"மகனே... உன் பெரியப்பா இறந்து எவ்வளவோ வருடங்கள் கடந்தோடி விட்டன. நீ இனி அந்தக் கதையை பெரியப்பாவின் வார்த்தைகளில் எந்தக் காலத்திலும் கேட்கமுடியாது.''- பதைபதைப்பு காரணமாக அதற்கு மேல் கூற முடியாமல் அவர் சிறுவனின் கண்களையே மேலும் ஒருமுறை பார்த்தார். சிறுவன் அமைதியாக படுத்து முனகிக்கொண்டிருந்தான்.

Advertisment

தரித்திர குடும்பத்திலிருந்து இரவலாக வாங்கி வளர்க்கக் கூடிய சிறுவன் அவன்.

Advertisment

பிடிவாத குணம் கொண்டவனாகவும் அதே நேரத்தில் பலவித சிறப்புத் தன்மைகளால் புத்திசாலியாகவும் இருக்கக்கூடிய அந்தச் சிறுவனை வளர்த்தெடுத்து பெரிய ஒரு ஆளாக ஆக்குவதாக அவர் வாக்களித்திருந்தார். அந்தச் சிறுவனுக்கு ஏதாவது நேர்ந்தால், பிறகு அவர் வாழ்வதில் பெரிய அர்த்தமே இல்லை. அந்த ஏழைச் சிறுவனின் தந்தையுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் அவருடைய ஞாபகத்தில் வந்தது. தந்தை இல்லாத சிறுவன் என்ற எண்ணம் அவனிடம் உண்டாகக்கூடாது. ஆறு பிள்ளைகளை ஒரு தந்தை குழிக்குக் கொடுத்தாலும், அரை பிள்ளையை அந்நியமாக விட்டுக்கொடுக்க மாட்டான். அதுதான் மனித குணம். பார்ப்பதற்கு ஒரு எலும்புக்கூட்டைப் போல தோன்றிய அந்த அப்பனின் உருவம் அவருடைய கண்களுக்கு முன்னால் தெரிந்தது.

அவருடைய மனதிற்குள் நிறைய கவலைகள் உண்டாயின. வாழும் காலத்தில் ஒருமுறை கூட எதையும் முழுமையாக நம்பாத காரணத்தால், அவருடைய வாழ்க்கை பிரச்சினைக்குரிய ஒன்றாக இருந்தது. அவருக்கு நெருங்கிய உறவு என்று கூறக்கூடிய அளவிற்கு வயதான காலத்தில் யாரும் இருக்கப் போவதில்லை என்ற எண்ணத்துடன் வாழ்ந்துகொண்டிருந்த நேரத்தில்தான் ஒரு சிறுவனை எந்தவொரு தொகையும் கொடுக்காமல் வளர்ப்பு மகனாக அவர் தத்து எடுத்தார். காகம் தன்னுடைய கூட்டில் குயில் குஞ்சை வளர்த்தாலும், பறக்கக்கூடிய பருவம் வரும்போது, அது தன்னுடைய தந்தையையும் தாயையும் தேடி பறக்க ஆரம்பிக்கும். கூட்டில் அமர்ந்து கொண்டு காகம் அழுவதால் எந்தவொரு பயனுமில்லை.

Advertisment

குயிலின் குஞ்சு குயிலின் வழியிலேயே செல்லும். அது தன்னுடைய இனத்தின் வேரின் மீதே அடைக்கலம் தேடும். அதுதான் வர்க்க குணத்தின் இயல்பு. அவர் சிறிது நேரத்திற்கு தத்துவ சிந்தனையாளராக மாறினார். எப்படி வளர்த்துக் கொண்டு வந்தாலும் சரி, இந்தச் சிறுவனுக்கு எதிர்காலத்தில் அவரின் மீது பாசம் இருக்கப்போவதில்லை.

இந்தச் சிந்தனை எந்தவித காரணமும் இல்லாமல் அவரை அமைதியற்றவராக ஆக்கியது.

"தேவையற்றது... இந்த வீண் வேலை''- அவர் யார் என்றில்லாமல் முணுமுணுத்தார்.

"கண்ணா.... நீ கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், உன் தாறுமாறான போக்கு சற்று அதிகமாகவே இருக்கு. நீ என்னைச் சாதாரண ஒரு வேலைக்காரனாக நினைத்துக்கொண்டு இருக்கிறாய்.

உன்னுடைய இப்படிப்பட்ட பிடிவாதச் செயல்களை இனிமேலும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது. என் வீட்டிலிருந்து நீ வெளியேறு. உன் முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்க இனிமேல் என்னால் முடியாது.''- அவர் கோபத்துடன் சிறுவனை அளவற்றுத் திட்டினார். அவரின் அந்த கடுமையான வார்த்தைகளின் பாதிப்பு அவனுடைய மனதிற்குள் எங்கோ உண்டாகியிருக்க வேண்டும்.

ஒருவேளை மூளையில் அதிக பாதிப்பு உண்டாகியிருக்க வாய்ப்பிருக்கிறது.

மூளைக் காய்ச்சல் வந்துவிடாதபடி கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். டாக்டர் கூறியதற்கும் இந்த உடல்நல பாதிப்பிற்கும் இடையே ஏதாவது உறவு இருக்குமோ?

அவருடைய கடுமையான வார்த்தைகள்தான் அவனிடம் திடீரென இந்த காய்ச்சலை வர வைத்திருக்கின்றன. அவர் நடுங்கினார்.

குற்றவுணர்வு உண்டாகி, அவருடைய மனம் வேதனைப்பட்டது.

அவருடைய அந்த பேசும் முறையைப் பார்த்துத்தான் சிறுவன் பதைபதைப்பு அடைந்தான்.

அசாதாரண வேகத்தில் அவன் பகை உணர்வுடன் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய பலவீனமான உள்மனதை அது பலமாக நிலைகுலையச் செய்திருக்க வேண்டும்.

"மாமா... நான் போறேன். இனிமேல் நான் உங்களைப் பார்க்கமாட்டேன்.மாமா, நீங்க என்னை மறந்திடுவீங்களா?''

-சிறுவன் கண்களில் நீர் நிறைய, தூக்கத்திலிருந்து அதிர்ச்சியடைந்து, கேட்டான்.

"நீ எங்கு போறே, மகனே?''

"எங்காவது....''-

அதைக் கூறியபோது, மேலே பரந்து கிடந்த ஆகாயத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சாளரத்தின் ஒரு கண்ணாடியின் வழியாக தூரத்திலிருந்த வானத்தைப் பார்க்க முடிந்தது.

"நீ அழவேண்டிய அவசியமில்லை, மகனே.... உன்னை நான் அந்த அளவிற்கு செல்லம் கொடுத்து கொஞ்சி வளர்த்தேன். நீ நாசமாப் போகப் போறேன்னா...

என்னால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது.''- குரலில் அடைப்பு உண்டானதைப் போல, திடீரென ஏதோ ஒரு தடுமாற்றம் உண்டானது.

சிறுவனின் கண்களில் அப்போதும் பயம் இருந்தது.

கவலைகளின் கார்மேகம் அடர்த்தியாக திரண்டுநின்றிருந்தது. எதிர்காலத்தில் தான் யாராலும் எடுத்து கொஞ்சப்படாத அனாதைச் சிறுவனாக ஆகப் போகிறோம் என்ற சிந்தனை அவனை அரித்துத் தின்ன ஆரம்பித்தது.

"சித்தப்பா...''- சிறுவன் அவரைப் பார்த்து அழுதான். கண்ணீர்துளிகள் திரண்டு நின்றிருந்த நீலம் படர்ந்திருந்த முகம்....

"மகனே... என்னைப் பலவகையான பெயர்களிலும் மாற்றி... மாற்றி அழைக்கிறாய் அல்லவா? சிறுவனே... சில நேரங்களில் நீ என்னை "மாமா' என்று அழைப்பாய். வேறு சில நேரங்களில் "பெரியப்பா' என்று அழைப்பாய்.

இப்போது... சற்று முன்பு நீ என்னை அழைத்தது "சித்தப்பா' என்று. நீ ஒரு பாண்டிய நாட்டு சிறுவனா? 

இல்லாவிட்டால் ஒரு தனி மலையாளி சிறுவனா?- 

சந்தேகத்துடன் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் படுத்திருந்த அந்தச் சிறுவனையே சிறிது நேரம் அவர் பார்த்துக்கொண்டிருந்தார்.தொடர்ந்து அவனின் நெற்றியின் மீது விழுந்து கிடந்த செம்பு நிறத்திலிருந்த முடிச்சுருள்களை விலக்கி ஒதுக்கிவிட்டார். அந்த முடிச்சுருள்களின் வழியாக அவர் ஒரு தனித்துவத் தன்மை கொண்ட சுருதியை மீட்டினார். அவர் ஒரு சிறிய ராகத்தை முனகினார்.

"சோகமே.... சோகம்...'' அந்தப் பாட்டை முனகிக்கொண்டிருப்பதற்கு மத்தியில் அவர் பலவகைப்பட்ட மனப் போராட்டங்களிலும் சிக்கி உழன்று கொண்டிருந்தார்.

திரண்டு வீங்கிக் காணப்பட்ட இதயத்தின் சுவர்கள்....

அந்த பதைபதைப்பு நிறைந்த சூழல் அவனுக்கு மிகவும் பிடித்திருந்ததைப் போல தோன்றியது. சோகம் நிறைந்த பாடல்களைப் பாடுவதில் அவன் திறமைசாலியாக இருந்தான். அந்த மெட்டைக்கேட்ட காரணத்தாலோ என்னவோ... அவன் மெதுவாக...

மெதுவாக வாயைத் திறந்து வைத்துக்கொண்டு, கண்களை மூடிக் கொண்டிருந்தான்.

அனைத்தையும் மறந்த நிலையிலிருக்கும் ஒரு சுகமான அனுபவத்துடன் அவன் படுத்திருப்பதைப் போல தோன்றியது. அது அவனைச் சிறிது நேரத்திற்கு தொல்லையற்ற ஒரு உறக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது என்று அவர் தவறாக நினைத்திருப்பாரோ?

சிறுவன் கண்களை மூடியவாறு தூக்கத்தின் ஆழத்திற்குள் இறங்கிச் செல்லும்போதும், அந்த மனிதரின் சிந்தனைகள் முழுவதும் பலா அப்பளத்தைப் பற்றியதாகவே இருந்தன. இந்தக் காலத்தில் எங்கிருந்து பலா அப்பளம் கிடைக்கும்? காய்ச்சலால் பாதிக்கப்பட்டு படுத்திருக்கும் சிறுவனுக்குப் பலா அப்பளத்தைக் கொடுக்க இயலுமா? இந்த காய்ச்சல் இன்று இல்லாவிட்டால் நாளை குணமாகிவிடும் அல்லவா? அப்போது பலா அப்பளம் வேண்டும் என்று கேட்டால்....?

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்வது என்று தெரியாமல், அவர் அந்தச் சிறுவனின் நோய் படுக்கைக்கு அருகில், ஒரு மரச்சிலையைப் போல, அமைதியாக இருந்தார்.

சிறுவனின் மூச்சு விடுதல் வேகமாக இருந்தது...

அப்போதும்...