தமிழ் மறைகள் நான்கும் நாம் இறைவனை அடைவதற்குரிய அடிப்படைத் தகுதியாக நமக்குச் சொல்லப்பட்ட முதல் படியானது. "உன் உயிர்போல் பிற உயிர்களையும் நேசி' என்ற அறநெறியே ஆகும். ஆனால் நம்மில் பலரிடம் அந்த அணுகுமுறை இல்லாததால், பிறர் துன்பங்களை தன் துன்பங்களாக உணராமல் சுயநலவாதிகளாக வாழ்ந்துவருகிறோம்.
நமது இந்த அறியாமையே நாம் இறைவனை அடைய தடைக் கற்களாக அமைந்துவிடுகிறது. ஒரு திருமண விழாவில், மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில், பலவண்ண மத்தாப்புக்களையும், வாணவேடிக்கைகளையும் உறவினர்கள் வெடித்து மகிழ்ந்தனர். அச்சமயம் திருமண அரங்க நுழைவு வாயிலில், ஒரு வியாபாரி குழந்தைகள் விரும்பும் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பல வடிவில் பலூன்கள் விற்றுக்கொண்டிருந்தார். மாப்பிள்ளை அழைப்பு முடிந்தது உறவினர்கள் அனைவரும் அரங்கத்திற்குள் சென்றுவிட்டனர்.
ஆனால் ஒரு இளைஞன் மட்டும் அரங்கத்திற்கு வெளியே விளையாட்டுப் பொருட்கள் விற்றுக்கொண்டிருந்த வியாபாரியிடம் சென்று "ஐயா நாங்கள் பட்டாசுகள் வெடித்த தில் உங்கள் வியாபாரப் பொருட்கள் ஏதேனும் சேதமாகி விட்டதா?'' என்று கேட்டான். அதற்கு அந்த வியாபாரி, ஆமாம் தம்பி, நான் ஊதி வைத்திருந்த சில பலூன்கள் நெருப்புப் பொறி பட்டு வெடித்து விட்டது'' என்று கவலையுடன் கூறினார். உடனே அந்த வியாபாரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதோடு உடைந்த பலூன்களுக்கான பணத்தைக் கொடுத்தான் அந்த இளைஞன். அந்த பலூன் வியாபாரி அந்த இளைஞனை மனதார வாழ்த்தி மகிழ்ச்சியுடன் பணத்தைப் பெற்றுக்கொண்டார். அந்த வியாபாரியின் கண்களில் கவலை நீங்கி பட்டாசின் ஒளியைவிட பலமடங்கு ஒளியைக்கண்ட அந்த இளைஞன் மனநிறைவுடன் திருமண அரங்கத்திற்குள் சென்றான். இத்தகைய அறநெறியையே "ஒத்த தறவோன் உயிர்வாழ்வான மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்' என்கிறார் திருவள்ளுவர். இதே கருத்தை "தன்னைப்போல் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே அந்தத் தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே' என்ற கவிஞர் வாலி அவர்களின் பாடல் வரிகள் நமக்கு எளிமையாக உணர்த்துகிறது. மற்றொரு பாடலில்- "இதோ எந்தன் தெய்வம் முன்னாலேநான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனேபாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்அவன் கருணை உள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்' என்கிறார். இத்தகைய அறநெறிகளைப் பின்பற்றும் கருணை உள்ளம் கொண்டோர் களைக் கண்ட இறைவன் தாயைக்கண்டு குழந்தை தாவி வருவதைப்போல் ஓடிவந்து அவர்கள் உள்ளத்தில் குடிபுகுவான்.
-திருமகள்