சோழப் பேரரசன் விக்கிரம சோழ தேவனின் ஒன்பதாம் ஆட்சியாண்டில் (பொ.ஆ. 1127) நடந்த ஒரு கொலையும் கிராம சபை விசாரித்து அளித்த தீர்ப்பும் அழியாத வரலாற்றுக் கல்வெட்டாகி நிற்கிறது.நித்தவிநோத வளநாடு, கிழார்க் கூற்றம், பொன்னிநாடு, தேவதாயக் கிராமமான புள்ளமங்கலத்தில், திருவாலந்துறை மாகாதேவர் கோயிலின் அர்த்தமண்டபத் தெற்குச் சுவரில் இக்கல்வெட்டு உள்ளது.
(இக்கோவில் இன்றைய தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் புள்ளமங்கை எனும் ஊரில் உள்ளது. கோவிலின் இன்றைய பெயர் பிரம்மபுரி ஈஸ்வரன் கோவில்)இக் கோவிலின் பாதுகாப்புப் பொறுப்பாளர்களாக பொன்னி நாடாள்வானும் (நாட்டாண்மை) வாணராயப் போயன் என்பானும் பணியாற்றியுள்ளனர்.
இந்த இருவருக்கும் பகைமை ஏற்பட்டிருக்கிறது. ஆயுதச் சண்டை போடுமளவு பகை.
வாணராயன் எய்த அம்பு பொன்னி நாடாள்வான் மகன் குப்பைப் பெருமான் உயிரைப் பறித்துவிட்டது! கொலைக்குரிய இழப்பீட்டை வாணராயன் தரவில்லை.
புள்ளமங்கலம் நாட்டார்கள் சபை கூடியது. விசாரணை நடத்தியது. தீர்ப்பை வழங்கியது.
"கொல்லப்பட்ட குப்பைப் பெருமான் பெயரில், திருவாலந்துறை அருள்மிகு மகாதேவருக்கு, சந்திரசூரியர் உள்ளவரை முக்கால் நந்தா விளக்கு ஏற்றவேண்டும். இந்த விளக்கிற்கு தினமும் முக்கால் உழக்கு நெய்வேண்டும். இந்த நெய்க்காக குற்றவாளி வாணராயப்போயன் 72. சாவாமூவாப் பேராடுகளை வாங்கி கோயில் சிவப்பிராமணர்களான. 1..........(கல்வெட்டில் பெயர் சரியாகத் தெரியவில்லை.) 2. சூரியன் சாத்தபிரான் 3. திருவேகம்பன் பொற்காடன் ஆகிய மூவரிடமும் ஒப்படைக்க வேண்டும்!'' இதுதான் தீர்ப்பு.
தீர்ப்பை ஏற்ற வாண ராயன் 72 சாவாமூவாப் பேராடுகளை வாங்கி சிவப்பிராமணர்களிடம் ஒப்படைத்தான். அவர்கள் அவற்றை கலியுகராமன் கடைக்காடன் எனும் இடையரிடம் ஒப்படைத்து "உலகம் உள்ளவரை தினமும் முக்கால் உழக்கு நெய்யை நமது சிவன் கோயிலுக்கு அளப்பேன்!'' என்ற உறுதி மொழியைப் பெற்றார்கள்.
இதுதான் இக்கல்வெட்டு நமக்குக் காட்டும் 12-ஆம் நூற்றாண்டின் நமது கிராமங்களின் நீதி வரலாறு.
(தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட பாபநாசம் வட்டம் கல்வெட்டுகள் இரண்டாம் தொகுதி பக்கம் 101-ல் உள்ளது).
அக்காலத்தில் தோற்ற மன்னனை வென்ற மன்னன் சிறையில் அடைத்தான் என்று படித்திருக்கிறோம். குற்றவாளிகளுக்கு சிறை இருந்ததாக வாசித்ததில்லை.
இதிலுள்ள சாவாமூவாப் பேராடுகள் மற்றும் நந்தா விளக்குகள் பற்றி கொஞ்சம் யோசிப் போம்.
செம்மறியாடு உண்டு. வெள்ளாடு உண்டு. இது என்ன சாவாமூவாப் பேராடு?
ஐயனார் கருப்பர் முனியய்யா காளி கோயில் களுக்கு ஆடுகள் கிடாய்கள் நேர்ந்துவிடுவது இயல்பு. இவை பலி கொடுப்பதற்கா னவை!
சிவாலயங்களுக்கும் திருமால் ஆலயங்களுக்கும் பெரு எண்ணிக்கையில் ஆடுகள் தானம் கொடுப் பதுண்டு. இவை இறைமேனிக்கு, கோவிலுக்கு தேவையான பால், தயிர், வெண்ணை, நெய் போன்ற புனிதப் பயன் பாட்டிற்காக வளர்க்கப்படுகிறது
பெரிய கோயில்களில் பசு மாடுகள் வளர்ப்பதுண்டு. பசு மாடுகள் தெய்வத் திருமேனிக்கு இணையாக வணங்கப்படுபவை. இதற்காக கோசாலைகள் உண்டு.
ஆனால் எந்தக் கோயிலிலும் ஆடுகள் வளர்பதில்லை. அதற்கான பட்டிகளும் அங்கில்லை. ஏனெனில் ஆடுகள் இறுதியில் மனித உணவுக்காக பயன்படு பவை! ஆகவே ஆடுகளை கோயிலுள் வளர்ப்பதில்லை.
ஆகவே, ஆடு வளர்ப்பதை தொழிலாகக்கொண்ட இடையர் பெருமக்களிடம் இந்த ஆடுகளை ஒப்படைத்து கோயிலுக்கு தேவையான பால் பொருட்களை கோயில் நிர்வாகம் பெற்றுக் கொள்கிறது.
அக்காலத்தில் நான்கு வகை அளவுகளில் நந்தா விளக்குகள் இருந்திருக் கின்றன.
பெரிய நந்தா விளக்கை முழுநந்தா விளக்கு என்கிறார்கள். இதில் நாள் முழுக்க சோதி விளங்குவதற்கு ஒரு உழக்கு நெய் தேவைப்பட் டிருக்கிறது. 96 ஆடுகளில் இருந்து தினமும் ஒரு உழக்கு நெய் தாராளமாக உற்பத்தி செய்ய முடிந்திருக்கிறது.
இரண்டாம்நிலை நந்தா விளக்கு முக்கால் நந்தா விளக்கு. இதற்கு தினமும் முக்கால் உழக்கு நெய் தேவைப்பட்டிருக்கிறது. 72 ஆடுகளில் இருந்து தினமும் முக்கால் உழக்கு நெய் உற்பத்தி செய்ய முடிந்திருக்கிறது.
மூன்றாம் நிலை விளக்கு அரை நந்தா விளக்கு. இதற்கு அரை உழக்கு நெய் தேவை. 48 ஆடுகளிலிருந்து தினமும் அரை உழக்கு நெய் உற்பத்தி செய்ய முடிந்திருக்கிறது.
நான்காம் நிலை கால்நந்தா விளக்கு. இதற்கு கால் உழக்கு நெய்! 24 ஆடுகளிலிருந்து இதற்கான நெய்யை தாராளமாக உற்பத்தி செய்ய முடிந்திருக்கிறது.
பெரும்பாலான உபயதாரர்கள் கோவில் களுக்கு முழு நந்தா விளக்கையே தானமளித்திருக்கிறார்கள். அதற்குத் தேவைப்படும் நெய்க்காக 96 ஆடுகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் வாணதிராயன் செய்த கொலைக்கு அபராதமாக 72 ஆடுகளையே கிராமசபை விதித்திருக்கிறது!
72 ஆடுகளின் இன்றைய மதிப்பு சுமார் ஐந்து லட்சம் ரூபாய்!
இந்த 72 ஆடுகளில் இனப் பெருக்கத்திற் கான கிடாய்களும் நிச்சயம் இருந்திருக்கும்.
வழங்கப்பட்ட ஆடுகள் செம்மறிகளா? வெள்ளாடுகளா?
செம்மறிகள் எட்டு மாதத்திற்கு ஒருமுறை குட்டி போடுபவை. ஒரு ஈற்றுக்கு செம்மறி ஒரு குட்டிதான் போடும்!
வெள்ளாடு ஆறு மாதத்திற்கு ஒருமுறை குட்டி போடும்! ஒரு ஈற்றில் இரண்டு மூன்று நான்கு குட்டிகள்கூடப் போடும்.
தானமளித்தவர் பெரும்பாலோர் வெள்ளாடுகளையே அளித்திருக்கிறார்கள். வெள்ளாடுகள் வருடத்திற்கு இரண்டு மடங்கு பலுகக்கூடியவை.
கலியுகராமன் கடைக்காடனிடம் ஒப்படைக்கப்பட்ட 78 ஆடுகள் எத்தனை நூறாய்ப் பல்கினாலும் அத்தனையும் கோயிலுக்குரியன அல்ல. பால் வழங்கும் 78 மட்டுமே கோயிலுக்குரியவை!
தலைமுறைகள் தாண்டியும் எண்ணிக்கை குறையாமல் கணக்கில் நிற்கும் இந்த 78 எண்ணிக்கை ஆடுகளே சாவாமூவாப் பேராடுகள் என தெய்விகத் தன்மை பெற்றன!
தேவகோட்டை ஒன்றியம் ஆறாவயல்
ஊராட்சிக் கிராமங்களில் ஒன்று பேராட்டுக் கோட்டை. கோட்டை போன்ற தோற்றத்துடன் பெரிய மண் சுவர்களை எழுப்பி, உள்ளே பெரிய கொட்டகை வேய்ந்து சாவாமூவாப் பேராடுகளுக்கான பட்டியை அமைத்திருந்தார்களாம். அதனாலேயே இந்த ஊர் பேராட்டுக்கோட்டை என பெயர் பெற்றிருக்கிறது!