மிழக முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள், தற்போதைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசின் சகோதரி, காவல் துறை முன்னாள் அதிகாரி சந்திரசேகரின் திருமதி என்கிற அடையாளங்கள் ஏதுமின்றி, தன்னளவில் ஒரு கவிஞராக, பேச்சாளராக, நாடக ஆளுமையாக எல்லோராலும் அறியப்படுபவர் தமிழச்சி தங்கப்பாண்டியன்.   

ஐந்து கவிதை நூல்கள், ஏழு கட்டுரை நூல்கள், ஒரு சிறுகதை நூல் மற்றும் சில மொழியாக்க நூல்களுக்கான சொந்தக்காரராக எழுத்துலகிலும் தடம்பதித்திருக்கும் இவர், தென்சென்னை மக்கள் விரும்புகிற நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் நலப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வருகிறார்.    

எவ்வித பகட்டுமில்லாமல் அனைவர் மீதும் பாசத்தைப் பொழியும் கரிசல்காட்டுப் பூமியில் பிறந்த கவிஞருடனான இந்தச் சந்திப்பில், இவரது பன்முகப்பட்ட ஆளுமையைக் கண்டு பெரிதும் வியந்தோம்.  இனி, "இனிய உதயம்' வாசகர்களுக்காக அந்த உரையாடல்;

Advertisment

நீங்கள் பிறந்த கரிசல் நிலமான மல்லாங்கிணறில் சுரக்கும் நினைவுகள் குறித்து...

   என்னுடைய ஊரான மல்லாங்கிணறு, மிகக் குறிப்பாக கரிசல் மண், இன்றைக்கு நான் எழுதுகிற கவிதை, கட்டுரை, சிறுகதைகளாகட்டும் எல்லா படைப்பிற்கும் அடிப்படையாக இருப்பது அந்த ஊரும் கரிசல் நிலமும்தான். என்னுடைய 13, 14 வயது வரைக்கும் அங்கேயிருந்த அந்தக் கண்மாயில் குளித்து, பனைமரத்தில் நுங்கு சாப்பிட்டு, முழுக்க முழுக்கப் புழுதி, வெக்கை, அந்தக் கவுச்சி வாடையோடு திரிந்த நாட்கள், 

மண்ணில் சம்மணம் போட்டு ஓராசிரியர் பள்ளியில் ஒன்னாப்பு, மூனாம்பு பயின்ற அந்த நாட்கள்... 

Advertisment

இதுதான் எனக்கான மிக மிக சந்தோசமான நாட்களென்று சொல்வேன்.என்னுடைய எல்லா விதமான வளர்ச்சிக்கும் உரமிட்டது அந்தச் சுதந்திரமான குழந்தைப் பருவம்தான்.தங்களின் பள்ளிக் காலத்தில் நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவம் எது..?

  விருதுநகரில் இருக்கிற சத்ரிய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். அது பெருந்தலைவர் காமராசர்  பிடிஅரிசித் திட்டத்தில் விருதுநகரில் தொடங்கிய பள்ளி களில் அதுவுமொன்று. விருதுநகரில் இருக்கிற வணிகப் பெருமக்கள் அவர்களுடைய வியாபாரத்தில் வருகின்ற லாபத்தில் கொஞ்சத்தை எடுத்து, மகமைத் திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டது இந்தப் பள்ளி. 

   என்னுடைய கலை, நாட்டிய ஆர்வத்திற்கு, நாடகத்தில் பங்கேற்பதற்கு என எல்லாவற்றிற்கும் அடித்தளமிட்டது அந்தப் பள்ளிதான். குறிப்பாக, எங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் ஜெய லெட்சுமி அவர்களை நினைவுகூர்கிறேன். அந்தப் பள்ளியில் விடுதியில் படித்த நான், பள்ளியின் மாணவத் தலைவியாகவும் இருந்திருக்கின்றேன். 

   ஒருமுறை இராஜராஜ சோழன் நாடகத்தில் நடித்தபோது என் அப்பாவால் அன்றைக்கு வரமுடியாமல் போனது. ஆனாலும் அதே வேசத்தோடு என்னைப் பார்க்கவிரும்பினார். நாடகம் முடிந்தும் அந்த வேசத்தைக் கலைக்காமல் அப்படியே நான் ஊருக்கு வந்தேன். நான் வேசமிட்டபோது அணிந்திருந்த மீசையை அப்பா கடைசிவரை பத்திரமாக எடுத்துவைத்திருந்தார். மூன்றாண்டுகளுக்கு முன்பு அந்தப் பள்ளியில் படித்த மாணவிகள் நாங்கள் ஒன்றாகக் கூடினோம்.‘

என்றும் தோழியர் எனும் குழுவை உருவாக்கி, இன்னமும் ஒன்றாகவே பயணிக்கின்றோம்.

அப்பா கூட்டுறவுத்துறை அமைச்சர் வே.தங்கப்பாண்டியன், அம்மா பள்ளி ஆசிரியர் ராஜாமணி அம்மாள். இருவரின் அன்பும் அரவணைப்பும் எப்படி இருந்தது?

     அப்பா முதலில் அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர். அதன்பிறகு தமிழக அமைச்சர். என் அப்பா ஓர் அப்பழுக்கற்ற அரசியல்வாதியென்று சொல்வதில் எனக்கு மிகவும் பெருமை. நேர்மையானவரென்று பெயரெடுத்தவர். எவ்விதமான குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் தனது அரசியல் பணிகளை முழுமையாக நிறைவுசெய்தவர். ஆனாலும், தலைசிறந்த அரசியல்வாதி, தலைமையாசிரியர், தமிழக அமைச்சர் என எல்லாவகையான தலைமைப் பண்புகளையும்விட எனக்கு இன்னும் பெருமையாக ஏன் அவரை மனதில் வைத்துக்கொண்டாடிக் கொண்டிருக்கிறேன் என்றால், அவர் உலகின் தலைசிறந்த அப்பாவாக இருந்தார். எவ்வளவோ பணிகள், நெருக்கடிகள் இருந்தாலும் என்னுடைய எல்லா விழாக்களுக்கும் தவறாமல் வந்துவிடுவார். நான் முதன்முதலில் கவிதை வாசித்த நிகழ்வு, எனது நாடக விழா,  எனது நாட்டிய அரங்கேற்றம் என பள்ளியிலோ அல்லது வேறெங்கோ நடைபெற்றா லும் வந்துவிடுவார்.

   நான் தியாகராசர் கல்லூரியில் எம்.ஃபில் படிக்கும்போது, சென்னை மீனாட்சி கல்லூரியில் எனது‘சிவகாமியின் சபதம்’ நாட்டிய நாடகம் நடைபெற்றது. அன்றைக்கு அப்பா முதல் வரிசையில் வந்து அமர்ந்து பார்த்தார். இது தனது குடும்பத்துக்கென நேரத்தை ஒதுக்குகிற சிறந்த பண்பு. குடும்பத்தின் மீதான அன்பு, குழந்தைகள் மற்றும் மனைவி மீதான கவனிப்பு என எல்லாவற்றையும் அளப்பரிய அளவில் கொடுத்தவர் என் அப்பா.

   அதேபோல, பகுத்தறிவுக் கருத்துக்களையும் எங்களோடு பகிர்ந்துகொண்டார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரைப் பற்றிய அவரது ஆழ்ந்த புரிதல், அவர்களது நூல்கள் மீதான வாசிப்பு... என இவை யாவும் அப்பாவின் மூலமாகவே எனக்கு வந்தது. எனக்கான அடித்தளம் அப்பாவினுடைய பற்றினால் எனக்கு விளைந்தது. எல்லா வகையிலும் அப்பாவை நேசித்து, அவருடைய நேசிப்பைப் பெற்று, உலகின் மிக அந்நியோன்யமான தம்பதிகளென அப்பா-அம்மாவைச் சொல்லலாம். 

     அம்மா ராசாமணி, தொடக்கப்பள்ளியின் கண்டிப்புமிக்க ஓர் ஆசிரியர். குடும்பத்தைத் தலைதூக்கி நிறுத்தியதில் அம்மாவின் பங்கு பெரிது. அப்பாவுக்கு பண விஷயம், அதுஇதுவென எதுவும் தெரியாது. ராஜி... ராஜி... என்று அம்மாவைச் செல்லமாக அழைத்து, அம்மாவிடமிருந்து தான் காசு வாங்கிச் செல்வார்.

   அம்மா ஒரு மிகப் பெரிய சம்சாரி. ஒரு விவசாயக் குடும்பத்தில், சிவகாசி பக்கத்தில் அனுப்பங்குளம் எனும் கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவர். பாட்டு, நடனம், இசை, கலைகளின் மீது ஆர்வம் இதெல்லாம் சிறுவயதிலிருந்தே அம்மாவுக்கு இருந்தது. அம்மாவினுடைய அப்பா என் தாத்தா, மிக நன்றாக கஞ்சிரா வாசிப்பார். அம்மாவினுடைய சித்தப்பா ஆர்மோனியம் வாசிப்பார். அவரை காளீஸ்வரன் தாத்தா என்றழைப்போம். நடிகைகள் ஹேமமாலினி, பத்மினி ஆகியோரின் மியூசிக் குழுவில் அவர் இருந்ததாக அம்மா சொல்வார். அம்மாவினுடைய இந்தப் பாரம்பரியம், இவற்றின் மீதான ஆர்வம்தான் நான் நடனம் கற்றுக்கொள்வதற்கும், அதிலும் குறிப்பாக பாசுரங்களில் ஓர் ஈடுபாடும் உண்டாகக் காரணம். 

  அம்மா வைணவக் குடும்பத்திலிருந்து வந்தவர். பாசுரங்களில் இருக்கும் ஓர் அழகை ரசிக்கும் விஷயம் இதெல்லாம் அம்மாவின் மூலமாகவே எனக்கு கிட்டியது. அதுபோக, அப்பா-அம்மா இருவரும் சாதி-மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களாகவே ஒரு கூட்டை வடிவமைத்து, அந்தக் கூட்டில் நானும் தம்பியுமாக நான்கு பேர்கள் அருமையாக- எளிமையாக வாழ்ந்த ஒரு குடும்பத்தை உருவாக்கியதில் அம்மா வுக்கு சிறந்த பங்குண்டு.

அம்மா எவ்வளவுதான் கண்டிப்பானவராக இருந்தாலும், 12 மாடுகளை வைத்திருந்து, அதில் பாலைக்கறந்து விற்று, அந்தப் பணத்தை போஸ்ட் ஆபிசில் போட்டு வைத்து என மிகச் சிக்கனமாக வாழ்ந்தவர். இன்றைக்கும் நான் ஒரு ஹோட்டலை விட்டுக் கிளம்பும்போதுகூட அத்தனை சுவிட்சுகளையும் அணைத்துவிட்டுச் செல்கிறேன் என்றால் அது அம்மா  கற்றுக்கொடுத்த பாடம்தான்.

கவிதை எழுத வேண்டுமென்கிற ஆர்வம் எப்போது உண்டானது..?

    கவிதை எழுதவேண்டுமென்கிற ஆர்வம் எனது பதினைந்து அல்லது பதினாறாவது வயதில் வந்திருக்குமென்று நினைக்கிறேன். ஏனென்றால் அந்தச் சமயத்தில்தான் கிறுக்கல்கள் மாதிரி எழுதத் தொடங்கினேன். அது சத்தியமாகக் கவிதை கிடையாது. ஆனால், நம் மனசில் ஏதோவொன்று போட்டு உலுக்குவதை, எப்படியாவது அதை எழுத்தில் கொண்டுவரவேண்டுமென்கிற துடிப்பு இருந்த பருவம் அந்தப் பருவம்தான்.

நீங்கள் எழுதிய முதல் கவிதை எது..? எந்த இதழில் வெளியானது..?

    முதன்முதலில் கவிதை என்று நினைத்து நான் எழுதியதை இப்போது கவிதை என்று சொல்ல முடியாது. ’மாரி’ என்கிற தலைப்பில் எழுதினேன். முதலில் அதை அப்பாவிடம்தான் காட்டினேன். மேகம் எப்படி மழைக்கு ஒரு தூதாக இருக்கிறது, அந்த மேகமோ, மழையோ இல்லாமல் கரிசல் காடு எப்படி காய்ந்துபோய் கிடக்கிறது, என்பதைப்பற்றி எழுதியதே என் முதல் கவிதையாக என் நினைவில் நிற்கிறது. கவிதை பற்றிய எவ்வித புரிதலுமின்றி மனதில் இருப்பதை அப்படியே கொட்டி எழுதினேன். 

அதைப் படித்துவிட்டு, “நீ நல்லா எழுதுறே… பாப்பா. 

நீ தொடர்ந்து எழுது”என்று அப்பா சொன்னார்.

     இதழில் பிரசுரமான எனது முதல் கவிதையென்றால், ‘முரசொலியைத்தான் நான் நன்றியோடு நினைவுகூர வேண்டும். தலைவர் கலைஞர் கைதான சமயத்தில் ‘எழுதுகோலை எடு தலைவா..!’ என்று நான் ஒரு கவிதையெழுதி அனுப்பிவைத்தேன். அந்தக் கவிதையைத்தான் கலைஞர் ‘தமிழச்சி’ என்ற பெயரிட்டுப் பிரசுரித்தார். அப்போது நான் இராணிமேரி கல்லூரியில் சுமதி எனும் இயற்பெயரில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். எனது கவிதையை‘தமிழச்சி’ எனும் பெயரில் கலைஞர்‘முரசொலியில் பிரசுரித்ததே எனது முதல் கவிதை.

இராணிமேரி கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகத் தாங்கள் பணியாற்றிய காலங்கள் குறித்து...

   இராணிமேரி கல்லூரியில் நான் பணியாற்றிய அந்த 13 வருடங்கள் வாழ்வின் வசந்த காலங்கள் என்று சொல்லலாம். ஒரு கல்லூரியின் பேராசிரியர் பணியென்பது மிகுதியாக கற்றுக்கொள்வதற்கும், கற்றுக்கொள்வதைப் பகிர்ந்து கொள்வதற்கும், புதிது புதிதான முகங்களைப் பார்த்து, அவர்களுடைய காலை வணக்கத்தை ஏற்றுக்கொள்வது, அவர்களோடு சேர்ந்து அவர்களுக்காகப் பயணம் செய்வது என்று ரொம்ப ரொம்ப சுவாரசியமான அனுபவங்கள் அவை.

    மிகவும் குறிப்பாக, எனக்குப் பிடித்த இலக்கியத்தைச் சொல்லித்தருகிற பணியென்பது, கவிதை, நாடகம், கற்பித்தல் பணியென்று ஓர் இனிமையான பருவமாக இருந்தன அந்த 13 வருடங்கள். மாணவிகளுடன் உரையாடுதல், மாணவிகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக நாமும் கற்றுக்கொள்வது, புதிது புதிதாக இந்த உலகத்தைத் தினமும் புதிய கண்களோடு பார்ப்பது என இதெல்லாம் அந்தக் கல்லூரியில் எனக்கு கிடைத்த மறக்க முடியாத அனுபவம். 

     குறிப்பாக, அந்தக் கல்லூரி காம்பஸில் மிகத் தொன்மையான மரங்கள் இருக்கின்றன. சென்னையில் கடற்கரைக்கு முன்பாக அமைந்திருக்கிற மரங்கள் சூழ்ந்த, நம்மை இயற்கை அப்படியே நம்மை தாய்மடிபோல அணைத்துக்கொள்கிற வனப்புமிகுந்த ஓர் இடமது. மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் படிப்பதற்கான கல்லூரியது. அந்தக் கல்லூரியில் பெற்றோர்கள் காலில் செருப்புக்கூட இல்லாமல் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டுப் போவார்கள். 

அவர்களோடு, அவர்களுக்காகப் பணிபுரிவதென்பது கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிற ஒரு விஷயம். 

      சென்னை சிட்டியில் இருக்கிற எத்தனையோ மேல்தட்டு வர்க்கத்துப் பெண்களுக்கான கல்லூரியாக இல்லாமல் இதில் பணி புரிந்தது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. நிறையவே கற்றுக்கொண்டேன். வாழ்க்கையைப் புதிதான உற்சாகத்தோடு எப்படி எதிர்கொள்வது, தேங்கிவிடாமல் அப்படியே ஓடிக்கொண்டிருக்கிற நதியைப்போல இருக்க வேண்டுமென்கிற விஷயத்தை எனக்குச் சொல்லித்தந்தது. குறிப்பாக, நாகலிங்க மரத்தைப் பற்றி எனது ‘நாகு’ என்கிற கட்டுரையில் எழுதியிருப்பேன். தினமும் போய் அந்த நாகுவைப் பார்க்காமல் என் வகுப்புகளுக்கு நான் சென்றது கிடையாது. இப்படி ஒவ்வொரு மரங்களைப் பற்றியும் எனக்கான நினைவுகள் பல உண்டு. ஒவ்வொரு மரத்துக்கும் எனக்கும் ஒரு கதை உண்டு.

சுமதி எப்போது தமிழச்சியாக உருவெடுத்தார்..?

   சுமதியாக இருந்த நான் தமிழச்சியாக உருவெடுத்தது 2004-ஆம் ஆண்டில் எனது ‘எஞ்சோட்டுப் பெண்’ கவிதைத் தொகுப்பு வெளியானபோதுதான். எனக்கு தமிழச்சி எனும் பெயரை முதன்முதலாகக் கொடுத்தவர் தலைவர் கலைஞர். எனது முதல் கவிதையை ‘முரசொலியில் பிரசுரித்தபோது, அந்தப் பெயரில் வெளியிட்டார். தமிழச்சியைப் பின்னர் திருநெல்வேலியில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் தமிழச்சி தங்கப்பாண்டியனாகவும் அவரே அறிமுகப்படுத்தினார்.

    தமிழச்சி எனும் பெயரில் புத்தகமாக வந்தபோது, நமக்கான கரிசல் மண் சார்ந்த கிராமத்துத் தமிழ்ப்பெண் அப்படிங்கிற ஓர் அடையாளம் மட்டும்தான் அதில் இருக்க வேண்டுமென்று நினைத்தேன். எங்களுடைய கரிசல் காட்டு மொழியை, வட்டார வழக்கைப் பேசுகின்ற ஒரு கிராமத்துத் தமிழ்ப்பெண் என்பதாகவே தமிழச்சி என்கிற பெயருக்கான பிடிப்பும் ஈர்ப்பும் எனக்கு இருந்து, அதையே புனைபெயராகவும் வைத்துக்கொண்டேன்.

கல்லூரிப் பேராசிரியர் பணியை விட்டு விலகியது குறித்து என்றாவது வருத்தப்பட்டதுண்டா..?

      பேராசிரியர் பணியைவிட்டு விலகியது குறித்து பல சமயங்களில் நான் வருத்தப்பட்டிருக்கிறேன். ஏனென்றால் அதுவொரு மனமகிழ்ச்சியோடு நான் விரும்பி செய்த பணி. அதுவும் பேராசிரியர் என்பவர் எப்போதும் ஓய்வுபெறுவதே கிடையாது. பங்ஹஸ்ரீட்ங்ழ்ள் ஹய்க் உர்ஸ்ரீற்ர்ழ்ள் ய்ங்ஸ்ங்ழ் ழ்ங்ற்ண்ழ்ங் ச்ழ்ர்ம் ற்ட்ங்ண்ழ் டழ்ர்ச்ங்ள்ள்ண்ர்ய். பேராசிரியர் பணிக்கான ஊதியமென்பது வெறும் பணத்தினால் மதிப்பிடப்படுவது கிடையாது. பேராசிரியர் என்றைக்குமே பேராசிரியர்தான். ஒருவரின் வளர்ச்சியில் பொறாமையில்லாமல் சந்தோசப்படுவது பேராசிரியர்களும் பெற்றோர்களும்தான். அந்த வகையில் எனக்குச் சில சமயங்களில் வருத்தம் வந்ததுண்டு. அந்தக் கல்லூரியைக் கடந்துபோகிற போதெல்லாம் இன்னமும் ஏக்கம் உண்டுதான்.

தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராகத் தாங்கள் செய்துவரும் மக்கள் பணிகள் பற்றி...

     நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடர்ந்து ஆற்றிவரும் பணிகள் ஏராளமிருக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நான் ஒவ்வொரு தொகுதிக்கும் செய்கிற பல பணிகள், அதுதவிர தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு இணைந்துகொண்டு நான் செய்த பணிகள், தற்போது முன்னெடுத்து செய்துவரும் பணிகள் என்று நிறையவே பட்டியலிட்டுச் சொல்லலாம். 

     கடந்த ஐந்தாண்டுகளில் (2019 முதல் 2024 வரை) தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாக கூடுதல் வகுப்பறை கட்டிடங்களுக்கு ரூ.2.20 கோடியும், தளவாட பொருட்களுக்கு ரூ.1.22 கோடியும், கலையரங்கம் & உள்விளையாட்டு அரங்கங்களுக்கு ரூ.1.09. கோடியும், சமையல் கூடத்திற்கு ரூ.27.89 லட்சமும், சமுதாய நலக்கூடங்களுக்கு ரூ.10.25 கோடியும், மின் விளக்குகள் அமைப்பதற்கு ரூ. 48.5 லட்சமும், குடிநீர் வசதிக்காக ரூ.42.66 லட்சமும், பேருந்து நிறுத்தங்களுக்கு ரூ. 1.90 கோடியும், மீன் விற்பனை அங்காடி கட்டுவதற்கு ரூ. 62.50 லட்சமும், அங்கன்வாடி கட்டிடங்களுக்கு ரூ.1.20 கோடியும், விளையாட்டு அரங்கத்திற்கு ரூ.55 லட்சமும், உடற்பயிற்சி கூடத்திற்கு ரூ. 65 லட்சமும், இதர பணிகளுக்கு ரூ. 1.12 கோடியும் ஒதுக்கப்பட்டு, அனைத்து தர மக்களும் பயன்பெறும் வகையில் பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 

     இந்த வருடத்தின் தொடக்கத்தில் மிக முக்கியமானதொரு ஆரம்பமாக சானிடேஷன் ஃப்ர்ஸ்ட் இந்தியாவோடு இணைந்து, மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கென்று தேவைப்படுகிற விழிப்புணர்வு குறித்த மிக முக்கியமான ஒரு கருத்தரங்கத்தை வல்லுநர்களோடு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சமீபத்தில்தான் நடத்தினோம். பல்வேறு வகையான பணிகளில் மிகவும் குறிப்பாக, கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம் ஆகிய பணிகளைக் குறிப்பிடலாம். பெண்கள் முன்னேற்றம் என்று வருகிறபோது மிக நீண்ட கடற்கரையையுடைய தென்சென்னை பகுதியில், அதில் விளிம்புநிலையிலிருக்கிற மீனவச் சகோதரிகள், உழைக்கின்ற பெண்கள் இவர்களுக்கான பல திட்டங்களை முன்னெடுக்கின்றேன். இப்படியாக, இன்னும் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களைத் தொடர்ந்து ஆற்றி வருகின்றேன்.             

இன்றைக்கு இந்திய அளவில் தமிழ்நாடு கல்வியில் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்திட எது காரணம்..? 

     ‘கல்வியும் சுகாதாரமும் எனது இரு கண்கள்’ 
என்று ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதுமே நம் முதல்வர் அறிவித்தார். பர் உங்ஸ்ங்ப்ர்ல் பஹம்ண்ப்சஹக்ன் ஹள் ற்ட்ங் ச்ண்ழ்ள்ற் தஹய்ந்ண்ய்ஞ் நற்ஹற்ங் ஜ்ண்ற்ட் நல்ங்ஸ்ரீண்ஹப் எர்ஸ்ரீன்ள் ர்ய் ஊக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய் & ஐங்ஹப்ற்ட் என்பதுதான் முதலமைச்சரின் ற்ஹஞ்ப்ண்ய்ங்/குறிக்கோள். 

      கல்வியென்பது பிறரால் களவாடப்பட முடியாத செல்வம். கல்வி ஒன்றுதான் நாம் இருக்கிற நிலையிலிருந்து நம்மை விடுதலை செய்து மேம்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதை நன்றாக உணர்ந்திருக்கிற முதலமைச்சர், கல்விக்கான அத்தனை திட்டங்களையும் மிகக் குறிப்பாக, காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களைக் கொண்டுவந்துள்ளார். 

    குழந்தைகள் காலையில் சத்தான உணவுகளை, சரிவிகித சம உணவினைச் சாப்பிட்டு, தனது நாளைத் தொடங்கும்போது முழுவதும் கவனமோடு கல்வியினைக் கற்கமுடிகிறது.  இடைநிற்றல் குறைகிறது. நல்ல பெர்ஃபார்ம் செய்யமுடிகிறது. இதையெல்லாம் உணராமல் இலவசம் - ச்ழ்ங்ங்க்ஷண்ங்ள் என இலகுவாகப் புறந்தள்ளுகிறார்கள்/ விமர்சிக்கி றார்கள். அதனால்தான் கலைஞர் அவர்கள் முதலில் கையிலெடுத்தது கல்வியைத்தான். இலவச பஸ் பாஸ்,  இலவச மடிக்கணினி, இலவச மிதிவண்டி, புத்தகங்கள், புத்தகப் பைகள், சீருடைகள் என இவை எல்லாமே அரசுப்பள்ளிகளில் படிக்கிற குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. மேலும் 
அரசுப்பள்ளிகளில் படிக்கிற குழந்தைகள் போட்டித் தேர்வுகள் மற்றும் நமது போர்டு எக்ஸாம் என அனைத்திலும் வெற்றிபெற்று வருவதற்கு முக்கிய காரணம், இந்த திராவிட மாடல் அரசு. 

அது மட்டுமல்ல, முத்தமிழறிஞர் கலைஞர் போட்டுத் தந்த அந்தப் பாதையில் தொடர்ந்து நடைபோடுவதால்தான் என்பதையும் நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

நான்காண்டுக்கால திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பான செயல்? 

திட்டங்கள் குறித்து எத்தனையோ திட்டங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு முழு புத்தகமாகப் போட்டாலும் அதில் சொல்லிமுடிக்க முடியாது. மாற்றுத்திறனாளிகளுக்கென்று மிக சமீபத்தில் 60 ஆணைகளை இந்த அரசு பிறப்பித்திருக்கிறது. அதுபோல நீங்கள் சொல்லிக்கொண்டே போனால் திருநங்கைகள், திருநம்பிகள், இளைஞர்களுக்காக, விளையாட்டு வீரர்களுக்காக, வீராங்கனைக்களுக்காக... என எத்தனைவிதமாக வேண்டுமானாலும் பல சிறப்பான திட்டங்களை நீங்கள் அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

    தொழில் முனைவோருக்காக என சிறந்த தொழில் முனைவோருக்கான மாநாட்டை நடத்தினார். புதிதாகத் தொழில் தொடங்குவோரை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் டிஎன் திட்டம் ஆகட்டும், மிகப்பெரிய மல்டிநேஷனல் கம்பெனிகள் தமிழகத்தில் தொழிற்சாலைகளை நிறுவி, அதன்மூலம் அதிகமானோர் வேலைவாய்ப்புகளைப் பெற செய்து, சிறந்த மாநிலமாகத் தமிழகத்தை முன்னிலைப்படுத்தியது என பலவற்றைச் சொல்லலாம். தமிழகத்தை முன்னேற்றிட முதல்வர் தொடாத துறைகளே இல்லை எனலாம்.

     தொடங்கப்படும் ஒவ்வொரு திட்டத்திலும் அதை மனித நேயத்தோடு செயல்படுத்துவதோடு, பெண்களுக்கு மட்டும்தானா எல்லாத் திட்டங்களும் என்று கேட்போருக்கு உடனே‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தைக் கொண்டுவருகிறார். எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளுக்காக கனவு இல்லம் திட்டத்தைக் கொண்டு வருகிறார். இன்றைக்குப் போட்டித்தேர்வுகளில் பங்கேற்று வெற்றிபெறும் மாணவர்கள் பலரும் ‘நான் முதல்வர்’ திட்டத்தின் மூலமாகப் பயன்பெற்றவர்களாக இருக்கிறார்கள். இந்தக் குறுகிய பக்கத்திற்குள் இந்த அரசு ஆற்றியிருக்கும் பணிகளை அடக்கிவிடமுடியாது. ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், இந்தியாவிற்கே அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிற பல சிறப்புமிக்க வளர்ச்சித் திட்டங்களைத் தொலைநோக்குப் பார்வையோடு கொண்டுவந்திருக்கின்றார் நம் முதலமைச்சர்.

தமிழக நிதித்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு அவர்களின் சகோதரியாக, தங்கள் தம்பியின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்..?

   திராவிட மாடல் ஆட்சியில் நம்முடைய மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் தலைமையின்கீழ் தொழில் துறையை நிர்வகித்து, தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறையையும் நிர்வகித்து வந்தவர் இப்போது நிதி அமைச்சராக இருக்கின்றார் என்னுடைய தம்பி தங்கம் தென்னரசு.  என்னை எப்போதும் பெருமைப்படுத்துகிற அளவிலேதான் அவருடைய செயல்பாடுகள் இருக்கும்.  அதோடு தொல்லியல் துறையையும் தன்னிடத்தில் வைத்திருக்கிறார். தொல்லியல் துறையின் மீது அவருக்கு மிகச்சிறந்த ஈடுபாடு உண்டு. பறவைகள் மீதும், மிகக் குறிப்பாக விலங்குகள், புலிகள் சரணாலயங்கள் மற்றும் வனத்துறை மீதும் அபாரமான ஒரு பிடித்தமுள்ள நபர். கல்வெட்டுக்களையெல்லாம் தானே வாசிக்கின்ற அளவுக்கு திறமை பெற்றவர். நிதித்துறை பொறுப்பில் மிக அருமையாக - சரியாக - கவனத்தோடு முதலமைச்சரின் ஆலோசனைகளோடு கையாள்கின்றார் என்பதே எனது பெருமைக்குரிய பாராட்டு.

     அம்மா இருந்த இடத்தில் இன்றைக்கு ஒரு தாயாக, சகோதரியாக நான் இருந்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். குறிப்பாக, இதழ்களுக்கு அவர் கொடுக்கின்ற நேர்காணல்கள், மாநில கோரிக்கையின்போது பேசிய அவருடைய அந்தப் பேச்சு, தம்பி பேசும்போது அவையே ரொம்ப அமைதியாகக் கவனிக்கும். எதிர்க்கட்சியினர்கூட அவர் என்ன பேசுகிறார் என்பதைக் கூர்ந்துகேட்பார்கள் என்றெல்லாம் பலரும் என்னிடம் சொல்வார்கள்.

   சமீபத்தில் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தபோது நீங்களும் கூட பார்த்திருப்பீர் கள். அது வெறும் நிதிநிலை அறிக்கையாக, புள்ளிவிவரங்களோடு மட்டும் நில்லாமல், தமிழ் இலக்கிய மேற்கோள்களைக் காட்டி, ஓர் இலக்கியச் செறிவோடு, நம் மொழிக்கான அந்தச் செழுமையோடு அவ்வளவு அருமையான - நயமானதொரு சமர்ப்பித்தலாக அது இருந்தது.  எனக்கு அது குறித்து மிக மிகப் பெருமை உண்டு. 

அவனது நிதானமான - ஆழ்ந்த புலமையோடு கூடிய பேச்சு, திறம்பட தனது நேர்காணல்களில் விவாதத்தை எடுத்துவைக்கின்ற அந்த விதம் இதெல்லாம் எனக்கும் அப்பாவுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் தம்பி பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார் என்றுதான் என்னால் சொல்ல முடியும்.

தமிழ்நாட்டின் உரிமைகளும் நிதியும் ஒன்றிய அரசினால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதன் பின்னணி என்ன..?

thangapandian1

     ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கான உரிமைகளும் நிதியும் தொடர்ந்து மறுக்கப்பட்டுக்கொண்டே வருகிறது என்பது வருத்தத்திற்கும் மிகுந்த கண்டனத்திற்கும் உரிய ஒரு விஷயம். ஏன் அவர்கள் தமிழ்நாட்டை மட்டும் குறிவைத்து தாக்குகிறார்கள் என்றால், மற்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் இருக்கிறார்கள். மேற்குவங்கத்தில் மேடம் மம்தா பானர்ஜி இருக்கிறார், அந்தப் பக்கம் லல்லுபிரசாத் யாதவ், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி ஆகியோர் என இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் தனித்ததொரு தலைமை இல்லாமல் தத்துவத்தோடு கூடிய ஒரு தலைமை உள்ளது. 

     அறிவாசான் அண்ணா, நமக்கான பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார், திராவிட மாடல் ஆட்சிக்கான அடித்தளமிட்ட முத்தமிழறிஞர் கலைஞர்... இவர்கள் தந்த தத்துவத்தின் பின்புலத்தோடு பாசிச சக்திகளை அண்டவிடாத ஓர் எல்லைச்சாமி சக்தியாக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் இருக்கின்றார். இதுதான் அவர்களை எரிச்சல்படுத்துகிறது. தமிழ்நாட்டினுள்ளே அவர்களால் இன்னும் வரவேமுடியவில்லை. மிகப் பெரிய தத்துவத்தின் பின்புலத்தோடு நாம் அவர்களை எதிர்கொள்கின்றோம். 

ஆர்.எஸ்.எஸ்.-ஆல் எல்லா இடத்திலும் ஊடுருவி விட முடிகிறது. அந்தத் தலைவர்களைக் கடந்து அங்கெல்லாம் ஓரளவுக்கு உள்ளே போகமுடிகிறது. தத்துவத்தின் பின்புலம் இல்லாமல் தனிப்பட்ட ஒரு முறையிலே அவர்கள் தங்களின் பலத்திலே எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் திராவிட இயக்கச் சித்தாந்தம் என்கிற மிகப் பெரிய தத்துவப் பின்புலத்தோடு அவற்றையெல்லாம் செரித்துக்கொண்டு, மாநில சுயாட்சி, சுயமரியாதை, இனமான உணர்வு இத்தனையையும் தூக்கிப்பிடிக்கிற தமிழ்நாட்டு முதலமைச்சர் தலைமையிலே ஆட்சி நடக்கிறது. இது அவர்களை எரிச்சல் படுத்துகிறது. 

     மாநில சுயாட்சிக்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்தான். தேசிய வளர்ச்சிக் கூட்டங்களில் பங்கேற்க 70-களில் கலைஞர் டெல்லிக்குப் போகிறார். அன்றைக்கு அவர் பேசிய பேச்சைத்தான் அத்தனை நாளிதழ்களும் கோடிட்டுக் காட்டின.‘தான் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்பாக டெல்லி பக்கம் வந்திருப்பாரோ மாட்டாரோ என்று சொல்லத்தக்க நிலையில் இருந்த தமிழ்நாட்டின் முதலமைச்சர், அவரது இன்றைய பேச்சுக்குப் பின்பாக இன்னும் பத்தாண்டுகளுக்குள் உலகமே திரும்பிப் பார்க்கிற ஒரு முதலமைச்சராக உருவெடுப்பார் என்று இந்துஸ்தான் டைம்ஸ் அன்றைக்கே எழுதியது. அன்றைக்கு நடந்தது இன்றைக்கும் நடந்துகொண்டிருக்கிறது. 

     இன்றைக்கு இந்தியா மட்டுமல்ல; உலகமே நம்முடைய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ன சொல்கிறார், இதில் அவருடைய கருத்து என்ன என்பதுதான் மிக முக்கியமான விஷயமாகப் பார்க்கிறது. இன்றைக்கும் உலகம் போரால் பிளவுபடக்கூடாது என்கிற மிக முக்கியமானதொரு கருத்தை, நம் இந்திய பிரதமர்கூட சொல்லத் தயங்குகிற ஒரு கருத்தை நம்முடைய முதலமைச்சர் தெரிவித்திருக்கின்றார். ஆக, உரிமைகளை விட்டுக்கொடுக்காத ஒரு மாநிலம், மாநில சுயாட்சிகளுக்கென்று முதன்முதலில் ஒரு கமிஷன் போட்ட ஒரு விஷயமாகட்டும், தொடர்ச்சியாக அதை முன்நிறுத்துகிற - முன்னெடுத்துச் செல்கிற அந்தவொரு விஷயமாகட்டும், இன்று டி-மிட்டேஷன் வந்தவுடனே அதை எதிர்த்துவருகின்ற, தென்புலத்தில் இருக்கிற முதலமைச்சர்களை அத்தனை பேரையும் இணைத்துக்கொண்டு எதிர்ப்பைக் கொடுக்கிற முதல் குரலாகட்டும் நாம் தான் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கின்றோம். ஆகவேதான் அவர்கள் நமக்குத் தொடர்ச்சியாக உரிமைகளையும் நிதிகளையும் தர மறுக்கின்றார்கள்.

     மதத்தின் பெயரால் செய்கின்ற உண்ஸ்ண்ள்ண்ஸ்ங் டர்ப்ண்ற்ண்ஸ்ரீள் என்று சொல்லப்படுகிற இந்த பி.ஜே.பி. ஆட்சி மத்தியிலே ஒழிக்கப்பட வேண்டுமென்றால், வருகிற 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலிலே தமிழக மக்கள், இது தமிழ்நாட்டுக்கு மட்டுமான தேர்தல் அல்ல, இந்தியாவிற்கான தேர்தல் என்கிற பொறுப்புணர்வோடும் விழிப்புணர்வோடும் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால்தான் மதவாத சக்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். அவர்களுக்கு ஒரு சம்மட்டி அடியாக அந்தத் தோல்வியை நாம் கொடுக்க வேண்டும். 

     இங்கே எத்தனை விதமான பிளவுகளை இன்றைக்கு சமூகத்தில் உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். முக்கியமாக, மைனாரிட்டிஸ் மக்களிடத்தில் மிகப் பெரிய இன்செக்யூரிட்டி. அதுபோக அவரவர் உடை, அவரவர் உணவு, அவரவர் விருப்பம் என இவை எல்லாவற்றையும் சிதைத்து, ஒற்றைத்தன்மையைத் திணிக்கப் பார்க்கிறார்கள். எந்தவிதமான தேர்தல் வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. அதையே நீங்கள் நினைத்துப் பாருங்கள். எத்தனை கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்றார்கள், எந்தவிதமான வேலைவாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. இளைஞர்கள், யுவதிகள், விவசாயிகள், ஏழைகள் இவர்களை முன்னேற்றுவதுதான் எங்களுடைய இலக்கு என்றார்கள். என்ன முன்னேற்றம் இங்கே நடந்திருக்கிறது? ஆக எல்லாமே வெற்று வாக்குறுதிகள். எல்லாமே பொய்யான பிம்பங்களில் கட்டமைக்கப்படுகிற, ஊடகங்களின் வாயிலாக கட்டமைக்கப்படுகிற ஒரு சஹழ்ழ்ஹற்ண்ஸ்ங். இவை முறியடிக்கப்பட வேண்டுமென்றால் தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும். மிக முக்கியமாக இதுவொரு பகுத்தறிவு மண், தந்தை பெரியார் மண், இதிலே அனைவருக்கும் அனைத்தும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற அந்த நீதி நிலை நாட்டப்பட வேண்டும். அதற்கு 2026-ஆம் ஆண்டில் தி.மு.க.வை மக்கள் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.  

நீங்கள் கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறீர்கள். இதில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஆளுமையாளர் யார்..?

    என் ஆளுமையின் அனைத்து அலகுகளுமே எனக்கு விருப்பமானவைதான் என்றாலும் கவிதை எழுதுகிற அந்தப் பெண் தான் எனக்குப் பிடித்தமானவள். இன்னொன்று இந்தக் கவிஞர் என்கிற அடைமொழியில் எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் ஒருபோதும் கவிஞர் என்கிற அந்த முன்னொட்டைப் பயன்படுத்துபவள் அல்ல. 

    மகாகவி பாரதியார், பாரதிதாசன், நம் காலத்து ஆத்மநாம், பிரமிள் இவர்கள் எல்லோரும் கவிஞர்கள். அதில் நானும் கவிஞரா என்று எண்ணி மிக கவனமாகத் தவிர்த்துவிடுவேன். நான் படித்து வாங்கிய முனைவர் பட்டத்தைத் தான், முனைவர் தமிழச்சி தங்கப்பாண்டியன் என்று அழைக்கப்படுவதைத்தான் விரும்புவேன். எல்லா நண்பர்களிடத்தும் நான் அதைத்தான் சொல்லுவேன். அழைப்பிதழில்கூட நீங்கள் முனைவர் என்றே போடுங்கள். நமது தேவதச்சன் போன்ற எத்தனையோ கவிஞர்கள் நாம் வியந்து வியந்து ரசித்து மகிழ்கின்ற அத்தனை பேர் கவிஞர்களாக இருக்கின்றபோது, நாமென்ன கவிஞரென்ற முன்னொட்டைப் போட்டுக்கொள்வது என்று நான் நினைப்பேன். கவிதை எழுதுகின்ற பெண் என்கிற ஆளுமை தான் என் மனதிற்கு மிகவும் பிடித்தமான ஆளுமை.

 பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து தங்களால் இலக்கியத் தளத்திலும் தளராமல் இயங்கிக்கொண்டிருக்க முடிகிறதே எப்படி?

      இலக்கியம் என்பதுதான் என்னுடைய கிரக்ஸ் ஆஃப் மை லைஃப் என்று சொல்வார்கள் அல்லவா, என் வாழ்க்கைக்கான ஆதாரமான ஊற்று என்று நினைக்கிறேன். அடிப்படையில் கவிதைகள் எழுதுகின்ற, நாடகத்தில் பங்கேற்று நடிக்கின்ற ஒரு பெண்ணாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறேன். இயங்கிக் கொண்டிருந்தேன்.

    ஒவ்வொரு அனுபவமும் அதுவொரு கவிதையாக வெளியே வருவதற்குள் நம்மை பிசாசு மாதிரி பிடித்தாட்டும்.  ஒரு சிறுகதையாகவோ, கவிதையாகவோ அதை எழுதி முடித்தபிறகே ஒரு நல்ல - தாராளமாக மூச்சுவிடுகிற உணர்வு வரும். இப்போதிருக்கிற பணிச்சுமை என்பது உடலளவில் அதிக உழைப்பைக் கோருகின்ற ஒன்று. இரவு பன்னிரெண்டு மணிக்கு, ஒரு மணிக்குத்தான் வீட்டுக்கே வருவோம். இரவில் தான் எழுதுவோம். அதன் பிறகு எழுதமுடியாது. பயணங்களும் அதிகமாக உள்ளன. அப்படிப்பட்ட சமயத்தில் நமக்குள் உள்ளே கனன்று கொண்டேயிருக்கும்.  அதை எப்படியாவது எழுத்தில் கொண்டுவர வேண்டுமென்கிற எண்ணத்தில் விடாமல் எழுத் துப்பணியையும் செய்கிறேன். வருடத்திற்கு நிச்சயமாக ஒரு நூலாவது வெளிக்கொணர வேண்டுமென்கிற முயற்சியில், அது எனது மொழிபெயர்ப் பாகக்கூட இருக்கலாம் என்கிற எண்ணத்தில் நூலாகக் கொண்டுவருகிற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். அதுதான் என்னை உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். அரசியல் பணியென்பது மேலும் மக்களை நேரடியாகச் சென்று சந்தித்து, அவர்களுக்கான களப்பணியாற்றுவது என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயம். அதில் சில விஷயங்களை செய்யமுடியும், சில விஷயங்களை செய்ய முடியாது. அதில் எவ்வளவோ பல தடைகள் இருக்கலாம். ஒரு சில கட்டுப்பாடுகளுக்குள் நாம் இயங்கி  நடக்கின்ற ஒரு விஷயம் இருக்கலாம்.  ஒரு கோரிக்கையை நிறைவேற்றுவதற்குப் பல மாதங்கள் ஆகலாம். அப்போது ஒரு குற்றவுணர்ச்சி வரும். எவ்வளவோ செய்ய நினைக்கிறோம். ஆனால் அந்த நேரக் கட்டுப்பாட்டுக்குள் செய்யமுடியவில்லையே என்கிற விஷயமெல்லாம் வரும். அந்தக் குற்றஉணர்ச்சியை நான் இறக்கி வைக்கிறதும் என் கவிதைகளின், படைப்புகளின் மூலமாகத்தான்.

தற்காலத் தமிழ்க்கவிதையின் போக்கு தங்களுக்கு நிறைவளிக்கிறதா..? பிடித்த கவிஞரென்று யாரைச் சொல்வீர்கள்..?   
 நவீன கவிதைகளின் போக்கு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தொடர்ச்சியாக நிறைய பேர் புதிது புதிதாக எழுத வருகிறார்கள். முகநூல், இன்ஸ்டாகிராம் இதிலெல்லாம் நான் பார்க்கிறேன். ப்ரிம்யா கிராஸ்மின் உள்ளிட்ட நிறைய பெயர்களை அவ்வப்போது பார்க்கிறேன். ஆனால் அவர்கள் எனக்கு நேரடியான அறிமுகமில்லை என்றாலும் அவர்களின் எழுத்துகள் நம்பிக்கையளிக்கிறது.

     எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களென்று மிகப் பெரிய -ஸ்ட்டே இருக்கு. வெய்யில், யவனிகா ஸ்ரீராம், போகன் சங்கர், இளங்கோ கிருஷ்ணன் என்று அந்தப் பட்டியல் மிகப் பெரியது. ஒவ்வொருவரும் அவர்களுக்கென்று உரித்தான ஒரு மொழிநடையில் ரொம்ப  காத்திரமாக எழுதுகிறார்கள் என்பது தான் என்னுடைய எண்ணம். அதேபோல் ஹைக்கூவில் பார்த்தால் மு.முருகேஷ் சிறப்பாக எழுதி வருகிறார். 

அ.வெண்ணிலாவைவிட எனக்குப் பிடித்த கவிஞர் மு.முருகேஷ் என பல இடங்களில் குறிப்பிட்டுள்ளேன். இப்போதும் அதையே  சொல்கிறேன்.    

அடுத்ததாக நீங்கள் எழுத நினைத் திருக்கும் நூல் என்ன..?

  எனது அடுத்த நூல் எதுவென்கிற திட்டமிடலேதும் இப்போது என்னிடமில்லை. தற்போதிருக்கிற கால அவகாசத்தில் தமிழில் வெளிவந்தவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதில் தான் கவனம் செலுத்திவருகின்றேன். மலையாளத்தில் என் கவிதைகள் மொழிபெயர்க் கப்பட்டிருக்கின்றன. டிசி புக்ஸ் அதை வெளியிடுவதாக இருக்கின்றது. மஞ்சேரி ரகுராம் என்பவர் அதை மொழிபெயர்த்திருக்கிறார். அடுத்து அந்தக் கவிதைகள் நூலாக  வெளிவரவுள்ளது. 

      நாலைந்து சிறுகதைகளுக்கான சிறுபொறி என் மனதில் கனன்றுகொண்டேயிருக்கிறது. நான் வாக்கு கேட்டு மக்களைச் சந்திக்கும்போது கிடைத்த சில அனுபவங்கள், கடந்த ஆறு ஆண்டுகளில் எனக்கான சில விஷயங்கள் மனதிலிருக்கிறது. 

அவற்றை சிறுகதைகளாக எழுதி, ஒரு தொகுப்பாகக் கொண்டுவர வேண்டும். எழுத்தைப் பொறுத்தவரை பெரிய திட்டமிடலோ, இலக்குகளோ நான் நிர்ணயிப்பது கிடையாது. ஒரு வருடம் என்கிற நினைப்பு மட்டுமே இருக்கும். அதில் எது அமைகிறதோ அதைச் செய்யவேண்டுமென்று நான் நினைப்பேன். அதற்கான புராசஸைத்தான் நான் ரொம்பவும் விரும்புவேன். டெஸ்டினேஷனைவிட பிக்னிக் வெரி வெரி இம்பார்ட்டண்ட், அப்படியே பயணம் போய்க்கொண்டேயிருக்கிறது.  

 ‘இனிய உதயம்’ இதழ் குறித்து...

      நான் தமிழச்சியாக அறிமுகமான ஆரம்ப காலத்தில் எனது நேர்காணலொன்று ‘இனிய உதயம்’ இதழில் வெளியானது. நான் தமிழச்சியாக அறிமுகமான ஆரம்ப காலத்திலேயே என்னை அழைத்து நேர்காணல் எடுத்து, எனக்கு மிகப்பெரிய ஓர் அறிமுகத்தைத் தந்தது ‘இனிய உதயம்’ இதழ்தான்.

      நக்கீரன் குழுமத்தின் சார்பாக வெளிவரும் ‘இனிய உதயம்’ இதழ், என்னைப் போன்ற நிறைய இலக்கியவாதிகளை, ஆரம்பத்தில் எழுத வந்த படைப்பாளிகளை ஊக்குவித்துக்கொண்டிருக் கின்ற அருமையான இதழ். பெரும்பாலான படைப்பாளர்கள் ஏதேனுமொரு சமயத்தில் தங்களது ‘இனிய உதயம்’ இதழோடு தங்களை இணைத்துக்கொண்டிருப்பார்கள். அந்த வழியிலே எழுதுகிறவர்களைச் சமூகத்தில் முக்கியமாக அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு ஒரு விலாசம் தருகிற பணியைச் செய்வதோடு, சமூகம் சார்ந்த விஷயங்களையும் கருத்துக்களையும் தொடர்ச்சியாக மக்களிடம் கொண்டுசேர்க்கும் பணியையும் செய்து வருகிறது. ஆசிரியர் குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.