வெளிறிய பகல், சிவந்த சாயங்காலத்தில் கரைந்துகொண்டிருந்தது. தீப ஆராதனையைத் தொழுவதற்காக பக்த ஜனங்கள் சன்னிதானத்திலும் சுவர்களுக்கு உள்ளேயும் நெருங்கி நின்றிருந்தனர். படிகளில் தவம் இருக்கும் அழகர்களின், அழகிகளின் முகங்களில் சாயங்காலப் பொழுதின் பிரகாசம் கவிதையைப் படைத்துக் கொண்டிருந்தது.

Advertisment

அவன் சன்னிதானத்தில் கைகளைத் தொழுதவாறு நின்று கொண்டிருந்தான். கூட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது. மண்டபத்தின் மேற்குப் பகுதியில் பெண்கள் நின்றிருந்தனர். இப்போது கிழக்குப் பக்கத்தில் நின்றிருந்த ஆண்களின் வரிசைகளுக்குப் பெண்கள் வர ஆரம்பித்தனர். இது ஒரு சட்ட விரோத செயல். இப்படி வந்து கூடினால் எப்படி? மென்மையான சரீரத்தின் பகுதிகள், தங்களின் மேனியில் வந்து உரசுவதில் தர்மசங்கடமான நிலையை அடையக் கூடிய சில இளைஞர்கள் மெலும் நெரிசலை உண்டாக்கினர். முல்லை மலரின் நறுமணம் அங்கு முழுமையாக பரவிவிட்டிருந்தது. மங்களாபுரத்தைச் சேர்ந்த ஒரு பிராமணப் பெண்ணின் குளிர் கூந்தலிலிருந்தே அந்த வாசனை புறப்பட்டு வந்திருந்தது. தலைமுடி முழுவதும் பூவை வைத்து பின்னியிருந்தாள். அவள் பழைய தேவதாசிகளை ஞாபகப்படுத்தினாள். கைவிரல்களிலும் கால் விரல்களிலும் மருதாணியைத் தேய்த்து சிவப்பாக ஆக்கியிருந்தாள். சிவப்பாக்கப்பட்ட கால் விரல்களில் வெள்ளி மோதிரங்கள் இருந்தன. நடக்கும்போது, குலுங்கிச் சிரித்த முத்துக்கள் நிறைந்த கொலுசு அவளின் சதைப்பிடிப்பான காலின் அடிப்பகுதியில் இறுக்கமாக இருக்கின்றதோ? ஜரிகையை வைத்து ஓரம் அமைக்கப்பட்டு அணிந்திருந்த பட்டுப் பாவாடைக்கு மத்தியில் ரோமங்கள் இருந்த அடி வயிறு தெரிந்தது. அவளுடைய உதடுகள் நன்கு சிவந்திருந்தன. பெரும்பாலான கண்களும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தன. அனைவரையும் கண்களால் பார்த்தவாறு அவளும் ரசித்துக் கொண்டிருந்தாள்.

Advertisment

"எனக்கு எல்லோரையும் பிடிக்கும். எனக்கு அருகில் நின்று கொண்டிருக்கும் இந்த மனிதனைத் தவிர''. இந்த எண்ணம்தானே அவளின் உணர்வுகளில் வெளிப்பட்டது?

குடுமியைப் பின்னோக்கிக் கட்டி, காதில் கல் பதித்த வெள்ளிக் கடுக்கனை அணிந்திருந்த ஒரு மனிதன் அவளுக்கு அருகில் நின்றிருந்தான். தந்தையாக இருக்க வாய்ப்பில்லை. கணவனாக இருக்கலாம். ஆண்மைத்தனத்தைவிட பெண்மைத்தனமே அந்த முகத்திலும், சரீர அமைப்பிலும் வெளிப்பட்டது.

Advertisment

இளமையின் துடிப்பைக் கொண்ட எப்படிப்பட்ட அருமையான ஒரு இளம்பெண்! பொருத்தமாக இருக்கக்கூடிய, சற்று ஆண்மைத்தனம் உள்ள ஒரு ஆணுக்கு அவள் கிடைத்திருக்கவேண்டும். அவளைப் பற்றிய சிந்தனைகளை மனதில் உற்சாகத்துடன் உலாவ விட்டவாறு நெருக்கியடித்து நடந்தான். பெரும்பாலும் மார்பைத் திறந்து விட்டவாறு இருந்த ஒரு இளம்பெண், குழந்தைக்குப் பால் தந்து கொண்டே ஆண்களின் வரிசையைக் கடக்க ஆரம்பித்தாள். அவன் நகர்ந்து விலகிக் கொடுத்தான். அதிமாக வியர்த்துக் கொண்டிருந்தது.

சுவருக்குள்... சீவேலி மண்டபத்தில் போய் நிற்கலாம். அப்படிச் செய்தால், இந்த நெரிசலிலிருந்து விடுபட்டு இருக்கலாமே! வெளியே சென்றால், நல்ல காற்று கிடைக்கும். குளிர்ச்சியான மேற்குத் திசை காற்றை மனதில் நினைத்தவாறு அவன் கோவிலின் அந்த பகுதியிலிருந்து வெளியேறினான்.

வடக்கிலிருக்கும் தீபத்தூணுக்கு அருகில் நின்றபோது, சிறிய ஒரு யானைக் குட்டியையும், சில தைரிய குணம் கொண்ட சிறுவர்களையும் பார்த்தான். அந்தச் சிறிய கணபதியைக் கோபப்படச் செய்தவாறு நின்று கொண்டிருந்த துணிச்சலான சிறுவர்களின் முகங்களின் வெளிப்பாடுகளை அவன் வெறித்துப் பார்த்தான். 

அவனுடைய குழந்தைக்கும் இதே வயதுதான் இருக்கும். 

அதை மறப்பதற்கு அவன் முயற்சித்தவாறு, யானைக்குட்டியின் குறும்புத்தனங்கள் மீது தன் மனதைச் செலுத்தினான். ஒடிக்கப்பட்ட ஒரு பனை மடலின் தண்டைத் தும்பிக்கையில் தலைகீழாக பிடித்தவாறு, சிறுவர்களுக்கு அந்த போக்கிரி யானை கடுமையான எச்சரிக்கையை விடுகிறதோ? "எனக்கு அருகில் வந்தால்,  நான் தொடையின் தோலை  உரித்து விடுவேன். 

அதனால், மிகவும் கவனமாக அருகில் வாருங்கள்."

அந்த குழந்தை விளையாட்டுகளில் மூழ்கியவாறு, அவன் சிறிது நேரம் நின்றிருந்தான். அனைத்து வகைகளிலும் இருக்கக்கூடிய குட்டிகளின் குறும்புத்தனமான சேட்டைகள் ஒரே மாதிரிதான். மீண்டும் பிரதட்சண பகுதிக்கு வந்து சேர்ந்தான். அவனின் கண்கள் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தில் போய் நின்றன. சிறிது நேரத்திற்கு...

கூத்து நடத்தப்படும் இடத்தின் கம்பிகளைப் பிடித்தவாறு அவள் புராண வாசிப்பைக் கேட்டுக் கொண்டி ருந்தாள்.

சீவேலி மண்டபத்தின் தூணில் சாய்ந்து நின்று கொண்டிருக்கும் ஒரு மனிதனால் அந்த முகத்தைப் பார்க்கமுடியாது. பெரும் சுமையென விழுந்து கிடக்கும் அந்த கறுத்த சுருள் முடிகளின் கொத்து இடுப்பை மறைத்திருந்தது. பிச்சிப் பூக்களும் துளசி மலர்களும் அந்த அடர்த்தியான முடிச் சுருள்களில் இருந்தன. நிர்மால்ய தரிசனத்திற்குச் சென்றிருக்கும் வேளையில். அர்ச்சகர் அளித்த பிரசாதமாக இருக்க வேண்டும். சிவந்த நாகலிங்க பூக்களை ஞாபகப் படுத்தக் கூடிய அந்த மினுமினுப்பான சிவந்த கால் பாதங்கள், கருங்கல் படிகளில் அழுத்தி நின்று கொண்டிருப்பதாகத் தோன்றியது. எந்த அளவிற்கு அழகான காலடிகள்! தங்கத்தால் ஆன ஒரு சாளக் கிராமக் கல்லின் புனிதத்தன்மையையும் அழகையும் கொண்டிருக்கும் அந்த கால் பாதங்களுக்குச் சொந்தமான பெண்ணின் முகம் எப்படி இருக்கும்?

அவனுடைய இதயம் ஆர்வத்தால் நிறைந்தது. இங்கு... இப்படி நின்று கொண்டிருப்பது சரிதானா? ஒரு முறை சுற்றி வந்தால் என்ன? அனாவசியமாக சுற்றி வருவது சரியான செயல் அல்ல. ஏழு முறை சுற்றி வர வேண்டும். இல்லாவிட்டால்... ஒன்பது. ஏழு முறை சுற்றி வந்தாகி விட்டது. நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ள நடைமுறை அது. அதற்கு மேல் கூடுவதோ குறைவதோ இல்லை. இப்போது இன்னொரு முறை சுற்றி வருவதாக இருந்தால், அது அதிக பற்று என்றாகிவிடும். பகவான் அனைத்தையும் அறிந்திருக்கும் ஒருவராயிற்றே!

இங்கு வழிபட ஆரம்பித்து சில நாட்கள் ஆகி விட்டன. அனைத்து வேதனைகளுக்கும் இருக்கக் கூடிய ஒரு நிம்மதி தலம் என்ற வகையில், அவன் இறுதியாக இங்கு வந்திருக்கிறான். பகவான் கைவிட மாட்டார். பலரும் கூறினார்கள். பலரும் அறிவுரை கூறினார்கள். இறுதியில் இங்கு வந்து சேர்ந்துவிட்டான்.

அதிகாலை பூஜை, காலை பூஜை, மதிய பூஜை, தீப ஆராதனை, இரவு வழிபாடு ஆகிய அனைத்து பூஜைகளின் போதும் தொழுது கொண்டு இருப்பான். மனதின் கசடுகளும் சுமைகளும் முழு ஈடுபாட்டுடன் பகவானை வழிபடுவதன் மூலம் விலகிச் சென்று விடுகின்றன. இந்த நம்பிக்கை சில நாட்களாகவே நிம்மதியை அளிக்கத்தானே செய்கின்றது?

"அனைத்திற்கும் அதிபதியான பகவானே, மனதைச் சுத்தமானதாக ஆக்க வேண்டும்!''- அவன் வேண்டிக் கொண்டான்.

தவறான எதையும் கேட்கவோ, பார்க்கவோ, செய்யவோ கூடாது. உள்ளுக்குள்ளிருந்து அசரீரிகள் எழுவதுண்டு. ஆனால், அவை கூறியபடி மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மனித வாழ்க்கை என்பதே தவறும் சரியும் கலந்ததுதான். ஆனால், இது ஒரு திருத்த முடியாத தவறா? எந்தச் சமயத்திலும் தவறு என்று தோன்றியதில்லை. இப்போது மனம் கவலைப்படுகிறது. வருத்தப்படுகிறது. அந்த இழப்பைச் சரி செய்ய முடியாதா?

இப்போது அது எதையும் நினைக்க வேண்டிய தில்லை. நடக்க வேண்டியவை நடந்துவிட்டன. மறதி என்ற கர்ப்பக் கிருகத்திற்குள் அவை அனைத்தும் காணாமல் போகட்டும்....

சுற்றி நடக்காமல் அவன் கிழக்கு கோபுரத்தின் கருங்கல் சுவருடன் சேர்ந்து நின்றவாறு, சற்று தலையைக் குனிந்துகொண்டு கோவிலின் கருவறையைப் பார்த்தவாறு முழுமையான பக்தியுடன் வழிபட்டான்:

"பகவானே, இதற்கு மேலும் என்னை வைத்து எந்தவொரு சோதனையையும் நடத்த வேண்டாம்.'' அவனுடைய கண்கள் நீரால் நிறைந்தன.

அன்பு என்பதன் பால பாடங்களை அறிந்து கொண்டதே அவளின் மூலம்தான். அன்பு, வற்றாத ஒரு இனிய தேன் அல்லவா? இன்று அதே இனிய தேன், அவனுடைய வாழ்க்கையில் கசப்பான ரசமாக மாறியிருக்கிறது. 

தவறு செய்தவள் அவளா? எந்தக் காலத்திலும் இல்லை. சரளா... அன்பு நிறைந்த ஒரு இளம்பெண்ணாக இருந்தாள். எனினும், தாகத்தால் தவித்த அவனுடைய இதயம் அந்தத் தவறைச் செய்து விட்டது. ஒரு வேப்பம் பழத்தின் கசப்பையும் துவர்ப்பையும் கொண்டிருந்த அந்தக் கதைகளை, தன்னுடைய மனதின் ஆழத்திற்குள் புதைத்து மூடுவற்கு அவன் பல தடவைகள் படாத பாடு பட்டிருக்கிறான்.

இப்போது மீண்டும் அவற்றை என்ன காரணத்திற்காக நினைக்க வேண்டும்? நீண்ட நாட்களாக காப் பாற்றி வைத்திருந்த மன அமைதி இழக்கப்படுகிறதோ?

"அதை இழப்பதற்கு நீங்கள் ஆளாக்கி விடாதீர்கள்!'' - அவன் உள் வேதனையுடன் வேண்டினான்.

தீப ஆராதனைக்காக நடையை அடைத்திருந்த சமயம். பலவகைப்பட்ட வாத்தியக் கருவிகளின் சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தது. எல்லா இடங்க ளிலும் பகவானைப் பற்றிய சுலோகங்கள்... பூஜை முடிந்தவுடன், நடையைத் திறப்பார்கள். தீபத்தின் நாளத்தைப் பார்த்துத் தொழுத பிறகுதான் வெளியேறுவான். நடை திறக்கப்படுவதற்கு இன்னும் நீண்ட நேரமாகும். பகவானைப் பற்றிய சிந்தனைகளை மனதில் தேக்கி நிறுத்த முயற்சித்தான். கடலின் ஓரத்தில் கட்ட முயற்சித்த ஒரு மணல் குன்றைப் போல அவனுக்குள் பக்தி சரிந்து கொண்டிருக்கும் செயல் நடக்கிறதோ? அவன் கட்டி நிறுத்திய மன அமைதி எனும் மணல் குன்றுகள், கடலின் வெள்ளப் பாய்ச்சலில் கரைந்து  விட்டனவோ?

எவ்வளவோ கட்டுப்படுத்தியும், கூத்து நடைபெறும் இடத்தின் கம்பிகளைப் பிடித்தவாறு முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு நின்றிருக்கும் அந்தப் பெண்ணின் சிவந்த காலடிகளை மனதிலிருந்து மறைந்து செல்ல விடுவதற்கு அவன் தயாராக இல்லை.

சிறிது நேரம் கொடிமரத்திற்கு அடியில் வந்து நின்றான். யாளியின் முகம் கொத்தப்பட்டிருந்த அந்த கொடிமரத்தின்  பொன் தகடுகளில் நடனமாடிக் கொண்டிருந்த இளம்பெண்களின் அழகான வடிவத்துடன் காணப்பட்ட உடலின் மீது அவனுடைய கண்கள் அலட்சியமாக பயணித்தன. அவனுடைய மனதிலிருந்த பக்தி உணர்வுகளுக்குள் எங்கிருந்து இந்த தாகம் கலந்த இனிய நினைவு வந்து கலக்கிறது? படத்தை விரித்து, நாக்கை வெளியே நீட்டி, குன்றிமணிகளை ஞாபகப்படுத்தக்கூடிய கண்களில் அடங்காத கோபத்தின் நெருப்புக் கனல்களுடன் நின்று கொண்டிருக்கும் அந்த நாக தெய்வத்திற்கு முன்னால், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மரணத்திற்கு அடிபணிய இருக்கும் அந்த தேவதாசியின் சிலை அவனுக்குள் இனம் புரியாத உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்தது. மனதைக் குத்திக் காயமாக்கிய சதைப்பிடிப்பான கொடூர சர்ப்பத்தின் அழகான... அதே நேரத்தில்... வெறுப்பை உண்டாக்கக் கூடிய செதில்கள் தன் மீதும் அழுகி ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல அவன் உணர்ந்தான்.

வெள்ளிப் பாத்திரத்தில் நிறைத்து வைக்கப்பட்டிருந்த குன்றிமணிகளில் மூன்று ஆழாக்குகளை அள்ளி எடுத்து உண்மையான அர்ப்பணிப்பு மனப் போக்குடன், அதன் இருக்க வேண்டிய இடத்திலேயே வைத்தான். ஆனால், கொஞ்சம் மணிகள் தரையில் விழுந்து சிதறின. அப்போதுதான் நினைத்துப் பார்த்தான்.... தனக்கு இதைச் செய்யக்கூடிய தகுதி இருக்கிறதா? காயம் படாத குடும்ப வாழ்க்கையை ஆரம்பிப்பவருக்கே இந்த குன்றிமணிகளைத் தொடுவதற்கான தகுதி இருக்கிறதோ? அவனுக்கு ஒரு குழந்தை இருக்கிறதா? அவன் குறும்புத்தனம் நிறைந்த
வனா? எதுவுமே இல்லை.

காயம் பட்ட இதயம், செய்யக் கூடாத ஒரு தவறைச் செய்த கூச்சத்துடன் அமைதியில் மூழ்கியது. அவன் அந்த பகவானின் சன்னதியில் அனைத்து குற்ற உணர்வுகளுடனும் விழுந்து வணங்கினான்.

உள்ளே உறுதியே இல்லாத அந்த மனதின் வழியாக கணக்கற்ற காட்சிகள் கடந்து சென்றன.

இந்தக் கடவுளின் சன்னதியில்தான் முதல் தடவையாக அவளை அவன் பார்த்தான். பிரகாசமான அதிகாலையை ஞாபகப்படுத்தும் அந்த புண்ணிய தரிசனத்துடன் அவன் வேறொரு மனிதனாக மாறினான். 

தரையைப் பார்க்கும் கண்களில் வெட்கத்தின், இளமையின் நிழல்களும் கலந்திருந்தன அல்லவா? இடுப்பை மறைத்தவாறு சுருண்டு கிடந்த சுருள் முடி கொத்தில் நிர்மால்ய தரிசனத்தின் மீதங்கள் என்ற அளவில் துளசிப் பூக்கள் அன்றும் ஒட்டிக் கிடந்தன. பழுத்த வாழைக் குலையைப் போல அழகான அந்தப் பூ மேனியில் ஈரமான துணியும் நனைந்த ரவிக்கையும் இறுகிக் கிடந்தன. உணர்ச்சிகள் துடித்துக் கொண்டிருந்த அவளின் அழகான தோற்றத்தில் அவன் கரைந்து விட்டான். அந்த முகத்தை ஒரு முறை மட்டுமே பார்த்திருக்கிறான். ஒரு முறை மட்டும்....

பிறகு... அவளின் முகத்தைப் பார்த்தது, திருமணத்தில் தாலி கட்டும் போதுதான். (ஏராளமான தேடல்கள், மன இணக்கம் ஆகியவற்றிற்குப் பிறகு, உன்னை நான் எனக்குச் சொந்தமானவளாக ஆக்கியிருக்கிறேன். இளம் பெண்ணே! உன் கழுத்தில் இந்த தாலியைக் கட்டும்போது, நான் சற்று அதிக மாகவே பாக்கியம் செய்தவன் என்ற எண்ணம் உண்டாகிறது).

அவனுடைய துடிக்கும் மனம் அதைத்தானே கூறிக்கொண்டிருந்தது?

அனைத்தும் மிகவும் தெளிவாக, நேற்று நடந்ததைப் போல தோன்றுகிறது.

திருமணம் நடைபெற்ற இடத்தில் மணமகனையும் மணமகளையும் எதிரெதிரே அமர வைத்து, நம்பூதிரி கூறினார்: "இரண்டு பேரும் பகவானை நன்றாக வணங்குங்கள். பிறகு... பூவையும் பிரசாதத்தையும் வாங்கிக்கோங்க. அடுத்தடுத்து நில்லுங்க. பயப்பட வேண்டாம். இதோ நடத்திடுறேன்.''

அவன் அப்போது பகவானை வழிபட்டானா? இனி எதற்கு வழிபட வேண்டும்? காரியத்தை நிறைவேற்றியாச்சே! இனி என்ன பகவான்? ஆணவம் நிறைந்த மனதில் அப்போது இருந்தது அது மட்டும் தானே? சந்தனத்தையும் பூவையும் கைகளில் இட்டவுடன், அவை தரையில் விழுந்தன. அதைக் குனிந்து எடுக்க முயன்றபோது, எரிந்து கொண்டிருந்த குத்து விளக்கின் ஜுவாலை ஜரிகை வேட்டியில் அறியாமலே பற்றி விட்டது. ஒரு பகுதி எரிந்தது. அதனால் என்ன நடந்தது? கவனக் குறைவு காரணமாக என்ன தவறுகளெல்லாம் உண்டாகின்றன? அந்த அவலத்தை அறிவிக்கும் எச்சரிக்கையை, புத்திசாலித்தனம் நிறைந்த சிந்தனைகளைக் கொண்டு இல்லாமலாக்க முயற்சித்தான்.

"பரவாயில்ல.... பரவாயில்ல...''- வேட்டி பற்றி எரிவதைப் பார்த்தவர்கள் சமாதானப்படுத்தினார்கள். அப்போது சற்று பதட்டம் உண்டானது. நெற்றி வியர்த்தது. எப்படிப்பட்ட கெட்ட சம்பவங்கள் நடைபெற்றாலும் பரவாயில்லை, அவளுடைய கழுத்தில் இந்த தாலியைக் கட்டினால் போதும். 

அதற்குப் பிறகு வரக்கூடிய அதிர்ஷடமற்ற சம்பவங் களை அனுபவித்துக் கொள்ள வேண்டியதுதான். பெரிய பிரகாசம் முன்னால் தெரிந்தது. அதற்கு முன்னால் மற்ற எல்லா வெளிச்சங்களும் (பகவானையும் சேர்த்து) ஒளியற்றவை என்றே தோன்றின. யாரும் இந்தச் சாதாரண பிரச்சினையை எடுத்து பெரிதுபடுத்தாமல் இருந்தால், போதும். யாரும் இதை கவனித்திருக்க மாட்டார்கள். பெண்கள் பார்த்தால் தான் பிரச்சினை!

நாதசுரம் முழங்கியது. தவில் ஒலித்தது. முகூர்த்தம் வந்தது. மண மகன்- மணமகளைச் சுற்றியிருந்த மனித வளையம் மேலும் நெருங்கியது. தந்தையும் தாயும் சகோதரிகளும் மிகவும் அருகிலேயே இருந்தார்கள். தங்கையின் கண்களில் தெரிந்த குறும்புத்தனம், நல்ல வேளையாக அப்போது மணப்பெண்ணின் மீதுதான் இருந்தது.

அவன் அடிமையைப் போல தலையைக் குனிந்து கொடுத்தான். தெச்சிப் பூக்களால் ஆன பெரிய மாலை, மனைவியின் சுமையை ஞாபகப் படுத்துவதைப் போல கழுத்தில் வந்து விழுந்தது.

திருமணத்தை நடத்தி வைக்கும் நம்பூதிரி ஒரு தமாஷைக் கூற முற்பட்டார்: "இனி சீக்கிரம் செயல்படுங்க.''

மணமகளின் தாய் மணப்பெண்ணின் தலைமுடியைத் தூக்கிப் பிடித்தாள். கழுத்தில் தாலி கட்டுவதற்கு சிரமம் இருக்கக்கூடாது. அப்போது அவனுடைய விரல்கள் நடுங்கின. மஞ்சள் கயிறில் கட்டப்பட்டிருந்த தாலியை மணமகளின் கழுத்தில் கட்டினான். மிகப் பெரிய பெருமூச்சு எழுந்து விழுந்தது.

தாலியைக் கட்டியபோது, பின்னாலிருந்து யாரோ கூறினார்கள்:

"மெதுவாக முடிச்சுப்போடு. அவசரம் வேண்டாம்.'' கிருஷ்ணன் குட்டியின் குரல் அல்லவா? அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், அப்படிப்பட்ட வார்த்தைகள் கிருஷ்ணன் குட்டிக்கு மட்டுமே தெரியும்.

மணப்பெண்ணிடம் நெருங்கிய தோழி கூறினாள் : "சரளா! இப்படி வெட்கப்பட்டால் எப்படி? முகத்தை மூடி பிடிச்சிக்கோ... இல்லாவிட்டால், மாலை கழன்று விழுந்து விடும்."- அப்படிக் கூறியவள் புத்திசாலிதான்.

மணப்பெண்ணின் முகத்தைச் சற்று உயர்த்திப் பிடிப்பதற்கு இரண்டு பேர் முயற்சித்தார்கள். முழுமை யாக வெற்றி கிடைத்தது என்று கூறுவதற்கில்லை. எனினும், அந்த முகத்தை நல்ல முறையில் பார்க்க முடிந்தது.

கண்கள் மூடி இருக்கின்றனவோ? இல்லாவிட்டால், இங்கு அமர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாளோ? "இங்கு பார்... இங்கு ஒரு ஆள் நிற்கிறான்.'' - பகவான்!

ஜரிகை வைத்து பின்னப்பட்டிருந்த சாமந்தி மாலையைக் கழுத்தில் இட்டபோது, பூக்களுக்கு மத்தியில் ஒரு பவுர்ணமி உதித்து வருவதைப் போல தோன்றியது.

திருமண மண்டபத்தைச் சுற்றி மூன்று தடவைகள் வலம் வந்து பிரதட்சணம் செல்லும் பாதையில் செல்லும்போது, கடந்து வந்த சிறிய கோவில்களும், பூக்களும், நிலவொளியும் நிறைந்த  வழிகளை அவ்வப் போது மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தான்.

மணமகனும் மணமகளும் கைகளை இறுகப் பிணைத்து சுற்றி வரும் பாதையில் வேகமாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, கிருஷ்ணன் குட்டி உரத்த குரலில் கூறினான்: 

"மெதுவாக நடங்க. நாங்களும் உங்களுடைய கூட்டத்தில் வந்தவர்கள்தான். வேகமாக நடப்பது இரவில் இருக்கட்டும். " மணமகனையும் மணப் பெண்ணையும்  சிறுபிள்ளைகளாக ஆக்க வேண்டும்! மிகவும் சுதந்திரமான ஒரு அத்துமீறல்!

"டேய் கிருஷ்ணன் குட்டி.. உன் நாக்கிற்கு எலும்பு என்பது இல்லவே இல்லை என்ற விஷயம் தெரியாமல் இல்லை. ஆனால். இந்த பொண்ணுக்கு அது தெரியாதே! தனியாக இருக்குறப்போ, நீ  எங்களைத் தண்டிச்சிடு. இப்போது... இந்த கூட்டத்தில் வைத்து இப்படி சித்திரவதை செய்யாதே, மச்சினா...''

இவ்வாறு கூற முடியக்கூடிய ஒரு சந்தர்ப்பமாக இல்லாததால், எறும்பைப் போல மெதுவாக நடக்க ஆரம்பித்தார்கள்.

சாஸ்தாவின் நடையில் திரும்பியபோது, திடீரென நிற்குமாறு திரு. பிஷாரடியின் கட்டளை வந்தது. 

அந்தணர் அல்லவா? அதன்படி நடக்காமல் இருக்க முடியாதே! சிறிது நேரம் புகைப்படங்கள் எடுக்கும் வேலை அங்கு நடந்தது.

"முகத்தை இப்படி குனிய வைத்திருக்கக் கூடாது. கொஞ்சம் தூக்கி வச்சிரு. எதுவும் விழுந்துடலையே?''- திரு. பிஷாரடி மணமகளிடம் கூறுவதைப் போல, அனைத்தையும் அனைவரும் கேட்கும் வகையில் கூறினார். மணமகனின் மீது  இருக்கக்கூடிய உரிமையை வைத்து, மணமகளைச் சற்று தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதுதானே அதன் நோக்கம்?

"ம்... ஒரு ஊசி விழுந்திருச்சு. அதைத் தேடுகிறேன்.''... இப்படி உன்னால் கூற முடியாதா? எப்படி கூறுவது என்று பார்க்கிறாயா?

இனிமையானதும் சுகமானதுமான பதைபதைப்பு இதயத்தின் அடித்தளத்தில் குடி கொண்டிருக்கும் வேளையில் ஒரு இளம்பெண்ணால், வெட்கமில்லாத ஆண்களைப்போல கலக்கமே இல்லாமல் பேச முடியுமா?

உன்னுடைய ஈரமான சிவந்த உதடுகளில், அப்படிப்பட்ட ஒரு  சிந்தனையின் சிறிய நிழல் தாண்டவமாடிக் கொண்டிருந்தது அல்லவா? சிறிது குறும்புத்தனம் எனக்கும் இருக்கிறது என்பதைப் போல, நீ தலையை உயர்த்தி வைக்காமல், மேலும் தாழ்த்தி வைத்துக் கொண்டு, கண்களைத் தரையை நோக்கி வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்ததை இப்போது கூட நினைத்துப் பார்க்கிறேன்....

புகைப்படங்கள் எடுத்து முடித்தபோது, நெற்றியில் ஏராளமான வியர்வைத் துளிகள், வெண் முத்துக்களைப் போல உருண்டு நின்றிருந்தன.

"கொஞ்சம் மெதுவாக சிரிக்கக் கூடாதா? இந்த அளவிற்கு கவுரவத்தை நீ யாருக்காக தாங்கிக் கொண்டு நடக்கிறாய், மகனே?''- இவ்வாறு கூறியவன் சுரேந்திரன்.

இதற்கெல்லாம் பதில் கூறுவதற்குத் தெரியாமல் இல்லை. திருமணம் செய்து கொள்ளும் இளைஞன்  வாயாடி என்ற கருத்தைப் பரவச் செய்வது அந்த அளவிற்கு நல்லதல்ல  என்று தோன்றிய காரணத்தால், வெறுமனே நின்று கேட்டுக் கொண்டிருந்தான். 

அவனும் சில ஆட்களைக் கிண்டல் பண்ணியவன்தான். நிறைய கமெண்ட்களை அடித்திருக்கிறான். இப்போது அவர்களின் முறை... அதை அவர்கள் அழகாக செய்யட்டும்! வாழ்க்கையில் மதிப்புமிக்க நிமிடங்கள் இவைதானே?

அவனுடைய கனவு நிறைவேறி விட்டது. அழகியும், நல்ல குணங்களைக் கொண்டவளுமான அந்த இளம்பெண் இனிய ஒரு பொன் கனவாக மனதின் மாணிக்க அரண்மனையில் இடத்தைப் பிடித்து நின்றிருந்தாள்.

பவுர்ணமி இரவுகளுக்கு ஏற்ப, புதுமணமக்களின் இனிய இரவுகள் மறக்க முடியாத நினைவுகளை விதைத்தவாறு, உதிரும் பூக்களைப் போல முடிந்து கொண்டிருந்தன.

ஒரு புதிய வசந்தத்தின் ஆரம்பத்தை அவளின் கண்கள் வெளிப்படுத்தின. ஒரு பூவின் கருவறையில், ஒரு புதிய அணுவின் ஆரம்பம், தனக்கென இருக்கும் வேதனையையும் இனிமையையும் வளர்க்கும் அல்லவா?

அந்த புதிய உயிர் இந்த பூமியில் பிரகாசத்தைப் பார்க்கவில்லை. குருதித் துளிகளாக அவளின் எதிர்கால வாழ்க்கையின் கனவு நீங்கிக் கொண்டிருப்பதைக் கையற்ற நிலையுடனும் இதய வேதனையுடனும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

விடுமுறையில் வந்திருந்த கணவன், கட்டிலில் நோயாளியாக படுத்திருந்த மனைவியைப் பார்த்தான். அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அவள் பலவீனமடைந்து காணப்பட்டாள். அந்த மென்மையான அழகின் கீற்றுகள் எங்கு போய் ஒளிந்து கொண்டன? வானவில்லையே தோற்கடிக்கக்கூடிய அந்த உயிருள்ள கவிதையின் ராகங்களும் தாளங்களும் நிரந்தரமாக மறைந்துவிட்டனவோ?

"என் கொடுப்பினைகள் முடிவுக்கு வந்துவிட்டன''- அவன் பெருமூச்சு விட்டவாறு இதய வேதனையுடன் கூறிய வார்த்தைகள் அவளின் செவியிலும் சென்று விழுந்திருக்குமோ? ஒரு சிறிய குழந்தையைப் போல அவள் தேம்பி அழுதுகொண்டிருந்தாள். சந்தேகத்தின் கார்மேகங்கள் அவளின் மனதில் திரண்டு நின்றனவோ?

அவனின் சரளா இனி அந்த கட்டிலை விட்டு எழுந்திருக்க மாட்டாள். அவளுக்குப் பக்கவாதம்.

அப்படியெனில், வாதத்தால் பாதிக்கப்பட்ட அவளின் காலடிகள் இனிமேல் அசையாதா?அந்தக் கட்டிலில் ஒரு சிலையைப் போல அவள் பல வருடங்கள் கிடப்பாள். சிறகற்ற ஒரு பட்டாம்பூச்சியாக பூமியில் அவள் வாழுவாள். அவ்வளவுதான். இடுப்பிற்குக் கீழே சுய உணர்வே இல்லை. பாதி வெப்பம்.... மீதி குளிர்ச்சி... அதிகமாக சிந்திக்க முடியவில்லை. அவன் தளர்ந்து விடடான். அந்த கால்கள் மரக்கட்டையைப் போல உயிரற்ற நிலையில் இருக்கின்றன என்ற விஷயம் தெரிய வந்தபோது, என்ன என்று கூற முடியாத ஒரு வெறுமை உணர்வு வாழ்க்கையில் முதல் முறையாக ஏற்பட்டது.

அவனுடைய வாழ்க்கையில் வந்த வசந்த பஞ்சமியை ஒரு கார்மேகம் விழுங்கிவிட்டிருக்கிறது.

சிறிது காலம் அந்த நோய் குணமாகிவிடும் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்ந்தான். இறுதியில் அது விவாகரத்தில் வந்து முடிந்தது. அந்த உறவு பிரிக்கப்பட்டபோது, இரண்டு பேரும் கவலைப்பட்டார்கள். மரணத்தால் பிரிக்கப்படும்போது உண்டாகக்கூடிய துக்கத்தை அவள் அனுபவித்தாள். ஆனால், அவ்வாறு நடந்தது. கணவன் சுயநலவாதி என்பதாக அவள் உணர்ந்தாள். வாத நோயால் பாதிக்கப்பட்ட அவள் மூன்று வருடங்கள் பகவானை வழிபட்டாள். அதன் விளைவு....?

ஒரு இளைஞன் கருங்கல் தரையில் கிடந்து ஒரு சிறிய குழந்தையைப் போல தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான். புராண வாசிப்பைக் கேட்டு முடித்துவிட்டு, அவள் பிரதட்சண பாதையில் நடந்து கொண்டிருந்தாள். சிறிதும் எதிர்பாராமல் அவளுடைய காலடிகள் தொழுத நிலையில் கிடந்த அவனுடைய சரீரத்தில் பட்டனவோ என்றொரு சந்தேகம்... தொட்டு தலையில் வைப்பதற்காக குனிந்தாள். ஒரு நிமிடம்! 'ஷாக்' அடித்ததைப் போல அவள் அதிர்ச்சியடைந்து விட்டாள். அதே ஆள்தான். வெளியே அந்த மரு ஒரு பெரிய சாந்து பொட்டைப் போல இருந்தது. அவள் உள் வேதனையுடன் பிரார்த்தித்தாள்:

"பகவானே, இனியும் சோதிக்க வேண்டாம்.''

அவன் கண்களைத் திறந்து எழுந்து பார்த்தபோது, முதலில் பார்த்தது அவளைத்தான். ஈரமான அந்த நான்கு கண்களும் ஒன்றோடொன்று சந்தித்தன. சிவந்த அவளின் கன்னத்தில் ஒரு பிரகாசத்தின் சாயல் தெரிந்தது. நீண்ட கண்களின் ஓரங்களில் கண்ணீர்த்துளிகள் திரண்டு நின்றன.

திடீரென கருவறையின் நடை திறந்தது. மணிகள் கூட்டமாக முழங்கின. பக்த ஜனங்களின் 'ஹரே' அழைப்புகளால் அந்தப் பகுதியே ஸ்தம்பித்தது. 

அவர்கள் இருவரும் பகவானிடம் ஒரே உணர்வுடன் பிரார்த்தித்தார்கள். மீண்டுமொரு இணைந்த வாழ்க்கைக்காக அவர்களின் மனங்கள் ஏங்கிக் கொண்டிருந்தன அல்லவா?

கருவறையிலிருந்த ஐம்பொன் விக்கிரகம் அவர்களைப் பார்த்து புன்னகைப்பதைப் போல தோன்றியது.

அர்ச்சகர் தீப ஆராதனைத் தட்டைப் படியில் நகர்த்தி வைத்தார். அவர்கள் பக்தி உணர்வுடன் எரிந்து கொண்டிருந்த தீபத்தின் ஜுவாலையைத் தொட்டு வணங்கினார்கள். கை விரல்கள் முகத்தைத் தடவின. கற்பூரத்தின், சந்தனத் திரியின் வாசனை கலந்திருந்த காற்று, அவர்களைச் சுற்றி மீண்டுமொரு திருமண இரவின் சூழலைப் படைத்துக் கொண்டிருந்தது.