நீங்கள் எந்த ராசியாக இருந்தாலும் உங்கள் ராசிக்கு 6-ஆமிடத்தில் சனி அமர்ந்தால், அவர் ருண, ரோக சனி எனப்படுவார்.
சனிபகவான் 6-ஆமிடத்தில் அமர்ந்து, முறையே 8, 12, 3-ஆமிடங்களைப் பார்வை யிடுகிறார்.
சனி, 8-ஆமிடத்தைப் பார்ப்பது நல்லதுதான். நிறைய கெடுதல்களை நீக்கிவிடுவார். வீண் வதந்திகள், தவறான குற்றச்சாட்டு, வழக்குகள், வட்டி இம்சைகள், கடன் தொந்தரவு, மிரட்டல், அடிமைத்தனம் அகற்றுதல், கையில் விலங்கிடுவதைத் தவிர்த்தல், பட்டினி இருப்பது தவிர்க்கப்படுவது என இந்தமாதிரி வேண்டாத, விரும்பாத செயல்களை சனியின் கொடும் பார்வை, கொடுமைகளை எரித்து விடும். எனவே 6-ல் சனி வந்து அமர்ந்தவுடன், நிறைய இடையூறுகள் நீங்கி நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.
8-ஆமிடத்தைப் பார்த்த கையோடு சனி, 12-ஆமிடத்தையும் பார்க்கிறார். இது செலவுகளைக் குறிக்கும் ஸ்தானம்.
சனியின் பார்வை இந்த இடத்தின் செயல்களைக் கட்டுப்படுத்தும். சனி 8-ஆமிடத்தைப் பார்த்து வட்டியை நீக்குவதால், அவை சார்ந்த செலவு அகற்றப்படும். வழக்குகள் நீங்குவதால் வக்கில் செலவு இருக்காது. கட்டுப்பாடுகளில் இருந்து விடுதலை ஆவதால், அவை சார்ந்த தண்டம் கொடுக்கும் செலவு இருக்காது. சிலர் வெளிநாட்டில் அவதிபட்டவர்கள் சனி பார்வைமூலம் அதிலிருந்து, வெளிவந்து விடுவார்கள். அதனால், வெளிநாட்டு பயணமும், அது சார்ந்த செலவும் குறையும். எனவே இந்த காலகட்டத்தில் வெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் எண்ணத்தை கைவிடுங்கள். அல்லது சனி 6-ஆமிடத்திற்கு வரும் முன்பே வெளிநாட்டு பயணத்தை ஏற்பாடு செய்துகொள்ளவும்.
சனி தனது 10-ஆம் பார்வையால், உங்களின் 3-ஆமிடத்தையும் உற்று நோக்குவார். இதனால் இம்மாதிரி சனி உள்ள குழந்தைகளுக்கு இளைய சகோதரன் விஷயம் சற்று இழுத்தடிக்கும். அதனால், இவர்களின் பெற்றோர், 2-ஆவது குழந்தை பேற்றை, இக்காலம் முன் அல்லது பின்னால் தீர்மானிக்கவேண்டும். அதுபோல் சில காண்ட்ராக்ட், ஒப்பந்தம், குத்தகை போன்ற விஷயங்களை ஒருமனதாக, சிலபல வருடங்களுக்கு நீடித்துவருமாறு பேசி, கையெழுத்து போட்டுக்கொள்ளுங்கள். இதனை சனி உங்களின் 6-ஆமிடத்திற்கு வரும்முன்பே தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
அதுபோல் பணியாளர்கள், வேலை செய்யும் ஆட்களையும் நன்கு விசாரித்துக்கொள்ள வேண்டும். வீடு மாற்ற வேண்டுமெனில், இந்த கால கட்டத்தில்தான் நடக்கும். வீடு விற்க முடியவில்லை என்றாலும், உங்கள் ராசிக்கு 6-ல் சனி வந்தபிறகு முயற்சி செய்தால், சொத்து விற்றுவிடும். சனி மறதியைக் கொடுப்பதால், அதற்குரிய மன பயிற்சியை, சனி 6-க்கு வரும் முன்னாலேயே ஆரம்பித்துவிட வேண்டும். அதுபோல் கூரியர் சர்வீஸ், ரியல் எஸ்டேட், வாடகை நூலகம், டி.வி செய்தி வாசிப்பு, பேருந்து ஓட்டுனர் என இந்த வேலைக்கு சேர விருப்பம் உள்ளவர்கள் இந்த சனி, 6-ல் வந்து அமர்வதற்குள் மேற்கொள்வது நல்லது.
ஆக, 6-ல் சனி வந்து அமர்வதற்குள் சிலபல வேலைகளை முடித்துவிடுவது நல்லது. 6-ஆமிட சனியை சமாளித்துவிடலாம்.
திருக்கொள்ளிக்காடு சனியை வணங்குவது நல்லது.
சனி 7-ல் அமர்ந்த பார்வை பலன்
உங்கள் ராசி எதுவாக இருந்தாலும், ராசிக்கு 7-ல் சனி அமர்ந்தால், அவர் களஸ்த்திர சனி எனப்படுவர். 7-ல் அமர்ந்த சனி, உங்கள் ராசிக்கு 9, 1, 4-ஆமிடம் இவற்றை பார்வையிடுகிறார்.
இதில் 9, 4 இவை இரண்டும் கல்வியைப் பற்றி கூறுகிறது. மற்றும் உங்கள் ராசியை அதாவது உங்களை உற்று நோக்குவார்.
சனி 9-ஆமிடத்தைப் பார்த்து, உங்கள் தந்தைக்கும், உங்களுக்கும் இடையே மகா பெரிய யுத்தத்தை தொடங்குவார். எனவே உங்கள் ராசிக்கு, 7-ஆமிடத்தில் சனி வந்து அமரும்முன்பே, தந்தையும் நீங்களும் பரஸ்பரம் பேசி, பிரச்சினைகளைத் தீர்த்துவிடுங்கள். 7-ஆமிடத்தில் சனி வந்து அமர்ந்தபிறகு, தந்தையுடன் குறைவான அளவில் சம்பாக்ஷணை மேற்கொள்ளவும். எனவே இதன்மூலம் சண்டையின் அளவைக் குறைக் கலாம்.
9-ஆமிடத்தைப் பார்க்கும் சனி, தர்ம எண்ணத்தை சுருக்கவார். உதவி செய்யும் மனப்பான்மை காணாமல் போய்விடும். இதனால் 7-ஆமிடத்திற்கு சனி வரும்முன்பே, முக்கிய உதவிகளை கொடுத்து முடியுங்கள். மேலும் உங்களின் ஆராய்ச்சிக் கல்வி ரொம்ப தாமதப்படும். எனவே அதற்கான காலக்கெடுவை உங்கள் கைடிடம் கேட்டு பெறுங்கள். இந்த காலகட்டத்தில் யாருக்கும் யோசனை சொல்ல வேண்டாம். உங்களின் வெளிநாட்டு பண பர்வர்த்தனை விஷயங்களை நேர் சீராக்கி, ஒருவித கட்டுக்கோப்பாக பராமரியுங்கள். ஏனெனில் இதில் சனி டேமேஜ் உண்டாக்குவார். இப்போது நீங்கள் சுத்தபத்தமான சாமியாராக ஆசைப்பட்டால் சனி நோ கூறிவிடுவார். அழுக்குமூட்டை சன்யாசி ஆவீர்கள் என்றால் சனிக்கு ஓ.கே.தான்.
இதற்கு இன்னொரு காரணம், சனி உங்கள் ராசியை பார்ப்பதுதான். சனி பார்த்தவுடன் உங்கள் உற்சாகம் குறைந்துவிடும். ரொம்ப சோம்பேறி ஆகிவிடுவீர்கள். பிறரிடம் சிடு சிடுவென்று பேசுவீர்கள். மரியாதையின்றி நடந்துகொள்வீர்கள். பழையது சாப்பிட ரொம்ப ஆசை வரும். குளிக்கத் தோன்றாது.
பிற மனிதர்கள் உங்கள் அருகில் வர அஞ்சுவார்கள். எவனாவது, "இந்த ஆள்கூட பேசுவானா.
இவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை' என்று அலறி அடித்து ஓடிவிடுவர். ஆக, உங்கள் சொந்த ராசியை பார்க்கும் சனி, உங்களை பிற ஜனங்களிலிருந்து விலக்கி வைத்துவிடுகிறார்.
மேலும் 7-ல் அமர்ந்த சனி, உங்கள் 4-ஆமிடத்தை நன்றாக நோக்குவார். 4-ஆமிடம் என்பது தாயார் ஸ்தானம். எனவே உங்கள் தாயாரிடம் வீடு, சொத்து விஷயங்கள் பற்றி முதலிலேயே பேசி தெளிவாக்கிக்கொள்ளுங்கள். 7-ல் சனி வந்து அமர்வதற்குள் வயல், தோட்டம், பண்ணை, தண்ணீர் பாசனம், கிணறு, போர்பம்பு, படகு விஷயங்கள், மீன்பிடி விஷயம் கல்வி என இவை எல்லாவற்றையும் பேசி, சிக்கல்களைத் தீர்த்துவிடுங்கள். ஏனெனில் 7-ல் சனி அமர்ந்தபின்பு சிக்கலை இன்னும் சிடுக்குகள் அதிகமாக்குவார். எனவே கூடியமட்டும் முன்கூட்டியே, பிரச்சினைகளின் அளவை குறைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
திருநாறையூர் சனியை வணங்கவும்.
ராசிக்கு 8-ல் சனி
உங்கள் ராசி எதுவாக இருப்பினும், உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்தால், அவர் அஷ்டம சனி என்று அழைக்கப்படுவார்.
எல்லா மனிதர்களுக்குமே, அஷ்டம சனி என்றால், ரொம்ப கிலியும், உதறளும் உண்டாகிறது. அதற்கு காரணம் உள்ளது.
8-ல் அமர்ந்த சனி, 10-ஆம் வீடு, 2-ஆம் வீடு மற்றும் 5-ஆம் வீடுகளை பார்க்கிறார்.
ஒரு மனிதருக்கு தொழில், காசு பணம் மற்றும் வாரிசுகள், ஆரோக்கியம் இவை வெகு முக்கியமானதாகும். சனி பார்க்கும் இடங்களை குறுக்கி, வளரவிட மாட்டார். எனில், சனி பார்க்கும் 10, 2, 5-ஆம் இடங்கள் வளர்ச்சியின்றி போய்விடும் தானே!
சனியின் பார்வை 10-ஆமிடத்தில் படும்போது, தொழில் நசிந்துவிடும். நீங்கள் மல்டி- மில்லியனராக இருந்தாலும் சரி, வண்டியில் வாழைப்பழம் விற்றாலும் சரி; தொழிலை ஒரு வழியாக்கிவிடுவார். எனவே சனி, உங்கள் ராசிக்கு 8-ஆமிடத்தில் வந்து அமர்வதற்குமுன், ஒரு நம்பிக்கையின் மனிதரை, தொழிலில் முன்னிறுத்தி விடுங்கள். ஆனாலும், கணக்கு, வழக்கு என எல்லாம் உங்கள் கையில், மேற்பார்வையில் இருக்கட்டும். இவ்விதம் தொழிலில் உங்கள் இடத்தை சற்றே விலக்கி இருக்கும்போது, சனியின் பார்வை, தொழிலை ரொம்ப கீழிறிக்க முடியாது. உங்கள் முதலாளி ஸ்தானத்தை சிதைக்க இயலாது. ஏனெனில், நீங்களே சுயமாக செய்துவிட்டீர்கள். இதனால் உங்கள் கௌரவம் பாழாகும். இதனை சனி மிக விரும்புவார். சில வழக்கறிஞர்கள், நீதிபதியாக பதவி கிடைத்தாலும், இந்த 2 /12 வருடத்தில் தவிர்த்துவிடுங்கள். இதேபோல் உங்கள் தொழிலின் அதிர்ஷ்ட மேன்மையான நிகழ்வுகளை ஒத்தி போடுங்கள். ஏதாவது கௌரவ பட்டம் கிடைத்தாலும் "வேண்டாமடா சாமி' எனக்கூறி, சனியின் கோப பார்வையில் இருந்து தப்பிவிடுங்கள்.
சரி தொழிலை கெடுத்தாச்சு அதனால் வருமானம் குறையும்தானே. கண்டிப்பாக குறையும். இதற்கு காரணம் சனி 2-ஆமிடத்தைப் பார்ப்பதுதான். 2-ஆமிடத்தைப் பார்க்கும் சனி, பணவரவை சுருக்குகிறார். இதனால், உங்கள் சேமிப்புக்களை, சனி 8-ஆமிடத்தில் அமரும் முன்பே, நீண்டகால வைப்புத் தொகையாக மாற்றிவிடுங்கள். அதுபோல், அலுவலகத்தில், சேமிப்பு பிடித்தங்களை அதிகரிக்கச் செய்துவிடுங்கள். நிறைய பணம் கிடைக்கும் என்று வேறு வேலைக்கு தாவ நினைக்காதீர்கள். பணவரவு கொஞ்சமாக இருந்தாலும், நிரந்தரமாக வருகிறதா என்று மட்டும் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். குடும்பத்தையும் சீராக ஓடும்மாறு கவனமாக இருங்கள். பேச்சைக் குறையுங்கள். இதெல்லாம் சனிபகவான் அவரே செய்வதற்குமுன் நீங்களே பணிந்து இருந்தால், சரி, "ஒழியுது போ' என்று விட்டு விடுவார்.
அடுத்து அவர் உங்கள் 5-ஆமிடத்தை அதிர நோக்குவார். இதனால் வாரிசுகள் விஷயமான முடிவுகளை, சனி 8-ஆமிடத்துக்கு வருவதற்குமுன் அல்லது பின் எடுக்கவும். பங்கு வர்த்தகம் வேண்டாம். கலைஞர்கள் ரொம்ப லைம் லைட்டில் இருக்க ஆசை படாதீர்கள். "உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா' என்று ஆகிவிடும். சனி உங்களை உடற்பயிற்சி எல்லாம் செய்ய அனுமதிக்க மாட்டார். அதனால் நீங்கள் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு உழவார பணி செய்யுங்கள். இது சனிக்கு ரொம்ப பிடித்தமானது. இதனால் உங்களுக்கு தெய்வ அனுக்கிரகமும் கிடைக்கும். ஆரோக்கியமும் மேன்படும். முக்கியமாக உங்கள் குலதெய்வக் கோவில், புராதனக் ஆலயங்கள், குளம், கோவில் செடிகளை பேணுதல் என இவற்றை தொடர்ச்சியாகக் கடைப்பிடித்தால், சனியின் 8-ஆமிட தாக்கம் வெகுவாக குறையும். சனிக்கு பிடித்த இன்னொரு இடம் கோ-சாலைகள். அங்கு இருக்கும் மாடுகளுக்கு, செய்யும் வேலைகள் சுத்தம் பண்ணுவது ரொம்ப விஷேசம்.
சனி 8-ஆமிடத்தில் அமர்ந்து, உங்களின் தொழிலை கெடுத்து, பணவரவை சுருக்கி, ஆரோக்கியத்தையும் பாழ் பண்ணி விடுகிறார்.
இதனால், "ஆஹா அஷ்டம சனியா' என அனைவரும் அலறுகிறார்கள்.
எனவே சனி 8-ஆமிடத்திற்கு வந்துகொண்டேயிருக்கிறார். எனும்போதே, தொழில், பணம், வாரிசு சார்ந்த சில நிகழ்வுகளை தரம் தாழ்த்திவிடுங்கள். "நல்லாத்தானே நடந்தது. இவர் ஏன் இப்படி பண்ணினார்' என்று மற்றவர்கள் மண்டை காயட்டும் எனில் உங்கள் மண்டை காயாமல் தப்பிவிடும்.
எட்டியத்தளி சனீஸ்வரரை வணங்கவும்.
(தொடர்ச்சி வரும் இதழில்....)