சனி ராசிக்கு 9-ஆமிடத்தில்உங்கள் ராசி எதுவாக இருந்தாலும், ராசிக்கு 9-ல் சனி அமர்ந்து, யோக சனியாக அழைக்கப்படுவார். 9-ஆமிடத்து சனி, ராசியின் 11, 3, 6-ஆமிடங் களை உற்று பார்ப்பார்; கவனியுங்கள். 11-ஆமிடம், மூத்த சகோதரன், 3-ஆமிடம் இளைய சகோதரன்.
6-ஆமிடம் சண்டை. நீங்களே இணைத்து பார்த்துக்கொள்ளுங்கள்.
9-ஆமிடத்திற்கு சனி வருவதற்குமுன், உங்கள் உடன்பிறப்புகளிடம் சொத்து விஷயமாக பேசி, பைசல் பண்ணிக்கொள்ளுங் கள். இல்லாவிடில் வீண் மனஸ்தாபம் ஏற்பட்டுவிடும்.
11-ஆமிடம் அரசியலைக் குறிப்பது. எனவே முதலிலேயே, அரசியல் சார்ந்து, ஒரு உறுதியான முடிவை எடுத்துவிடுங்கள். இருக்கிற கட்சியில், செம்மையாக இருக்க வழிவகை செய்துவிடுங்கள்.
புத்தர் பகவான் சொன்னதுபோல் ஆசைகளை துறந்துவிடுங்கள். நீங்கள் மட்டும் ஆசைப்பட் டால், அதனை ஒருவழியாக ஒழித்து விட்டுத்தான் சனி மறு வேலை பார்ப்பார். ஆசை, லட்சியம், குறிக்கோள் என ஒரு மண்ணாங்கட்டி யும் ஆகவே ஆகாது; சனிக்கு புடிக்காது. நீங்கள் சமையலில் பெரிய நிபுணராக இருந்தாலும், மிகவும் கவனமாக இருப்பது அவசியம். எந்தவகை தேர்தலிலும் நிற்கக்கூடாது.
குழுத்தலைவர் என்ற பேச்செல்லாம் வேண்டவே வேண்டாம். தொலைதூரப் பயணங்களைத் தள்ளிவைக்கவும். ஏற்கெனவே உங்கள் பகுதி தலைவராக இருந்தால், கூடியமட்டும் சனி, 9-ஆமிடத்திற்கு வருவதற்குமுன் அதிலிருந்து விலகி, அப்புறமாக இந்த பொறுப்பை எடுத்துக்கொள்கிறேன் என கூறிவிடுங்கள். இதனால் தலைவர் பொறுப்பால் வரும் இன்னல் நீங்கிவிடும்.
அடுத்து சனி, உங்கள் ராசியின் 3-ஆமிடத்தைப் பார்ப்பார். இதனால் உங்கள் இளைய சகோதரனுக்கும் உங்களுக்குமிடையே சண்டை உண்டாகும். அல்லது மனக்கசப்பு ஏற்படும். இதனால் சனி 9-ஆமிடத்திற்கு வரும்முன்பே, இளைய உடன்பிறப்புகளுடன் கலந்துபேசி, எந்த விஷயம் சார்ந்து மன வேற்றுமை வரும் சூழ்நிலை இருக்கிறதோ, அத்தனை முதலிலேயே சரி பண்ணிவிடுங்கள். இல்லையெனில் பெரிய சண்டை வந்துவிடும். இதேபோல், உங்கள் பணியாளர்களின் குணநலன் தெரிந்து,
சிலரை வேலையில் நீட்டிக்கவும், சிலரை நீக்கவும் செய்துவிடலாம். ஒப்பந்தங்களில், சூழ்நிலை சார்ந்து, முன்முடிவு எடுத்துவிடுங்கள். ஒருவேளை, சற்று குழப்பம் வருவது போல் தோன்றினால், அதிலிருந்து விலகவும் தயங்க வேண்டாம். தகவல் தொடர்புகொண்டவர்கள், அதன் வேகமான தொழில்நுட்பம் தடைபடுவதாக உணர்வீர்கள். எனவே, சனி 9-க்கு வரும் முன்பே, தொழில்நுட்பம் சார்ந்து, விஷயங்களை சரி பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் சகித்துக்கொள்ளக்கூடிய அளவு தாமதம் மட்டுமே ஏற்படும். ட்யூசன் எடுப்பவர்கள் பயிற்சி கற்பவர்கள் எல்லாம், முன்கூட்டியே வரும் இன்னலை யோசித்து வைத்து, அதற்குரிய தீர்வையும் கைவசம் வைத்திருங்கள். சனி 3-ஆமிடத்தைப் பார்ப்பதால், உங்கள் மன தைரியம், உறுதி குறையும். அதனை ஞாபகத்தில் வைத்து, அதற்கேற்ப செயலாற்றவும். அடுத்து 9-ஆமிடத்தில் அமர்ந்த சனி, உங்கள் ராசியின் 6-ஆமிடத்தை ஆறுதலாக அவதானிப்பார். 6-ஆமிடம் வேலை செய்யும் இடம். எனவே சனி, தனது காரகமான வேலையை அதிகமாக்குவாரே தவிர கெடுக்கமாட்டார். வேலையில், முதலாளிகளின் கெடுபிடி அதிகமிருக்கும். வாடகை வீட்டு ஓனர் தொந்தரவு அதிகம் கொடுப்பார். பிராணிகள் விஷயத்தில் அதிக கவனமாக இருக்கவேண்டும். தொந்தரவு தரும் வளர்ப்பு பிராணிகள் இருந்தால், சனி 9-ஆமிடத்திற்கு வருமுன்னே, அதற்கான தீர்வை கண்டுவிடுங்கள். 6-ஆமிடத்தைப் பார்த்த சனி கடன், எதிரி, நோயை கட்டுப்படுத்திவிடுவார். அது நல்ல விஷயம்தான்.
சனி 9-ஆமிடத்திற்கு வருவதற்குமுன் உடன்பிறப்புகள், அரசியல், தொழிலாளர்கள், வீடு விற்பது, முதலாளிகள் என இவைசார்ந்து வரும் பிரச்சினைகளை சமாளிக்கும் விதத்திற்கு, முன் ஏற்பாடு செய்துவிடுங்கள்.
மதுரை, திருவாதவூர் சனீஸ்வரரை வழிபடலாம்.
ராசிக்கு 10-ஆமிடத்தில் சனி
உங்கள் ராசி எதுவாக இருந்தாலும், ராசிக்கு 10-ல் சனி அமரும்போது, அவர் கர்ம சனி எனப்படுவார். கர்மம் என்றால் தொழில் என்று அர்த்தம்.
10-ல் அமர்ந்த சனி, உங்கள் ராசியின் 12, 4, 7-ஆமிடங்களைப் பார்க்கிறார். 12-ஆமிடம் என்பது முதலீட்டு ஸ்தானம். 7-ஆமிடம் வியாபார ஸ்தானம். சனியின் பார்வை குறுக்கும் தன்மை கொண்டது. எனவே தொழில் ஸ்தானத்தில்தான் சனி அமர்ந்துள்ளார். ஆனாலும் அவர் பார்வைமூலம், உங்கள் வியாபார முதலீடுகளை குறைத்து, அதனை சுருக்கிவிடுவார்.
எனவே, சனி உங்கள் ராசிக்கு 10-ஆமிடத்திற்கு வருவதற்கு முன்பே, வணிக சம்பந்த முதலீட்டு விஷயத்தை, நேர்சீர் ஆக்கிக் கொள்ளுங்கள். அதுபோல் வியாபார விஷயங்களை ஒரு கட்டுக்குள், உங்கள் கண் பார்வையில் இருப்பதுபோல் கொண்டுவந்து விடுங்கள். முடிந்தால் வியாபார நிறுவனங்களின் விஸ்தீரணத்தை குறையுங்கள். 12-ஆமிடம் செலவு ஸ்தானம். ஒத்த பைசா செலவழிக்க சனிக்கு மனசு வராது. எனவே பெரிய செலவு ஏதேனும், கண்டிப்பாக செய்துதான் ஆகவேண்டும் எனும் நிலை இருந்தால், அதனை சனி 10-ஆமிடத்திற்கு வருமுன்னே செய்துவிடுங்கள். வெளிநாட்டில் சென்று வாழ்வது, அங்கு வர்த்தகத்தை விரிவாக்குவது என எதையும் சனி செய்யவிடமாட்டார்.
10-ஆமிடத்தில் அமர்ந்த சனி, கூடவே உங்கள் 4-ஆமிடத்தையும் பார்ப்பார். உடனே உங்கள் தாயாரின் நடமாட்டத்தைக் குறைப்பார். பள்ளி மாணவர்களின் ஞாபகசக்தி குறையும். இதன்பொருட்டு, உங்கள் தாயார் மற்றும் பள்ளி மாணவர்களின் நடவடிக்கையை சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும். அதேமாதிரி இந்த 10-ஆமிடத்திற்கு சனி வருவதற்கு முன்பே, வாழ்க்கைத் துணையின், தொழிலை, ஒருவிதமாக நிலையாக வைத்துக்கொள்ளவேண்டும். சனி, வந்தபின்பு, அந்தத் தொழிலை விரிவுபடுத்தும் எண்ணமே வரக்கூடாது. இதுபோல் மீனவர்கள் தங்கள் படகு சார்ந்த விஷயங் களையும், விவசாயிகள் தங்கள் வேளாண்மை சார்ந்த விஷயங்களையும், கல்வியாளர்கள் தங்கள் கல்வி சார்ந்த வேலையையும், பால் உற்பத்தியாளர்கள், தண்ணீர் சம்பந்தம் கொண்டோ, வாகனத்துறையாளர்கள் என இவர்கள், சனி 10-ல் வருவதற்குமுன்பே, நம் தொழிலின் எல்லை இவ்வளவுதான் என முறைபடுத்திக்கொள்வது அவசியம். சனி வந்து பார்த்து கெடுக்கவேண்டும் என அவசியமின்றி, நீங்களே தொழிலை குறுக்கிகொள்வது நல்லது. சேந்தமங்கலம் சனீஸ்வரரை வழிபடவும்.
ராசிக்கு 11-ல் சனி
உங்கள் ராசி எதுவாக இருந்தாலும், ராசிக்கு 11-ல் சனி அமர்வது லாப சனி எனப்படும். 11-ஆமிடத்தில் அமரும் சனி உங்கள் ராசியின், ராசி, 5 மற்றும் 8-ஆமிடத்தை உற்று நோக்குவார்.
சனி, ராசியைப் பார்ப்பதால், உங்களுக்கு ஒருவித சோம்பேறித்தனம், மந்த புத்தி, மறதி, காது கேட்க சிரமம் என இவைபோன்ற விஷயம் தொடங்கிவிடும். எனவே சனி 11-ஆமிடத்திற்கு வருவதற்குமுன்பே, நிறைய பொறுப்புகளை வணிகத்தில் சுமந்துகொண்டிருந்தால், அதனை நம்பிக்கையான- தகுதியானவர்களுக்கு பிரித்து கொடுத்து விடுங்கள். புது தொழில் ஆரம்பிக்காமல், இருக்கிற தொழிலை பாழாக்காமல், இருந்தாலே போதும்.
வாகனங்களையும், சற்று பழசாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். ரொம்ப ஆடம்பரமாக வாழ்வதைக் குறைத்து பழகவும். இதெல்லாம் சனி 11-ஆமிடத்திற்கு வருவதற்கு சிலகாலம் முன்பே பழகிவிட்டால், சனி தனது பார்வையை பதிக்கும்போது, பயல் சுமாராகத்தான் இருக்கிறான். சரி ரொம்ப கெடுக்க வேண்டாம் எனும் முடிவுக்கு வந்துவிடுவார்.
11-ல் அமர்ந்த சனி, 5-ஆமிடத்தைப் பார்ப்பார். இந்த 11-ஆம் சனி வருவதற்குமுன்பே, காதல் விஷயங்களை கடலில் வீசியோ, பரணில் கடாசியோ விடவும். குழந்தை பெறும் ஆசை இருந்தால், சனி 11-க்கு வருமுன்போ அல்லது பின்போ அதற்கான முயற்சியில் ஈடுபடவும். உழைக்காமல் கிடைக்கும் எந்த பலனையும் சனி விரும்ப மாட்டார். எனவே இந்த லாட்டரி வாங்குகிறேன். வங்கியில் முதலீடு செய்கிறேன். பந்தயத்தில் பங்கேற்கிறேன், கலை சேவை செய்கிறேன் என வியர்வை சிந்தாமல், பணம் சம்பாதிக்க நினைத்தால், சனி காண்டாகிவிடுவார். எனவே சனி 11-ல் வரும்முன்பே மேற்கண்ட விஷயங்களைவிட்டு விலகியே இருங்கள். சினிமா, டிவியில் இருப்பவர்களும், 11-ல் சனி வருவதற்குமுன்பே, நல்ல ஒரு நிறுவனத்திடம் சற்று அடிமைபோலவோ அல்லது குறைவான பணம் என்றாலும் ஒப்பந்த கையெழுத்து போட்டு வேலை வாய்ப்பை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். சனி 11-ல் வந்து, சுத்தமாக கெடுப்பதைவிட, இது எவ்வளவோமேல் என்று தோன்றிவிடும். ஆரோக்கியம் சம்பந்தமாக முன்பே, முழு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 5-ஆமிடம் முக்கியமாக வாரிசு ஸ்தானம் ஆகும். உங்களுக்கும் உங்கள் வாரிசுகளுக்கும் இடையில் மனக்கசப்பும், மனவேற்றுமையும் வரும். எனவே கூடியமட்டும், சனி 11-ல் வருவதற்குமுன்பே, வாரிசு சம்பந்த விஷயங்களை தெளிவாக பிரித்து வைத்துக்கொள்ளுங்கள். இதனால் வீட்டில் சண்டை குறைவாக நடக்கும்.
சனி 11-ல் அமர்ந்து, உங்கள் ராசியின் எட்டாமிடத்தையும் எட்டி பார்ப்பார். எட்டாமிடம் ஒரு துர்ஸ்தானம். இதனை அசுப கிரகம் சனி பார்க்கும்போது, இயல்புபடி, அதனை அழிக்கிறார். எனவே 8-ஆமிட கெட்ட பலன்கள் நீங்கிவிடும்.
முக்கியமாக உங்கள் வேலை, தொழிலில் இருந்த தடை நீங்கும். ஆயுள் கெட்டி ஆகும். மாங்கல்யம் ஸ்திரமாகும். உங்களில் சிலருக்கு அடி, உதை, விபத்து இவை கிடைக்க வாய்ப்பு இருந்தால், சனி அவற்றை தடுத்தி நிறுத்திவிடுவார். உங்கள் தொழில், வியாபாரம் சார்ந்த வழக்குகளையும், சரி பண்ணிவிடுவார். 8-ஆமிடத்தைப் பார்க்கும் சனி, அதன் தீய செயல்களை அழித்துவிடுகிறார்.
எனவே 11-ல் சனி அமர்ந்து, உங்கள் ராசியையும், 5-ஆமிடத்தையும் பார்ப்பதால், அவர் வருவதற்குமுன், கூறப்பட்ட செயல்களின் வீச்சை குறைத்துக்கொண்டால், ஓரளவு சனியை சமாளிக்கமுடியும். 8-ஆமிடத்தைப் பார்த்து, உங்களுக்கு நன்மை செய்வார். இதனால், சனி 11-க்கு வந்தபிறகு நஷ்டம், அவமானம் போன்றவற்றில் சீர் செய்யவும்.
விழுப்புரம் அருகில் கல்பட்டு சனீஸ்வரரை வணங்கவும்.
ராசிக்கு 12-ல் சனி
உங்கள் ராசி எதுவாக இருந்தாலும், ராசிக்கு 12-ஆமிடத்திற்கு சனி வருகிறார் என்றால் அது ஏழரைச்சனியின் ஆரம்பம் என்று அர்த்தம். மேலும் அவர் விரயச்சனியும் ஆவார். சனி 12-ல் அமர்ந்து, உங்கள் ராசியின் 2, 6, 9-ஆமிடங்களைப் பார்ப்பார்.
2-ஆமிடம் காசு, பண புழக்கத்தை குறிக்கும். 6-ஆமிடம் உங்கள் வேலையைச் சுட்டிகாட்டும். 9-ஆமிடம் அதிர்ஷ்ட ஸ்தானம். பாருங்கள். ஒரு மனித வாழ்வுக்கு மிக வேண்டப்பட்ட இடங்களை குறிவைத்து குதறினால், அம்மனிதன் என்னதான் செய்வான். இதனால்தான் ஏழரைச்சனி ஆரம்பக்கிறது என்றாலே எல்லாரும் மிக அஞ்சுகிறார்கள்.
சனி 2-ஆமிடத்தைப் பார்ப்பதால், உங்கள் வருமானம் குறையும். இதனால் வரும் வரவுகளின் வழியை, உங்கள் பெயரில் இருந்து, உங்கள் குடும்ப நபரின் பெயருக்கு மடை மாற்றிவிடுங்கள். இதனை சனி, 12-ஆமிடத்திற்கு வரும் முன்பே செயல்பாட்டிற்கு கொண்டு வந்துவிடவேண்டும். பேசும் கலையை, தொழில் ஆதாரமாக கொண்டோர், அதற்கு ஒரு மாற்று வழியை அல்லது வேறு ஒரு உதவியாளரை நியமிக்க வேண்டும். கண் சார்ந்த பரிசோதனைகளை முன்பே முடித்துவிட்டால், சற்று சுளுவாக முடியும். சனி 12-க்கு வரும்முன்பே, வங்கி, தபால் நிலையம் என இவற்றிலுள்ள நிரந்தர வைப்புத் தொகைகளை, இரண்டு, மூன்று வருடங்களுக்கு நீட்டித்துக்கொள்ளுங்கள். பல் சம்பந்த மருத்துவ உதவியை முன்பே முடித்துக்கொள்ளவும். வாகனம், ஆடு, மாடு எருது போன்ற அசையும் சொத்துகளை பாதுகாப்பாக வைப்பது குறித்து நல்ல முடிவு எடுப்பது அவசியம்.
சனி 12-ஆமிடத்திலிருந்து உங்கள், 6-ஆம் வீட்டை அருகில் சென்று பார்ப்பார்.
6-ஆமிடம் கடன், எதிரி, நோய் ஸ்தானம். சனியின் கெட்ட பார்வை இந்த கெட்ட விஷயங்களை நீக்கிவிடும். நல்ல ஆரோக்கியம் கிடைத்தால், நன்கு உழைப்பு இருக்கும்;
சரிதானே. சரி மாங்கு மாங்கென்று உழைத்தால், அதற்குரிய வருமானம் வரும்தானே! அங்குதான் சனி தனது பார்வை பலனை காட்டிவிடுவார். எவ்வளவு உழைத்தாலும், காசை கண்ணால் பார்க்க இயலாது. நீங்கள் சிறு வளர்ப்பு பிராணிகள், நாய், பூனை போன்ற பிராணிகளை வளர்த்து வருபவர்களாக இருந்தால், சனி 12-ஆமிடத்துக்கு வருவதற்குள், யாரிடமாவது கொடுத்துவிடுங்கள். இல்லாவிட்டால் அதன்மூலம் வழக்கை சந்திக்கக்கூடும்; கவனம் தேவை. பந்தயங்களில் கலந்து கப் வாங்க இயலாது.
கைத்தொழிலாக பிழைப்பு நடத்துபவர்களும் சற்று கவனமாக இருப்பது நல்லது. முன்பே இந்த வேலையில் பெயர் மாற்றிவிடுங்கள்.
சனி 12-ல் அமர்ந்து, உங்கள் ராசியின் 9-ஆமிடத்தைப் பார்ப்பார். எனவே சனி 12-க்கு வருவதற்குமுன்பே, பேராசிரியர், நீதிபதிகள், ஆராய்ச்சி சம்பந்த வேலை, வைதீக வேலை செய்வோர், நூல் வெளியீட்டு நிறுவனர்கள், கோவில் வேலை, கப்பல் வேலை, ஆகாய விமான வேலை, வெளிநாட்டு பயணம் சார்ந்த தொழில், பணபரிமாற்ற தொழில், ஏரி, குளங்கள் சார்ந்த தொழில் இதனை மேற்கொண்டோர், உங்கள் தொழில் சார்ந்த, சிறுசிறு சிக்கல்களை நீக்கி தெளிவாக, உறுதியாக இறுக்கி பிடித்துக்கொள்ளவும். அதனால், சனி 12-க்கு ஷிப்ட ஆனபிறகு ஏற்படும் பெரும் தொல்லையில் இருந்து, நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம். ஆன்மிக பயணங்களை சனி 12-க்குமுன் அல்லது பின் ஏற்பாடு செய்துகொள்ளவும். ஆசைகளின் அளவுகளை குறைத்துக்கொள்ளவும்.
குச்சனூர் சனீஸ்வர பகவானை வணங்கவும். ஏழரைச்சனியின்போது, சனிக்கிழமைதோறும் சனீஸ்வர பகவானை வணங்கவேண்டும்.
-நிறைவுற்றது