்பர்களுக்கும் எனது 
ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.